'ரத்தத்தால் பிணைக்கப்பட்டது': சீனா - வட கொரியாவின் அன்பும் வெறுப்பும் கலந்த உறவின் வரலாறு

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், லைக்னி பரோன்
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
சீனத் தலைவர் ஷி ஜின்பிங் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஜூன் 8 -9 தேதிகளில் நடைபெறவுள்ள உச்சிமாநாடு குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஷி மேற்கொண்ட சந்திப்பு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான அவரது தனிப்பட்ட சந்திப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இதற்கு அடுத்தபடியாக நேரடியாக வடகொரியா செல்வதன் மூலமும், அதை 2026 ஆம் ஆண்டின் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாற்றுவதன் மூலமும், ஷி தனது நிலையற்ற அண்டை நாடான வட கொரியாவுடனான கூட்டணியை வலியுறுத்துகிறார்.
இரு நாடுகளும் ''உத்தி ரீதியாக அவசியமான, ஆனால் உரசல்கள் அற்ற உறவாக இல்லாத" உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்று தென் கொரியாவை தளமாகக் கொண்ட செஜோங் நிறுவனத்தின் ஆராய்ச்சி ஆய்வாளர் யூன்-ஜூ சோய் கூறுகிறார்.
மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட பொதுத் தொடர்புகளுக்கு அப்பாற்பட்டு, இந்தச் சந்திப்பு சீனா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் தங்களது "ரத்தத்தால் பிணைக்கப்பட்ட" கூட்டாண்மையில் புதிய ஆற்றலைச் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும்.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மாறுபட்ட கடந்த காலத்தையும் மீறி, அவற்றுக்கு இடையேயான உறவை விவரிப்பதற்காக, சமீபத்தில் சீனாவின் வெளியுறவு அமைச்சரால் மீண்டும் பயன்படுத்தப்பட்ட ஒரு சொற்றொடர் தான் 'ரத்தத்தால் பிணைக்கப்பட்ட கூட்டணி' என்பதாகும்.

பட மூலாதாரம், Reuters
அன்பும் வெறுப்பும் கலந்த உறவுகள்
ஆரம்பத்திலிருந்தே, இந்த இரு சோசலிச நாடுகளும் பரஸ்பர செல்வாக்குக்கும் சுதந்திரமான முடிவெடுப்புக்கும் இடையே ஒரு சிக்கலான சமநிலையைப் பேண முயன்றுள்ளன. ஆனால், வடகொரியா தனது மற்றொரு வடக்கு அண்டை நாடான ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை வைத்திருந்ததால், இந்த சமநிலையைப் பேணுவது மேலும் சிக்கலானதாக மாறியது.
கொரியப் போரில் (1950-53), வடகொரியாவின் நலனுக்காக சீனா பல்லாயிரக்கணக்கான வீரர்களைத் தியாகம் செய்தது. சீனத் தலைவர் மாவோ சேதுங், தனது நாட்டிற்கு வடகொரியாவின் உத்தி முக்கியத்துவத்தை விவரிக்கும் போது, "உதடுகள் இல்லையெனில், பற்கள் குளிரால் நடுங்கும்" என்று குறிப்பிட்டார்.
ஆனால் வடகொரியாவை நிறுவிய தலைவர் கிம் இல் சுங் இன்னும் பெரிய ராணுவ உத்தரவாதங்களை எதிர்பார்த்தார், மேலும் 1961 இல் சோவியத் யூனியனுடன் ஒரு முறையான கூட்டணியை ஏற்படுத்தினார்.
சில நாட்களுக்குப் பிறகு, அவர் சீனாவுடன் மற்றொரு ராணுவ ஒப்பந்தத்தையும் செய்தார்.
கிம் இல் சுங்கின் 'ஜூச்சே' சித்தாந்தத்தின்படி, வடகொரியா இறுதியில் தன்னிறைவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு முக்கிய நாடுகளின் ராணுவ ஆதரவைப் பாதுகாப்பது என்பது, வடகொரியா இந்த இரண்டு நாடுகளில் எதற்கும் ஒரு சார்பு நாடாக மாறும் அபாயம் குறைவாக இருக்கும் என்பதாகும்.
அந்த நேரத்தில், வட கொரியா உதவி மற்றும் எண்ணெய்க்காக சோவியத் யூனியனைச் சார்ந்திருந்தது.
இதற்கிடையில் ஏற்பட்ட பஞ்சம், பொதுவான எல்லையில் ஓடும் துமேன் நதியைக் கடந்து சீனக் குடிமக்கள் வடகொரியாவிற்குள் செல்ல வழிவகுத்தது.
சிலர் வடகொரியாவின் கல்வி முறை சிறந்தது என்று நம்பி, அங்குள்ள பள்ளியிலும் படிக்கத் தொடங்கினர்.
ஆனால் 1991 இல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பிறகு, வடகொரியா ஒரு ராணுவக் கூட்டணியையும், அதன் முக்கியப் பொருளாதார ஆதரவு ஆதாரத்தையும் இழந்தது. இது வட கொரியாவின் முக்கிய ஆதரவாளராக வளர்ந்து வரும் சீனா அந்த இடத்தைப் பிடிப்பதற்கும் வழிவகுத்தது.

பட மூலாதாரம், Getty Images
சீனா இன்னும் வடகொரியாவின் முதன்மை வர்த்தகப் பங்காளியாகத் தொடர்கிறது, இது அதன் அண்டை நாட்டின் நிலைத்தன்மைக்கான முதலீடாகவும், அமெரிக்காவின் நட்பு நாடான தென்கொரியாவிற்கு ஒரு சமநிலை சக்தியாகவும் திகழ்கிறது.
"ஆட்சி கவிழ்வதைத் தடுப்பதற்குத் தேவையான பொருளாதார ஆதரவை மட்டுமே சீனா வழங்குகிறது, ஆனால் வடகொரியாவுக்கு முழுமையான தன்னிறைவை வழங்கக்கூடிய மாற்று முதலீடுகளை அது தீவிரமாகத் தவிர்க்கிறது" என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆசிய மையத்தின் வருகைதரு அறிஞர் சியோங்-ஹியோன் லீ பிபிசியிடம் தெரிவித்தார்.
இதற்குப் பதிலாக, "சீனாவின் முக்கிய உள்நாட்டு மற்றும் தூதரக நிகழ்வுகள் நடைபெறும் காலங்களில், வடகொரியா பெரிய அளவிலான தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தன்னடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற வெளிப்படுத்தப்படாத எதிர்பார்ப்பை சீனா கொண்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், வடகொரியா எப்போதும் அதற்கு இணங்கி நடந்ததில்லை.

பட மூலாதாரம், Reuters
அணுசக்தி இலக்குகளை நனவாக்குதல்
அணு ஆயுதங்கள் இல்லாத ஒரு கொரிய தீபகற்பத்தையே சீனா விரும்பியிருக்கும் . ஆனால் வடகொரியாவோ அதன் அணுஆயுதக் கனவுகளைத் தொடர்ந்தது.
கிம் இல் சுங் 1964 இல் யோங்பியோன் அணு ஆராய்ச்சி மையத்தைத் திறந்து, உலகின் மிகச்சிறிய அணுஆயுதக் களஞ்சியத்திற்கான அடித்தளத்தை அமைத்தார்.
அவர் 1985 இல் சர்வதேச அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், அதன் விதிகளை மீறி புளூட்டோனியத்தைச் சேமித்து வைத்தார்.
ஆனால், தன் நாடு செயல்படும் நிலையில் உள்ள ஒரு அணு ஆயுதத்தைக் உருவாக்குவதற்குள் அவர் இறந்துவிட்டார்.
1994 இல் அவரது மகன் கிம் ஜாங் இல் பொறுப்பேற்றபோது, அவர் இந்த வளர்ந்து வரும் திட்டத்தைத் தூதரக ரீதியான செல்வாக்காகப் பயன்படுத்தினார். சலுகைகளுக்குப் பதிலாகப் பொருளாதார உதவி அல்லது அமெரிக்காவுடனான உறவுகளுக்கான வாய்ப்பை அவர் நாடினார்.
2003 ஆம் ஆண்டில், வடகொரியா அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அது தனது முதல் அணுஆயுதச் சோதனையை நடத்தியது. அதற்கு ஐக்கிய நாடுகள் சபை மிகக் கடுமையான தடைகளை விதித்து விரைவாகப் பதிலடி கொடுத்தது.
சீனாவின் சம்மதம் இல்லாமல் அது சாத்தியமாகியிருக்காது. சீனா அந்தச் சோதனையை ஒரு "வெளிப்படையான அத்துமீறல்" என்று அழைத்ததுடன், தீபகற்பத்தை அணுஆயுதமற்றதாக்க வேண்டும் என்றும் வாதிட்டது. ஆனால் அது தனது முழு பொருளாதாரச் செல்வாக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தது.
"வடகொரியாவின் வீழ்ச்சி அல்லது நிலையற்ற தன்மை சீனாவுக்குப் பெரும் ஆபத்துக்களை உருவாக்கும். அகதிகள் வெளியேற்றம், அணுஆயுத நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்கா அல்லது தென்கொரிய ராணுவச் செல்வாக்கு வடக்கு நோக்கி விரிவடைவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை இதில் அடங்கும்" என்று கூறிய சோய், "இந்த கவலைகள், வட கொரியாவின் அணுஆயுதத் திட்டம் குறித்து சீனாவுக்கு இருக்கும் கவலைகளை விடப் பெரியதாக உள்ளன"என்கிறார்.

பட மூலாதாரம், KCNA via Getty Images
2011 இல் கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்தபோது, சீனாவின் கட்டுப்பாட்டில் வடகொரியா இருக்கிறது என்ற மாயையை உடைப்பதற்காக அவர் ஏவுகணைச் சோதனைகளைத் தீவிரப்படுத்தினார்.
புதிதாகப் பொறுப்பேற்ற அவர், வடகொரியாவை ஓர் அணுஆயுத நாடு என்று பிரகடனப்படுத்த அரசியலமைப்பைத் திருத்தினார், மேலும் சீனா தனது சொந்த தலைமைத்துவ மாற்றத்தை எதிர்கொண்டிருந்த அதே நேரத்தில் தொடர்ச்சியான அணுவெடிப்புச் சோதனைகளை மேற்கொண்டார்.
"கிம் ஜாங் இல் எவ்வளவு ஆபத்தான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், சீனாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் அணுகுமுறைக்கு ஒரு அடிப்படை மரியாதையையும் கீழ்ப்படிதலையும் அவர் பொதுவாகக் கடைப்பிடித்தார்," என்று லீ கூறினார்
"இதற்கு நேர்மாறாக, கிம் ஜாங் உன், அந்தச் சூழலை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார்"என்றும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 2013 இல் ஷி அதிபராகப் பதவியேற்பதற்கு முன்னதாக, கிம் தனது மூன்றாவது அணுஆயுதச் சோதனையை மேற்கொண்டார். சீனாவுக்கான தூதராகப் பணியாற்றிய, சீர்திருத்த எண்ணம் கொண்ட தனது மாமா ஜாங் சோங்-தாக்கிற்கும் மரண தண்டனை விதித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஐ.நா. தடைகளை மேலும் கடுமையாக்குவதற்கு ஷி ஆதரவு தெரிவித்தார். மேலும், "எந்த சூழலிலும்" வடகொரியாவின் அணு ஆயுத லட்சியங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று வலியுறுத்தியபடி, தென்கொரிய அதிபருடன் அவர் இணைந்து நின்றார்.
ஒரு புதிய கூட்டாளியான ரஷ்யா

பட மூலாதாரம், KCNA via Reuters
வடகொரியாவின் பரம எதிரியான அமெரிக்காவும், அதன் நெருங்கிய கூட்டாளியான சீனாவும் ஒரே நிலைப்பாட்டில் செயல்படத் தொடங்கிய நிலையில், கிம் ஜாங் உன் சீனாவைச் சார்ந்திருப்பதை குறைக்க முயன்றார். அதற்காக அவர் ரஷ்யாவை நோக்கித் திரும்பினார். இரு நாடுகளின் உறவை மீண்டும் வலுப்படுத்த சில காலம் எடுத்துக்கொண்டாலும், ரஷ்யா அதற்கு தயாராக இருந்தது.
ஏப்ரல் 2014 இல், ரஷ்ய அரசு வடகொரியாவின் 11 பில்லியன் டாலர் (6.7 பில்லியன் பவுண்டுகள்) கடனில் 90%-ஐத் தள்ளுபடி செய்தது, மேலும் இரு நாடுகளும் பல வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
மேலும், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு வடகொரியாவை முன்னெப்போதையும் விட நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆயுதங்களையும் மனித ஆற்றலையும் தேடும் அதே வேளையில், கிம்முக்கு உதவி, வர்த்தகம் மற்றும் ராணுவ தொழில்நுட்பம் ஆகியவை மிக முக்கியமாகத் தேவைப்படுகின்றன.
யுக்ரேனில் ரஷ்யா பயன்படுத்துவதற்காக கிம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பீரங்கி குண்டுகளையும், கிராட் ஏவுகணைகளையும் விற்றுள்ளதாக அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது, அங்கு ரஷ்யாவிற்காகப் போரிட்டு 2,300-க்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் இறந்துள்ளதாக பிபிசி விசாரணையில் தெரியவந்துள்ளது.
2024 ஜூன் மாதம் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, வேகமாக வளர்ந்து வந்த அந்த உறவு சீனாவின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது, சீனாவின் அதிகாரப்பூர்வ ராணுவ கூட்டாளியாக உள்ள ஒரே நாடு வடகொரியா தான்.
"2024 இல் ரஷ்யாவும் வடகொரியாவும் தங்களது உறவுகளை ஆழப்படுத்தத் தொடங்கியதிலிருந்து, வட கொரியாவுடனான தனது உறவை வலுப்படுத்த சீனாவால் ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் 'அஸெஸிங் சீனா பிராஜெக்ட்' இணைத் தலைவர் பாட்ரிசியா எம். கிம் கூறினார். மேலும், "வடகொரியாவின் முக்கிய உத்தி கூட்டாளி என்ற தனது நிலையை ரஷ்யா பறித்துக்கொள்வதை சீனா விரும்பவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், KCNA via Reuters
செப்டம்பரில் ஷி ஜின்பிங், கிம் மற்றும் புதின் இருவரையும் ஒரு வெற்றி நாள் அணிவகுப்பின் போது உபசரித்தபோது, இரு நாடுகளுக்கிடையிலான நெருக்கம் மேலும் வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த விழாவின் போது சீனத் தலைவரின் பக்கவாட்டில் கிம் நின்றார் என்பதைக் கவனித்த ஆய்வாளர்கள், இது ஒரு பெருமைக்குரிய மற்றும் அரிய நிலை என்றும் குறிப்பிட்டனர்.
இந்த உயர்மட்ட வணிக மற்றும் தூதரக முயற்சிகளில் பயணிகள் ரயில் மற்றும் ஏர் சீனாவின் நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவது, சீனப் பிரதமர் லி சியாங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோரின் வட கொரியா வருகைகளும் அடங்கும்.
"கிம்மின் புதிய அணுஆயுதக் கொள்கைக்கு" சீனாவின் சமீபத்திய "மறைமுக ஆதரவு", அதன் சக கம்யூனிஸ்ட் நாடு குறித்த அதன் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காட்டுகிறது என்கிறார் லீ.
"மே 14-15 தேதிகளில் நடந்த டிரம்ப்-ஷி உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இந்த மாற்றம் தெளிவாகத் தெரிந்தது, அங்கு சீனா தனது அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலிருந்து 'அணுஆயுதக் குறைப்பு' என்ற சொல்லை வெளிப்படையாக நீக்கியது, இது அமெரிக்காவின் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது" என்று அவர் கூறினார்.
ஷியின் இந்த பயணம், வடகொரியாவை நெருக்கமாக்கும் முயற்சியின் உச்சக்கட்டமாக பார்க்கப்படுகிறது.
"பல வகைகளில் பார்க்கும்போது, மாறிவரும் இந்த உத்தி முக்கோண உறவில் அதிக பலன் அடையும் நாடாக வடகொரியா தான் உள்ளது" என்று கூறும் கிம், "ரஷ்யாவும் சீனாவும் , வட கொரியா தங்களுடன் இணைந்தே இருக்க வேண்டும் என்பதில் வலுவான அரசியல் தேவையைக் கொண்டுள்ளன," என்றும் லீ தெரிவித்தார்.
யதார்த்தத்தில், சீனா"வட கொரியாவை இழக்கவில்லை. அது தனது ஏகபோக உரிமையை மட்டுமே இழந்துள்ளது" என்பதை உணரும் என்று லீ கூறினார்.
-கூடுதல் தகவல்கள் : கிரேஸ் சோய்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































