You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நவீன கால பெற்றோர் நம் முன்னோர்களை விட தூக்கமின்மையை அதிகம் உணர்வது ஏன்?
- எழுதியவர், அமண்டா ருக்கேரி
- வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்
தற்போது பெற்றோர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதுபோல பண்டைய கால பெற்றோர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இது, இன்றைய காலப் பெற்றோர்கள் தூங்குவதற்கான வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்ய விஞ்ஞானிகளைத் தூண்டியுள்ளது.
பெற்றோராக இருப்பது எவ்வளவு களைப்படையச் செய்கிறது? என ஒருவர் ரெடிட் இணையதளத்தில் எழுப்பிய கேள்விக்கு நானூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பதிலளித்தனர். "மிகவும் சோர்வானது. ஆற்றலை உறிஞ்சுகிறது, அதுவும் இடைவிடாமல் தொடர்கிறது" என்று ஒருவர் எழுதியிருந்தார். இதே கருத்தை நூற்றுக்கணக்கானவர்கள் எதிரொலித்ததைப் பார்க்க முடிந்தது.
ஆற்றலை உறிஞ்சும் இந்த சோர்வை இன்றைய பெற்றோர்கள் உணர்வதற்குப் பல காரணங்கள் உள்ளன என்றாலும், அவை அனைத்தும் தூக்கத்தோடு மட்டும் தொடர்புடையவை அல்ல. உதாரணமாக, இன்று பல தம்பதிகள் யாருடைய ஆதரவுமின்றித் குழந்தைகளை தனியாக வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். அதே வேளையில், குழந்தை வளர்ப்பையும் வேலையையும் ஒரே நேரத்தில் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழலும் உள்ளது.
ஒரு குழந்தை பிறந்ததும், குழந்தையை பராமரிப்பவர்களின் உறக்கத்தில் மாறுதல்கள் ஏற்படுகிறது. நடு இரவில் எழுந்து கைக்குழந்தைக்கு பாலூட்டுவதாக இருக்கலாம் அல்லது குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே எழுவதாக இருக்கலாம்.
மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே குழந்தைகளை வளர்க்கும் பழக்கம் மனிதர்களிடையே இருந்து வருவதால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே பெற்றோர்கள் இப்படித்தான் தூக்கமின்றி இருந்திருப்பார்கள் என்று கருதுவது இயற்கையானது. ஆனால், நம்மிடம் உள்ள ஆதாரங்கள் அது உண்மையல்ல என்பதையே காட்டுகின்றன. அப்படியென்றால், நம் முன்னோர்கள் எப்படி இதை கையாண்டார்கள்? வித்தியாசமாக என்ன செய்தார்கள்? அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா?
பெற்றோர்கள் நாளொன்றுக்கு எவ்வளவு நேரம் தூங்குகின்றனர்?
அன்றாட உரையாடல்களில், 'பெற்றோராக இருப்பது' மற்றும் 'தூக்கமின்மை' ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை என்றே கருதப்படுகிறது. இருப்பினும், ஒரு குழந்தை பிறந்த பிறகு பெற்றோர்கள் எவ்வளவு தூக்கத்தை இழக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் மாறுபட்டவையாகவும், அவரவர் கலாசாரத்தைச் சார்ந்தவையாகவும் உள்ளன.
உதாரணமாக, ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, முதல்முறையாக தாயானவர்கள் குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில், கர்ப்பமாவதற்கு முன்பு தூங்கியதை விட சராசரியாக ஒரு மணிநேரம் குறைவாகவே தூங்குகிறார்கள். குழந்தையின் தந்தை 20 நிமிடங்கள் தூக்கத்தை இழக்கிறார்கள். குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு பெற்றோர் தூங்கும் நேரம் படிப்படியாக அதிகரித்தாலும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, எந்தப் பெற்றோரும் தங்களுடைய குழந்தை பிறப்பதற்கு முன்பு தூங்கிய முழுமையான நேரத்தை மீண்டும் பெறவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில், பெற்றோர்களுக்கும் குழந்தை இல்லாதவர்களுக்கும் இடையிலான ஒட்டுமொத்த தூக்க வித்தியாசம் நீங்கள் நினைப்பது போல அவ்வளவு பெரியதாக இல்லை. சுமார் 40,000 பேரை உள்ளடக்கிய ஒரு ஜெர்மானிய ஆய்வு, சராசரியாக ஆறு வயதுக்குட்பட்ட குறைந்தது ஒரு குழந்தையையாவது கொண்ட பெற்றோர்கள், இரவு சுமார் ஏழு மணி நேரம் உறங்குவதாகத் தெரிவித்துள்ளனர் என்று கூறுகிறது. குழந்தை இல்லாதவர்களில் பெண்கள் இரவில் 10 நிமிடங்கள் மட்டுமே கூடுதலாக உறங்குவதாகப் பெண்கள் தெரிவித்தால், ஆண்கள் 14 நிமிடங்கள் கூடுதலாக உறங்குவதாக தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், அமெரிக்காவில் 2024-ல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்புத் தரவுகளின்படி, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் இரவில் சராசரியாக எட்டு முதல் ஒன்பது மணிநேரம் வரை உறங்குகின்றனர், இது பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேர வரம்பிற்குள்ளேயே உள்ளது.
இதேபோல், குழந்தை பிறந்த பிறகு வந்த 36 மாதங்களில் நானூறுக்கும் மேற்பட்ட தம்பதிகளைப் பின்தொடர்ந்து நடத்தப்பட்ட ஒரு பிரெஞ்சு ஆய்வு, தாய்மார்களும் தந்தையர்களும் அனைத்துக் காலகட்டங்களிலும் சராசரியாக எட்டு மணி நேரம் அல்லது அதற்கு மேல் உறங்கியதாகக் கண்டறிந்தது (இருப்பினும், சில தனிநபர்கள் இரவுக்கு 4.25 மணி நேரம் மட்டுமே உறங்கிய நிலையில், வேறு சிலர் 12 மணி நேரம் வரை உறங்கியுள்ளனர்).
இதேபோல், பிரான்சில் 400-க்கும் மேற்பட்ட தம்பதியினரை அவர்கள் குழந்தை பெற்றெடுத்த 36 மாதங்கள் வரை பின்தொடர்ந்து நடத்திய ஆய்வில், தாய் மற்றும் தந்தை என இருவருமே எல்லா காலகட்டங்களிலும் சராசரியாக எட்டு மணிநேரம் அல்லது அதற்கு அதிகமாக நேரம் தூங்கியுள்ளனர். (இருப்பினும் சிலர் இரவில் 4.25 மணிநேரம் மட்டுமே தூங்கினர், சிலர் 12 மணிநேரம் வரை தூங்கினர்).
நிச்சயமாக, இவை பெரும்பாலும் தனிநபர்களால் தாமாக முன்வந்து வழங்கப்பட்ட தரவுகள் என்பதால், மக்கள் தங்கள் தூக்க நேரத்தைக் கணக்கிடுவதில் தவறுகள் இருக்க வாய்ப்புண்டு. உதாரணமாக, தூங்கிய நேரத்திலிருந்து கணக்கிடாமல், படுக்கைக்குச் சென்ற நேரத்திலிருந்தே கணக்கிடுவதால் தூக்க நேரம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தோன்றலாம்.
இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பல பெற்றோர்கள் ஓரளவிற்கு நல்ல அளவிலான தூக்கத்தைப் பெறுகிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்பதைத் தீர்மானிக்க உதவும் சமகால வேட்டையாடி-உணவு சேகரிக்கும் (Foraging societies) சமூகங்களின் தூக்க முறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது, முடிவுகள் பெரிய அளவில் வேறுபடவில்லை.
உதாரணமாக, வேட்டையாடி-உணவு சேகரிக்கும் மூன்று சமூகங்களை ஆய்வு செய்ததில், பெரியவர்கள் (பெற்றோர்கள் உட்பட) இரவில் 6.9 முதல் 8.5 மணிநேரம் வரை படுக்கையில் செலவிடுகிறார்கள் என்று கண்டறியப்பட்டது. தூக்கத்தின் இடையே அவர்கள் அடிக்கடி விழித்துக் கொண்டதால், அவர்களின் உண்மையான சராசரி தூக்க நேரம் 5.7 முதல் 7.1 மணிநேரம் வரை இருந்தது.
இருப்பினும் முக்கியமான விஷயம் என்னவென்றால், தொழில்மயமான நவீன சமூகங்களில் உள்ள பெற்றோர்கள், வேட்டையாடி வாழும் சமூகத்தினரை விட தாங்கள் மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் உணர்வதாகத் தொடர்ந்து தெரிவிக்கின்றனர். அதற்கான காரணம் என்ன எனும் புதிரை அவிழ்க்க விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
வேட்டையாடி வாழும் சமூகங்களில், பெற்றோர்களாக இருக்கும் பெரியவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் தூக்கத்தில் மிகவும் திருப்தியடைவதாகக் கூறுவதாக டொராண்டோ பல்கலைக்கழகத்தின் 'தூக்கம் மற்றும் மனித பரிணாம ஆய்வகத்தின்' இயக்குநரும், The Sleepless Ape நூலின் ஆசிரியருமான பரிணாம மானுடவியலாளர் டேவிட் சாம்சன் கூறுகிறார்.
வடக்கு தான்சானியாவில் உள்ள 'ஹட்சா' என்ற வேட்டையாடும் சமூக மக்களுடன் மூன்று மாதங்கள் தங்கி அவர்களின் தூக்க முறைகளை சாம்சன் ஆய்வு செய்தார். "நீங்கள் ஹட்சா மக்களிடம் சென்று, 'உங்கள் தூக்கம் நன்றாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா?' என்று கேட்டால், அவர்கள் 'நன்றாக இருக்கிறது' என்றே சொல்கிறார்கள்" என்கிறார் அவர்.
இதற்கு நேர்மாறாக, நவீன மற்றும் தொழில்மயமான சமூகங்களில் வாழும் பெற்றோர்களிடம் அவர்களின் தூக்கத்தின் தரம் குறித்துக் கேட்கப்படும்போது, அவர்கள் பொதுவாகத் தங்கள் தூக்கத்திற்குக் குறைந்த மதிப்பீட்டையே அளிக்கின்றனர். உதாரணமாக, ஜெர்மன் ஆய்வில், தாய்மார்கள் தங்கள் தூக்கம் தொடர்பான திருப்தியை 0 முதல் 10 என்ற அளவீட்டில் 6.57 என மதிப்பிட்டனர்; அதுவே தந்தையர்கள் 7.03 என மதிப்பிட்டனர். பிரெஞ்சு ஆய்வில், மூன்று மாதக் குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்களில் முக்கால்வாசிப் பேர் தங்களுக்குப் போதுமான தூக்கம் கிடைக்கவில்லை என்றே கருதினர்.
நவீன காலப் பெற்றோர்கள் அடிக்கடி விழித்துக்கொள்கிறார்கள் என்பது இதற்குக் காரணமல்ல. வேட்டையாடி-உணவு சேகரிக்கும் சமூகங்களில் உள்ள மக்கள், நம்மை விட இரவு நேரத்தில் அதிக முறை விழிப்பதாக சாம்சன் மற்றும் இதர ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
இதற்கான ஒரு காரணம் என்னவென்றால், தொழிற்புரட்சி ஏற்படும் வரை நாம் "தடையற்ற" அல்லது "ஒருங்கிணைந்த" தூக்கம் என்ற இலக்கின் மீது கவனம் செலுத்தத் தொடங்கவில்லை என்று ஹெலன் பால் கூறுகிறார். பிரிட்டனில் உள்ள 'Durham Infancy and Sleep Centre'-இன் இயக்குநரான ஹெலன் பால், 'How Babies Sleep: A Factful Guide to the First 365 Days and Nights' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
தடையற்ற தூக்கம் என்ற கருத்து இன்றும் உலகம் முழுவதும் பொதுவான ஒன்றாக இல்லை. மெக்சிகோவிலுள்ள இரண்டு கிராமப்புறங்களுக்கும், மெக்சிகோ நகரத்திற்கும் இடையே வாழும் பதின்ம வயதினரின் தூக்க முறைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு ஆய்வுத் திட்டத்தை இவர் சமீபத்தில் மேற்பார்வையிட்டார். அந்த கிராமப்புறங்களில், "கட்டை போல அசைவின்றி தூங்குவது என்ற எண்ணமே அவர்களுக்குப் பரிச்சயமில்லாத ஒன்றாக இருந்தது," என்கிறார் அவர். "மெக்சிகோ நகரில் மட்டுமே தடையற்ற உறக்கம் என்பது அனைவருக்கும் பரிச்சயப்பட்டதாக இருந்தது."
தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் ஆழ்ந்து தூங்க வேண்டிய நடைமுறைத் தேவை நம் முன்னோர்களுக்கு குறைவாக இருந்திருக்கலாம். "அவர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான அல்லது 8 மணி முதல் 5 மணி வரையிலான வேலைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்திருக்காது; எனவே, மறுநாள் வேலைக்குச் செல்லவும், பாதுகாப்பாக செயல்படவும் இரவில் குறிப்பிட்ட அளவு தூக்கம் தேவை என்ற அழுத்தம் அவர்களுக்கு இருந்திருக்காது," என்று பால் கூறுகிறார்." மேலும், "அவர்கள் கார்களையோ கனரக இயந்திரங்களையோ இயக்கவில்லை. நமக்கு இன்று முக்கியமாகத் தோன்றும் விஷயங்கள் அவர்களுக்கு எவ்விதத்திலும் பிரச்னையாகவே இருந்திருக்காது."
தூங்கும் சூழல்
ஆனால், அந்த காலப் பெற்றோர்கள் தூக்கத்தை அணுகிய முறையில் மற்றொரு வித்தியாசமும் உள்ளது. ஹட்சா மக்களுடன் சாம்சன் தங்கியிருந்தபோது, குழந்தைகள் தங்களை பராமரிப்பவரிடம் இருந்து வேறு தனி அறையில் தனியாக தூங்க வைக்கும் அமெரிக்கப் பழக்கவழக்கங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். "அதைக் கேட்ட அவர்கள் நான் பைத்தியக்காரத்தனமாகப் பேசுவது போல என்னைப் பார்த்தார்கள்," என்கிறார் சாம்சன். "அவர்கள், 'ஏன்? எதற்காக? என்ன காரணம்?' என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்... அவர்களிடம் அந்தக் கேள்வியை நான் கேட்டதற்காக நான் சங்கடப்பட்டேன்" என்று அவர் சொன்னார்.
உலகம் முழுவதும் உள்ள பல கலாசாரங்களைப் போலவே, இதுவரை ஆய்வு செய்யப்பட்ட ஏறக்குறைய அனைத்து வேட்டையாடி வாழும் சமூகங்களிலும் உள்ள 'Hadza' தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுடனேயே படுத்துத் தூங்குகிறார்கள்; மேலும் இரவில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தின் தாய்-சேய் நடத்தை தூக்க ஆய்வகத்தின் நிறுவனரான மானுடவியலாளர் ஜேம்ஸ் மெக்கென்னா இந்தப் பழக்கத்தை தாய்ப்பால் புகட்டியபடி உறங்குதல் என்று அழைக்கப்படும் "Breastsleeping" என்று அழைக்கிறார்.
"குழந்தையின் தூக்கம் அல்லது தாயின் தூக்கம், அல்லது தாய்ப்பால் கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது என்று தனியாக எதுவும் இல்லை," என்கிறார் மெக்கென்னா. "இவை அனைத்தும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை. தாயின் உடலே குழந்தையின் வாழ்விடமாக மாறுகிறது."
தாய்ப்பால் புகட்டியபடி உறங்கும் முறையானது ஒரு தாயின் தூக்கத்தை எப்படிப் பாதிக்கும் என்பது குறித்த முடிவுகள் கலவையாக உள்ளன. ஆனால், சில ஆய்வுகள் இது புதிய பெற்றோர்கள் எவ்வளவு புத்துணர்ச்சியாக உணர்கிறார்கள் என்பதில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் காட்டுகின்றன.
ஒரு ஆய்வின்படி, குழந்தையுடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும் தாய்மார்களுக்கும், அவ்வாறு செய்யாதவர்களுக்கும் இடையே சராசரி தூக்க நேரத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. குழந்தையுடன் படுக்கும் தாய்மார்கள் இரவு முழுவதும் சற்றே அதிக முறை விழித்தாலும், அவர்கள் மிக விரைவாக மீண்டும் உறக்கத்திற்குச் சென்றுவிடுகின்றனர். மாறாக, இதிலுள்ள வித்தியாசம் தாயின் மனநிலை மட்டும் தான்.
"தாய்மார்கள் இரவில் எத்தனை முறை பால் புகட்டுகிறார்கள் அல்லது எத்தனை முறை குழந்தையைச் சரிபார்க்கிறார்கள் என்பது குறித்து விழிப்புடன் இருப்பதில்லை" என்கிறார் ஹெலன் பால். பால் புகட்டும்போது அவர்கள் உறக்கத்தில் இருந்து முழுமையாக விழிப்படையாமல் இருக்கலாம் அல்லது இடையில் எழுந்ததையே அவர்கள் எளிதாக மறந்துவிடலாம். அடுத்த நாள் அவர்கள் அதிக புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு இதுவே முக்கியக் காரணமாக இருக்கலாம்.
தூக்கத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது நமது ஆற்றல் நிலையை மாற்றக்கூடும் என்ற ஆராய்ச்சியோடு இது ஒத்துப்போகிறது. தூக்கம் குறித்த கடுமையான எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வது, இரவில் நாம் நிம்மதியாக இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், முந்தைய இரவு நாம் எப்படித் தூங்கினோம் என்பதைப் பொருட்படுத்தாமல் பகலில் சோர்வை குறைக்கவும் உதவும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், ஃபார்முலா பால் அல்லது தங்கள் பாலை பம்ப் செய்து குழந்தைக்குக் கொடுப்பதற்குப் பதிலாக நேரடியாக தாய்ப்பால் கொடுப்பதால், தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் அதிகரிக்கும் புரோலாக்டின் என்ற ஹார்மோன் சுரப்பின் காரணமாக அவர்களின் உறக்கத்தின் தரமும் மேம்பட்டதாக உணரலாம். இந்த ஹார்மோன் தாய்மார்களுக்கு தரமான உறக்கத்தைக் கொடுக்கும்.
உதாரணமாக, 133 தாய்மார்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தாய்ப்பால் கொடுக்கும் பெற்றோர்கள் ஃபார்முலா பால் கொடுப்பவர்களை விட சுமார் 40-45 நிமிடங்கள் கூடுதல் தூக்கத்தைப் பெறுவதாகக் கண்டறியப்பட்டது. மற்றொரு ஆய்வில், பிரசவத்திற்குப் பிந்தைய முதல் மாதத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் தாய்மார்கள் பிறரைவிட இரவில் சுமார் 30 நிமிடங்கள் கூடுதலாகத் தூங்குவது தெரியவந்தது.
இதை உறுதிப்படுத்தும் சாம்சன், அவரும் அவரது மனைவியும் தங்கள் மகள் பிறந்த முதல் மூன்று மாதங்களில் தேவையான தூக்கம் கிடைக்காமல் அவதிப்பட்டதாகக் கூறுகிறார். அதன் பிறகு, ஹட்சா மக்களிடம் கண்ட அதே முறையை (பாதுகாப்பான படுக்கை பகிர்வு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி) முயற்சித்தார்கள். "அது எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது," எனக் கூறிய சாம்சன், "என் மனைவி எழுந்து உட்கார வேண்டிய அவசியமில்லை, முழுமையாக விழித்திருக்க வேண்டிய அவசியமில்லை; குழந்தை பால் குடிக்கிறது என்பதை உணர்ந்துவிட்டு, உடனே மீண்டும் தூக்கத்திற்குச் சென்றுவிடுவார். இது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது" என்று தெரிவித்தார்.
குழந்தைக்கு அருகிலேயே படுத்து உறங்குவது பெற்றோரின் தூக்கத்தை மேம்படுத்துகிறது என்று அனைத்து ஆய்வுகளும் கூறவில்லை. உதாரணமாக, குழந்தை பிறந்த முதல் ஒரு வருடம் வரை 139 குடும்பங்களை பின்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், குழந்தையுடன் அறையையோ அல்லது படுக்கையையோ பகிர்ந்து கொண்ட தாய்மார்களின் தூக்கம், அவ்வாறு செய்யாதவர்களை விட அதிகமாக இடையூறுகளுக்கு உள்ளானது என்று தெரியவந்தது. இருப்பினும், அக்குழந்தைகள் வழக்கத்தை விட அதிகமாக விழித்திருக்கவில்லை. ஆனால், அவர்களின் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட அதிக முறை விழிப்பதில்லை. (நிச்சயமாக, இதற்கான காரணத்தையும் விளைவையும் பிரித்துப் பார்ப்பது கடினம்: அதிக விழிப்புணர்வுடன் அல்லது பதற்றத்துடன் இருக்கும் தாய்மார்கள் அடிக்கடி விழிப்பவர்களாக இருக்கலாம், அதனால் அவர்கள் குழந்தையைத் தனியாக விடாமல் அருகிலேயே வைத்திருக்க விரும்பியிருக்கலாம்).
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வித்தியாசம்
இரவில் விழித்திருக்கும்போது அந்த விழிப்பின் தரம் மற்றும் தாய்மார்கள் எவ்வளவு விழிப்புடன் இருக்கிறார்கள் என்பது இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உதாரணமாக, குழந்தையை ஒரு தொட்டிலில் அல்லது தனி அறையில் தூங்க வைப்பது; குழந்தைக்குப் பாலூட்டும்போதோ அல்லது மீண்டும் தூங்க வைக்கும்போதோ முழு விழிப்புடன் இருப்பதற்காக அலைபேசியைப் பயன்படுத்துவது; மற்றும் குழந்தை விழிக்கும் நேரத்தையும் பாலூட்டும் நேரத்தையும் குறித்து வைப்பது போன்ற பொதுவான ஆலோசனைகளை எடுத்துக்கொள்ளுங்கள் - இவை எதையுமே நம் வேட்டையாடி உணவு சேகரிக்கும் முன்னோர்கள் செய்திருக்க மாட்டார்கள்.
இத்தகைய தூண்டுதல்கள் அனைத்தும் நமது உடல் முழுமையாக விழிப்படைய வேண்டும் என்ற சிக்னலைத் தருகின்றன என்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் மூத்த விரிவுரையாளர் பமீலா டக்ளஸ் கூறுகிறார்.
உண்மையில், சில பாதுகாப்பு உத்திகளின் நோக்கமே இதுதான். குழந்தையுடன் உறங்குவதற்கு ஏற்றவாறு அமைக்கப்படாத ஒரு இடத்தில், உதாரணமாக, சோபா அல்லது நாற்காலியில் தவறுதலாக உறங்கிவிடுவது 'திடீர் சிசு மரண நோய்க்குறியை' (Sudden infant death) 67 மடங்கு வரை அதிகரிக்கக்கூடும். இதன் விளைவாக, இரவு நேரங்களில் குழந்தைக்குப் பாலூட்டும்போது பெற்றோர்கள் முழு விழிப்புணர்வுடன் இருப்பதற்குத் தேவையான எதையும் செய்யலாம் என்று சில சுகாதார வல்லுநர்கள் அவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
இதில் உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால், இந்த உத்தி எப்போதும் வெற்றிகரமாக அமைவதில்லை; சில நேரங்களில் பெற்றோர்கள், குறிப்பாகப் பாதுகாப்பற்ற இத்தகைய இடங்களில் உறங்கிவிடுகின்றனர். மற்றொன்று, குழந்தையைக் கவனித்த பிறகு பெற்றோர்கள் மீண்டும் தூக்கத்திற்குத் திரும்புவது கடினமாகிறது. இது இறுதியில் தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பெற்றோரின் தூக்கத் தரம் குறித்த ஆய்வுகளைக் கருத்தில் கொண்டு, பெற்றோர்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க டக்ளஸ் 'பாஸம்ஸ்' (Possums) என்ற தூக்கத் தலையீட்டுத் திட்டத்தை நிறுவியுள்ளார். விழிப்புணர்வு மற்றும் ஓய்வாக இருப்பது போன்ற உத்திகளை ஊக்குவிப்பதுடன், பெற்றோர்கள் தங்கள் குழந்தை விழிக்கும் நேரத்தையும் பாலூட்டும் நேரத்தையும் குறித்து வைக்க வேண்டாம் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். மேலும், குழந்தைகள் "பாலருந்திக் கொண்டே உறங்க" பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
தூக்கமின்மையை சுற்றத்தாருடன் இணைந்து எதிர்கொள்வது
மனிதர்கள் ஒரு விசித்திரமான முரண்பாட்டைக் கொண்டுள்ளனர்: பிற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, மனிதர்கள் பிறக்கும்போது மிகவும் முதிர்ச்சியற்ற நிலையில் பிறக்கிறார்கள், பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகப்படியான கவனிப்பு தேவைப்படுவதாக கலிபோர்னியா-டேவிஸ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் சாரா பிளாஃபர் ஹர்டி கூறுகிறார். இருப்பினும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் வாழ்ந்த சூழல் மிகவும் கடினமானது; அங்கு உணவைப் பெறுவதற்கே அவர்கள் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டியிருந்தது.
ஆனால், இப்போதிருப்பதைப் போலல்லாமல், அன்று அவர்களுக்கு உதவி செய்ய பலர் இருந்தனர், குழந்தைகளுக்குத் தேவையான நேரத்தையும் வளத்தையும் ஒதுக்குவதற்கு போதுமான ஆட்கள் இருந்தனர்.
"தாய்மார்களுக்கு பெற்றோரின் பராமரிப்பு, உறவினர்கள் மற்றும் சமூகத்தின் பராமரிப்பும், உணவு ஆதாரங்களும் கிடைத்திருக்காவிட்டால், மனித இனம் அழிந்திருக்கும் அல்லது பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கவே முடியாது" என்கிறார் ஹர்டி.
பெற்றோருக்கு உதவ உறவினர்கள் குறிப்பாக பாட்டிகள் மற்றும் மூத்த உடன்பிறப்புகள் என 'துணைப் பெற்றோர்கள்' மட்டுமல்ல, சில நேரங்களில் நெருக்கமான தொடர்பில்லாத பராமரிப்பாளர்கள் என பலர் இருந்தனர்.
உதாரணமாக, மத்திய ஆப்பிரிக்காவின் எஃபே இன மக்களைக் கண்காணித்த மானுடவியலாளர்கள், 18 வாரக் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் 60 சதவீதத்தை தாயைத் தவிர பிறரே எடுத்துக் கொள்வதாகவும், சில நேரங்களில் தாயைத் தவிர வேறு ஒருவரிடம் தாய்ப்பால் அருந்துவதையும் கண்டறிந்துள்ளனர்.
பல தொழில்மயமான சமூகங்களில், முன்பிருந்த கூட்டுப் பராமரிப்பு (கூட்டுக் குடும்ப) முறை பெரும்பாலும் மறைந்துவிட்டது. அதற்கு மாற்றாக வந்த கட்டணத்துடன் கூடிய குழந்தை காப்பகங்கள், நிதி நெருக்கடி உள்ளிட்ட தனிப்பட்ட அழுத்தங்களை உருவாக்குகின்றன.
இன்று பல பெற்றோர் "இரட்டைப் பணி" அதாவது குழந்தைப் பராமரிப்பு மற்றும் வேலை என இரண்டையும் கவனித்துக் கொள்கின்றன. அமெரிக்காவில் குழந்தைகள் இருக்கும் பத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தம்பதியர் இருவருமே வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர். இது, ஐரோப்பிய ஒன்றியத்தில் 10-ல் 6-க்கும் அதிகமாக உள்ளது. மேலும், குழந்தைப் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளில் பாலின ரீதியான சமத்துவமின்மை இன்றும் நீடிக்கிறது. இவை பெரும்பாலும் இன்னும் பெண்களின் பொறுப்பாக இருப்பதால் இது குறிப்பாகத் தாய்மார்களை அதிக சோர்வடையச் செய்கிறது.
வேட்டையாடி உணவு சேகரிக்கும் கலாசாரங்களுடன் ஒப்பிடும்போது, தற்காலத்தில் இரு குழந்தைகளுக்கு இடையிலான வயது இடைவெளி குறைவாக உள்ளது. உணவு சேகரிக்கும் கலாசாரங்களில், குழந்தைகள் பொதுவாக சுமார் நான்கு வருட இடைவெளியில் பிறந்தன என்பதை ஹர்டி உட்பட பல மானுடவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்; சமூகங்கள் விவசாயம் சார்ந்து ஓரிடத்தில் குடியேறத் தொடங்கிய பின்னரே, தாய்மார்கள் குறைந்த இடைவெளியில் அதிகக் குழந்தைகளை மிக விரைவாகப் பெறத் தொடங்கினர். எனவே, நம் முன்னோர்களுக்கு ஒரு நேரத்தில் ஒரு குழந்தையை அல்லது ஒரு சிறுபிள்ளையை மட்டும் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் இருந்ததே அவர்களின் சோர்வைக் குறைக்க உதவியிருக்கலாம்.
இன்றைய பெற்றோர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கும் தூக்கமின்மைக்கும் ஆளாவதற்குக் காரணம் தூக்கமின்மை மட்டுமல்ல, மாறாக அவர்களின் தூக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களே ஆகும்.
குழந்தை பிறந்த ஆரம்பக் காலத்தில் ஏற்படும் தூக்கமின்மையைத் தாங்கும் திறனை பரிணாம ரீதியாகவே நாம் பெற்றுள்ளோம் என்று சில நிபுணர்கள் வாதிடுகின்றனர். ஏனெனில், மனித இனம் உயிர்வாழ்வதற்கு இது ஒரு பரிணாம ரீதியான சமரசமாகும், நம்மைச் சுற்றியுள்ள கலாசாரமே இந்தத் தாங்கும் திறனைக் கடினமாக்கியுள்ளது.
"நாம் நம்மை தகவமைத்துக் கொள்ளவும், நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கவும், நெருக்கடிகளைச் சமாளிக்கவும், வெவ்வேறு வாழ்க்கை முறைகளைக் கையாளவும் ஏற்ற விதத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம்" என்கிறார் சாம்சன். "வாழ்க்கையில் சில சமயங்களில் அது பயனுள்ளதாகவே இருக்கும். நீங்கள் 'நீண்ட ஆயுள்' என்ற நிலையிலிருந்து, நிகழ்காலத்தில் உள்ள ஒரு மிக முக்கியமான பணிக்கு மாறுகிறீர்கள். இனப்பெருக்கமும் அத்தகைய விஷயங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன்."
அப்படியென்றால், வாழ்க்கையில் சில நேரங்களில் தூக்கத்தை இழப்பது பரவாயில்லையா? என்ற கேள்விக்கு "பரிணாம மானுடவியல் கண்ணோட்டத்தில் இது 100 சதவீதம் சரிதான்" என்பதே சரியான பதிலாக இருக்கும்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு