சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஆவதற்கு என்ன படிக்கலாம்? அதிலுள்ள வேலைவாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
உலகளவில் சைபர் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் பாதுகாப்பு நிபுணர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும்போது, சமூக ஊடகக் கணக்கை பயன்படுத்தும்போது, கிளவுட் ஸ்டோரேஜில் தரவுகளைச் சேமிக்கும்போது, ஆன்லைன் வங்கி சேவைகளை அணுகும்போது எனப் பல்வேறு தருணங்களில் மக்கள் சைபர் குற்றவாளிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாக்கத் தேவையான கட்டமைப்புகளைச் சார்ந்துள்ளார்கள்.
அந்தப் பாதுகாப்பை, சைபர் பாதுகாப்பு நிபுணர்களே வழங்கி வருகின்றனர். இந்தத் தொழில்துறை, உலகெங்கிலும் அரசுகள், வணிகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் எனப் பலவற்றுக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.
இந்தத் துறையில் மிகவும் முக்கியமான பணிகளில் ஒன்று சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் (Cybersecurity Analyst). டிஜிட்டல் அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளுக்காக நெட்வொர்க்குகளை கண்காணித்தல், நிறுவனங்கள் தங்கள் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த உதவுதல் ஆகியவை இந்தப் பணியின் கீழ் வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச தகவல் அமைப்பு பாதுகாப்புச் சான்றிதழ் கூட்டமைப்பு வெளியிட்ட 2025 சைபர் பாதுகாப்புப் பணியாளர் ஆய்வின்படி, டிஜிட்டல் பாதுகாப்பில் முதலீடு அதிகரித்து வந்தபோதிலும், உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் தகுதிவாய்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்து வருகின்றன.
அதோடு, இந்த ஆய்வில், இத்துறையின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குவோர் தொழில்நுட்பத் தகுதிகளை மட்டுமின்றி, நடைமுறைத் திறன்கள், நேரடி அனுபவம் ஆகியவற்றையும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், சமீப காலமாக மாணவர்களிடையே, குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள் மத்தியில், இணைய பாதுகாப்புத் துறை மீதான ஆர்வம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேவேளையில், அந்தத் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
உண்மையில், ஒரு சைபர் பாதுகாப்பு ஆய்வாளரின் பணிகள் என்ன? இந்தத் தொழிலில் நுழைய விரும்புவோர் தேர்வு செய்ய வேண்டிய கல்விப் பாதை எது?

பட மூலாதாரம், Getty Images
சைபர் பாதுகாப்பு ஆய்வாளரின் பணிகள் என்ன?
பொதுவாக, இணைய தாக்குதல்கள், தரவு மீறல்களில் இருந்து நிறுவனங்களைப் பாதுகாப்பதே சைபர் பாதுகாப்பு ஆய்வாளரின் முதன்மைப் பொறுப்பாக இருக்கும்.
"சைபர் பாதுகாப்பு அமைப்புகளைக் கண்காணித்து, எச்சரிக்கைகளைப் பகுப்பாய்வு செய்து, அசாதாரணமான செயல்பாடுகளை ஆராய்ந்து, பாதிப்புகளைக் கண்டறிந்து, இணைய அபாயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துக்கின்றனர்," என்று நிபுணர்கள் விவரிக்கின்றனர்.
பல கல்வியாளர்கள் மற்றும் தொழில் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் உலகளாவிய தொழில் போக்குகளைக் கண்காணிக்கும் அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளிவிவரப் பணியகம், தகவல் பாதுகாப்பு வல்லுநர்களை, கணினி அமைப்புகள் மற்றும் வலையமைப்புகளைப் பாதுகாக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் நபர்கள் என்று விவரிக்கிறது.
அதன்படி, நடைமுறையில் ஓர் இணைய பாதுகாப்பு ஆய்வாளர், சந்தேகத்திற்கிடமான உள்நுழைவு முயற்சிகளை மதிப்பாய்வு செய்வது, ரேன்சம்வேர் தாக்குதல்களைத் தடுப்பது, மால்வேர் எச்சரிக்கைகளை ஆராய்வது ஆகிய பணிகளை மேற்கொள்வார்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள், கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, தொலைதூரப் பணி அமைப்புகளை அதிகளவில் கையாள்வதால், இந்தப் பணியானது பாரம்பரிய வலையமைப்புப் பாதுகாப்பையும் தாண்டி, கிளவுட் பாதுகாப்பு, அச்சுறுத்தல் நுண்ணறிவு, டிஜிட்டல் தடயவியல் போன்றவற்றுக்கும் விரிவடைந்து இருப்பதாக விளக்குகிறார் உண்மை சரிபார்ப்பு நிபுணரான முரளிகிருஷ்ணன்.

பட மூலாதாரம், Getty Images
சைபர் பாதுகாப்புத் துறையில் பணியாற்ற உதவும் படிப்புகள்
சைபர் பாதுகாப்பு துறைக்குள் நுழைவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட வழி மட்டுமே இல்லை என்பதை அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் மூத்த சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரசுதன் தங்கவேலு.
சைபர் பாதுகாப்பின் மீது ஆர்வம் கொண்ட மாணவர்கள் தங்கள் மேல்நிலைக் கல்வியின்போதே கணிதம், கணினி அறிவியல் ஆகியவற்றில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்வது உறுதுணையாக இருக்கும் என்று கல்வியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதேவேளையில், சைபர் பாதுகாப்புத் துறை ஒரு குறிப்பிட்ட கல்விப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உரியதல்ல என்றும், ஆரம்பத்தில் அதை மையமாகக் கொண்டிருக்காத கணினிப் பயன்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் போன்ற துறைகளில் படித்திருந்தாலும், பின்னர் சைபர் பாதுகாப்பு தொடர்பான சான்றிதழ் படிப்புகளைப் பயின்று இந்தத் துறைக்குள் நுழையலாம் என்றும் கூறுகிறார் ஹரிஹரசுதன்.
இதைப் பொறுத்தவரை, சர்வதேச தகவல் அமைப்பு பாதுகாப்புச் சான்றிதழ் கூட்டமைப்பின் ஆய்வில் கூறப்பட்டதையே ஹரிஹரசுதனும் குறிப்பிடுகிறார்.
அதாவது, "இத்துறையில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு, ஒருவரின் கல்விப் பின்னணி எந்த அளவுக்கு முக்கியமோ, அதற்கு நிகராக, பகுப்பாய்வுச் சிந்தனைத் திறன், தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பதற்கான மனப்பான்மை போன்ற நடைமுறைத் திறன்களும் மிக முக்கியம்" என்று அவர் வலியுறுத்துகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக, இணைய பாதுகாப்பு தொழில்துறையில் உருவாகி வரும் தேவைக்கு ஏற்ப தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களும் பொறியியல் கல்வி நிறுவனங்களும் தங்கள் இணைய பாதுகாப்புப் பாடத் திட்டங்களை விரிவுபடுத்தி இருப்பதாகக் கூறுகிறார் கணினி அறிவியல் துறையின் மூத்த பேராசிரியர் முனைவர் தங்கராஜன்.
"அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பல கல்லூரிகளில் தற்போது கணினி அறிவியல் மற்றும் பொறியியலில், இணைய பாதுகாப்பை சிறப்புப் பாடமாகக் கொண்ட பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன. மேலும், பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்கள் இணைய பாதுகாப்பில் குறிப்பாகக் கவனம் செலுத்தும் பிரத்யேக இளங்கலைப் பட்டப் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.
அத்தகைய பிரத்யேக இளங்கலைப் படிப்புகளில், 80% கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்றவையும் 20% சைபர் பாதுகாப்பு குறித்தான பாடங்களும் இடம் பெறுவதாகக் கூறிய அவர், "அவை அடிப்படை அறிவை வழங்குவதாகவும், அதைத் தொடர்ந்து இதுசார்ந்த ஆழமான அறிவைப் பெறுவதற்கு சான்றிதழ் படிப்புகளில் மாணவர்கள் கவனம் செலுத்துவதும் வாய்ப்புகளை அணுகுவதை எளிமையாக்கும்," என்று அறிவுறுத்தினார்.

பட மூலாதாரம், HariHarasudhan
பொதுவாக, இளங்கலை பொறியியலில் (பி.இ) கணினி அறிவியல் துறையில் அல்லது இளங்கலைத் தொழில்நுட்ப (பி.டெக்) படிப்புகள், பிரத்யேகமாக பி.டெக் இணைய பாதுகாப்பு படிப்புகள், இணைய பாதுகாப்பில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்புகள், பிற்காலத்தில் சைபர் பாதுகாப்பு சிறப்புப் படிப்புகளை பயில்வதற்கு வழிவகுக்கக்கூடிய இளங்கலை கணினிப் பயன்பாடுகள் (பிசிஏ) ஆகிய படிப்புகள் சைபர் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான அடிப்படைத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் என்று மூத்த பேராசிரியர் முனைவர் தங்கராஜன் விவரித்தார்.
டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு, தகவல் பரிமாற்றத்தின்போது தரவுகள் திருடப்படுவதைத் தடுப்பது, சைபர் குற்றங்கள் நடந்த பிறகு அவற்றை சைபர் தடயவியல் மூலம் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிவது எனப் பல்வேறு பணிகள் சைபர் பாதுகாப்புத் துறையில் இருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட பட்டப் படிப்புகளைப் பயில்வதுடன், இத்தகைய தனித்திறன்களையும் மாணவர்கள் சான்றிதழ் படிப்புகளின் மூலமாகப் பெற முடியும் என்கிறார் தங்கராஜன். உதாரணமாக, "சைபர் ஃபோரென்சிக்ஸ் என்ற சான்றிதழ் படிப்பின் மூலம், இணைய குற்றங்களை சைபர் தடயவியல் மூலம் ஆராய்ந்து கண்டுபிடிக்கும் திறன்களை ஒருவர் பெறலாம், அதேபோல, தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் திறன்களுக்கு நெட்வொர்க் சேஃப்டி என்ற படிப்பு உதவக்கூடும்," என்று விளக்கினார் அவர்.
அதேவேளையில், இப்போதைய சூழலில் அனைத்து கல்லூரிகளிலும் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடப் பிரிவுகள் இருப்பதாகக் காட்டப்பட்டாலும், ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே அதில் முழுமையாகத் தகுதி பெறுவதற்குரிய கட்டமைப்பு அம்சங்கள் இருக்கின்றன என்கிறார் ஹரிஹரசுதன்.
எனவே, "இந்தத் துறை சார்ந்து தனது தொழில் வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்பும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், தமக்கான கல்லூரியைத் தேர்வு செய்யும்போது சைபர் பாதுகாப்பு பாடப் பிரிவுகளை முழுதாகப் பயில உதவும் உட்கட்டமைப்புகள், மேம்பட்ட ஆய்வகங்கள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்," என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பட மூலாதாரம், Muralikrishnan Chinnadurai/FB
சான்றிதழ் படிப்புகளும் அவசியமா?
இந்தத் துறையில் அதிகமான வாய்ப்புகள் இருப்பதைக் குறிப்பிட்ட முனைவர் தங்கராஜன், "ஆனால் அதற்கான பட்டப் படிப்புகள் சைபர் பாதுகாப்புத் துறைக்குள் நுழைவதற்கு மட்டுமே வழிவகுக்க உதவும். அதில் நீடித்திருக்கவும், மேம்படவும், மாறிக் கொண்டேயிருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தொடர்ந்து பயின்று கொண்டே இருக்க வேண்டியது அவசியம். அதற்கான முயற்சிகளை மாணவர்கள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் இருந்தே தொடங்க வேண்டும்," என்று அறிவுறுத்தினார்.
டிஜிட்டல் கட்டமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது, அவற்றைப் பாதுகாப்பதற்கு அவசியமானது என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, "இந்தத் துறைக்குள் நுழைய விரும்பும் மாணவர்கள் ஸ்கிரிப்டிங் மொழிகள், பாதுகாப்பு கண்காணிப்புக் கருவிகள் ஆகியவற்றில் பரிச்சயம் பெற ஊக்குவிக்கப்பட வேண்டும். அதோடு, சைபர் பாதுகாப்பு ஆய்வகங்களின் உதவியுடன் நடைமுறை அனுபவத்தை வளர்த்துக் கொள்வதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்," என்று அறிவுறுத்துகிறார் முரளிகிருஷ்ணன்.
அதோடு, குறிப்பிட்ட தொழில்நுட்பத் திறன்களை மதிப்பிடுவதற்கான ஓர் அளவீடாக, நிறுவனங்கள் தொழில்முறை சான்றிதழ் படிப்புகளைப் பெரும்பாலும் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இத்துறையில் தங்கள் பணி வாழ்வைத் தொடங்கும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு, ISC2 Certified in Cybersecurity (CC), CompTIA Security+, Cisco CyberOps Associate போன்ற ஆரம்ப நிலைச் சான்றிதழ்கள் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.
அதைத் தொடர்ந்து மேலும் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு, "Certified Ethical Hacker (CEH), Certified Information Systems Security Professional (CISSP) மற்றும் பிற சிறப்புச் சான்றிதழ்கள் போன்ற மேம்பட்ட சான்றிதழ்களை தொழில் வல்லுநர்களாக சிறிது கால அனுபவத்தைப் பெற்ற பிறகு மேற்கொள்ளலாம்" என்று விவரித்தார் ஹரிஹரசுதன்.
அதேநேரம், "இணைய பாதுகாப்புத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள், சான்றிதழ்களையும் தாண்டி, ஒருவருக்கு இருக்கும் நடைமுறைத் திறன்கள், சிக்கல்களைத் தீர்க்கும் திறன், தகவல் தொடர்புத் திறன்கள், நேரடிச் செயல்முரை அனுபவம் ஆகியவற்றில் முக்கியமாக கவனம் செலுத்துவதாகவும்" அவர் கூறினார்.

எத்தகைய வேலை வாய்ப்புகள் உள்ளன?
பொதுவாக நிபுணர்களின் கூற்றுப்படி, பல பட்டதாரிகள் தங்களது தொழில் வாழ்க்கையை பாதுகாப்பு செயல்பாட்டு மைய (SOC) ஆய்வாளர்களாகத் தொடங்குகிறார்கள். அங்கு அவர்கள் கணினிகளைக் கண்காணிக்கவும் பாதுகாப்பு எச்சரிக்கைகளுக்கு எதிர்செயலாற்றவும் கற்றுக் கொள்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து, "இன்சிடன்ட் ரெஸ்பான்ஸ் ஸ்பெஷலிஸ்ட் (Incident Response Specialist), திரெட் இன்டெலிஜென்ஸ் அனலிஸ்ட் (Threat Intelligence Analyst), பாதுகாப்புப் பொறியாளர், கிளவுட் பாதுகாப்பு நிபுணர், டிஜிட்டல் தடயவியல் புலனாய்வாளர், ஊடுருவல் சோதனையாளர் (Penetration Tester), பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு வடிவமைப்பாளர் அல்லது தலைமைத் தகவல் பாதுகாப்பு அதிகாரி (CISO) போன்ற பணி வாய்ப்புகளைப் பெற முடியும்" என்று விளக்கினார் முனைவர் தங்கராஜன்.
இவற்றுடன், கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், டிஜிட்டல் நிதி சேவைகளின் அதிகரித்து வரும் பயன்பாடு ஆகியவை பொது மற்றும் தனியார் துறைகள் என இரண்டிலும் கிடைக்கக்கூடிய இணையப் பாதுகாப்புப் பணி வாய்ப்புகளுக்கான வரம்பை விரிவுபடுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம், தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி, வங்கிகள், சுகாதார நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு வழங்குநர்கள், ஆலோசனை மற்றும் சேவை நிறுவனங்கள் எனப் பலவற்றிலும் அவர்களுக்கான பணி வாய்ப்புகள் வளர்ந்து வருவதாகக் கூறினார் முனைவர் தங்கராஜன்.
இந்தப் பரந்த பயன்பாடு, சைபர் பாதுகாப்புத் துறையை மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த தொழில் வாய்ப்புகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
ஆய்வுகளின்படி, இந்தத் துறைசார்ந்த நிபுணர்களுக்கான தேவையில் பற்றாக்குறை நிலவுகிறது என்றாலும், தற்போது தமிழ்நாட்டின் உயர்கல்விக் கட்டமைப்புகளில் நிகழ்ந்து வரும் மேம்பாடுகள், மாணவர்களிடம் இதற்கான திறன்களை வளர்க்க உதவும் வசதிகளில் கவனம் செலுத்துவதால், இனி வரும் ஆண்டுகளில் இத்துறையில் பல வாய்ப்புகளை அவர்களால் அணுக முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மூத்த பேராசிரியர் முனைவர் தங்கராஜன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































