சர்ச்சைகளை சந்திக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலின் வரலாறு என்ன? - யார் இந்த திரிசுதந்திரர்கள்?

Thiruchendur, HRCE, History, Temple, Lord Muruga

பட மூலாதாரம், TNGovt/HRCE

    • எழுதியவர், ப.சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வின்போது அர்ச்சகர் பணம் பெற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் காவல்துறை சார்பில் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.

ஆனால் "இது அர்ச்சகர்களை இழிவுபடுத்தும் செயல்" என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கைங்கர்யம் மேற்கொள்ளும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? முருகன் கோயிலின் வரலாற்று பின்னணி என்ன?என்பதைப் பார்க்கலாம்.

திருச்செந்தூர் கோயில் எப்போது உருவானது?

Thiruchendur, HRCE, History, Temple, Lord Muruga

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக அறநிலையத்துறையால் குறிப்பிடப்படுகிறது திருச்செந்தூர். முருகனின் படை வீடுகள் அனைத்தும் மலைகளில் அமைந்திருக்கும் போது, திருச்செந்தூர் கோயில் மட்டும் வங்காள விரிகுடாவில் கடற்கரை கோயிலாக அமைந்திருப்பது இதன் தனிசிறப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த கோயில் கட்டுமானங்கள் அனைத்தும் வெவ்வேறு காலக்கட்டங்களில் பல புகழ்பெற்ற மன்னர்களாலும், ஜமீன்தார்களாலும் புனரமைக்கப்பட்டிருப்பதாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

திருச்செந்தூர் கோயில் கடற்கரை பாதை செல்லும் வழியில் உள்ள கல்தூண்களின் குறிப்புகள் படி "10 மற்றும் 11ம் நூற்றாண்டுகளில் கோயிலுக்காக நிலங்கள் தானம் வழங்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது இதனை ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.

வரலாற்று ஆர்வலர் சொல்வது என்ன?

அதே நேரத்தில் திருச்செந்தூர் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை குறிப்பிடும் இலக்கிய தரவுகளும் இருப்பதாக சொல்கிறார் வரலாற்று ஆசிரியர் மற்றும் தொல்லியல் ஆர்வலர் சிவகளை ஆ மாணிக்கம்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குலசேகர பாண்டியன் காலத்தில் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும், நிலம் தானம் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டுகளில் இருப்பதால் திருச்செந்தூர் பாண்டியர்கள் காலத்திற்கும் முற்பட்டது" என்று அவர் கூறினார்.

"திருச்செந்தூர் கோயில் ஆரம்பக்காலத்தில் சிவன் கோயிலாக இருந்தது , சிவன் கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகள் அனைத்தும் இங்கும் கடைபிடிக்கப்படும்" என்று அவர் கூறினார். இதனை கோயில் பணிகள் செய்யும் அர்ச்சகர்களும் உறுதி செய்கின்றனர்.

இந்த கோயில் புனரமைப்பில் பாண்டியர்கள், நாயக்கர்கள், மற்றும் ஜமீன்தாரர்களின் பங்கும் உள்ளது என கூறும் அவர், பல்வேறு காலக்கட்டங்களில் பலரால் இந்த கோயில் கட்டுமானங்கள் விரிவடைந்ததாக சொல்கிறார்.

மேலும் பேசிய அவர், "தொல்லியல் ரீதியாக இறுதியாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் 10, 11ம் நூற்றாண்டுகளை சேர்ந்ததாக இருந்தாலும் இலக்கியங்களில் திருச்செந்தூர் குறித்து நக்கீரர் பாடலில் 'திருச்சீரலைவாய்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

"நக்கீரர் வாழ்ந்த காலத்தை இலக்கிய ஆய்வாளர்கள் கி.பி 2ம் நூற்றாண்டு என்று குறிப்பிடுவதால் இந்த கோயில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை நம்மால் சொல்ல முடியும்" என்றார் அவர்.

டச்சுக்காரர்களுக்கு எதிராக போர் நடந்ததா?

Thiruchendur, HRCE, History, Temple, Lord Muruga

பட மூலாதாரம், TNGovt/HRCE

படக்குறிப்பு, திருச்செந்தூர் உற்சவரான சண்முகர்

17ம் நூற்றாண்டுகளில் திருச்செந்தூர் நிலப்பரப்புகளை கைப்பற்றிய டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் சண்முகர் சிலையை கொள்ளையடித்து சென்றதாக பேராசிரியர் முனைவர் கல்யாணசுந்தரம் எழுதிய திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

"15, 16ம் நுற்றாண்டுகளில் தமிழக கடலோர பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த போச்சுகீசியர்களிடமிருந்து நிலப்பரப்பை கைப்பற்றிய டச்சுக்காரர்கள், 1648ல் நாகப்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூரை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் இலங்கை சென்று மீண்டும் படைகளை திரட்டி 1649ல் திருச்செந்தூர் கோயிலை டச்சுக்காரர்கள் கைப்பற்றினர்" என கல்யாணசுந்தரம் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

திருச்செந்தூர் கோயிலை மீட்டெடுக்க மக்கள் ஆதரவோடு டச்சுக்காரர்களை எதிர்த்து நாயக்க மன்னர்கள் போரிட்டனர் என்றும், சில உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் அதற்காக "டச்சுக்காரர்கள் இழப்பீடு கேட்டனர்" என்றும் அந்த புத்தகம் விவரிக்கிறது.

கேட்ட பொருளுதவி மறுக்கப்பட்டதால் திருச்செந்தூர் கோயில் இருந்து சண்முகர் சிலையையும், நடராஜர் சிலையையும் டச்சுக்காரர்கள் கொள்ளையடித்து சென்றதாக திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு பின் டச்சுக்காரர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 1651ல் சிலைகள் மீட்டு கொண்டு வரப்பட்டதாக கல்யாண சுந்தரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் "சிலை கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வரலாற்று ஆதாரங்கள் மற்றும் குறிப்புகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை" என முரண்படுகிறார் சிவகளை ஆ மாணிக்கம்.

திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்?

Thiruchendur, HRCE, History, Temple, Lord Muruga

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, திருச்செந்தூர் கோயிலில் சப்பரம் சுமந்து வரும் திரிசுதந்திர அர்ச்சகர்கள்

திரிசுதந்திர அர்ச்சகர்கள் என்பவர்கள் முருகன் கோயிலில் அர்ச்சனை பணிகளை செய்யும், பிராமண வகுப்பைச் சேர்ந்த குழுவினர்.

"சூரபத்மனின் ஆதிக்கத்தில் கீழ் அடிமையாக இருந்த பிராமணர்கள், முருகன் சூரபத்மனை வதம் செய்ய வந்த போது, முருகனுக்கு ஆதரவாக நின்று போர் புரிந்தனர்." என கூறும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் சங்கத்தின் தலைவர் வீரபாகு மூர்த்தி, அவர்களின் வழி வந்தவர்களாக தங்களை கருதுவதாக கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "முருகன் கோயிலில் அனைத்து வகைகளிலும் சேவை ஆற்றுவதே எங்களின் தலையாய பணியாக இருந்து வருகிறது.1954க்கு முன்பு வரை கோயிலின் முழுக்கட்டுப்பாடும் எங்களிடம் இருந்தது, அதன்பிறகு அரசு கட்டுப்பாட்டில் சென்றது" என்றார் அவர்.

"கோயிலில் சேவை செய்யும் எங்களுக்கு அரசின் எந்த பணப்பலன்களும் கிடைக்கவில்லை" என்றும் அவர் கூறினார். "காலம் காலமாக சேவையாற்றும் எங்களுக்கு ஊதியம் வழங்காவிட்டாலும் 1965 முதல் 2018 வரை வழங்கப்பட்டு வந்த பங்குத்தொகைகளை கடந்த 8 ஆண்டுகளாக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதனை முறையாக வழங்கினால் எங்களின் வாழ்வாதாரத்திற்கு அதனை பயன்படுத்திக்கொள்வோம்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அர்ச்சகர் பணம் பெற்றது தவறில்லையா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் "எங்களை இந்த விரும்பத்தகாத நிலைக்கு நிலைக்கு தள்ளுவதே அரசுதான்" என்று பதிலளித்தார். மேலும் அதிகாரிகளின் 100 ரூபாய் டோக்கன் முறைகேட்டை மறைக்க அர்ச்சகர்களை பலிகடா ஆக்குவதாகவே இதனை பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

அர்ச்சகர்களுக்கு பங்குத்தொகை வழங்கப்படாத விவகாரம் குறித்து விளக்கம் பெற இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது, "பங்குத்தொகை விவகாரம் தொடர்பாக எங்களிடம் எந்த கோரிக்கையும் வரப்பெறவில்லை அதனை முறையாக அவர்கள் கேட்டால் அதனை அரசு பரிசீலிக்கும். அதற்காக முறைகேடாக பணம் பெறுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என்று அவர் விளக்கமளித்தார்.

திமுகவின் எதிர்ப்பும் - அமைச்சரின் விளக்கமும்.

Thiruchendur, HRCE, History, Temple, Lord Muruga

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, திருச்செந்தூர் கோயிலில் ஆய்வில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

திருச்செந்தூர் கோயிலில் திடீர் ஆய்வு என்ற பெயரில் காலம் காலமாக சேவையாற்றி வரும் திரிசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை அமைச்சர் இழிவு படுத்தியுள்ளார் என்று முன்னாள் திமுக அமைச்சரும் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பல நூற்றாண்டுகளாக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான உதவியும், வழிகாட்டுதலும், திரிசுதந்திர அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்,

அறநிலையத்துறையை சாராத இவர்கள் மரபு வழியாக செய்து வரும் தரிசன உதவிக்கு பக்தர்கள் தரும் தட்சணையை அவர்கள் பெறுகிறார்கள் ஆனால் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் இதனை இழிவுபடுத்தியுள்ளார்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

திமுகவின் குற்றச்சாட்டிற்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை" என்று பதிலளித்தார்.

மேலும் அவரது பதிவில், தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு ஏன் பதற்றம் வருகிறது என்று கேள்வி எழுப்பிய அவர் "திருச்செந்தூரில் நடந்து வரும் மேலும் பல முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவேன்" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு