You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கதேசத்திடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் மீது சீற்றம் – முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?
- எழுதியவர், ரஷீத் ஷகூர்
- பதவி, மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பது, முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.
ஒரு கடினமானப் போராட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட தோல்வியாக இதனை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை, மாறாக இது பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு பிரிவிலும் காணப்பட்ட மோசமான செயல்பாட்டின் விளைவு என்று கூறப்படுகிறது, அதேசமயம் இது தவறான கூற்றும் அல்ல.
பாகிஸ்தான் அணியின் இந்தத் தோல்வியின் மிகவும் ஏமாற்றமளிக்கும் அம்சம் என்னவென்றால், வங்கதேசத்திற்கு எதிராக அந்த அணி சந்திக்கும் மூன்றாவது தொடர்ச்சியான தோல்வி இதுவாகும், மேலும் வங்கதேச மண்ணில் அந்த அணி சந்திக்கும் முதல் தோல்வியும் இதுவே ஆகும்.
ஜூலை 2023-இல் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றதிலிருந்து, பாகிஸ்தான் அணி நாட்டிற்கு வெளியே ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது பாகிஸ்தானின் பார்வையில் கவலைக்குரிய விஷயமாகும்.
இந்த காலகட்டத்தில், ஆஸ்திரேலியாவில் 3-0 என்ற கணக்கிலும், தென்னாப்பிரிக்காவில் 2-0 என்ற கணக்கிலும் டெஸ்ட் தொடர்களை அந்த அணி இழந்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான தற்போதைய தோல்வி, வெளிநாடுகளில் பாகிஸ்தான் சந்திக்கும் ஆறாவது தொடர்ச்சியான தோல்வியாகும், இந்த தோல்விகள் அனைத்தும் ஷான் மசூதின் தலைமையின் கீழ் நிகழ்ந்துள்ளன.
'இத்தகைய செயல்பாடுகள் எதிர்பாராதவை அல்ல'
முன்னாள் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், தனது பகுப்பாய்வுகளுக்குப் பிரபலமானவருமான பாசித் கான், பிபிசி இந்தியிடம் பேசுகையில், "இந்த செயல்பாடு நிச்சயமாக ஏமாற்றமளிக்கிறது, ஆனால் எதிர்பாராதது அல்ல. கடந்த இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளாக பாகிஸ்தான் டெஸ்ட் அணி விளையாடி வரும் விதம், குறிப்பாக வெளிநாடுகளில், அவர்களால் எந்த டெஸ்ட் போட்டியையும் வெல்ல முடியவில்லை. டாக்கா டெஸ்டில், வங்கதேச அணி தொடர்ந்து பாகிஸ்தானை விட முன்னிலையில் இருந்தது," என்று கூறினார்.
"நீங்கள் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து, எதிரணி 400 ரன்கள் எடுக்க அனுமதித்தால், உங்கள் முடிவு தவறானது அல்லது நீங்கள் சரியாகப் பந்துவீசவில்லை என்று அர்த்தம். இந்த டெஸ்டில் பாகிஸ்தானின் பந்துவீச்சு குறித்து நிறைய பேச்சுக்கள் எழுந்தன, அனைத்து பந்துவீச்சாளர்களும் ஒரே மாதிரியாக இருந்தார்கள். தற்போது, பாகிஸ்தானிடம் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர் யாரும் இல்லை" என்கிறார் அவர்.
கேப்டன் ஷான் மசூத் பற்றி பாசித் கான் பேசுகையில், "அவர் 15 டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார், அதில் 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார். இந்த டெஸ்டில் கூட, அவரது தலைமையின் கீழ் குறிப்பிடத்தக்க உத்தி மாற்றங்கள் எதுவும் இல்லை மற்றும் அவர் வித்தியாசமாக எதையும் முயற்சிக்கவில்லை. திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய ஆடுகளத்தில் சஜித் கான் மற்றும் நோமன் அலியின் பந்துவீச்சைத் தவிர, 10-15 ஓவர்களுக்கு எந்த ஒரு திட்டத்தின்படி வீசப்பட்ட பந்துவீச்சையும் நான் பார்க்கவில்லை," என்றார்.
பேட்டிங் குறித்து அவர் பேசுகையில், "புதிய வீரர்களான அசான் உவைஸ் மற்றும் அப்துல்லா ஃபசல் இருவரும் நன்றாக பேட்டிங் செய்தனர், ஆனால் கடந்த இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளாக, பாகிஸ்தானின் மூன்றாவது அல்லது நான்காவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் அணி வெற்றி பெறும் அல்லது போட்டியைத் தக்கவைக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. இது ஒரு வழக்கமாகிவிட்டது, இந்த அணியால் அவ்வாறு செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். புள்ளிவிவரங்களும் இதையே நிரூபிக்கின்றன" என்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் மீதான வங்கதேசத்தின் கவனம்
முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷீத் லத்தீப் பிபிசி இந்தியிடம் பேசுகையில், "முழு நாடும் தற்போது டி20 போட்டிகளில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர்கள் ரூ. 7-8 கோடிக்கு வாங்கப்படுகிறார்கள், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட யாருக்கும் ஆர்வம் இல்லை" என்றார்.
வங்கதேசத்தைப் பாராட்டி பேசிய அவர், "மறுபுறம், அவர்கள் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பில் சிமன்ஸ் மற்றும் ஷான் டைட் ஆகியோரை உள்ளடக்கிய அவர்களின் பயிற்சியாளர்கள் மூலம் இதை மதிப்பிடலாம். வங்கதேச அணியின் மூத்த வீரர்கள் போட்டியை வென்றுக் கொடுத்ததற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும், ஆனால் நமது மூத்த வீரர்களால் அதைச் செய்ய முடியவில்லை" என்கிறார் அவர்.
அணித் தேர்வைக் கண்டும் ரஷீத் லத்தீப் ஆச்சரியப்படுகிறார்.
"இரு அணிகளிலும் இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தனர். அவர்களின் ஐந்தாவது பந்துவீச்சாளர் ஒரு ஆஃப்-ஸ்பின்னர், அதே சமயம் நமது அணியில் ஆஃப்-ஸ்பின்னர் இல்லை. இதுவே அடிப்படை வித்தியாசமாக இருந்தது. இத்தகைய ஆடுகளங்களில், டாஸ் வென்ற பிறகு நீங்கள் எப்போதும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். நீங்கள் முதலில் பந்துவீசினால், அவர்களை 200-250 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்திருக்க வேண்டும். அவர்கள் முதல் நாளில் 300 ரன்கள் எடுத்தனர் மற்றும் அடுத்த நாள் மேலும் 100 ரன்களைச் சேர்த்தனர். அந்த 100 ரன்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தின."
தொடர்ந்து பேசிய அவர், " டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்த, நாம் கவனமாகச் சிந்திக்க வேண்டும். நாம் டி20-க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, தலா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களை விளையாடி வருகிறோம். திறமையான வீரர்கள் இங்கு வருகிறார்கள், ஆனால் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் பேரழிவின் விளிம்பில் உள்ளது." என்கிறார்.
ஷாஹீன் அஃப்ரிடியின் வேகம் குறித்த கேள்விகள்
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள், குறிப்பாக ஷாஹீன் அஃப்ரிடி, டாக்கா டெஸ்டில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அவர் தனது வேகத்தை இழந்துவிட்டார் என்பதே இப்போது அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
முன்னாள் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் முன்னாள் தலைமைத் தேர்வாளருமான முகமது வாசிம், ஒரு யூடியூப் சேனலில் ஆய்வாளர் நௌமான் நியாஸுடன் பேசுகையில், "வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும்போது விக்கெட் கீப்பர் ரிஸ்வான் பேட்டர்களுக்கு மிக அருகிலேயே நின்றுகொண்டிருந்த அந்த நாளை நான் பார்க்க வேண்டியிருந்தது. இந்த பந்துவீச்சாளர்களின் சராசரி வேகம் 130 ஆக இருப்பதைக் கண்டு நான் வருத்தமும் கோபமும் அடைகிறேன்," என்றார்.
அதிகம் விமர்சிக்கப்படும் கேப்டன்
ஷான் மசூத் கேப்டனாக விளையாடிய 15 டெஸ்டில் 11-இல் தோல்வியடைந்துள்ளார். இன்சமாம்-உல்-ஹக்கும் 11 டெஸ்டுகளில் தோல்வியடைந்தார், ஆனால் 11 போட்டிகளில் வெற்றியும் பெற்றார்.
அதேபோல், மிஸ்பா-உல்-ஹக் 19 டெஸ்டுகளில் தோல்வியடைந்த போதிலும், 26 போட்டிகளில் வெற்றியும் பெற்றார், இது எந்தவொரு பாகிஸ்தான் கேப்டனாலும் பெறப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் வெற்றிகளாகும்.
முன்னாள் டெஸ்ட் தொடக்க வீரர் அகமது ஷெஷாத் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சியில் ஷான் மசூதின் தலைமையைக் கடுமையாக விமர்சித்தார், "30 என்ற சராசரியைக் கொண்ட ஒரு வீரர் கேப்டனாக்கப்பட்டார். ஷான் மசூதை தேர்வு செய்தவர்களிடமே தவறு உள்ளது," என்று கூறினார்.
"ஆங்கிலம் பேசுவதும், ஒரு நல்ல மனிதராக இருப்பதும் மட்டும் கேப்டனாவதற்குப் போதுமானதல்ல" என்று அகமது ஷெஷாத் விமர்சித்தார்.
முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமது இன்ஸ்டாகிராமில், "கிரிக்கெட் அமைப்பை இயக்குபவர்கள் விவேகத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்போது வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி பெறுவது கூட நமக்கு கடினமாகிவிட்டது." என்று பதிவிட்டார்.
பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் நிடா தார் இன்ஸ்டாகிராமில், "நாம் சரியாக விளையாடவில்லை என்பது மட்டுமல்ல பிரச்னை, மற்ற அணிகள் நம்மை விட வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டன. இந்த இடைவெளியை எவ்வாறு குறைப்பது என்பதுதான் உண்மையான கேள்வி. இத்தகைய சூழ்நிலைகளில், இந்த செயல்பாட்டின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவது ஒரு கனவாகவேத் தோன்றுகிறது." என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செயல்பாடு மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது, மேலும் அது ஆறாவது, ஏழாவது மற்றும் ஒன்பதாவது இடங்களையேப் பிடித்தது.
சமூக வலைதளங்களில் பொதுமக்களிடமிருந்து எழுந்துள்ள கடுமையான எதிர்வினைகளில், கேப்டன், ஷாஹீன் அப்ரிடி, ஹசன் அலி, முகமது ரிஸ்வான், சல்மான் அலி அகா, இமாம்-உல்-ஹக் மற்றும் சௌத் ஷகீல் உள்ளிட்ட மூத்த வீரர்கள் மீது அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மே 16 முதல் சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் தோல்வியைத் தொடர்ந்து அணியில் என்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சுவாரஸ்யமாக, தேர்வாளர்களான சர்ப்ராஸ் அகமது மற்றும் ஆசாத் ஷபிக் ஆகிய இருவரும் தற்போது வங்கதேசத்தில் பாகிஸ்தான் அணியுடன் உள்ளனர். ஏனெனில் அவர்கள் தேர்வாளர்களாக இருப்பதுடன், அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு