புதினுக்கு பிந்தைய ரஷ்யா எப்படி இருக்கும்? மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பெரும் பணக்காரர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விட்டலி ஷெவ்சென்கோ
- பதவி, தலைமை ஆய்வாளர், பிபிசி மானிட்டரிங்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய சில மணிநேரத்திற்குப் பிறகு, ரஷ்யாவின் செல்வந்தர்களை கிரெம்ளினில் உள்ள பிரமாண்டமான யெகதெரினின்ஸ்கி மண்டபத்துக்கு வரவழைத்தார் விளாதிமிர் புதின். அவர்களில் முப்பதுக்கும் மேற்பட்டோர், கொரோனா பெருந்தொற்று காரணமாக முகக்கவசம் அணிந்தபடி, மண்டபத்தின் ஒரு சுவரை ஒட்டி அமர்ந்திருந்தனர்.
அவர்கள் "வெளிறிய முகத்துடனும், தூக்கமின்றியும் காணப்பட்டனர்" என்று ரஷ்ய நாளிதழ் ஒன்றின் செய்தியாளர் விவரித்திருந்தார். உள்ளே நுழைந்த புதின், மண்டபத்தின் மறுபுறத்தில் அமர்ந்தார். இதனால் அவருக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. வழக்கம் போல புதின் முகக்கவசம் அணியவில்லை.
தனக்கே உரிய மறைமுகமான மொழியில் பேசிய அவர், இந்தப் போருக்கு தொழிலதிபர்கள் ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
"நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, உற்பத்தி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய வழிகளைக் கண்டறிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று புதின் கூறினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக கிரெம்ளின் வெளியிட்ட காணொளியில், அழைக்கப்பட்ட கோடீஸ்வரர்களில் யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களிடையே இந்த மௌனம் ஒரு வழக்கமாக மாறியுள்ளது. புதினின் ஆட்சிக் காலத்தில் கடந்த பல ஆண்டு காலங்களாக, வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிப்பதற்கான விலை மிக அதிகமாக இருக்கலாம் என்பதை அவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர்.
கடந்த 2003ஆம் ஆண்டு, அப்போது ரஷ்யாவின் மிகப் பெரிய பணக்காரராக இருந்த மிக்கைல் கோடர்கோவ்ஸ்கி, பல எதிர்க்கட்சிக் குழுக்களுக்கு நிதியுதவி அளித்து வந்தார். புதின் தலைமையிலான ஆட்சியில் ஊழல் கட்டுக்கடங்காமல் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அதன் பிறகு, வரி ஏய்ப்பு, மோசடி, நிதிக் கையாடல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டு, அடுத்த 10 ஆண்டுகளைச் சிறைக்குள் கழித்தார். இந்தச் சம்பவம், புதினை விமர்சிக்க நினைத்த மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமைந்தது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

பட மூலாதாரம், ALEXEY NIKOLSKY/SPUTNIK/AFP via Getty Images
போருக்கு எதிராக இந்தப் பெரும் பணக்காரர்களில் யாரேனும் கருத்து தெரிவித்து இருந்தாலும், அவர்கள் தங்களது எண்ணங்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்தாமல் இருந்துள்ளனர்.
ஆனால், இந்த மௌனத்திற்கு மத்தியிலும் சில முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன. ஒரு காலத்தில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த ரஷ்யாவின் உயர் வர்க்கத்தைச் சேர்ந்த சிலர், புதினுக்கு பிந்தைய ரஷ்யாவை பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
அதிபர் பதவியில் இருந்து புதின் விலகிய பிறகோ அல்லது அவர் உயிரிழந்த பிறகோ, 1990களில் இருந்ததைப் போலவே ரஷ்யா மாறுமா என்று அவர்கள் சிந்திக்கின்றனர். அந்தக் காலகட்டத்தில் பெரும் பணக்காரர்கள் அதிகாரத்தின் பலன்களை அனுபவித்தனர் அல்லது, அதைவிட ஆரோக்கியமான அரசியல் சூழல் உருவாகுமா என்றும் அவர்கள் யோசித்து வருகின்றனர்.
'தி எகனாமிஸ்ட்' இதழில் முக்கிய கிரெம்ளின் விவகாரங்களைக் கண்காணிக்கும் பத்திரிகையாளரான ஆர்கடி ஓஸ்ட்ரோவ்ஸ்கி, சமீபத்தில் ரஷ்யாவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரிடம் பல மணிநேரம் நேர்காணல் நடத்தியுள்ளார். நாட்டின் எதிர்காலம் குறித்துப் பெரும் பணக்காரர்கள் கொண்டிருக்கும் பார்வையில் ஒரு "வரலாற்று ரீதியான அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருவதாக" தான் உணர்வதாக அவர் கூறுகிறார்.
அதிருப்தியில் இருக்கும் பெரும் தொழிலதிபர்கள்
கடந்த 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் களத்தில் புதியதொரு சக்திவாய்ந்த பிரிவினர் உருவாகினர். கம்யூனிசத்தின் முடிவைப் பயன்படுத்தி அசாதாரணமான செல்வத்தைச் சம்பாதித்த அவர்கள், பின்னர் தங்களது சொந்த நலன்களுக்காக அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்த விரும்பினர்.
பண்டைய கிரேக்க மொழியில் "ஆட்சியாளர்களாக இருக்கும் சிலர்" என்று பொருள்படும் வகையில் அவர்கள் "ஒலிகார்க்குகள்" என்று அழைக்கப்பட்டனர். அவர்களிடம் பணம் இருந்தது, அந்தக் காலகட்டத்தில் அதுவே அதிகாரமாகக் கருதப்பட்டது.
"கட்டுப்பாடற்ற 1990கள்" என்று அழைக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் தான் "புதிய ரஷ்யர்கள்" எனப்பட்டவர்கள் அரசியல், பொருளாதாரக் களத்தில் அதிரடியாக நுழைந்தனர். அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமாகின. சரியான அரசியல் தொடர்புகளைக் கொண்டவர்கள் ஒரே இரவில் செல்வந்தர்களாகவும், பெரும் கோடீஸ்வரர்களாகவும் மாறினர்.
ஊழல் பரவலாக இருந்தது. உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு ஆதரவளிக்கும் போக்கும் கட்டுக்கடங்காமல் இருந்தது. ஒப்பந்த அடிப்படையிலான கொலைகளும் அடிக்கடி நிகழ்ந்தன. ஆனால், 2000ஆம் ஆண்டு முதன்முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட உடனேயே, புதின் இந்தப் பெரும் செல்வந்தர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
மற்றவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் அவருக்குப் பெரிய ஆர்வம் இல்லை. ரஷ்யாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியதாலும், மத்திய அரசின் அதிகாரம் வலுப்பெற்று வந்ததாலும், இந்தப் பெரும் கோடீஸ்வரர்களை எதிர்த்து நிற்கும் வலிமை அவருக்குக் கிடைத்தது.

பட மூலாதாரம், NurPhoto/NurPhoto via Getty Images
ஒரு காலத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக இருந்த நிதி முதலீட்டாளரான பில் ப்ரௌடர், ஊழலுக்கு எதிராகப் பிரசாரம் செய்ததைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டார். போருக்கு முந்தைய காலகட்டத்தில், அவர்கள் அதுவரை அழைக்கப்பட்டு வந்த டாவோஸ் பொருளாதாரக் கூட்டமைப்பில், ரஷ்ய பெரும் பணக்காரர்கள் புதினுக்கு முன்னால் எவ்வாறு அச்சத்துடன் நடந்துகொண்டார்கள் என்பதை அவர் விவரிக்கிறார்.
"அந்த இடமே தங்களுக்குச் சொந்தமானது என்பதைப் போல அந்த பெரும் செல்வந்தர்கள் நடந்துகொண்டதை என்னால் நினைவு கூர முடிகிறது. அவர்கள் மிகவும் திமிர்பிடித்தவர்களாகவும், அதீத தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனால், புதின் அங்கு வந்ததும் நிலைமை முற்றிலும் மாறியது. தங்களை மிகப்பெரிய ஆண்களாகக் கருதிக்கொண்டிருந்த அந்த நபர்கள், முற்றிலும் அடிபணிந்தவர்களாகவும், கிட்டத்தட்ட எதற்கும் துணியாத பள்ளிக் குழந்தைகளைப் போலவும் மாறியதைக் காண்பது வியப்பாக இருந்தது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவின் செல்வந்தத் தொழிலதிபர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க கிரெம்ளின் அரசு, சலுகைகளையும் தண்டனைகளையும் மாறி மாறிப் பயன்படுத்தும் கடுமையான கொள்கையைக் கடைபிடித்து வருகிறது. போரை விமர்சித்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், புதினுக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு அதிக மதிப்புள்ள அரசாங்கப் போர் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று, ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஃபோர்ப்ஸ் இதழின்படி, மொத்தம் 155 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு புதிய உச்சத்தை எட்டி, கிட்டத்தட்ட 700 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (525 பில்லியன் பவுண்டுகள்) உயர்ந்துள்ளது.
ஆனால், புதினுக்கு விசுவாசமாக இருந்து அதற்கான வெகுமதிகளையும் பெற்றுள்ள பெரும் தொழிலதிபர்களுக்குக்கூட, இவ்வளவு பணம் மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரியவில்லை. அவர்களில் சிலர் படிப்படியாக அதிருப்தியடைந்து வருகின்றனர்.
சர்வாதிகாரமா, அதிகாரமிக்க ஒரு சிலரின் ஆட்சியா, ஜனநாயகமா?
அவர்களிடம் உள்ள பல பில்லியன் டாலர் சொத்துகளால் முன்பைப் போல் ஆதாயம் கிடைப்பதில்லை. உள்நாட்டில், அவர்களால் அரசியல் செல்வாக்கை விலைக்கு வாங்க முடிவதில்லை.
"அவர்களிடம் கையில் எந்தச் சீட்டும் இல்லை; எந்த ஆட்டத்தையும் அவர்களால் தீர்மானிக்க முடியாது. புதினுடன் தொடர்பு வைத்து இருப்பதால்தான் அவர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். மாறாக, அவர்களால் புதினுக்கு அந்தச் செல்வம் கிடைக்கவில்லை" என்று நாடு கடத்தப்பட்ட அரசியல்வாதியும் அரசியல் ஆய்வாளருமான டிமிட்ரி நெக்ராசோவ் கூறுகிறார்.
ரஷ்யாவுக்கு வெளியிலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளே இதற்குக் காரணம்.
"அவர்கள் கீழ்நிலைக் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அவர்களால் தங்களது சொந்த ஜெட் விமானங்களில் பயணிக்க முடியவில்லை. ஐரோப்பாவின் சிறந்த துறைமுகங்களில் அவர்களது சொகுசுப் படகுகளை நிறுத்த முடியவில்லை. இது அவர்களுக்கு மிகவும் மோசமானதாகவும் அவமானகரமானதாகவும் இருக்கும்" என்கிறார் புதினின் தீவிர விமர்சகரான பிரௌடர்.
இதனால், அமைதியாகவே அவர்களில் சிலர் புதின் அரசியல் களத்தில் இருந்து வெளியேறிய பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இந்தப் பெரும் பணக்காரர்களின் உலகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நம்பகமான ஆய்வாளர்கள் என்னிடம் தெரிவித்த தகவல் இதுதான். புதின் உடனடியாகப் பதவியில் இருந்து விலகுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கருதுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
ஆனால், கடந்த மாதம் 74 வயதை எட்டிய புதின், கிரெம்ளினில் கடந்த கால் நூற்றாண்டாகப் பதவி வகித்து வருகிறார். ஒரு நாள் அவர் பதவியில் இருந்து விலகுவார் என்பது ரஷ்ய மக்களுக்குத் தெரியும்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது பதவிக்காலம் முடிவடையும் 2036ஆம் ஆண்டு வரை பதவியில் தொடரத் திட்டமிட்டுள்ளாரா என்று கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கேட்டபோது, "போதுமான உடல்நலம் எனக்கு இருக்குமா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்" என்று புதின் பதிலளித்தார்.

பட மூலாதாரம், CARL DE SOUZA/AFP via Getty Images
புதின் பதவி விலகினாலோ அல்லது பதவியில் இருக்கும்போதே உயிரிழந்தாலோ, பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார். ஆனால், மிஷுஸ்டின் அதிபராக வேண்டுமென்ற எந்த விருப்பத்தையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதற்கான முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இதனால் அதிகார வெற்றிடம் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில், நான் பேசிய ரஷ்ய விவகாரங்களைக் கண்காணிக்கும் ஆய்வாளர்கள் சில சாத்தியமான நிலைமைகளை முன்வைக்கின்றனர்.
மேற்கத்திய நாடுகளில் உள்ள சிலரும், ரஷ்யாவுக்குள் உள்ள சிலரும், புதினுக்கு பிந்தைய ரஷ்யாவில் ஜனநாயகம் செழிக்கக்கூடும் என்று நம்புகின்றனர். புதிய செல்வந்தர்கள் அல்லது ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிக்குப் பதிலாக, மக்களால் வழிநடத்தப்படும் அரசாங்கம் அமையும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இதுவே சாத்தியமில்லாத பாதையாகத் தெரிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புதினின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய நிறுவனங்கள் சிதைக்கப்பட்டுள்ளன அல்லது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. "ரஷ்யா வன்முறைக்கு மிகவும் பழகிவிட்டது. இதனால், வழக்கமான ஜனநாயக நடைமுறைகளுக்குப் பழக்கமற்ற நாடாக மாறிவிட்டது" என்று நாடு கடத்தப்பட்ட ரஷ்ய பத்திரிகையாளரும் ஆய்வாளருமான அலெக்ஸாண்ட்ரா ப்ரோகோபென்கோ கூறுகிறார்.
மற்றொரு பாதை, சர்வாதிகார ஆட்சி மேலும் தொடர்வதாகும். புதினுக்கு பதிலாக வேறொருவர் அதிபராகப் பொறுப்பேற்று, அவரது ஒடுக்குமுறை கலாசாரத்தைத் தொடரலாம். ஆனால், இது மீண்டும் ஒரு வலிமையான சர்வாதிகாரியின் ஆட்சியாக உடனடியாக மாறாது என்று ப்ரோகோபென்கோ கருதுகிறார்.
இத்தகைய மாற்றங்கள் நிகழக் காலம் தேவைப்படும் என்கிறார் அவர். தொடக்கத்தில், புதினுக்கு பிறகு வருபவர் அவரைவிட அதிகாரம் குறைந்தவராகவும், குறைவான வளங்களைக் கொண்டவராகவும் இருப்பார்.
மூன்றாவது சாத்தியம், பெரும் பணக்காரர்கள் மீண்டும் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டி, 1990களில் இருந்ததைப் போன்ற செல்வந்தர்களின் ஆட்சி முறைக்கு ரஷ்யா திரும்புவதாகும்.
முன்னாள் கிரெம்ளின் ஆலோசகரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான டிமிட்ரி நெக்ராசோவ், தற்போது நாடு கடத்தப்பட்டு வசித்து வருகிறார். இந்தச் சூழலில், வணிக நலன்களுடன் கூட்டணி அமைக்கும் செல்வாக்கு மிக்க ஒரு சில உயர்மட்டக் குழுக்கள் நாட்டை ஆளும் என்று அவர் கூறுகிறார். இந்த மூன்றாவது வாய்ப்பைத்தான் பல பெரும் பணக்காரர்கள் விரும்புகின்றனர்.
"தங்களது கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்பட்ட காலத்திற்கும், சொத்துகள் பறிக்கப்படாத சூழலுக்கும், அரசியல் விளையாட்டின் விதிகள் தங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்த காலத்திற்கும் அவர்கள் திரும்ப விரும்புகிறார்கள்" என்கிறார் ரஷ்யாவின் செல்வந்தர்களுடன் அதிக நேரம் உரையாடியுள்ள ப்ரோகோபென்கோ.
கடந்த 1990களுடன் ஒப்பிடும்போது அவர்களது அதிகாரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்தப் பெரும் பணக்காரர்களின் கருத்துகளைக் கவனத்தில் கொள்வது இன்னமும் அவசியமாகிறது. அவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய செல்வத்தைக் கருத்தில் கொண்டால், விரைவிலோ அல்லது தாமதமாகவோ தங்களது அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட அவர்கள் முயல்வார்கள் என்று தெரிகிறது.
ஏற்கெனவே, அவர்களில் சிலர் "சரியான பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அல்லது அமைச்சர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ள முயன்று வருகிறார்கள்" என்று கூறும் நாடு கடத்தப்பட்ட அரசியல்வாதியான நெக்ராசோவ், ஆனால், அதற்கும் மேலாக எந்த நடவடிக்கையையும் எடுப்பது "மிகவும் ஆபத்தானது" என்றும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Vladimir Smirnov SPUTNIK/KREMLIN POOL/EPA/Shutterstock
இந்தப் பெரும் பணக்காரர்களின் செயல்பாடுகள் வரும் ஆண்டுகளில், அவர்களது பொருளாதார நிலையைப் பொறுத்தும் அமையும் என்கிறார் அவர்.
கையிருப்பில் அதிக பணத்தைக் கொண்டிருப்பவர்கள், புதினுக்கு பிந்தைய ரஷ்யாவுக்கு தயாராகும் வகையில், "அரசியல் விளையாட்டுகளில்" ஈடுபடுவதற்கும் அதிகாரப் போட்டியில் தங்களது இடத்தை உறுதி செய்துகொள்வதற்கும் அதிக நம்பிக்கையுடன் செயல்படுவார்கள். ஆனால், அரசாங்க ஒப்பந்தங்கள் அல்லது அரசின் ஆதரவைச் சார்ந்து தங்களது செல்வத்தைப் பெற்றிருப்பவர்கள், அனைத்தையும் இழந்துவிட நேரிடுமோ என்ற அச்சத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்குவார்கள் என்று அவர் கூறுகிறார்.
புதின் குறித்துப் பெரும் தொழிலதிபர்கள் பேசும் விதத்திலேயே ஏற்கெனவே மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ப்ரோகோபென்கோ கூறுகின்றார். முன்னர் அவர்கள் புதினை "நசால்னிக்" (அதிகாரி அல்லது முதலாளி), "பெர்வி" (முதலாமவர்) அல்லது அவரது பெயரின் முதல் எழுத்துகளான "விவி" என்று அழைத்து வந்தனர். இந்தப் பெயர்கள் அனைத்தும் ஒருவித மரியாதையை வெளிப்படுத்துபவையாக இருந்தன. ஆனால், இப்போது அவரை "தெட்" என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதில் "ஒருவித அலட்சியமும் அவமதிப்பும் கலந்துள்ளது" என்று ப்ரோகோபென்கோ குறிப்பிடுகிறார்.
"தெட்" என்றால் "வயதானவர்" அல்லது "தாத்தா" என்று பொருள். முந்தைய பெயர்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான மரியாதையை வெளிப்படுத்தும் பெயராகும். சில பணக்கார ரஷ்யர்கள், அடக்குமுறை குறைந்து, கருத்து சுதந்திரம் அதிகரித்து, கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவும் வகையில், "மக்களின் வாழ்வில் அரசியல் மீண்டும் திரும்ப வேண்டும்" என ஏங்குகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
ஆனால், ரஷ்யாவில் நிலவும் கடுமையான அச்சம் நிறைந்த சூழல் காரணமாக, இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர்கள் தற்போது மிகவும் அஞ்சுவதாக அவர் கூறுகிறார்.
ரஷ்யாவின் பெரும் பணக்காரர் ஒருவரை நேர்காணல் செய்தபோது, அந்த உரையாடல் முழுவதும் அவர் தனது செல்போன் மீது அமர்ந்து இருந்ததாக ப்ரோகோபென்கோ தெரிவித்தார். ரகசிய காவல்துறை டிஜிட்டல் முறையில் உரையாடலை ஒட்டுக் கேட்பதை இது கடினமாக்கும் என்று அவர் கருதியுள்ளார்.
"இது முற்றிலும் ஸ்டாலின் காலத்தை நினைவூட்டும் வகையிலான அச்சம் என்று நான் நினைத்தேன். இது முற்றிலும் பகுத்தறிவற்றது" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
அதிர்ச்சியூட்டும் நேர்காணல்
புதினுக்கு பிந்தைய ரஷ்யாவில் பெரும் பணக்காரர்கள் எத்தகைய எதிர்காலத்தை விரும்புகிறார்கள் என்பதற்கான சுவாரஸ்யமான குறிப்பு, உலகின் உர உற்பத்தித் துறையின் ராஜா என்று அழைக்கப்படும் ஆண்ட்ரே மெல்னிசென்கோவிடம் இருந்து கிடைத்தது. தற்போது அவர் ரஷ்யாவின் எட்டாவது மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் 'தி எகனாமிஸ்ட்' இதழுக்கு நேர்காணல் அளித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, கிரெம்ளின் விரோதமான நாடாகக் கருதும் ஒரு நாட்டின் ஊடகத்திற்கு ரஷ்யாவின் பெரும் பணக்காரர் ஒருவர் நேர்காணல் அளிப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். இதனுடன், அவர் எழுதிய கட்டுரை ஒன்றையும் அந்த இதழ் வெளியிட்டது.
நேர்காணலின் சில பகுதிகளில், கிரெம்ளின் அரசின் கருத்துகளையே மெல்னிசென்கோ மீண்டும் வலியுறுத்தினார். யுக்ரேன், ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான போர்க்களமாக இருப்பதாகவும், ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேற்கத்திய நாடுகள் புறக்கணித்துவிட்டதாகவும், அதன் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் அவர் கருதுகிறார்.
ஆனால், அதன் பிறகுதான் சுவாரஸ்யமான விஷயம் தொடங்கியது. புதின் பதவி விலக வேண்டும் என்று மெல்னிசென்கோ நேரடியாகக் கோரவில்லை. ஆனால், அதே வேளையில், ரஷ்யாவில் தனிநபர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய மாற்றம் தேவை என்று அவர் வலியுறுத்தினார். மேலும், ரஷ்யா உலக நாடுகளுடன் அதிக அளவில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இந்தப் பெரும் பணக்காரர், பொதுவெளியில் ஒரு விவாதத்தைத் தூண்ட முயன்றதாக ப்ரோகோபென்கோ கருதுகிறார். "தன்னைப் போன்ற பணக்காரர்கள் பேசத் தொடங்க வேண்டும் என்பதற்கான அழைப்பாகவே இது அமைந்தது" என்று அவர் கூறுகிறார்.
அவரை நேர்காணல் செய்த பத்திரிகையாளர் ஆர்கடி ஓஸ்ட்ரோவ்ஸ்கி, இருவருக்கும் இடையே "காரசாரமான, பதற்றம் நிறைந்த விவாதங்கள்" நடைபெற்றதாக என்னிடம் தெரிவித்தார். "ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பெரும்பாலும் காபி குடித்துக்கொண்டே, சில நேரங்களில் புகைப்பிடித்துக் கொண்டே" இந்த விவாதங்கள் நடைபெற்றதாக அவர் கூறினார்.
அரசியல்வாதிகள் பேசுவதைப் போல தங்களுக்குச் சாதகமான கருத்துகளை மட்டும் தெரிவிக்காமல், மெல்னிசென்கோ தனது பதில்கள் குறித்து "உண்மையாகவே சிந்தித்துப் பார்த்ததாக" ஓஸ்ட்ரோவ்ஸ்கி கூறுகிறார்.
ரஷ்யாவில் எந்தவொரு விஷயமும் அவ்வளவு எளிதானதல்ல. கிரெம்ளினின் மறைமுகமான அல்லது வெளிப்படையான ஒப்புதலுடன் இந்த நேர்காணல் நடைபெற்று இருக்கலாம் என்றே பெரும்பாலான பார்வையாளர்கள் கருதுகின்றனர். வழக்கத்துக்கு மாறாக மாற்றத்திற்கான அழைப்பை வெளியிட அதிகாரிகள் ஏன் அனுமதி அளித்தனர் என்பது நமக்குத் தெரியாது.
நாட்டில் ஓரளவுக்காவது பலதரப்பட்ட கருத்துகளுக்கு இடமளிக்கும் அரசியல் சூழல் இன்னமும் நிலவுகிறது என்பதைக் காட்ட அவர்கள் முயன்றிருக்கலாம். எந்தவொரு பெரும் பணக்காரரும் வெளிப்படையாக அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இருப்பினும், மெல்னிசென்கோ தனக்காக மட்டும் பேசவில்லை; தன்னைப் போன்ற பிற தொழிலதிபர்களின் சார்பாகவும் பேசியிருக்கலாம் என்று அந்தப் பத்திரிகையாளர் கருதுகிறார்.

பட மூலாதாரம், Andrey Rudakov/Bloomberg via Getty Images
புதின் பதவியில் இருந்து விலகிய பிறகு, ரஷ்யா "ஒலிகார்க்குகளின் குடியரசாக" மாறக்கூடும் என்று அவர்களில் சிலர் நம்புகின்றனர். 1990களில் இருந்ததைப் போலவே, பெரும் தொழிலதிபர்களின் ஆதிக்கத்தில் நாடு இயங்கும் சூழல் உருவாகலாம் என்று பத்திரிகையாளர் ஓஸ்ட்ரோவ்ஸ்கி குறிப்பிடுகிறார்.
ரஷ்யா குறித்துப் பல ஆண்டுகளாகச் செய்தி சேகரித்து வரும் ஓஸ்ட்ரோவ்ஸ்கி கூறுகையில், அந்நாட்டின் பெரும் பணக்காரர்கள் பலரும் தற்போது "இந்தப் போர் ரஷ்யாவைக்கொண்டு வந்து நிறுத்தியிருப்பதால்... [எதிர்காலமே இல்லாத ஒரு நிலை] முற்றிலும் முட்டுக்கட்டையான ஒரு சூழலை எதிர்கொள்வதாக உணர்கின்றனர்." என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், பெரும் பணக்காரர்கள் எதிர்காலம் குறித்து இவ்வாறு சிந்தித்தாலும், அவர்கள் உடனடியாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது. புதினை விமர்சித்து வரும் ப்ரௌடர் கூறுகையில், அவர்களில் பலர் அதிருப்தியில் இருந்தாலும், புதின் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு எதிராகச் சதி செய்ய வாய்ப்பில்லை என்கிறார்.
"புதினுக்கு சவால் விடுக்கும் வகையில் ஏதாவது செய்தால், அவர் தங்களைக் கொன்றுவிடுவார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். புதின் மிகவும் சந்தேக குணம் கொண்ட ஒரு சிறிய மனிதர்" என்று அவர் கூறுகிறார்.
ரஷ்யாவில் முக்கிய முதலீட்டாளராக இருந்த அமெரிக்க நிதி முதலீட்டாளரான மைக் கால்வியும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். "சிறைக்குச் சென்று தங்களது சொத்துகளை இழப்பதைத் தவிர அவர்களால் என்ன செய்ய முடியும்? லண்டனில் அமர்ந்திருப்பவர்கள், 'நீங்கள் அனைவரும் ஏன் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நின்று நேராகச் சிறைக்குச் செல்லக்கூடாது?' என்று எளிதாகக் கூறிவிடலாம். ஆனால், உண்மையில் நடக்கப் போவது அதுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பெரும் பணக்காரர்கள் முன்பு அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களிடம்கூட தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருந்தனர். புதின் பதவியில் இருந்து விலகிய பிறகு, தங்களது முந்தைய அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற அவர்கள் நிச்சயம் முயல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கேள்வி என்னவென்றால், தற்போதைய ஆட்சியின் எஞ்சியிருக்கும் அதிகார மையங்கள் அதற்கு அனுமதிக்குமா என்பதுதான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































