தமிழ்நாட்டில் எம் சாண்ட், ஜல்லி விலை திடீர் உயர்வு ஏன்? வீடு கட்டும் நடுத்தர குடும்பங்களுக்கு நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images
"சொந்த வீடு என்ற கனவுடன் எனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டத் திட்டமிட்டேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியைத் தொடங்கியபோது ரூ. 17 லட்சம் செலவாகும் என்று மதிப்பிட்டிருந்தேன். ஆனால், பத்து மாதங்களில் கட்டுமான செலவு 25 லட்ச ரூபாயைத் தாண்டிவிட்டது."
கோவை துடியலூரில் வசித்து வரும் செந்தில்குமாரின் ஆதங்கம் இது. கடந்த சில நாட்களாக அதிகரித்த கட்டுமானப் பொருட்களின் திடீர் விலையேற்றத்தால் இறுதிக்கட்ட பணிகளை நிறைவு செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இவரைப் போலவே, தமிழ்நாடு முழுவதும் சொந்த வீடு கட்டும் நடுத்தர குடும்பத்தினர் பலரும் இந்த விலையேற்றத்தால் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
கல் குவாரிகளில் அரசு நடத்தும் சோதனைகளைத் தடுக்கவே எம் சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் செயற்கையாக விலை உயர்த்தப்பட்டிருப்பதாக மணல் லாரி உரிமையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கட்டுமானப் பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாக, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்துள்ளார்.
'யூனிட்டுக்கு ரூ.500 வரை விலை உயர்வு'
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கட்டுமானப் பொருட்களின் விலை திடீர் உயர்வைச் சந்தித்துள்ளது. இதுதொடர்பாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாத நிலையில் விலை உயர்வால் கட்டுமானத் துறையினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
குறிப்பாக, நடுத்தர குடும்பங்கள் மத்தியில் இந்த விலை உயர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. "கடந்த சில நாட்களில் எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி ஆகியவற்றுக்கு யூனிட்டுக்கு 500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார், அருள் குமார்.
இவர் கோவையில் கட்டுமானப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது கூற்றுப்படி, "5500 ரூபாயாக இருந்த ஒரு யூனிட் எம் சாண்ட் தற்போது 6 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு யூனிட் பி சாண்ட் (B Sand) 7 ஆயிரம் ரூபாயில் இருந்து 7500 ரூபாயாக உயர்ந்துள்ளது. 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி, தற்போது 5,500 ரூபாயாக உயர்ந்துவிட்டது."
"2021ஆம் ஆண்டில் ஒரு யூனிட் எம் சாண்டின் விலை மூன்றாயிரம் ரூபாயாக இருந்தது. அதன் விலை ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துவிட்டது" என அவர் குறிப்பிட்டார்.
அவை மட்டுமின்றி, சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு 35 ரூபாய் அதிகரித்துவிட்டதாகக் கூறும் அருள் குமார், "295 ரூபாய்க்கு விற்பனையான சிமென்டின் தற்போதைய அசல் விலை 330 ரூபாய். வாகனப் போக்குவரத்தைக் கணக்கிட்டு 350 ரூபாய் வரை கொடுக்கிறோம்" என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
'வீடு கட்டுமானச் செலவு அதிகரித்துவிட்டது'
விலை உயர்வால் கட்டுமானத்தைத் தொடர்வதில் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாகக் கூறுகிறார், கோவை துடியலூரில் வசிக்கும் செந்தில்குமார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவர், தனக்குச் சொந்தமான 1500 சதுர அடி நிலத்தில் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். "வீடு கட்டத் தொடங்கும்போது 285 ரூபாய்க்கு ஒரு மூட்டை சிமென்ட் வாங்கினோம். இப்போது 335 ரூபாய் வரை விலை போகிறது" என்றார் அவர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் எம் சாண்ட், பி சாண்ட் போன்றவை லோடுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகரித்ததாகக் கூறும் செந்தில்குமார், "தற்போது யூனிட்டுக்கு 500 ரூபாய் வரை அதிகரித்துவிட்டனர்" எனத் தெரிவித்தார்.
"கட்டுமானத்தின் தொடக்கத்தில் இரும்புக் கம்பிகளை கிலோ 51 ரூபாய்க்கு வாங்கினேன். இப்போது 62 ரூபாயாக உயர்ந்துவிட்டது. கடைகளில் வாங்கும்போது தொகை சிறிதாகத் தெரிந்தாலும் கட்டுமானச் செலவில் அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன" என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வீடு கட்டும் பணியில் இறங்கியபோது 17 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிட்டு அதற்கேற்ப தனியார் வங்கியில் செந்தில்குமார் கடன் பெற்றுள்ளார்.

"தற்போது கட்டுமானச் செலவு 25 லட்ச ரூபாயைத் தாண்டிவிட்டது. 11.50 ரூபாய்க்கு வாங்கிய ஒரு செங்கல், தற்போது 12.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிவிசி குழாய் உள்பட அனைத்திலும் விலையேற்றத்தைப் பார்க்க முடிகிறது" எனவும் அவர் வேதனைப்பட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "வரும் காலங்களில் சொந்த வீடு கட்டுவதைவிட, ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்கிவிட்டுச் செல்வதே மேலானது. அந்த அளவுக்குக் கடந்த 10 மாதங்களில் பல்வேறு சவால்களை சந்தித்து விட்டோம்" என்றார்.
"பெட்ரோல், டீசல் விலை உயரும்போது கட்டுமானப் பொருட்களின் விலை சற்று உயரும். ஆனால், பொருட்களின் விலை உயர்வது கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும்" என்கிறார், தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சிலின் தலைவர் மணிசங்கர்.
பிபிசி தமிழிடம் அவர் பேசும்போது, " யூனிட்டுக்கு 500 ரூபாய் உயர்வது பெரிய அதிகரிப்பு அல்ல என்பதைப் போல பார்க்கப்படுகிறது. ஆனால், நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" எனக் கூறுகிறார்.
சொந்த வீடு தவிர ஃபிளாட் (Flat) வாங்குவோருக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதாகக் கூறும் மணிசங்கர், "சென்னையில் 60 லட்சம் ரூபாய்க்கு ஒருவர் ஃபிளாட் வாங்க விரும்பினால், தற்போதைய நிலையில் பத்து லட்சம் ரூபாய் வரை கூடுதலாக விலை கொடுத்து வாங்கும் சூழலே நிலவுகிறது" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
'செயற்கையாக விலை அதிகரிப்பு'
இதன் பின்னணியில் கல் குவாரிகளில் தவெக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பிரதான காரணமாக உள்ளதாக, மணல் லாரி உரிமையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கல் குவாரிகளில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல் குவாரிகளை அமைச்சர் டி.கே.பிரபு நேரில் ஆய்வு செய்தார்.
முன்னதாக, மாநிலம் முழுவதும் அரசு அனுமதியை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு இயற்கை வளங்கள் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த ஆய்வில், 431 குவாரிகளில் 155 குவாரிகளில் விதிமீறல்கள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 67 குவாரிகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக, இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது.
மற்ற 88 குவாரிகளின் செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை கூறியுள்ளது.
இதைக் குறிப்பிட்டுப் பேசும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ், "கட்டுமானப் பொருட்களின் விலையை உயர்த்துவது தொடர்பாக இயற்கை வளங்கள் துறை அமைச்சகமோ, அரசோ எந்த உத்தரவும் போடவில்லை. இவர்களாகவே செயற்கையாக விலையை அதிகரித்துள்ளனர்" என்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தவெக ஆட்சியமைந்த பிறகு சட்டவிரோதமாகச் செயல்பட்ட குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாகவே, 'கட்டுமானப் பொருட்களின் விலை உயரும்போது ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறும். இதனால் குவாரிகளில் அரசு மேற்கொள்ளும் சோதனை குறையும்' என்று கருதி இவ்வாறு விலையை உயர்த்தியுள்ளார்கள்" என்று குற்றம் சுமத்தினார்.
வரியை அரசு உயர்த்தாதபோது இவர்களாக உயர்த்துவதுன் பின்னணியில் இந்த ஒரு காரணம் மட்டுமே உள்ளதாகத் தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
'விலையை உயர்த்தவில்லை... ஆனால்?'
இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார் தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சின்னச்சாமி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், " கடந்த சில நாட்களாக எம் சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலை உயர்ந்துவிட்டதாக சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அப்படி எந்த விலை உயர்வையும் நாங்கள் செயல்படுத்தவில்லை. இது தவறான தகவல்" என்கிறார்.
அதேநேரம், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறும் சின்னச்சாமி, "டீசல் விலை உயர்ந்துவிட்டது. கல் குவாரிகளில் அதிக ஆழத்தில் வெட்டி எடுத்ததாகக் கூறி சில கிரஷர்களை மூடியுள்ளனர். அதனால் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார்.
"கட்டுமானப் பொருட்களுக்கு இதுவரை பற்றாக்குறை வரவில்லை. எங்களிடம் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எம் சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலையை உயர்த்தவில்லை என்று அதிகாரப்பூர்வமாக கூறினாலும் கள நிலவரம் அதற்கு மாறாகவே உள்ளது. பல குவாரிகளிலும் விலை உயர்த்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பாகவும் கல் குவாரிகளின் செயல்பாடுகள் தொடர்பாகவும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு தலைமையில் வியாழக்கிழமை சென்னையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கல் குவாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், மணல் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து விவரித்த சின்னச்சாமி, "அரசின் ஆய்வில் குவாரிகளில் அதிகளவு கற்கள் எடுக்கப்பட்டிருந்தால் அதற்கேற்ப வரி விதித்து தொழிலை சுமூகமாக நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டுள்ளோம்" என்றார்.
"எங்கள் கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். இதைக் கெடுக்கும் வகையில் எங்கள் மீது அவதூறான கருத்துகளைச் சிலர் பேசி வருகின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், TKPrabhu
அமைச்சர் டி.கே.பிரபு கூறுவது என்ன?
கட்டுமானப் பொருட்களின் திடீர் விலையேற்றம் தொடர்பாக, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபுவிடம் விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது.
அவரிடம் கேள்விகளை அனுப்பியபோது, இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பான விவரங்களை செய்தி அறிக்கையாக அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.
உரிய விலையில் தட்டுப்பாடின்றி கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது குறித்துப் பல்வேறு சங்கப் பிரதிநிதிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோத குவாரி பணிகளைத் தடுப்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர் டி.கே.பிரபு, "விதிகளின்படி முறையாக குவாரி பணி செய்யும் குத்தகைதாரர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
குவாரி உரிமங்கள் பெறுவதில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் டி.கே.பிரபு கூறியுள்ளார்.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரால் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக, அந்தச் செய்தி அறிக்கையில் அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ்நாட்டில் கட்டுமானத் துறையின் தேவைக்குப் போதிய அளவிலான பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் டி.கே.பிரபு குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























