FQL, VG செயலி மோசடி: இரட்டிப்பு லாபம் என நம்பி பணத்தை இழந்த ஆயிரக்கணக்கானோர் - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Handout
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் FQL, VG என்ற செயலிகள் மூலம் முதலீடு செய்தால் 40 முதல் 45 நாட்களுக்குள் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்ப வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் பணத்தை இழந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
FQL Investment Trading, FQL Exchange App, VG Investment Group Syndicate ஆகிய பெயர்களில் பல அடுக்கு சந்தைப்படுத்தல் மற்றும் கிரிப்டோ வர்த்தகத்தின் பெயரில் இந்தத் திட்டம் செயல்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை கூறுகிறது. ஆனால் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் மொத்த தொகையை காவல்துறை இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
இந்தத் திட்டத்தால் காசம்பட்டி கிராமத்தில் பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக அறிந்த பிபிசி தமிழ், அவர்கள் எவ்வாறு இதில் இணைந்தனர் என்பதை அறிய அங்கு சென்றது.
நத்தம் நகரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 13 கி.மீ. தொலைவில் காசம்பட்டி அமைந்துள்ளது.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை முதலீடு
கிராம மக்கள் சிலருடன் பிபிசி தமிழ் பேச முயன்றபோது, பணத்தை இழந்ததை எண்ணி உணவுகூட உட்கொள்ள முடியாத அளவுக்குச் சோகத்தில் இருப்பதாகவும், பேசுவதற்குத் தெம்பு இல்லை என்றும் சிலர் கூறினர்.
மற்றும் சிலரோ, "ஏற்கெனவே பணத்தை இழந்துவிட்டோம். எப்படி ஏமாந்தோம் என்று பேட்டி கொடுத்து எங்கள் மரியாதையையும் இழக்க விரும்பவில்லை," என்று மறுத்துவிட்டனர்.
அரசுத் தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மற்றும் நியாய விலைக் கடையைக் கடந்து கிராமத்தின் மையப் பகுதிக்குச் சென்றபோது, ஆலமரத்து அடியில் அமர்ந்திருந்தார் 71 வயதான முத்துசாமி.

பட மூலாதாரம், Handout
கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும், பல வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்தச் செயலிகளில் பணம் செலுத்தியதாகவும் அவர் கூறினார். கிராமத்தில் எத்தனை பேர் முதலீடு செய்தனர் என்ற அதிகாரபூர்வ எண்ணிக்கை கிடைக்கவில்லை.
"மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எங்கள் உறவினர் ஒருவர், ஆன்லைன் செயலியில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்குமெனக் கூறினார். ஜனவரி மாதம் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி, கணக்கு தொடங்கிய பலருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைத்தது. அதைப் பார்த்து எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலரும் அதில் பணம் செலுத்தத் தொடங்கினர்," என்றார் முத்துசாமி.
அவர் மூன்று கணக்குகள் தொடங்கி மொத்தம் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்ததாகக் கூறினார். "கடந்த மார்ச் மாதம் முதலில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தேன். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தது. அந்தத் தொகையையும் மீண்டும் செயலியில் முதலீடு செய்தேன். ஆனால் அதன் பிறகு பணம் கிடைக்கவே இல்லை," என்றார் அவர்.

பட மூலாதாரம், Handout
முதலீட்டுக்காக அடகு வைக்கப்பட்ட தங்கத் தோடு
காசம்பட்டியில் தேநீர்க் கடை நடத்தி வரும் செல்வம், தனது மனைவியின் உறவினர் கூறியதை நம்பி FQL செயலியில் இணைந்ததாகத் தெரிவித்தார்.
"என் மனைவியின் தங்கத் தோடு அடகுக் கடைக்குச் சென்றது. அதை வைத்துக் கிடைத்த ரூ.50 ஆயிரத்தை முதலீடு செய்தேன். 45 நாட்களில் ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தது. FQL நிறுவனத்தைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்டு ஒருவர் நேரில் வந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, எனது செல்போனில் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொடுத்தார். ஆரம்பத்தில் எனது கணக்கில் 500 டாலர் இருப்பதாகக் காட்டியது," என்றார்.
செயலியில் தினமும் மூன்று முறை வந்த "சிக்னல்" அறிவிப்புகளைத் தொட்டபோது கணக்கில் காட்டப்பட்ட தொகை அதிகரித்ததாக அவர் கூறினார். அது உண்மையான அமெரிக்க டாலரா, USDT போன்ற கிரிப்டோ சொத்தா அல்லது செயலியில் காட்டப்பட்ட இருப்பு மட்டுமா என்பதை அவரால் அறிய முடியவில்லை.
முதலில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயைத் தனது மகள் பெயரில் VG செயலியில் புதிய கணக்கு தொடங்கி மீண்டும் முதலீடு செய்ததாக செல்வம் கூறினார்.
"முதல் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் கிடைத்ததால், எனது கடைக்கு வரும் சுமார் 20 பேரை இந்தச் செயலியில் சேர்த்துவிட்டேன். அதற்காக வாரம் ரூ.1,500 வீதம் ஒரு மாதம் மட்டும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது," என்றார்.
புதிய கணக்குகளைத் தொடங்கியபோது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர்கள் நேரில் வந்து பணத்தைப் பெற்றதாகவும், தொடக்கத்தில் பணம் எடுக்கும்போதும் அவர்களே நேரில் வந்து வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
"இந்தச் செயலி மூலம் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்று நம்பி லட்சக்கணக்கில் பணம் செலுத்தி ஏமாந்து நிற்கிறோம். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்," என்றார் செல்வம்.

பட மூலாதாரம், Handout
ராசுவின் மரணத்தில் சந்தேகம் என குடும்பம் புகார்
இந்த முதலீட்டுத் திட்டத்தில் மற்றவர்களை இணைத்து வந்த காசம்பட்டியைச் சேர்ந்த ராசு என்ற இளைஞர் உயிரிழந்தார். அவர் மூலம் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. ராசுவின் குடும்பத்தினரை பிபிசி தமிழ் நேரில் சந்தித்தது.
"பலரை இந்தத் திட்டத்தில் சேர்த்திருந்தாலும் அதன் மூலம் பெரிய தொகை எதையும் அவர் பெற்றுவிடவில்லை," என்றார் அவரது சகோதரர் பொதியன். செயலி மூலம் மோசடி நடப்பதாகத் தகவல் பரவியதும் புதிதாக ஆட்களைச் சேர்ப்பதை ராசு நிறுத்தியதாக அவர் கூறினார். செயலி முடக்கப்பட்ட பின்னர் ராசு மூலம் பணம் செலுத்தியவர்கள் வீட்டுக்கு வந்து பணத்தைக் கேட்டதாகவும் பொதியன் தெரிவித்தார்.
"அன்று மதியம் வீட்டில் இருந்த ராசுவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பிறகு வெளியே சென்ற அவர் மாலை வரை திரும்பவில்லை. பின்னர் கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் அவர் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது," என்றார் பொதியன்.
ராசுவின் மரணத்தைத் தொடர்ந்து, பணத்தை மீட்டுத் தரவும் தொடர்புடையவர்களைக் கைது செய்யவும் வலியுறுத்தி மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் அஞ்சம்மாள் கூறினார். மேலும் அவர், "என் மகன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கோழை இல்லை. அவன் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீதும், பணத்தை ஏமாற்றியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
குடும்பத்தினரின் குற்றச்சாட்டு குறித்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனிடம் பிபிசி தமிழ் கேட்டது. குடும்பத்தினரும் கிராம மக்களும் சந்தேகம் எழுப்பியதால் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார். காவல்துறை விசாரணையில் மரணத்தில் சந்தேகத்துக்குரிய அம்சம் கண்டறியப்படவில்லை என்றும், தற்கொலை என்ற அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Handout
'25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டேன்'
காசம்பட்டி மட்டுமின்றி மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாவை அவர் பணியாற்றும் இடத்தில் பிபிசி தமிழ் சந்தித்தது.
கட்டுமானப் பணியில் ஈடுபடும் தனது மாமியாருடன் வேலை செய்தவர்கள் இந்தச் செயலியில் பணம் செலுத்தி இரட்டிப்பு லாபம் பெற்றதை அறிந்து அவரும் இதில் இணைந்ததாகக் கூறினார். நகையை அடகு வைத்தும் கடன் பெற்றும் தனது பெயரிலும் மனைவியின் பெயரிலும் இரண்டு கணக்குகளைத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.
"புதிய நபர்களைச் சேர்த்தால் கூடுதல் டாலர்கள் கிடைக்கும் எனத் தன்னிடம் கூறப்பட்டதை நம்பி நண்பர்கள் மூவரைச் சேர்த்தேன். அவர்களும் நகைகளை அடகு வைத்து முதலீடு செய்து இப்போது ஏமாந்துள்ளனர். நான் கணக்கு தொடங்கிய 25 நாட்களில் செயலி முடக்கப்பட்டது. இந்த முதலீட்டால் வாழ்க்கையில் 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக உணர்கிறேன். இப்போது என் கையில் பணமே இல்லை," என்றார் அப்துல்லா.
'சிக்னலைத் தொட்டால் டாலர்கள் கிடைத்தன'
ஆன்லைன் செயலியில் பணத்தைச் செலுத்தி ஏமாந்த மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், "என் அப்பா இந்தச் செயலியில் பணத்தை முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெற்றார். அந்த ஆசையில் நானும் எனது அக்காவும் இந்தச் செயலியில் ரூ. 4.50 லட்சம் முதலீடு செய்துள்ளோம். இதில் சேர்வது குறித்து முகவர்களிடம் தகவல் கொடுத்தால் அவர்கள் நேரடியாக நாம் இருக்கும் இடத்திற்கு வந்து நமது போனில் செயலியை பதிவிறக்கம் செய்து ஆதார், பான் கார்டுகளை இணைத்து கணக்கு தொடங்கி வைத்தார்கள்" என்று கூறினார்.
இந்தச் செயலி எவ்வாறு இயங்குகிறது என்பதை பிபிசியிடம் விவரித்த ஆனந்தி, "நாம் செலுத்தும் ரூபாய் 50,000 பணத்திற்கு நமது கணக்கில் 500 டாலர்கள் வரவு வைக்கப்படும். நாள் ஒன்றுக்கு மூன்று சிக்னல் என ஒவ்வொரு முறையும் 4 முதல் 6 டாலர்கள் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்" என்று விவரித்தார்.

பட மூலாதாரம், Handout
"பணம் வருவதைப் பார்த்த பிறகு இரண்டு செயலியிலும் பணத்தை முதலீடு செய்தோம். மற்றவர்களை போல் நாங்களும் பேராசைப்பட்டுத் தான் இதில் இணைந்தோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்று கூறினார் ஆனந்தி.
"அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து செலுத்திய பணத்தை மட்டுமாவது பெற்றுத் தர வேண்டும்" என்று அவர் கோரிக்கை வைத்தார்.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 4க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடைபெற்ற இந்தப் பணமோசடி தொடர்பான வழக்குகள் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இழந்த பணத்தை மீட்க முடியுமா?
காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைப்படி, சிலரிடம் இருந்து ரொக்கமாகவும் மற்றவர்களிடம் இருந்து ஜிபே, யுபிஐ மூலமாக பணம் பெறப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதி Tether எனப்படும் USDT-ஆக மாற்றப்பட்டு FQL, VG wallet-களில் வரவு வைக்கப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.
இந்த மோசடி தொடர்பாக மதுரையில் மூன்று, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கையில் தலா ஒன்று எனப் பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளும் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட காவல்துறை தகவலின்படி 17 பேர் கைது செய்யப்பட்டு, தொடர்புடைய 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கிரிப்டோ வால்லெட்கள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்கறிஞர் கார்த்திகேயன் பிபிசி தமிழிடம் இதுகுறித்துப் பேசுகையில், "குறுகிய காலத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறும் திட்டங்களை மக்கள் நம்பக் கூடாது என்றும், கிரிப்டோ முதலீடுகளில் அதிக ஆபத்து இருப்பதாகவும்" எச்சரித்தார்.

பட மூலாதாரம், Handout
மேலும் விளக்கிய அவர், "இந்தியாவில் கிரிப்டோ சொத்துகள் பங்குகள் அல்லது பரஸ்பர நிதிகளைப் போன்று செபியின் முழுமையான முதலீட்டாளர் பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் வருவதில்லை. ஆனால் கிரிப்டோ சேவை நிறுவனங்களுக்கு எந்த விதியும் இல்லை என்பதும் சரியல்ல. Virtual Digital Asset Service Provider-கள் நிதிப் புலனாய்வுப் பிரிவில் பதிவு செய்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கே.ஒய்.சி உள்ளிட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும். அந்தப் பதிவு முதலீட்டின் பாதுகாப்புக்கான அரசின் உத்தரவாதம் அல்ல."
"டிஜிட்டல் பரிவர்த்தனை வழியாகப் பணம் செலுத்தப்பட்டிருந்தால், விரைவாகப் புகார் அளிப்பதன் மூலம் பணம் சென்ற வங்கிக் கணக்குகளைக் கண்டறிந்து கிடைக்கக் கூடிய தொகையை முடக்க வாய்ப்புள்ளது. ஆனால் கணக்கு முடக்கப்பட்டதாலேயே முழு பணமும் திரும்பக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. பணம் ஏற்கெனவே ரொக்கமாக எடுக்கப்பட்டிருந்தாலோ, பல கணக்குகள் அல்லது கிரிப்டோ வால்லெட்களுக்கு மாற்றப்பட்டிருந்தாலோ மீட்பு சிக்கலாகலாம்" என்று விவரித்தார்.
இந்த வழக்கில் பணம் முழுவதும் ரொக்கமாகப் பெறப்படவில்லை என்பதையும், வங்கிக் கணக்குகள் ஏற்கெனவே முடக்கப்பட்டு இருப்பதையும் காவல்துறை தகவல்கள் காட்டுகின்றன.
"குற்றச்செயல் மூலம் பெறப்பட்டதாக நிரூபிக்கப்படும் ரொக்கம் மட்டுமின்றி வங்கிக் கணக்குகள், கிரிப்டோ சொத்துகள் மற்றும் பிற சொத்துகளையும் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு முடக்கவோ பறிமுதல் செய்யவோ முடியும். பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்திய ரசீதுகள், வங்கி அல்லது யுபிஐ பதிவுகள், செயலியின் ஸ்க்ரீன்ஷாட்ஸ், முகவர்களுடனான செய்திகள் மற்றும் பிற ஆவணங்களைப் பாதுகாத்து காவல்துறை அல்லது பொருளாதாரக் குற்றப்பிரிவிடம் வழங்குவது விசாரணைக்கு உதவும்" என்று தெரிவித்தனர்.
ஆன்லைன் நிதி மோசடியில் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































