கென்யா அதிபர் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது ஏன்?

கென்யாவின் மகாடியில் அமைந்துள்ள இந்த ஆலை, இயற்கையான ‘சோடா ஆஷ்’ உற்பத்தியில் ஆப்பிரிக்காவின் முன்னணி நிறுவனமாகும்.

பட மூலாதாரம், Tata Chemicals website

படக்குறிப்பு, கென்யாவின் மகாடியில் அமைந்துள்ள இந்த ஆலை, இயற்கையான 'சோடா ஆஷ்' உற்பத்தியில் ஆப்பிரிக்காவின் முன்னணி நிறுவனமாக உள்ளது.
    • எழுதியவர், நிகிதா யாதவ்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியாவின் முக்கிய ரசாயன நிறுவனங்களில் ஒன்றான டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை, கென்யாவை விட்டு வெளியேறுமாறு அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தால் கென்யாவுக்கு கிடைக்க வேண்டிய அளவிலான பலன் கிடைக்கவில்லை என்று அரசு கூறுகிறது.

அதிபர் வில்லியம் ரூட்டோ, "உங்கள் பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறுங்கள்" என்று நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சோடா ஆஷை நிறுவனம் ஏற்றுமதி செய்து வருவதாகவும், அதே நேரத்தில் அந்தக் கனிமத்தை கென்யாவிலேயே பதப்படுத்தி கண்ணாடி மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிக்க முடியும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள புதிய முதலீட்டாளர்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் ரூட்டோ கூறினார். இதன் நோக்கம் கென்யாவிலேயே அதிக வேலைவாய்ப்புகளையும் முதலீடுகளையும் உருவாக்குவதே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் முடிவை மதிப்பதாக டாடா கெமிக்கல்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், "மீதமுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான சட்ட மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளின் கீழ் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும்" அந்த நிறுவனம் கூறியுள்ளது.

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மகாடி ஆலை அமைந்துள்ள காஜியாடோ கவுன்டிக்கு சென்றிருந்தபோது ரூட்டோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் டாடா கெமிக்கல்ஸ், லேக் மகாடி பகுதியில் செயல்படுகிறது. இது கென்யாவின் தலைநகரான நைரோபியில் இருந்து தென்மேற்கில் சுமார் 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இந்நிறுவனம் ஆண்டுதோறும் 3.5 லட்சம் டன்களுக்கும் அதிகமான சோடா ஆஷை ஏற்றுமதி செய்கிறது. இது இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள இரண்டு புதிய நிறுவனங்களை அரசு கொண்டு வரப் போவதாக ரூட்டோ கூறுகிறார்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள இரண்டு புதிய நிறுவனங்களை அரசு கொண்டு வரப்போவதாக ரூட்டோ கூறுகிறார்

இந்த விவகாரத்தின் முழு பின்னணி

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, பொதுவாக சோடியம் கார்பனேட் என அழைக்கப்படும் இயற்கை சோடா ஆஷ் உற்பத்தியில் கென்யா உலகில் நான்காவது பெரிய நாடு. உலகளாவிய உற்பத்தியில் கென்யாவின் பங்கு சுமார் 1%.

சோடா ஆஷ் பெரும்பாலும் இயற்கையாக உப்பு கலந்த நீரிலிருந்து அல்லது ட்ரோனா என்ற கனிமத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கண்ணாடி, ரசாயனப் பொருட்கள், பேட்டரிகள் மற்றும் பிற தொழில்துறை பொருட்கள் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது.

டாடா கெமிக்கல்ஸ், கென்யாவின் மிகப் பெரிய கனிம ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாகவும், ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய சோடா ஆஷ் உற்பத்தியாளராகவும் உள்ளது. டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் லேக் மகாடியில் இருந்து ட்ரோனாவை அகற்றி, அதைப் பதப்படுத்தி சோடா ஆஷாக மாற்றுகிறது. நிறுவனத்தின் இணையதளத்தின்படி, கண்ணாடி தயாரிப்பில் சோடா ஆஷ் ஒரு முக்கிய மூலப்பொருள். டிடர்ஜென்ட், ரசாயனப் பொருட்கள், நீர் சுத்திகரிப்பு, ஜவுளி மற்றும் காகித உற்பத்தியிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

நிறுவனத்தின் 2024 நிதியறிக்கைப்படி, சுமார் 2.45 லட்சம் டன் சோடா ஆஷ் விற்பனை செய்யப்பட்டது. அதன் வர்த்தக மதிப்பு 7.87 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இந்த நிறுவனத்தில் சுமார் 500 பேர் பணியாற்றுகின்றனர். அதன் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மகாடி சுற்றுவட்டாரத்தில் வாழும் சுமார் 30,000 பேர் பயனடைந்து வருவதாக நிறுவனம் கூறுகிறது. இதில் குடிநீர், சுகாதார சேவைகள், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் பிற உதவிகள் அடங்குகின்றன.

ஆனால், கென்யாவுக்காக நிறுவனம் போதுமான அளவு எதையும் செய்யவில்லை என்று அதிபர் ரூட்டோ கூறுகிறார். நாட்டின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அவர் ஸ்வாஹிலி மொழியில், "டாடா கெமிக்கல்ஸ் மகாடிக்கு 100 ஆண்டுகளாக ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. சில நாட்களுக்கு முன் அவர்களிடம் உங்கள் பொருட்களை மூட்டைக் கட்டிக்கொண்டு வெளியேறுங்கள் என்று நான் கூறினேன்" என்றார்.

"அவர்கள் காஜியாடோவில் எதையும் கட்டி எழுப்பவில்லை. காஜியாடோவில் ஒரு தொழிற்சாலையைக்கூட நிறுவவில்லை" என்றும் அவர் கூறினார்.

மகாடியின் உற்பத்தியில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை வரலாற்று ரீதியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளன.

பட மூலாதாரம், Tata Chemicals website

படக்குறிப்பு, மகாடியின் உற்பத்தியில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமானவை வரலாற்று ரீதியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளன

டாடா கெமிக்கல்ஸ் என்ன கூறியது?

கடந்த 2005ஆம் ஆண்டு மகாடி ஆலையை கையகப்படுத்தியதில் இருந்து, "கென்யாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறோம். அந்த ஆலை இன்னும் எங்கள் வணிகத்தின் பிரிக்க முடியாத பகுதியாகவே உள்ளது" என்று டாடா கெமிக்கல்ஸ் அறிக்கையில் தெரிவித்தது.

கென்யாவின் சுரங்கத் துறை அமைச்சர் டாடா கெமிக்கல்ஸ் மகாடி நிறுவனத்திடம் செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவிட்டதில் இருந்து சுமார் ஐந்து வாரங்கள் கழித்தே ரூட்டோவின் இந்தக் கருத்து வெளியானது. செய்திகளின்படி ராயல்டி தொகை செலுத்தப்படாதது மற்றும் பிற ஒழுங்குமுறை நிபந்தனைகள் பின்பற்றப்படாதது இதற்குக் காரணமாக கூறப்பட்டது.

"அமைச்சகத்தால் எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு விரிவான பதில் அளிக்கப்பட்டுள்ளது" என்று நிறுவனம் கூறியது. அதில் நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்க செயல்பட்டதற்கான விவரங்களும் இடம்பெற்றுள்ளன. தற்போது தங்கள் பதிலைப் பற்றிய மதிப்பாய்வும், அடுத்த கட்ட வழிகாட்டுதலும் கிடைக்க காத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

லேக் மகாடியில் உள்ள இந்தத் தொழிற்சாலையின் வரலாறு 1911ஆம் ஆண்டைச் சேர்ந்தது. 1928இல் கென்யா அரசுடன் ஒரு முக்கிய சுரங்க குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது. 2005இல் டாடா கெமிக்கல்ஸ், பிரிட்டனை சேர்ந்த பிரன்னர் மாண்ட் குரூப் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. அதன் மூலம் இந்தச் செயல்பாட்டின் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு