'172 மீட்டர் உயரம், மரம் போன்ற தூண்கள்' - உலகின் மிக உயரமான தேவாலயத்தின் கட்டுமானக் கலையின் அதிசயம்

 சக்ரடா ஃபெமிலியா தேவாலயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவின் சின்னமாகவும், மிக உயரமான தேவாலயமாகவும் விளங்கும் சாக்ரடா ஃபேமிலியா தேவாலயம்
    • எழுதியவர், மார்த்தா ஹென்ரிக்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அந்தோணி கவுடி "கடவுளின் கட்டடக் கலைஞர்" என்று அறியப்பட்டார்.

மேலும் பார்சிலோனாவின் சாக்ரடா ஃபேமிலியா தேவாலயத்துக்காக அவர் வரைந்த பல நூற்றாண்டுகள் பழமையான வளைவு வடிவமைப்பு, அதனை உலகின் மற்ற தேவாலயங்களிலிருந்து உயர்த்திக் காட்டுகிறது.

இன்று, நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த தேவாலயம் மேலும் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.

1926 ஜூன் மாதத்தில், கலைந்த ஆடைகளை அணிந்திருந்த ஒரு முதியவர், தேவாலயத்துக்குச் செல்லும் வழியில் சாலையைக் கடக்கும்போது ஒரு டிராம் வண்டியில் மோதி கீழே விழுந்தார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் மருத்துவமனை ஒன்றில் இறந்தார்.

அந்த மனிதர் தான் "கடவுளின் கட்டடக் கலைஞர்" என்று பின்னர் அறியப்படவிருந்த அந்தோணி கவுடி ஆவார்.

கவுடி ஒரு பிரமாண்டமான பணியை விட்டுச் சென்றார்.

வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவின் சின்னமாகவும், மிக உயரமாகவும் விளங்கும் சாக்ரடா ஃபேமிலியா தேவாலயத்தின் கட்டுமானப் பணிகளுக்கு நடுவிலேயே கவுடி உயிரிழந்தார்.

தொலைவிலிருந்து பார்க்கும்போது, ​​அந்தத் தேவாலயம் நகரத்தின் வானுயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில், ஒரு பிரமாண்டமான உயிரினம் போல உயர்ந்து நிற்கிறது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அருகில் பார்க்கும்போதும், ​​அது ஒரு உயிருள்ள உயிரினத்தைப் போலவே தோன்றுகிறது.

விவிலியக் கருப்பொருள்களைச் சித்தரிக்கும், மயக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட முகப்புகள், கல்லிலிருந்து வளர்வது போல காட்சியளிக்கின்றன.

கவுடியின் மரணத்துக்குப் பிறகும் நீண்ட காலம் தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்டப்பட்டதால், சாக்ரடா ஃபேமிலியா அசாதாரணமான சவால்களை எதிர்கொண்டது.

1936-இல் நடந்த ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது கவுடியின் வரைபடங்களும் மாதிரிகளும் அழிக்கப்பட்டதால், அவருக்குப் பின் வந்தவர்கள் அதில் தொடர்ந்து வேலை செய்வதற்கு மிகக் குறைவான மூலப்பொருட்களே எஞ்சியிருந்தன.

ஒரு காலத்தில், அதன் வானுயர்ந்த கோபுரங்கள் அவற்றின் அடித்தளத்துக்கு மிகவும் உயரமானவை என்றும், காற்றினால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை என்றும் கருதப்பட்டன.

இருப்பினும், கவுடி இறந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்தத் தேவாலயத்தின் மையச் சிகரமான இயேசு கிறிஸ்துவின் கோபுரம் திறந்து வைக்கப்படுவதை ஒட்டி போப் லியோ XIV சாக்ரடா ஃபேமிலியாவுக்கு வருகை புரிந்தார்.

இது 172.5 மீட்டர் (566 அடி) உயரத்தில் காட்சியளிக்கிறது. சாக்ரடா ஃபேமிலியாவுக்கு உலகின் மிக உயரமான தேவாலயம் என்ற பட்டத்தையும் இது பெற்றுத் தந்துள்ளது.

பண்டைய கால உத்வேகமும், அதிநவீன பொறியியலும் இணைந்து இந்த கோபுரங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதைக் கண்டறிய, கவுடியின் 100-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிபிசி சாக்ரடா ஃபேமிலியாவுக்குச் சென்று பார்வையிட்டது.

சாக்ரடா ஃபேமிலியா

பட மூலாதாரம், Fundació Junta Constructora del Temple Expiatori de la Sagrada Família

படக்குறிப்பு, கவுடியின் சாக்ரடா ஃபேமிலியா பற்றிய தொலைநோக்கு பார்வை, அவரது காலத்து கட்டடக்கலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புரட்சிகரமான தொடக்கமாக இருந்தது

பண்டைய உத்வேகம்

ஒரு இளம், மிகுந்த லட்சியம் கொண்ட மற்றும் தீவிர கத்தோலிக்க கட்டடக் கலைஞராக கவுடிக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன என்று கலை வரலாற்றாசிரியரும் கவுடியின் வாழ்க்கை வரலாற்றாசிரியருமான கிஜ்ஸ் வான் ஹென்ஸ்பெர்கன் கூறுகிறார்.

"முதலாவதாக, சாக்ரடா ஃபேமிலியா எனப்படும் கல்லால் ஆன ஒரு பைபிளை உருவாக்குவது. அதே சமயம் அதற்கு முந்தைய கட்டடக்கலை பாணிகளின் அனைத்து தவறுகளையும் திருத்துவது" என்கிறார் கிஜ்ஸ் வான்.

அவ்வாறு செய்வதற்கு, அவர் பண்டைய உலகின் அதிசயங்களில் ஒன்றான, தற்போதைய இராக்கில் உள்ள பண்டைய நகரமான சிடெசிஃபோனில் அமைந்துள்ள 'டாக்-இ கிஸ்ரா' வளைவை பார்க்க வேண்டியிருந்தது.

கி.பி 3 முதல் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டு 30 மீட்டர் (100 அடி) உயரத்தில் நிற்கும் இந்த வளைவு, 'கேட்டனரி வளைவு' எனப்படும் ஒரு கட்டமைப்பின் கம்பீரமான ஆரம்பகால உதாரணமாகும்.

கேட்டனரி வளைவின் வடிவத்தைப் புரிந்துகொள்ள, இரண்டு முனைகளால் மட்டுமே பிடிக்கப்பட்ட ஒரு சங்கிலியை கற்பனை செய்து பாருங்கள்.

அது ஒரு வளைவை உருவாக்க கீழ்நோக்கித் தொங்கும்.

அந்த வளைவை தலைகீழாக மாற்றி, அதன் வடிவத்தைப் பின்பற்றி ஒரு கல் வளைவைக் கட்டினால், அது மிகவும் நிலையானதாக இருக்கும்.

டாக்-இ கிஸ்ரா வளைவு இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

தற்போதைய இராக்கில் உள்ள 'டாக்-இ கிஸ்ரா' வளைவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்போதைய இராக்கில் உள்ள 'டாக்-இ கிஸ்ரா' வளைவு, ஒரு கேட்டனரி வளைவின் கம்பீரமான மற்றும் ஆரம்பகால உதாரணமாகும்.

"இது உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது" என்று கூறும் வான் ஹென்ஸ்பெர்கன், கவுடி இந்த வளைவு போன்ற பண்டைய அதிசயங்களின் புகைப்படங்களை மிகுந்த ஆர்வத்துடன் தேடினார்.

லட்சியம் கொண்ட ஒரு கட்டடக் கலைஞராக, "அவர் உலகின் ஒரு புதிய அதிசயத்தை உருவாக்க விரும்பாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை" என்கிறார்.

பல ஆண்டு கால கடினமான ஆராய்ச்சிக்குப் பிறகு, தனது காலத்து கதீட்ரல் தேவாலயங்களில் தனக்கு எரிச்சலூட்டும் ஒரு காரணியாகத் தெரிந்த விஷயத்தை திருத்துவதற்கு கேட்டனரி வளைவு உதவும் என்று கவுடி உறுதியாக நம்பினார்.

பெரிய நியோ-கோதிக் பாணி தேவாலயங்கள் அவற்றின் நேர்த்தியான வளைந்த கூரைகளைத் தாங்குவதற்காக, மேல் சுவர்களில் இருந்து கீழ் தளங்கள் வரை நீண்டு செல்லும் கல்லிலான கைகளான 'ஃப்ளையிங் பட்ரசஸ்' (சுவரின் மேல் பகுதியில் இருந்து வெளிப்பகுதியிலுள்ள தூணுக்கு எடையைச் செலுத்தும் ஒரு வளைவு அமைப்பு) என்ற பக்கவாட்டுத் தாங்கு தூண்களைச் சார்ந்திருந்தன.

ஃப்ளையிங் பட்ரசஸ் என்பது கட்டடத்தின் கூரை மற்றும் சுவர்களின் பக்கவாட்டு எடையை, சுவரில் இருந்து விலக்கி வெளிப்பகுதியில் இருக்கும் உறுதியான தூண்களுக்கு தரையிறக்கும் வகையில் இது செயல்படுகிறது.

ஸ்பெயினின் சாண்டா மரியா டி ரெக்லா டி லியோன் கதீட்ரல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்பெயினின் சாண்டா மரியா டி ரெக்லா டி லியோன் கதீட்ரல் தேவாலயத்தில் காணப்படும் 'ஃப்ளையிங் பட்ரசஸ்' என்ற பக்கவாட்டுத் தூண்களை கவுடி வெறுத்தார்.

தமது தேவாலயத்தில் ஃப்ளையிங் பட்ரசஸ் இருக்கக் கூடாது என்பதில் கவுடி பிடிவாதமாக இருந்தார்.

தன் சொந்த எடையைத் தாங்க முடியாத ஒரு கட்டடத்தைத் தாங்கிப் பிடிப்பதற்காக வைக்கப்படும் "ஊன்றுகோல்கள்" என்றே அவர் அவற்றைக் கருதினார்.

அதற்குப் பதிலாக, தேவாலயத்தின் மையப்பகுதித் தூண்களுக்கான தனது வடிவமைப்புகளில் அவர் கேட்டனரி வளைவைப் பயன்படுத்தினார்.

இது, அந்தத் தூண்கள் தங்களின் சொந்த எடையையும், கட்டடத்தின் 18 கோபுரங்களின் எடையையும் தாங்குவதற்கு வழிவகுத்தது.

"மிகவும் திறமையான வடிவங்களைக் கண்டறிய அவர் வளைவுக்கூரை அமைப்புகளைப் பயன்படுத்தினார்" என்கிறார் உலகளாவிய பொறியியல் நிறுவனமான அரூப்பில் சாக்ரடா ஃபேமிலியா திட்டத்தில் பணியாற்றும் குழுவை வழிநடத்தும் கட்டமைப்புப் பொறியாளரான லியாம் டஃப்.

"இது மிகவும் நேர்த்தியான ஒரு வடிவம், அதே சமயம் அது தன் வேலையையும் செய்கிறது, தன்னைத் தானே தாங்கிக்கொள்கிறது" என்று வான் ஹென்ஸ்பெர்கன் கூறுகிறார்.

கேட்டனரி வளைவின் சிக்கனமான வடிவம் கல்லில் ஒரு பைபிளை உருவாக்க வேண்டும் என்ற கவுடியின் முதல் விருப்பத்துக்கும் உகந்ததாக இருந்தது.

"அவர் கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது, ஆனால், அந்த ஈர்ப்பு அவருக்குப் படைப்பாளரின் படைப்பைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழியாகவே இருந்தது" என்கிறார் வான் ஹென்ஸ்பெர்கன்.

புவியீர்ப்பு விசையும் கேட்டனரி வளைவும் தெய்வீகக் கண்டுபிடிப்புகள் என்று கவுடி நம்பினார்.

"அது, அவரைப் பொறுத்தவரை , மாபெரும் சிற்பியான கடவுளைப் போற்றும் ஒரு அற்புதமான மையக்கருத்தாக அமைந்திருக்கும்."

சாக்ரடா ஃபேமிலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாக்ரடா ஃபேமிலியாவின் மரத்தைப் போன்ற தூண்கள், அதன் மேல் உள்ள கூரை மற்றும் கோபுரங்களின் எடையைத் தாங்குகின்றன.

கட்டமைப்புகள் மற்றும் விசை பற்றிய கவுடியின் அறிவு வளர்ந்தபோது, இந்தத் தேவாலயத்திலிருந்து அதன் கட்டமைப்புக்குத் தேவையில்லாத பிற வளைவுகளையும் தூண்களையும் அகற்றுவதில் அவர் அதிக நம்பிக்கை கொண்டார்.

கவுடியின் இறுதி வடிவமைப்பு, மிகவும் அத்தியாவசியமான சில தூண்களைத் தவிர மற்ற அனைத்தையும் அகற்றியது.

தேவாலயத்தின் மையப் பகுதியான 'நேவ்'-ன் உட்புறத்தில், அவர் கிளைகளாகப் பிரியும் எளிய தூண்களைப் பயன்படுத்தினார். இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று வடிவமைக்கப்பட்ட இவை மரங்களைப் போலவே காட்சியளிக்கின்றன.

இவற்றின் கிளைகள் மேல்நோக்கி நீண்டு, அவற்றின் மேல் உள்ள கூரை மற்றும் கோபுரங்களின் எடையைத் தாங்குகின்றன.

மேற்குப் பகுதியில் உள்ள வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக ஊடுருவி வரும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற ஒளிகளால் ஒளிரும் தேவாலயத்தின் மையப்பகுதியில் நிற்கும்போது, இந்த மரத்தூண்கள் எடையற்ற தன்மையின் மாயத் தோற்றத்தைத் தருகின்றன.

பூக்கள் பதிக்கப்பட்ட அலங்காரக் கூரையை இந்த மரங்கள் எங்கு தொடுகின்றன என்று பார்க்க உங்கள் கழுத்தை நிமிர்த்தி அண்ணாந்து பார்க்கும்போது, ஒவ்வொரு மரமும் மேலிருந்து வரும் கற்பனைக்கெட்டாத அழுத்தத்தைத் தாங்கி நிற்கிறது என்பதை நம்புவது கடினமாக உள்ளது.

மேற்குப் பகுதியில் உள்ள வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக ஊடுருவி வரும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற ஒளிகளால் ஒளிரும் தேவாலயத்தின் மையப்பகுதியில் நிற்கும்போது, இந்த மரத்தூண்கள் எடையற்ற தன்மையின் மாயத் தோற்றத்தைத் தருகின்றன.

பட மூலாதாரம், Sagrada Família / Pep Daudé

படக்குறிப்பு, முன்பகுதியில் ஒளிரூட்டப்பட்டு, அதன் உச்சியில் ஒரு நட்சத்திரத்தைக் கொண்டுள்ள கன்னி மரியாவின் கோபுரம்

கனமான கோபுரங்கள்

அவற்றின் எளிமையாக்கப்பட்ட, சிக்கனமான வடிவமைப்பு இருந்தபோதிலும், உயரமான கோபுரங்களில் ஒன்றை உருவாக்கும் போது ஒரு மிகப்பெரிய சவால் ஏற்பட்டது. அந்த கோபுரம் மிக அதிக எடையைக் கொண்டிருந்தது தான் அந்த சவால்.

கன்னி மரியாவின் கோபுரம் 138 மீட்டர் (453 அடி) உயரமுடையது, இது 172.5 மீட்டர் (566 அடி) உயரமுள்ள மையக் கோபுரமான இயேசு கிறிஸ்துவின் கோபுரத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக உயர்ந்த கோபுரமாகும்.

கன்னி மரியா கோபுரம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, ​​அதனைப் பாரம்பரிய கற்கட்டுமான முறைகளிலோ அல்லது கற்கள் பதிக்கப்பட்ட வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டிலோ கட்டினால், அதன் கீழிருக்கும் தூண்கள் மீது அதிக சுமை ஏற்படும் என்பது கண்டறியப்பட்டது.

இதற்கான ஒரு தீர்வு, கோபுரத்தைத் தாங்குவதற்காக அதன் உட்புறத்தில் ஒரு எஃகு சட்டகத்தை அமைத்து, கோபுரத்தின் பாரத்தைக் குறைப்பதற்காக மெல்லிய கான்கிரீட் பலகைகளால் அதை மூடுவதாகும்.

இந்தத் திட்டத்துடன், சாக்ரடா ஃபேமிலியா நிர்வாகம் 2014-ஆம் ஆண்டில் பிரிட்டனில் உள்ள அருப் நிறுவனத்தின் கட்டமைப்புப் பொறியாளர்கள் குழுவின் சேவையைப் பெற்றது.

"சாக்ரடா ஃபேமிலியா என்பது ஒரு புராண இடம், அல்லவா?" என்று இந்தத் திட்டத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே ஈடுபட்டிருந்த அரூப் நிறுவனத்தின் கட்டமைப்புப் பொறியாளர் ஸ்டீவ் மெக்கெக்னி கூறுகிறார்.

மேலும், "இதில் நாமும் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் கனவு காணும் ஒரு விஷயம், ஆனால் அது தானாகவே எங்களிடம் வந்து சேர்ந்தது" என்றும் குறிப்பிட்டார்.

 சாக்ரடா ஃபேமிலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்பே தயாரிக்கப்பட்ட கல் பலகைகளின் பயன்பாடு, சாக்ரடா ஃபேமிலியாவின் கட்டுமானப் பணிகளை வியத்தகு முறையில் விரைவுபடுத்தியது.

கோபுரத்தின் எடையைச் சமாளிக்க அரூப் நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு ஒரு புரட்சிகரமான யோசனை தோன்றியது.

அவர்கள் எஃகு சட்டகம் மற்றும் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் ஆகிய இரண்டையுமே முற்றிலும் கைவிடுமாறு பரிந்துரைத்தனர். அதற்குப் பதிலாக, உட்புற எஃகு இழைகள் மூலம் அழுத்தப்பட்ட மெல்லிய கல் அடுக்கைப் பயன்படுத்த அவர்கள் முன்மொழிந்தனர். இது அத்திட்டத்திலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக இருந்தது.

"அது ஒரு மிகப்பெரிய மாற்றமாக இருந்தது" என்று கூறும் மெக்கெக்னி, "எங்களது சேவைகள் தேவைப்படாது என்று நாங்கள் நினைத்த ஒரு காலமும் இருந்தது, மே லும் இந்தத் திட்டம் மிகவும் அமைதியாகிவிட்டது"என்கிறார்.

மகிழ்ச்சியூட்டும் விதமாக, அது மாறியது என்று மெக்கெக்னி கூறுகிறார்.

முன்பே அழுத்தப்பட்ட கல் பலகை யோசனைக்கு பின்னால் உள்ள கோட்பாடு என்னவென்றால், கற்கள் அழுத்தப்படும்போது அவை மிகவும் வலிமையானதாக மாறும் என்பது தான்.

அழுத்தத்துக்கு மாறாக நீங்கள் அதை இழுத்துப் பிரிக்க முயன்றால், அது இழுவிசையின் காரணமாக எளிதில் விரிசலடைந்து தனது வலிமையை இழந்துவிடும்.

கோபுரத்தின் மீது காற்று வீசி அதை பின்னோக்கித் தள்ளும்போது, அது காற்றின் திசையை நோக்கியுள்ள கோபுரத்தின் பக்கத்தில் இழுவிசையை ஏற்படுத்துகிறது.

நீங்கள் பின்னோக்கிச் சாய்வதை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உடலின் பின்பகுதி சிறிய அழுத்தத்துக்குகு உள்ளாகும், அதே நேரத்தில் உங்கள் முன்பகுதி இழுவிசையின் கீழ் நீட்டப்படும். இந்த இழுவிசை, கல்லால் ஆன கோபுரத்தில் விரிசல்கள் மற்றும் சேதங்கள் ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது.

கேட்டனரி வளைவின் வடிவமானது, கோபுரத்தின் சொந்த எடையைப் பயன்படுத்தி கல்லை அழுத்தத்திலேயே வைத்திருக்க உதவுகிறது.

ஆனால் எஃகு இழைகள் மூலம் உட்புறமாக அழுத்தப்பட்ட பலகைகளைப் பயன்படுத்துவது இன்னும் கூடுதலான அழுத்தத்தைச் சேர்த்து, அதை மேலும் வலிமையாக்குகிறது.

இந்த வடிவமைப்பின் மூலம், காற்று வீசும்போது, காற்று வீசும் திசையில் மிகக் குறைந்த இழுவிசையே உருவாகிறது.

 சாக்ரடா ஃபேமிலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாக்ரடா ஃபேமிலியாவின் பல கோபுரங்களின் உட்புறம், மாபெரும் கூரைச் ஜன்னல்களாகச் செயல்பட்டு கீழே உள்ள தேவாலயத்துக்குள் ஒளி பாய்ந்து வர அனுமதிக்கிறது

ஜன்னல்களுக்கு மேலேயும் அவற்றுக்கு இடையேயும் உள்ள பிணைப்புகள், விரிசல் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை முன்பே அழுத்தி வைத்திருக்க உதவின.

கவுடியின் வடிவமைப்புகள் பல ஜன்னல்களைக் கொண்டிருந்ததால் இது முக்கியமானதாக இருந்தது, இது கீழே உள்ள தேவாலயத்துக்குள் இயற்கை ஒளி பாய்ந்து வர வழிவகுத்தது.

ஜன்னல்கள் வடிவமைப்பின் சிக்கலை அதிகரித்த போதிலும், அவை கோபுரத்தின் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றன என்று கூறும் மெக்கெக்னி, "ஜன்னல்கள் இல்லையென்றால், கோபுரத்தின் நோக்கத்தை அடைய முடியாது அல்லவா?" என்கிறார்.

கன்னி மரியாவின் கோபுரம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் கோபுரம் உட்பட மற்ற ஐந்து மையக் கோபுரங்களும் முன்பே அழுத்தப்பட்ட கல் பலகைகளைப் பயன்படுத்தி முடிக்கப்பட்டன.

2014-ஆம் ஆண்டு முதல், சாக்ரடா ஃபேமிலியா இந்த முறையை பரவலாகப் பயன்படுத்தி வருகிறது.

 சாக்ரடா ஃபேமிலியா

பட மூலாதாரம், Xavier Farré/ BBC

படக்குறிப்பு, சாக்ரடா ஃபேமிலியாவுக்கான கவுடியின் இயற்கையான உத்வேகம், தேவாலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் என ஒட்டுமொத்தமாகத் தெளிவாகத் தெரிகிறது

இந்த புதிய தொழில்நுட்பங்களின் "சாத்தியக்கூறுகளைக் கண்டு கவுடி உண்மையிலேயே மிகவும் உற்சாகமடைந்திருப்பார்" என்று வான் ஹென்ஸ்பெர்கன் கருதுகிறார்.

தனது வாழ்நாளில் முடிக்கப்பட்ட நேட்டிவிட்டி முகப்பில் உள்ள புனித பர்னபாஸ் கோபுரத்தில் கவுடி பல்வேறு முறைகளைப் பரிசோதித்துப் பார்த்தார்.

அவர் அதன் அடிப்பகுதியில், அருகிலுள்ள மாண்ட்ஜூயிக் மலையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட மணற்கற்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

இது சாம்பல் முதல் பழுப்பு, பச்சை, காவி, தங்கம், ஊதா மற்றும் சிவப்பு வரை நுட்பமாக நிறம் மாறக்கூடியது. கோபுரத்தின் உச்சிக்கு வரும்போது, அவர் போர்ட்லேண்ட் சிமெண்ட்டைப் பயன்படுத்தினார்.

"இது அந்த நேரத்தில் பார்சிலோனாவில் ஒரு புதிய பொருளாக இருந்தது, எனவே அவர் ஏற்கெனவே புதிய தொழில்நுட்பங்களின் வருகையைப் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்" என்று டஃப் கூறுகிறார்.

அவரது பரிசோதனைகளுக்குப் பலன் கிடைத்தது.

"கவுடி காலத்து கட்டுமானத்தின் தரத்தை அறிவது வியப்பாக இருக்கிறது" என்று சக்ரடா ஃபெமிலியாவின் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் இயக்குநரான பெர்னாண்டோ வில்லா கூறுகிறார்.

அவர் புனித பர்னபாஸ் கோபுரத்தின் உச்சியை 100 ஆண்டுகளுக்குப் பிறகும் "சரியானதாக" இருப்பதாக விவரிக்கிறார்.

 சாக்ரடா ஃபேமிலியா

பட மூலாதாரம், Xavier Farré/ BBC

படக்குறிப்பு, கவுடியின் மறைவுக்கு நூறு ஆண்டுகள் கடந்த பின்னரும், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துக்கொண்டே சாக்ரடா ஃபேமிலியா இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் படைப்பாகவே உள்ளது.

இன்னும் கட்டி முடிக்கப்படாத தேவாலயம்

போப் லியோ XIV உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், கவுடியின் 100-ஆவது நினைவு நாளில் தேவாலயத்தின் மிக உயரமான கோபுரத்தைத் திறந்து வைக்க ஒன்றுகூடும் வேளையிலும், இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைவதற்கு இன்னும் நீண்ட தூரம் உள்ளது.

மற்ற விஷயங்களுடன் சேர்த்து, தேவாலயத்தின் முக்கிய முகப்பான 'குளோரி ஃபேசட்' இன்னும் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளது.

கட்டுமானம் முழுமையாக முடிந்த பிறகும், இந்த கட்டடத்தைப் பராமரிக்க நவீன தொழில்நுட்பங்கள் உதவும். காலப்போக்கில் காற்றில் ஏற்படும் மாற்றம், வெப்பநிலை மற்றும் கட்டடத்தின் அசைவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தேவாலயத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் விரிசல்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமையக்கூடும் என்று வில்லா கூறுகிறார்.

முன்பெல்லாம் சாக்ரடா ஃபேமிலியா கட்டடத்தில் உள்ள விரிசல்கள் மற்றும் குறைபாடுகளைக் கண்டறிய மலை ஏறுபவர்களைச் சார்ந்திருந்தது.

தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்ய அவர்கள் இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். இன்று, அவர்கள் கவனிப்பு தேவைப்படும் விரிசல்களைக் கண்டறிய ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர்.

"செயற்கை நுண்ணறிவுக்கு ஒருமுறை பயிற்சி அளித்துவிட்டால், ஒரே மாதத்தில் அனைத்து தேவாலயப் பகுதிகளையும் ஸ்கேன் செய்ய முடியும்" என்று வில்லா கூறுகிறார்.

கல்லால் ஆன ஒரு நிலையான நினைவுச்சின்னமாக இல்லாமல், சாக்ரடா ஃபேமிலியா ஒரு உயிருள்ள பொருளைப் போல இயற்கையின் கூறுகளுக்கு ஏற்ப செயல்படுகிறது.

இந்தத் தொடர்ச்சியான இயக்கமும் பரிணாமமும், தேவாலயத்தைப் பற்றிய கவுடியின் இயற்கையான வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது என்று வில்லா கூறுகிறார்.

"இயற்கை தான் அவரது ஆசிரியர்."

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு