இந்திய 'ராக்கெட் பெண்' அணிந்த புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பிடித்தது ஏன்?

பட மூலாதாரம், Smithsonian’s National Air and Space Museum
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இந்திய விண்வெளி விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் தனது வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான நாள் என்று விவரிக்கும் ஒரு நாளில், அடர் சிவப்பு மற்றும் நீல நிறம் கொண்ட பட்டுப்புடவை அணிந்து அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
தற்போது அந்தப் புடவை வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் செவ்வாய் சுற்றுப்பாதை திட்டமான 'மங்கள்யான்' திட்டத்தின் செயல்பாட்டு துணை இயக்குநராக இருந்த நந்தினி, இந்த ஆடையை 2013 டிசம்பர் முதல் நாளன்று அணிந்திருந்தார்.
நந்தினிக்கு புடவைகள் மிகவும் பிடித்தமான ஆடை, அதிலும் குறிப்பாக அவரது தந்தை அவருக்குப் பரிசளித்த புடவைகளை பணியிடத்தில் முக்கியமான நாட்களின் போதோ அல்லது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போதோ அணிவது அவருக்கு மிகவும் பிடித்தமானது.
எனவே, இந்த திட்டத்தின் "மிகவும் முக்கியமான ஒரு நாள்" என்று அவர் கருதிய அந்த நாளன்று அவர் இப்படியொரு ஆடையைத் தேர்ந்தெடுத்தது தற்செயலானது அல்ல. அன்றைய தினம், நந்தினி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து வெளியேற்றி, 300 நாட்கள் நீளும் அதன் செவ்வாய் பயணத்தைத் தொடங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
"அது வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிக்கும் தருணம். திட்டத்தின் மிக முக்கியமான செயல்பாடு," என்று 2016-ஆம் ஆண்டு அளித்த பேட்டியில் நந்தினி கூறியிருந்தார்.
"விண்கலம் எங்கே செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும், எப்போது செல்ல வேண்டும் என்பதை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. அன்று நாங்கள் என்ன செய்தோம் என்பதைப் பொறுத்தே அந்தத் திட்டத்தின் வெற்றி அமைந்திருந்தது."
மங்கள்யான் விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தச் சாதனையைச் செய்த உலகின் நான்காவது நாடு அல்லது பிராந்திய கூட்டமைப்பாக இந்தியா ஆனது.

புடவையை தேர்வு செய்தது ஏன்?
அன்று, நந்தினி மற்றும் பிற பெண் விண்வெளி விஞ்ஞானிகள் உலகளாவிய கவனத்தை ஈர்த்தனர். இஸ்ரோவில் புடவை அணிந்த பெண்கள் வெற்றியைக் கொண்டாடும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்தியாவில் ராக்கெட் அறிவியல் என்பது ஆண்களுக்கானது மட்டுமே என்ற பொதுவான சிந்தனையை அந்தப் புகைப்படம் உடைத்தெறிந்தது.
பின்னர் இந்தப் புகைப்படம் தொடர்பாக விளக்கமளித்த இஸ்ரோ, அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், பல பெண் விஞ்ஞானிகள் இந்தத் திட்டத்தில் பணியாற்றியதாகவும், அவர்கள் அந்த நேரத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருந்ததாகவும் அது மேலும் கூறியது.
ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் விண்வெளி வரலாற்றுப் பிரிவுக்குப் பொறுப்பாளரான மேட் ஷிண்டெல் அமெரிக்காவிலிருந்து பிபிசிக்கு தொலைபேசியில் அளித்த பேட்டியில், அந்தப் புகைப்படம் தன்னை "மிகவும் கவர்ந்தது" எனக் கூறினார்.
"இந்த முக்கியமான திட்டத்தின் முன்னணியிலும் மையத்திலும் இருந்த இந்த 'ராக்கெட் பெண்களின்' கதையை உலகிற்குச் சொல்வது ஒரு சிறந்த விஷயமாக இருக்கும் என நான் உணர்ந்தேன்."
ஷிண்டெல் 2020-ஆம் ஆண்டில் நந்தினியை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டார். இந்தியாவின் மங்கல்யான் விண்கலத் திட்டத்தையும், அதில் அவரது பங்கையும் எந்தப் பொருள் மிகச் சிறந்த முறையில் பிரதிபலிக்கும் என்பது குறித்து இருவரும் விவாதிக்கத் தொடங்கினர்.
"அவரிடமிருக்கும் ஒரு பொருளை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். எங்கள் கலந்துரையாடலின் இறுதியில், மங்கள்யான் விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறிய அன்று அவர் அணிந்திருந்த புடவையை நாங்கள் இருவரும் தேர்ந்தெடுத்தோம்" என்று ஷிண்டெல் கூறினார்.
அந்தப் புடவையும் அதற்குப் பொருத்தமான நீல நிற ஜாக்கெட்டும் அருங்காட்சியகத்தை வந்தடைந்தவுடன், அங்குள்ள ஜவுளிப் பாதுகாப்பு நிபுணரான பெத் நைட், அதை ஒரு பொம்மைக்கு எவ்வாறு உடுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள யூடியூப் வீடியோக்களைப் பார்த்தார்.
1970-ல் அப்பல்லோ 13 விண்கலத்தின் குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்ப வழிநடத்திய நாசாவின் விண்பயணக் கட்டுப்பாட்டுத் தலைவர் ஜீன் கிரான்ஸ் அணிந்திருந்த ஆடை போன்றே, நந்தினியின் புடவையும் தங்களது சேகரிப்பில் உள்ள மிக முக்கியமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது என ஷிண்டெல் பெருமையுடன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Smithsonian’s National Air and Space Museum
நோக்கம் என்ன?
வாரந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிடும் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில், இந்தியாவைச் சேர்ந்த பல பொருட்கள் ஏற்கனவே உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை விமானப்படை மற்றும் விமான நிறுவனங்கள் சேர்ந்தவை ஆகும்.
மேலும், 2007-ஆம் ஆண்டு அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க்கின் 90-வது பிறந்தநாளில் இஸ்ரோ அவருக்கு வழங்கிய நினைவு வெள்ளித் தட்டு ஒன்றும் அங்கு உள்ளது.
"கிரகங்களுக்கு இடையேயான விண்வெளி ஆய்வு தொடர்பான எங்கள் சேகரிப்பில் இந்தியாவில் இருந்து நான் சேர்த்த முதல் பொருள் நந்தினியின் புடவையே. மேலும், எங்கள் அருங்காட்சியக சேகரிப்பில் இடம்பெற்றுள்ள முதல் புடவையும் இதுதான்," என்று ஷிண்டெல் கூறினார்.
இந்த ஆடை, விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் "ஃபியூச்சர்ஸ் இன் ஸ்பேஸ்" என்ற கேலரியில், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் திரைப்பட சுவரொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
1983-ஆம் ஆண்டு விண்கலப் பயணத்தின் போது விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற சாலி ரைடு அணிந்திருந்த புகழ்பெற்ற நீல நிற டி-ஷர்ட்டுக்கு அருகிலேயே இந்தப் புடவையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் காட்சியின் நோக்கம் குறித்து ஷிண்டெல் கூறுகையில், "சமீப காலங்களில் விண்வெளித் துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கக்கூடும் என்பதையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம்" என்றார்.
"விண்வெளி குறித்து நமக்கு ஏராளமான கேள்விகள் உள்ளன. யார் விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? நாம் ஏன் விண்வெளிக்குச் செல்கிறோம்? அங்கு சென்ற பிறகு என்ன செய்யப் போகிறோம்? போன்ற இன்றைய முக்கியமான கேள்விகளைப் பற்றி சிந்திக்க இந்தக் காட்சி பார்வையாளர்களை ஊக்குவிக்கிறது," என்று ஷிண்டெல் கூறினார்.
மேலும், இந்தக் கண்காட்சி "ஏன் விண்வெளிக்குச் செல்கிறோம்?" என்ற கேள்வியை மையமாகக் கொண்டுள்ளதாகவும், காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் விண்வெளிப் பயணத்துக்குப் பின்னால் உள்ள உந்துதல்களை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நந்தினியின் புடவை இரண்டு முக்கிய விஷயங்களைப் பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.
''இது இந்தியாவின் முதல் செவ்வாய் கிரகத் திட்டத்தின் மீதான தேசியப் பெருமையின் சின்னமாகவும், நாட்டின் வெற்றிகரமான விண்வெளித் திட்டத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. இரண்டாவது அவரது தனிப்பட்ட சாதனைப் பயணம் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது; ஏனெனில் அவரது வெற்றி, மேலும் பல பெண்கள் அறிவியல் துறைகளில் தங்களது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க தூண்டுகோலாக அமையும்''.
இந்தப் புடவை கலாசார மதிப்பைக் கொண்டிருப்பதாலும், பார்த்தவுடன் எளிதில் அடையாளம் காணக்கூடியதாக இருப்பதாலும் அது தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் அங்குள்ள தொடுதிரையைப் பயன்படுத்தி இந்தத் தயாரிப்புகளைப் பற்றி மேலும் பல விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
"பார்வையாளர்கள் இந்தப் புடவையை ஆர்வத்துடன் பார்ப்பதையும், அதைப் பற்றி மேலும் அறிய விரும்புவதையும் கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். இது எங்கள் சேகரிப்பிற்கு ஒரு அற்புதமான புதிய வரவு" என்று ஷிண்டெல் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































