"ஒன்றன் பின் ஒன்றாக நடந்த டைனோசர்கள்" - தெலங்கானாவில் கண்டறியப்பட்ட கால் தடங்கள் உணர்த்துவது என்ன?

தெலுங்கானாவில் உள்ள கோதாவரி-பிராணஹிதா படுகையில் ஏற்கனவே டைனோசர் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போதைய புதிய ஆராய்ச்சி மூலம் அவற்றின் கால் தடங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
படக்குறிப்பு, மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த புதைபடிவக் கால் தடங்கள் சுண்ணாம்புப் பாறைப் படுக்கைகளில் இன்னும் தெளிவாகத் தெரிகின்றன.
    • எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

மிகப்பெரிய டைனோசர்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து சென்றுள்ளன. தெலுங்கானாவில் புதைபடிவக் கால் தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கன்னேபள்ளி மண்டலத்தின் சாலிகான் கிராமம், ஒரு அரிய வரலாற்று நிகழ்வின் தளமாக மாறியுள்ளது. இங்கு பெரிய டைனோசர்களுடன், குட்டி டைனோசர்களின் கால் தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த புதைபடிவ கால் தடங்கள் சுண்ணாம்புப் பாறைப் படுக்கைகளில் இன்னும் தெளிவாகத் தெரிகின்றன.

தெலுங்கானாவில் உள்ள கோதாவரி-பிராணஹிதா படுகையில் ஏற்கனவே டைனோசர் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போதைய புதிய ஆராய்ச்சி மூலம் அவற்றின் கால் தடங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவை சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, ஜூராசிக் காலத்தைச் சேர்ந்த டைனோசர்களின் கால் தடங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவை சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, ஜூராசிக் காலத்தைச் சேர்ந்த டைனோசர்களின் கால் தடங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
படக்குறிப்பு, டைனோசர் கால்தடங்கள்

14 பிரமாண்டமான கால்தடங்கள்

சாலிகான் கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சுண்ணாம்புப் பாறைத் தரையில் டைனோசர் கால் தடங்கள் கண்டறியப்பட்டன.

அங்கு மொத்தம் 14 பெரிய கால் தடங்கள் உள்ளன. இவற்றைத் தவிர, அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமார் 50 குட்டி டைனோசர்களின் கால் தடங்களும் இருக்கின்றன.

"அவை டைனோசர்களின் கால் தடங்கள் தான். அங்கு இரண்டு வகையான டைனோசர் கால் தடங்கள் உள்ளன" என்று இந்தியாவின் முன்னணி தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், டெல்லி பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியருமான ஜி.வி.ஆர் பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.

தெலங்கானாவில் முதல் முறையாக அங்கீகாரம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த புதைபடிவக் கால் தடங்கள் முதன்முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முதுநிலை ஆராய்ச்சி அறிஞரான சங்கீதா தாஸ்குப்தா மற்றும் மற்றொரு ஆராய்ச்சியாளரான ஆண்டனி பால் ரொசாரியோ ஆகியோரால் அடையாளம் காணப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

"2013 ஆம் ஆண்டில், இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் எனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தபோது, மஞ்சேரியல் பகுதியில் டைனோசர் கால் தடங்கள் இருப்பது பற்றிய தகவலை நான் அறிந்தேன். அவை எவ்வளவு தூரம் பரவியுள்ளன அல்லது அவற்றின் அறிவியல் முக்கியத்துவம் என்ன என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது" என்று அவர் கூறினார்.

பின்னர் சங்கீதா பிபிசிக்கு மின்னஞ்சல் மூலம் விளக்குகையில், 2020-2022 க்கு இடையில் ஐஐடி பம்பாயில் இருந்தபோது, தனது முதுநிலை முனைவர் பட்ட ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்தத் துறையில் ஆராய்ச்சி நடத்தியதாகத் தெரிவித்தார்.

அவர்களது ஆராய்ச்சி, இந்த டைனோசர் புதைபடிவக் கால் தடங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் 2025 மார்ச் மாதத்தில் 'ஜர்னல் ஆஃப் ஹிஸ்டாரிகல் பயாலஜி' இதழில் வெளியிடப்பட்டன.

"எங்களது ஆராய்ச்சி டைனோசர்கள் குறித்த மேலதிக ஆய்வுகளுக்கு வழிவகுக்கும். இதுவரை நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், டைனோசர் எலும்புகள் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன. இப்போது அவற்றின் கால் தடங்களும் கண்டறியப்பட்டுள்ளதால், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன, எப்படி நடந்தன, எப்படி ஒன்றாக இணைந்து வாழ்ந்தன போன்ற தலைப்புகள் மீதான ஆராய்ச்சிக்கான வழி திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது" என்று சங்கீதா தாஸ்குப்தா கூறினார்.

"இந்தக் கால் தடம் உள்ள இடத்தில் காணப்படும் தெரொபாட் வகை டைனோசர்கள் மணிக்கு சுமார் 3.82 கிலோமீட்டர் வேகத்தில் ஓடியதாக நாங்கள் நம்புகிறோம். சௌரோபாட் வகை டைனோசரின் கால் தடம் அமைந்திருக்கும் தளம் 14 மீட்டர் நீளம் கொண்டது. இந்த டைனோசர்கள் மணிக்கு 2.3 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் திறன் உடையவை என்பதை எங்களது ஆராய்ச்சி காட்டுகிறது," என்று சங்கீதா தாஸ்குப்தா பிபிசி-யிடம் தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் 2025 மார்ச் மாதத்தில் 'ஜர்னல் ஆஃப் ஹிஸ்டாரிகல் பயாலஜி' இதழில் வெளியிடப்பட்டன.
படக்குறிப்பு, டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.வி.ஆர். பிரசாத்

'இந்த தடங்கள் ஜுராசிக் காலத்தைச் சேர்ந்தவை'

டைனோசர்களின் கால் தடங்களைக் கொண்டுள்ள இந்தச் சுண்ணாம்புப் பாறைப் படுக்கைகள், சாலிகான் கிராமத்திற்கு வடகிழக்கே உள்ள பிராணஹிதா-கோதாவரி கோண்ட்வானா படுகையில் உருவானவை ஆகும்.

இவை ஆரம்பக்கால ஜூராசிக் காலத்தைச் சேர்ந்தவை. அதாவது, இந்தக் கால் தடங்கள் சுமார் 200 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இவை புதைபடிவக் கால் தடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

"எங்களது ஆராய்ச்சியில், நான்கு வெவ்வேறு தடங்களில் டைனோசர் புதைபடிவக் கால் தடங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்" என்று சங்கீதா விளக்கினார்.

இவை ஆரம்பக்கால ஜூராசிக் காலத்தைச் சேர்ந்தவை.

பெரிய டைனோசர்கள் அருகருகே நடந்து சென்றதற்கான தடங்கள்

இந்தக் கால் தடங்கள் பற்றிய தகவல் தெரிந்ததும், நான் ஒரு பிபிசி செய்தியாளராக அங்கு சென்றேன்.

அங்கு ஒரே திசையில் நடந்து சென்றது போலத் தோன்றும் 14 பெரிய கால் தடங்கள் உள்ளன.

அவை சௌரோபாட் மற்றும் தெரொபாட் ஆகிய இரண்டு வகையான டைனோசர்களின் கால் தடங்கள் என்று தெலுங்கானாவைச் சேர்ந்த புதைபடிவ ஆராய்ச்சியாளரான சமுத்ரலா சுனில் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இங்குள்ள கால் தடங்களை வைத்துப் பார்க்கும்போது... முதலில் ஒரு குட்டி டைனோசர் நடந்து சென்றுள்ளது. அதன் பிறகு ஒரு சௌரோபாட் டைனோசர் நடந்து சென்றுள்ளது. ஏனெனில், ஒரு சில குட்டி டைனோசர்களின் கால் தடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதாவது, ஒரு பெரிய டைனோசர் அவற்றின் காலடிகளின் மேல் அடி எடுத்து வைத்தபோது, அந்தப் பெரிய கால் தடங்கள் உருவாகியுள்ளன" என்று சுனில் கூறினார்.

சௌரோபாட் டைனோசர்கள் சென்ற பிறகு, தெரொபாட் டைனோசர்கள் அழிந்தன என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்று அவர் விளக்கினார்.

மேலும்,"சௌரோபாட் கால் தடங்களின் மேல் தெரொபாட் டைனோசரின் பதிவுகள் தெளிவாகத் தெரிகின்றன. சௌரோபாட் டைனோசரின் கால் தடங்கள் யானையின் கால் தடத்தைப் போன்ற வடிவத்தில் இருந்தால்... தெரொபாட் கால்களின் முன்பகுதியில் மூன்று விரல்கள் இருக்கும்" என்றும் சுனில் கூறினார்.

குழப்பமான சிறிய டைனோசர்களின் கால்தடங்கள்

இவற்றைத் தவிர, பல சிறிய கால் தடங்களும் காணப்பட்டன.

அவை அனைத்தும் ஒரே திசையில் செல்லாமல், வெவ்வேறு திசைகளில் நடந்து சென்றது போலக் காணப்பட்டன.

"அங்கு சுமார் 50 குட்டி டைனோசர்களின் கால் தடங்கள் உள்ளன. அவை வெவ்வேறு திசைகளில் விளையாடி ஓடியபோது இவை உருவாகியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது" என புதைபடிவ ஆராய்ச்சியாளர் சமுத்ரலா சுனில் விளக்கினார்.

புதைபடிவ ஆய்வாளர் சமுத்ராலா சுனில்
படக்குறிப்பு, புதைபடிவ ஆய்வாளர் சமுத்ராலா சுனில், சௌரோபாட் கால்தடங்கள் யானையின் பாதங்களை ஒத்திருப்பதாக விளக்கினார்.

இரண்டு அடி இடைவெளி

ஒரு மனிதன் இந்த டைனோசர் கால் தடங்களின் மீது நடப்பது சற்று கடினமானது. அவை ஒன்றுக்கொன்று சற்று தொலைவில் உள்ளன.

டைனோசர்கள் பெரிய உயிரினங்களாக இருந்ததால், அவற்றின் கால் தடங்கள் இரண்டு முதல் இரண்டரை அடி இடைவெளியில் அமைந்திருந்தன.

இந்தக் கால் தடங்கள் 55-73 சென்டிமீட்டர் நீளமும், 37-49 சென்டிமீட்டர் அகலமும் கொண்டவை என்று சங்கீதா தாஸ்குப்தா தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவை எவ்வாறு உருவாயின? அவை ஏன் இன்னும் நிலைத்திருக்கின்றன?

சாலிகான் கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் சுண்ணாம்புப் பாறைப் படுக்கைகள் உள்ளன. பூமியின் மேற்பரப்பில் இருந்து சில பாறை அடுக்குகள் அகற்றப்பட்ட பிறகு, ஒரு குறிப்பிட்ட அடுக்கில் டைனோசரின் கால் தடங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

சௌரோபாட் வகை டைனோசரின் கால் தடங்கள் யானையின் கால் தடங்களைப் போலவே இருக்கின்றன.

தெரொபாட் வகை டைனோசரின் கால் தடங்கள் அதன் முன்பகுதியில் விரல் பதிவுகளையும் காட்டுகின்றன. சில கால் தடங்களில் விரல் மூட்டுக்கள் மற்றும் நகங்களின் பதிவுகளும் கூட மிகத் தெளிவாகத் தெரிகின்றன.

அங்குள்ள ஒரு கால் தடம் சுமார் அரை அடி ஆழத்தில் இருந்தது.

"அது ஒரு சௌரோபாட் டைனோசரின் கால் தடம். அது மிகவும் கனமான ஒரு உயிரினம் என்பதால், அங்கிருந்த தளர்வான சேறு அல்லது மண்ணின் காரணமாக அது அதிக ஆழத்தில் பதிந்திருக்கும்" என்று சமுத்ரலா சுனில் விளக்கினார்.

"டைனோசர்கள் நடந்தபோது, அந்தப் பகுதி முழுவதும் சேறாக மாறியிருக்கலாம். அதனால்தான் அவை நடந்தபோது இந்தக் கால் தடங்கள் உருவாகியுள்ளன" என்று சமுத்ரலா சுனில் குறிப்பிட்டார்.

அதன் பிறகு, அதிக வெப்பநிலை காரணமாக அந்த மண் காய்ந்து, இந்தக் கால் தடங்களை அப்படியே விட்டுச் சென்றிருக்கும். அது நடப்பதற்கு சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகள் வரை ஆகியிருக்கும் என்று அவர் கூறினார்.

இதற்கு முன்பும் ராஜஸ்தானில் டைனோசர் கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜி.வி.ஆர் பிரசாத் தெரிவித்தார்.

"டைனோசர்கள் கண்டங்களில் வாழ்ந்த உயிரினங்கள் ஆகும். பிராணஹிதா-கோதாவரி படுகையில் கோண்ட்வானா படிவுகள் உள்ளன. அந்த காலகட்டத்தில்தான் புதைபடிவங்கள் உருவாகின. அவை அனைத்தும் ஆறுகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் படிந்தன" என்று ஜி.வி.ஆர் பிரசாத் கூறினார்.

சௌரோபாட் மற்றும் தெரோபாட் டைனோசர்கள் என்றால் என்ன?

டைனோசர்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான வகைகள் சௌரோபாட்கள் மற்றும் தெரொபாட்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்ட ஆதாரங்களின்படி, ஜூராசிக் மற்றும் அதற்குப் பிந்தைய காலங்களில் சௌரோபாட் மற்றும் தெரொபாட் வகை டைனோசர்கள் நடமாடியதற்கான அறிகுறிகள் உள்ளன.

பேராசிரியர் ஜி.வி.ஆர் பிரசாத் இந்த இரு வகைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பிபிசியிடம் விளக்கினார்.

"சௌரோபாட் டைனோசர்கள் பொதுவாகப் பெரிய உயிரினங்கள் ஆகும். பூமியில் இதுவரை வாழ்ந்த உயிரினங்களிலேயே மிகப்பெரிய உயிரினங்களில் சௌரோபாட் டைனோசர்களும் ஒன்றாகும். அவை 30-40 மீட்டர் உயரத்தை எட்டக்கூடியவை, மேலும் 70-100 டன் எடைக் கொண்டவை."

"அவற்றின் மண்டை ஓடு சிறியதாக இருக்கும். பற்கள் ரம்பம் போன்று கூர்மையாக இல்லை. அவை நீண்ட கழுத்தையும் வாலையும் கொண்டவை. நான்கு கால்களால் நடப்பவை. சௌரோபாட் டைனோசர்கள் தாவர உண்ணிகள் ஆகும்" என்று ஜி.வி.ஆர் பிரசாத் விளக்கினார்.

மேலும், தெரொபாட் டைனோசர்கள் மாமிச உண்ணிகள் என்று அவர் கூறினார்.

"தெரொபாட் டைனோசர்கள் பெரிய மண்டை ஓட்டைக் கொண்டவை. அவற்றின் முன் கால்கள் மிகவும் சிறியதாக இருக்கும். இதன் காரணமாக, அவை இரண்டு கால்களால் நடக்கின்றன. அவற்றுக்கு மிக நீளமான வால் உண்டு. அவற்றின் உயரம் 7-12 மீட்டருக்கு இடைப்பட்டதாக இருக்கும். அவற்றின் எடை 2-9 டன்களுக்கு இடையில் இருக்கும். அவற்றின் பற்கள் ரம்பம் போல இருக்கும்" என்றார் ஜி.வி.ஆர் பிரசாத் .

இதேபோல், சௌரோபாட் டைனோசர்கள் நடந்தால், அவை யானையின் கால்களைப் போன்ற கால் தடங்களை விட்டுச் செல்லும், அதே நேரத்தில் தெரொபாட்கள் தங்களது முன் கால்களில் மூன்று விரல்களைக் கொண்டிருக்கும். இது 'டிரைடாக்டிலிசம்' என்று அழைக்கப்படுகிறது என ஜி.வி.ஆர் பிரசாத் குறிப்பிட்டார்.

மஞ்சேரியல் மாவட்டம், கன்னேபள்ளி மண்டலத்தில் உள்ள சாலிகான் கிராமத்தின் புறநகர்ப் பகுதி
படக்குறிப்பு, மஞ்சேரியல் மாவட்டம், கன்னேபள்ளி மண்டலத்தில் உள்ள சாலிகான் கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் அந்தக் கால்தடங்கள் கண்டெடுக்கப்பட்டன.

1970-80களில் அங்கீகாரம்

தெலுங்கானாவில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கடந்த நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புதான் வெளிச்சத்திற்கு வந்தன.

பிராணஹிதா-கோதாவரி படுகையில் டைனோசர்கள் நடமாடியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

1975 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் மகாராஷ்டிராவின் சிரோஞ்சா பிராந்தியத்தின் கோட்டா பாறை அடுக்கு மண்ணில், 'பரபாசாரஸ் தகோரி' என்ற சௌரோபாட் வகை டைனோசரின் புதைபடிவ எலும்புகளைக் கண்டறிந்தனர்.

அதன் பிறகு, தெலுங்கானாவில் முதல்முறையாக, தற்போதைய மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள வேமனபள்ளி பகுதியில் 1988 ஆம் ஆண்டில் இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் விஞ்ஞானி பி. யதகிரி என்பவரால் டைனோசர் புதைபடிவ எலும்புகள் மீண்டும் கண்டறியப்பட்டன.

தற்போது கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ள சாலிகான் கிராமத்தில் இருந்து வேமனபள்ளி சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

"யதகிரி கண்டறிந்த சௌரோபாட் டைனோசருக்கு 'கோட்டாசாரஸ் யேமனபள்ளென்சிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோட்டாசாரஸ் என்றால் கோட்டா அடுக்கு என்று பொருள், மேலும் இது வேமனபள்ளி கிராமத்தில் கண்டறியப்பட்டதால் இதற்கு யேமனபள்ளென்சிஸ் என்று பெயரிடப்பட்டது" என்று பேராசிரியர் ஜி.வி.ஆர் பிரசாத் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

யதகிரியின் ஆராய்ச்சி முடிவுகள் 2010 ஆம் ஆண்டில் 'வெர்டிபிரேட் பேலியண்டாலஜி' என்ற இதழில் வெளியிடப்பட்டன. அந்த விவரங்களின் படி, தற்போதைய மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள வேமனபள்ளிக்கு அருகிலுள்ள ராஜாராம் கிராமத்திற்கு அருகில் 12 டைனோசர்களுக்குச் சொந்தமான 840 புதைபடிவ எலும்புகள் கண்டறியப்பட்டன.

இவை 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகள் என மதிப்பிடப்பட்டுள்ளன.

இதற்காகச் சுமார் 2400 கன மீட்டர் அளவுக்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகள் என மதிப்பிடப்பட்டுள்ளன. இதற்காகச் சுமார் 2400 கன மீட்டர் அளவுக்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, இங்கு 12 டைனோசர்களின் 840 புதைபடிவ எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

'ரகாசி போக்கா' - எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடம்

எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு பிபிசி சென்றது.

எலும்புகள் கண்டறியப்பட்ட அந்தப் பகுதிக்கு பிபிசி சென்றது. இது ராஜாராம் கிராமத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதி போன்ற இடத்தில் அமைந்துள்ளது.

இளைஞர்களுக்கு இந்த இடத்தைப் பற்றித் தெரியவில்லை. நாங்கள் கிராமத்திற்குச் சென்று கேட்டபோது, தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறினர்.

சில முதியவர்கள் தங்களுக்கு அந்த இடம் தெரியும் என்று கூறினர். ராஜாராம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமய்யா மற்றும் சங்கர் ஆகியோர் டைனோசர் எலும்புகள் கண்டறியப்பட்ட இடத்தை எங்களுக்குக் காட்டினர்.

அந்த இடம் மரங்களால் சூழப்பட்ட ஒரு வறண்ட குளம் போல உள்ளது. தோண்டப்பட்ட மண் அதைச் சுற்றிலும் கொட்டப்பட்டிருப்பதால், அது ஒரு சிறிய குழி போலக் காட்சியளிக்கிறது.

உள்ளூர் மக்கள் இந்த இடத்தை 'ராகாசி பொக்கா' என்று அழைக்கிறார்கள்.

ராட்சத பல்லிகளின் (டைனோசர்களின்) எலும்புகள் கண்டறியப்பட்ட இடம் என்பதால், அது அவ்வாறு அழைக்கப்படுவதாக லட்சுமய்யா கூறினார்.

"பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இங்கு தோண்டினார்கள். அந்த நேரத்தில் ராட்சத பல்லிகளின் எலும்புகள் கிடைத்ததாகக் கூறினார்கள். அவர்கள் கூடாரங்கள் அமைத்து நீண்ட நாட்களாகத் தோண்டினார்கள். இங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் ஹைதராபாத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன" என்று லட்சுமய்யா கூறினார்.

டைனோசர் எச்சங்கள்.
படக்குறிப்பு, பி.எம். பிர்லா அறிவியல் அருங்காட்சியகத்தில் பதிக்கப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தில் காணப்படும் டைனோசர் எச்சங்கள்.

பிர்லா அறிவியல் மையத்தில் கண்காட்சி

ராஜாராம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவ எலும்புகள், 1988 ஆம் ஆண்டில் யதகிரியின் தலைமையில் ஹைதராபாத்திற்கு கொண்டு வரப்பட்டு 'இந்திய புவியியல் ஆய்வுத் துறையில்' வைக்கப்பட்டன.

பின்னர் அது பி.எம். பிர்லா அறிவியல் மையத்திற்கு மாற்றப்பட்டது, அங்கு ஒரு டைனோசர் எலும்புக்கூடு உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த டைனோசர் எலும்புக்கூடு தற்போது பிர்லா அறிவியல் மையத்தின் 'டைனோசோரம்' பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அகழ்வாராய்ச்சியின் போது அதன் மண்டை ஓடு கண்டறியப்படவில்லை.

பிர்லா அறிவியல் மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின்படி, அமெரிக்காவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் செய்யப்பட்டு இதன் மண்டை ஓடு ஒட்டப்பட்டுள்ளது.

இந்த டைனோசர் எலும்புக்கூடு 14.2 மீட்டர் நீளமும், 3.7 மீட்டர் உயரமும் கொண்டது. இது உயிருடன் இருந்தபோது 40 டன் எடை கொண்டதாக இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.

சலிகான் கிராமத்தில் டைனோசர் கால் தடங்கள் கண்டறியப்பட்ட தளம், தற்போது அழிவின் விளிம்பில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
படக்குறிப்பு, பிர்லா அறிவியல் மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின்படி, அமெரிக்காவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் செய்யப்பட்டு இதன் மண்டை ஓடு ஒட்டப்பட்டுள்ளது.

சாலிகான் கிராமத்தில் டைனோசர் கால் தடங்கள் கண்டறியப்பட்ட தளம், தற்போது அழிவின் விளிம்பில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

"இது ஒரு சுண்ணாம்புப் பாறைப் பகுதி என்பதால், இங்கு அதிக அளவில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கிடைக்கும் கற்கள் வீடுகளின் அடித்தளம் அமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பகுதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சமுத்ரலா சுனில் கூறினார்.

இது குறித்து மஞ்சேரியல் மாவட்ட ஆட்சியர் குமார் தீபக்கை பிபிசி தொடர்பு கொண்டது.

"டைனோசர் புதைபடிவ கால் தடங்கள் உள்ள பகுதியில் எந்தவொரு அகழ்வாராய்ச்சியும் நடக்காமல் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அனுமதியின்றி அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதி இல்லை. உள்ளூர் அதிகாரிகளையும் நாங்கள் எச்சரித்து, அங்கு எந்தவிதமான அகழ்வாராய்ச்சிகளும் அனுமதிக்கப்படாது என்பதை உறுதி செய்வோம்" என்று ஆட்சியர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு