'தாயின் ஆடைக்குள் மறைந்திருந்த குழந்தை': ஏரியில் கிடைத்த பழைய துப்பாக்கி, கொலை வழக்கில் 14 ஆண்டு மர்மத்தை விலக்குமா?

பட மூலாதாரம், Getty Images
பிரான்சில் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரிட்டிஷ் குடும்பம் படுகொலை செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்றும் ஒரு மர்மமாகவே நீடிக்கிறது. இருப்பினும், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஏரி ஒன்றில் 'லூகர்' (Luger - மாடல் A) ரக கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதன் மூலம், இவ்வழக்கில் எதிர்பாராத விதமாக ஒரு புதிய துப்பு கிடைத்துள்ளது.
சாத் அல்-ஹில்லி, அவரது மனைவி, அவரது உறவினர் மற்றும் மிதிவண்டியில் சென்ற ஒருவர் ஆகியோர் 'லூகர் மாடல் P06' (Luger Model P06) கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. இந்த ரகத் துப்பாக்கி 1960-கள் வரை சுவிஸ் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது.
இக்கொலைகள் 2012-ஆம் ஆண்டு செப்டம்பரில் நிகழ்ந்தன. சம்பவ இடத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியின் 'அன்னெசி' (Annecy) ஏரியில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி 'லூகர்' பிராண்டைச் சேர்ந்தது என்பதை பிரான்சின் 'கோல்ட் கேஸ் யூனிட்' (தீர்க்கப்படாத பழைய வழக்குகளை விசாரிக்கும் பிரிவு) உறுதிப்படுத்தியுள்ளது.
இச்செய்தியை முதலில் வெளியிட்ட 'மேரியன்' (Marian) இதழின் தகவலின்படி, ஆகஸ்ட் 20 அன்று பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் ஏரியில் 2 மீட்டர் ஆழத்தில் இந்த ஆயுதத்தைக் கண்டெடுத்தனர்.
முதலில் அது ஒரு விளையாட்டுத் துப்பாக்கி என்று அவர்கள் நினைத்தனர்; ஆனால் அதன் எடையைப் பார்த்தபோது, தங்கள் கணிப்பு தவறு என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
கொல்லப்பட்ட அல்-ஹில்லி தனது குடும்பத்தினருடன் கேரவனில் தங்கியிருந்த முகாமிடும் இடத்திற்கு அருகிலேயே இந்தத் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாக 'மேரியன்' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட காலம் தண்ணீரில் இருந்ததால் அந்தத் துப்பாக்கி மிகவும் சேதமடைந்துள்ளது. அது உண்மையில் P06 மாடல்தானா என்பதை உறுதிப்படுத்த தடயவியல் நிபுணர்கள் தற்போது அதை ஆய்வு செய்து வருகின்றனர்.
சுமார் 60,000 லூகர் P06 ரகத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து வகையான லூகர் துப்பாக்கிகளையும் சேர்த்தால் அவற்றின் எண்ணிக்கை 30 லட்சம் (3 மில்லியன்) வரை இருக்கலாம்.
பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளுக்குப் பிறகும், அல்-ஹில்லி குடும்பத்தினரை யார், ஏன் கொன்றார்கள் என்பது குறித்த கேள்விகளுக்கு காவல்துறையினரால் விடை காண முடியவில்லை.
பல ஆண்டுகளாகப் பல்வேறு தடயங்களின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டாலும், அவை பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
இராக்கில் பிறந்த பிரிட்டிஷ் குடிமகனான சாத் அல்-ஹில்லி, விடுமுறையைக் கழிக்கத் தனது குடும்பத்தினருடன் கிழக்கு பிரான்சில் உள்ள அன்னெசி ஏரிப் பகுதிக்கு வந்திருந்தார்.
செப்டம்பர் 5-ம் தேதி மதியம், 'ஷெவாலின்' என்ற கிராமத்திற்கு அருகிலுள்ள சாலையில் இருந்த ஒரு காருக்குள் சாத் அல்-ஹில்லி, அவரது மனைவி மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். அப்போது அந்தக் காரின் என்ஜின் ஓடிக்கொண்டிருந்தது. அவ்வழியே மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பட மூலாதாரம், Central News and Pictures
இருப்பினும், அல்-ஹில்லியின் 4 மற்றும் 7 வயதுடைய இரு மகள்கள் உயிர் பிழைத்தனர். மூத்த சிறுமியின் தலையில் கைத்துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்கப்பட்டதில் அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு சில மணிநேரம் கழித்து, தடயவியல் நிபுணர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, தாயின் ஆடைகளுக்குள் மறைந்திருந்த சிறுமியைக் கண்டுபிடித்தனர்.
கைத்துப்பாக்கியின் பின்பகுதியிலிருந்து கிடைத்த துண்டுகளைக் கொண்டு, அது 'லூகர் P06' (Luger P06) ரகத் துப்பாக்கி என்பதைப் காவல்துறையினரால் அடையாளம் காண முடிந்தது. வழக்கமான பயன்பாட்டில் உள்ள துப்பாக்கியை விட, இது சேகரிப்பாளர்கள் வைத்திருக்கும் ஒரு அரிய வகை துப்பாக்கியாகத் தெரிகிறது; இதனால், இந்தக் குடும்பத்தின் மீதான தாக்குதல் தொழில்முறை கொலையாளிகளால் நடத்தப்பட்டிருக்காது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அன்சி ஏரி (Lake Annecy) சுவிட்சர்லாந்திலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. அங்குள்ள முதியவர்கள் தங்கள் கடந்தகால ராணுவ சேவையின் காரணமாக இந்த ஆயுதத்தைப் பற்றி அறிந்திருக்கக்கூடும். எல்லைப் பகுதியின் இருபுறமும் உள்ள குடும்பங்களிடம் இத்தகைய துப்பாக்கிகள் பெரும்பாலும் காணப்படுவதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தக் கொலைகளுக்குப் பின்னால் பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பணம் தொடர்பான குடும்பத் தகராறு என்று சிலர் கூறினர்; மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் செயல் என்று வேறு சிலர் கருதினர்; மேலும் சிலர், இந்தக் கொலைகள் அந்த மிதிவண்டி ஓட்டுநரை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கருதினர்.
பிரான்சில் இந்தக் கொடூரமான கொலைகள் நடப்பதற்குச் சில மணிநேரத்திற்கு முன்புதான், அல்-ஹில்லியின் மனைவியின் முதல் கணவர் (அமெரிக்கர்) மாரடைப்பால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் காவல்துறையினரிடையே சிறிது காலம் மிகுந்த பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































