பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டி இந்திய மகளிர் அணி சுலபமாக வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
56 ரன்கள் என்கிற இலக்கைத் துரத்திய இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. எனினும் குறைவான இலக்கு மற்றும் தீப்தி சர்மாவின் நிலையான ஆட்டம் வெற்றியை எளிமையாக்கியது.
இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். 6 பந்துகளில் 12 ரன்கள் அடித்த ஷஃபாலி வர்மாவின் விக்கெட்டை ஃபாத்திமா சனா எடுத்தார்.
மற்றுமொரு தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிரிதி மந்தனாவை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் ஃபாத்திமா சனா. 2 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் எடுத்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
அடுத்து களமிறங்கிய பிரதிகா ராவல் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்திய பந்துவீச்சாளர்கள் ஶ்ரீசரணி மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளும் ஷஃபாலி வர்மா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தப் போட்டி துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். ஆனால் பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எட்டு பாகிஸ்தான் பேட்டர்கள் ஒற்றை இலக்கத்திலும் அதில் மூவர் பூஜ்ஜியம் ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் தொடக்க வீரர்களான முனிபா அலி 13 ரன்களும் ஷாவல் ஜுல்ஃபிகர் 14 ரன்களும் எடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய பந்துவீச்சாளர்களில் ஶ்ரீசரணி நான்கு ஓவர்கள் பந்துவீசி 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
மற்றுமொரு பந்துவீச்சாளரான பிரேமா ராவத் 4 ஓவர்களில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்திய பவுலர்களின் பந்துவீச்சை திறம்பட சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது. பாகிஸ்தான் பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
முனிபா அலியின் பேட்டிங் பாகிஸ்தானுக்கு சிறிது நேரம் நம்பிக்கை அளித்தாலும் அவரும் ஷஃபாலி வர்மாவின் பந்துவீச்சில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
குரூப் சுற்று போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று வரும் இந்திய அணி அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































