'அவரின் இசை என் படங்களுக்கு உயிர்'; பாரதிராஜா- இளையராஜா கூட்டணி

பட மூலாதாரம், @offBharathiraja
1970களின் பிற்பகுதி மற்றும் 80கள் என்பது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காலகட்டம்.
"அப்போது தான் பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் அறிமுகமாகின்றனர். எம்ஜிஆர், சிவாஜி போன்ற நட்சத்திரங்களின் காலம் முடிவுற்ற நிலையில், அடுத்த உச்ச நாயகத் தகுதியை ரஜினியும் கமலும் 80-களில் அடைந்தனர். இவை அனைத்துக்கும் இளையராஜாவின் இசை முக்கிய காரணியாக இருந்தது" என 'தமிழ் சினிமா- புனைவில் இயங்கும் சமூகம்' நூலில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்.
"இளையராஜாவைக் கணக்கில் கொண்டே இசையையும் பாடல்களையும் கதையம்சமாகக் கொண்ட ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின" என்றும் அவர் எழுதியுள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் உருவான மிக முக்கியமான கூட்டணி என்பது பாரதிராஜா- இளையராஜா கூட்டணி.
ஆனால், திரைத்துறை அறிமுகத்துக்கு முன்பாகவே இந்தக் கூட்டணி இணைந்து பணியாற்றியது நாடகங்களில். அப்போது இவர்களுடன் பணியாற்றிய, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இது குறித்து ஒரு காணொளியில் நினைவுகூர்ந்திருப்பார்.
"நாடகங்களில் பாரதிராஜாவுடன் பணிபுரிந்த காலங்களில் ஒரு மிகச்சிறந்த நண்பரை எனக்கு அறிமுகப்படுத்தினார், அது ராசய்யா. பின்னர் நானும் ராசய்யாவும் இணைந்து இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவர் இளையராஜாவாக திரைப்படத்துறையில் நுழைந்தார்" என அந்தக் காணொளியில் கூறியிருப்பார் எஸ்பிபி.
'50 ஆண்டுகால நட்பு'

பட மூலாதாரம், Instagram/Dir_Bharathiraja
'அன்னக்கிளி' (1976) என்ற திரைப்படத்தில் அறிமுகமான இளையராஜா, சிறந்த இசையமைப்பாளருக்கான தனது முதல் மாநில விருதைப் பெற்றது பாரதிராஜாவின் முதல் படைப்பான '16 வயதினிலே' திரைப்படத்துக்காக.
அன்னக்கிளிக்கும் 16 வயதினிலே படத்துக்கும் ஒரு வருடம்தான் இடைவெளி என்றாலும், இளையராஜா அதற்கு இடையே 11 படங்களுக்கு இசையமைத்திருந்தார்.
"16 வயதினிலே படத்துக்கு முன்பு வரை இயக்குநர்கள் கேட்டதை மட்டுமே செய்ய முடிந்தது. ஆனால், அந்தப் படத்தில்தான், பின்னணி இசையில் நான் என்னவெல்லாம் நினைக்கிறேனோ அவற்றையெல்லாம் செய்ய பாரதிராஜா ஒப்புக்கொண்டார். அந்தப் படத்துக்குப் பிறகுதான், எல்லாப் படங்களுக்கும் பின்னணி இசையில் என்னால் முழுமையாக, எந்தத் தயக்கமும் இல்லாமல் பணியாற்ற முடிந்தது" என்று ஒரு கல்லூரி நிகழ்வில் பேசியிருப்பார் இளையராஜா.
50 ஆண்டுகால நட்பு
அதேபோல பாரதிராஜாவும், "சலீல் சௌத்ரி, ஆர்.டி.பர்மன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல இசையமைப்பாளர்களுடன் வேலை செய்துவிட்டேன். ஆனால், எனது இயக்கமும் இளையராஜாவின் இசையும் கணவன்- மனைவி போல. அவர் என் திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்துவிடுவார்" என ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.
16 வயதினிலே (1977), கிழக்கே போகும் ரயில் (1978), சிகப்பு ரோஜாக்கள் (1978), புதிய வார்ப்புகள் (1979), நிழல்கள் (1980), அலைகள் ஓய்வதில்லை (1981), மண்வாசனை (1983), முதல் மரியாதை (1985) என பல குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் இவர்களது கூட்டணியில் வெளியாகின.
"எனது திரைப்படங்களில் இளையராஜாவுக்காக சில இடங்களை வசனங்களின்றி அமைதியாக விட்டுவிடுவேன். அவர் அதற்கு உயிர் கொடுத்துவிடுவார். எனக்கும் அவருக்கும் 50 ஆண்டுகால நட்பு உள்ளது" என ஒரு காணொளியில் பகிர்ந்திருப்பார் பாரதிராஜா.

பட மூலாதாரம், Instagram/Dir_Bharathiraja
ஆனால், இந்தக் கூட்டணி 1992இல் பிரிந்தது. 'நாடோடித் தென்றல்' என்ற திரைப்படம் தான் பாரதிராஜா- இளையராஜா கூட்டணியின் கடைசி திரைப்படம்.
அதன் பிறகு ஹம்சலேகா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, சிற்பி, வித்யாசாகர் என பல இசையமைப்பாளர்களோடு பாரதிராஜா பணிபுரிந்திருந்தாலும், அவரது சிறந்த திரைப்படங்கள் என கருதப்படுபவற்றில் பெரும்பாலானவை இளையராஜாவுடன் அவர் பணிபுரிந்த திரைப்படங்களே.
தன்னுடைய சில படங்களுக்கு இளையராஜா இசையமைக்கும்போது இசை தொடர்பாக இருவருக்கும் சிறுசிறு மோதல்கள் ஏற்பட்டதாக, பாரதிராஜா தன் பேட்டிகளில் பதிவு செய்துள்ளார்.
முதல் மரியாதை
"எனது வாழ்நாளில் நான் இயக்கிய திரைப்படங்களில் சிறந்தது என்றால் அது 'முதல் மரியாதை' தான்" என பாரதிராஜா ஒரு காணொளியில் கூறியிருப்பார்.
அத்திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் இந்தப் படத்துக்கு துளியும் விருப்பம் இல்லாமல் இளையராஜா இசையமைத்தார் என்பது தான்.
"இளையராஜாவுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ, தனது தொழில் தர்மத்தை அவர் விட்டுக்கொடுக்கமாட்டார். முதல் மரியாதை திரைப்படத்தில் அவர் உட்பட பலருக்கும் துளியும் உடன்பாடு இல்லை. ஆனால் இறுதிக்காட்சிக்கு அவர் அமைத்த இசையைக் கேட்டு கண் கலங்கினேன், இசையால் அத்திரைப்படம் முழுமை பெற்றது," என இயக்குநர் பாரதிராஜா தனது யூடியூப் சேனலின் காணொளி ஒன்றில் கூறியிருப்பார்.
பாரதிராஜா- இளையராஜா கூட்டணியில் வெளியான 'நிழல்கள்' திரைப்படம் வணிக ரீதியில் தோல்வி அடைந்தாலும், 'மடை திறந்து..', 'இதுவொரு பொன்மாலை பொழுது…', 'பூங்கதவே தாழ் திறவாய்' என அதன் பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் விரும்பப்படுகின்றன.
"அந்தத் திரைப்படம் எனக்கு தோல்வி, ஆனால் வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் பெரிய வெற்றி" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் பாரதிராஜா.

பட மூலாதாரம், Instagram/Dir_Bharathiraja
கருத்து வேறுபாடுகள்
"'நாடோடி தென்றல்' திரைப்படத்துக்கு முன்பு கூட பல திரைப்படங்களின் இசையமைப்பு பணிகளில் எனக்கும் இளையராஜாவுக்கும் சிறு கருத்து வேறுபாடுகள் வந்துள்ளன. ஆனால் அவை உடனடியாக சரியாகிவிடும். உதாரணத்துக்கு 'கடலோர கவிதைகள்' (1986) திரைப்படத்தில் ஒரு சிறு மோதல் வந்தது" என பாரதிராஜா கூறியிருந்தார்.
'கடலோர கவிதைகளுக்கு' பிறகு வெளியான 'வேதம் புதிது' (1987) திரைப்படத்தில் தேவேந்திரன் என்ற இசையமைப்பாளரோடு பணிபுரிந்திருப்பார் பாரதிராஜா. பிறகு மீண்டும் இளையராஜாவோடு இணைந்து சில திரைப்படங்களில் பணியாற்றினார்.
இருப்பினும், 'நாடோடி தென்றலுக்கு' பிறகு திரைத்துறையில் அவர்களின் நிரந்தர பிரிவு பல திரைப்பட ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.
"நாடோடி தென்றல் திரைப்படத்தில் பாரதிராஜா- இளையராஜா என்ற இரு கலைஞர்களுடன் பணிபுரிந்ததை மறக்க முடியாது, அதுவொரு மிகச்சிறப்பான அனுபவம். ஆனால் அதுதான் அவர்களது கூட்டணியில் வரும் கடைசி திரைப்படம் என்பது அப்போது எனக்கு தெரியாது. எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது" என பிபிசி தமிழிடம் கூறினார் பாடகர் மனோ.
நாடோடி தென்றல் திரைப்படத்தில் எஸ்.ஜானகி, சித்ராவுடன் இணைந்து மூன்று பாடல்களை பாடியிருந்தார் பாடகர் மனோ.

பட மூலாதாரம், Singer Mano/Instagram
புதன்கிழமை (ஜூன் 10) பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், "பாரதிராஜா சென்னை வரவில்லையென்றால் நானும் இளையராஜாவும் சென்னை வந்திருக்கமாட்டோம். அவரது சம்பளத்தை எங்களுக்கு பகிர்ந்தளிப்பார். இருவரின் பிரிவுக்கு பெரிய காரணம் ஒன்றுமில்லை, குடும்பச் சண்டை போல தான். அதை இப்போது பேச வேண்டாம்" என்று கூறினார்.
தனது முதல் படைப்பான '16 வயதினிலே'-வில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றினார் பாரதிராஜா. அவர் கடைசியாக 2023இல் 'மாடர்ன் லவ் சென்னை' என்ற ஆந்தாலஜி தொடரில் 'பறவை கூட்டில் வாழும் மான்கள்' என்ற ஒரு குறும்படத்தை இயக்கியிருப்பார்.
அந்த ஆந்தாலஜி தொடருக்கான இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























