காங்கிரஸை விமர்சித்து, திமுகவை குறிப்பிட்டு இந்தியா கூட்டத்தில் திருமாவளவன் பேசியது என்ன?

காங்கிரஸை விமர்சித்து, திமுகவை குறிப்பிட்டு இந்தியா கூட்டத்தில் திருமாவளவன் பேசியது என்ன?

பட மூலாதாரம், X/@thirumaofficial

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

திமுக புறக்கணிப்பதாக அறிவித்த ''இந்தியா'' கூட்டணி கூட்டம் டெல்லியில் நடந்து முடிந்தது. காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறை திமுக உள்ளிட்ட கட்சிகளை பலவீனம் அடையச் செய்திருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் இக்கூட்டத்தில் பேசினார்.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்தியதோடு, வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்னைகளை இந்த கூட்டணி வலுவாக முன்னெடுக்கும் என்று கூறினர்.

இந்தியா கூட்டணிக் கட்சிகள் சிலவற்றுக்கிடையே நிலவும் கடுமையான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளான திமுகவும் ஆம் ஆத்மி கட்சியும் இதில் கலந்துகொள்ளவில்லை.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகியவை கலந்துகொண்டன. மேற்கு வங்க தேர்தல் தோல்விக்கு பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வரும் பிரதான கட்சியான திரிணாமூல் காங்கிரசும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலைச் சந்தித்து, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த விசிக தலைவர் திருமாவளவன், இந்தக் கூட்டத்தில் திமுகவைக் குறிப்பிட்டு பேசியது பெரிதும் கவனத்தைப் பெற்றது.

''அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அணுகுமுறை இந்த கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது. இது விரும்பத்தக்கது அல்ல. எனவே காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறு ஆய்வு செய்து இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்'' என இக்கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.

காங்கிரஸை விமர்சித்து, திமுகவை குறிப்பிட்டு இந்தியா கூட்டத்தில் திருமாவளவன் பேசியது என்ன?

பட மூலாதாரம், ANI

திமுக என்ன கூறியது?

''காங்கிரஸ் எங்களுடன் இல்லை. அவர்கள் தவெகவுடன் உள்ளனர். எதிர்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களிலும், மக்களவைத் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. இதன் பொருள், காங்கிரஸ் இனி எங்கள் கூட்டணியின் ஒரு பகுதியாக இல்லை என்பதே. அப்படியென்றால், நாங்கள் ஏன் அவர்களுடன் இருக்க வேண்டும்?" என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

''தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மனக்காயமுற்றிருக்கும் கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், இந்தியா கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது'' என முன்னதாக திமுக அறிக்கை வெளியிட்டிருந்தது.

திருமாவளவன் இக்கூட்டத்தில் பேசியது குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் டி. ராமகிருஷ்ணன், "காங்கிரஸ் தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற விசிகவின் கோரிக்கை நியாயமானது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போதே தவெகவுடன் செல்வது குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கலாம். அதற்காக இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்குப் பிறகு அவர்கள் நடந்துகொண்ட விதம் அரசியல் நாகரிகத்திற்கு ஏற்புடையதாக இல்லை. எனவே, திமுக - காங்கிரஸ் இடையே சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை மனதில் வைத்தே திருமாவளவன் அவ்வாறு பேசியிருக்கலாம்," என்று கூறினார்.

 எம்.ஏ. பேபி

பட மூலாதாரம், ANI

கூட்டத்தில் நடந்தது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் 25 கட்சிகள் பங்கேற்றதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார். கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

'' வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இந்தியத் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்புவது, நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளை எழுதிய லட்சக்கணக்கான இளைஞர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதால், கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும், பணவீக்கம், வேலையின்மை மற்றும் பிற முக்கிய பொருளாதார பிரச்னைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்'' உள்ளிட்ட பல விஷயங்கள் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

இக்கூட்டத்தில் காங்கிரஸின் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமூல் காங்கிரஸின் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜான் பிரிட்டாஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹ்பூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே மற்றும் வேறு சில சிறிய கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே காணொளி மூலம் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.

 எம்.ஏ. பேபி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, எம்.ஏ. பேபி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோபமாக இருப்பது ஏன்?

கேரள தேர்தலுக்குப் பிறகு, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே விரிசல்கள் தோன்றத் தொடங்கின.

இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் தொடர்பாக தங்களுக்கு உள்ள சில கவலைகளை சுட்டிக்காட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தான் கடிதம் அனுப்பியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் எம்.ஏ. பேபி செய்தியாளர்களிடம் கூறினார்.

"இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அதிக கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும். ஆனால், கேரளத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர்களின் அணுகுமுறை வேறுபட்டதாக இருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்திருந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்தியா கூட்டணியின் முக்கியக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், அதே கூட்டணியில் உள்ள மற்றொரு முக்கியக் கட்சியை இவ்வாறு குற்றம்சாட்டியது ஏற்றுக்கொள்ள முடியாதது. தேர்தல் காலத்தில்கூட இதுபோன்ற பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது," என்று எம்.ஏ. பேபி கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு