'புலி புல்லைத் தின்னும்' - நாம் கேட்டு வந்த பழமொழிக்கு முரணான அறிவியல் உண்மை என்ன?

பட மூலாதாரம், HANIF KHOKHAR
- எழுதியவர், அபூர்வ அமீன் பதவி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
"பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது" என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம்.
குஜராத்தின் ஜூனாகத் நகரில் உள்ள சக்கர்பாக் உயிரியல் பூங்காவில், சிங்கமும் புலியும் புல் தின்னும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலானபோது பலரும் ஆச்சரியமடைந்தனர்.
இது போன்ற சம்பவம் முதல் முறையாக நடைபெறுவது அல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி, 2019-ஆம் ஆண்டிலும் ஒரு ஆசியச் சிங்கம் புல் தின்னும் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இதனால், "சிங்கங்கள் உண்மையிலேயே புல் தின்னுமா? அல்லது இது ஒரு தற்செயலான நிகழ்வா? போலிச் செய்தியா?" என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது.
ஆனால், இது போலிச் செய்தி அல்ல.
சிங்கங்கள் மற்றும் புலிகள் உட்பட பெரும்பாலான பூனை இன விலங்குகள் சில நேரங்களில் புல் தின்னும் பழக்கத்தைக் கொண்டுள்ளன.
இயற்கையாக மாமிசம் உண்ணும் விலங்குகளாக அறியப்படும் சிங்கங்களும் புலிகளும் ஏன் புல் தின்னுகின்றன? அதற்குப் பின்னால் உள்ள அறிவியல் விளக்கம் என்ன?
இதுகுறித்து வனவிலங்கு நிபுணர்கள் கூறுவது என்ன?
சிங்கமும் புலியும் உண்மையில் புல் சாப்பிட்டனவா?

பட மூலாதாரம், HANIF KHOKHAR
சமூக வலைதளங்களில் வைரலான ஒரு காணொளியில், சிங்கமும், புலியும் புல் தின்னும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
பொதுவாக, உயிரியல் பூங்காவிலோ அல்லது வனப்பகுதியிலோ சிங்கம் புல் தின்னுவதைப் பார்க்கும் பலர், அந்த விலங்குகளுக்கு போதுமான உணவு கிடைக்காததால் அவை புல் தின்னத் தொடங்கியிருக்கும் என்று கருதுவார்கள்.
ஆனால், வனத்துறை அதிகாரிகள் கூறுவதன்படி, இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. விலங்குகள் புல் தின்னுவது இயற்கையான ஒரு செயல்முறையாகும்.
ஜூனாகத் சக்கர்பாக் உயிரியல் பூங்காவின் இயக்குநர் ராஜ்தீப் சிங் ஜாலா ஊடகங்களிடம், "சிங்கம், புலி, சிறுத்தை மற்றும் பூனை குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் 'ஒப்லிகேட் கார்னிவோர்ஸ்' ஆகும். அதாவது, அவற்றின் உடலமைப்பு முழுமையாக மாமிச உணவுக்கே ஏற்ற வகையில் உருவாகியுள்ளது," என்றார்.
"அவை சைவ உணவை உணவாக உட்கொள்வதில்லை. இருந்தாலும், அவ்வப்போது புல் தின்னும் பழக்கம் அவற்றுக்கு உள்ளது," என்றும் அவர் கூறினார்.
"மனிதர்கள் செரிமானத்தை மேம்படுத்த இஸப்கோல், தக்மரியா அல்லது சியா விதைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதைப் போல, சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் புல் ஒரு நார்ச்சத்து மூலமாகச் செயல்படுகிறது."
"புல் நார்ச்சத்து நிறைந்தது. அவை தினமும் புல் தின்னுவதில்லை. ஆனால், குறிப்பாக மழைக்காலங்களில் சில நேரங்களில் புல் தின்னும். இதனால் குடல்களின் இயக்கம் சுறுசுறுப்பாகி, செரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது."
"சில நேரங்களில் தொண்டையில் ஏற்படும் அசௌகரியத்தைப் போக்கவோ அல்லது வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்யவோ அவை புல் தின்னும். இதன் மூலம் செரிமானமாகாத அதிகப்படியான உணவை வாந்தியாக வெளியேற்றவும் உதவுகிறது. ஆசியச் சிங்கங்கள் (மற்றும் பிற மாமிச விலங்குகள்) அடிக்கடி புல் தின்னும். ஆனால் அவை அதை உணவாகவோ அல்லது ஊட்டச்சத்துக்காகவோ தின்னுவதில்லை," என்று அவர் விளக்கினார்.
விலங்குகள் குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
பக்த கவி நரசிங் மேத்தா பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு ஆய்வு மைய இயக்குநர் நிஷித் தரையா, பிபிசி குஜராத்தியிடம், மாமிசம் உண்ணும் விலங்குகளின் உணவில் இறைச்சியின் அளவு அதிகமாக இருப்பதால், அவற்றின் உணவில் நார்ச்சத்து குறைவாக இருக்கும் என்று கூறினார்.
"எனவே, உடலில் நார்ச்சத்து குறைவாக இருக்கும் சில நேரங்களில், அவை புல் போன்ற நார்ச்சத்து கொண்ட பொருட்களை கூடுதல் உணவாக உட்கொள்கின்றன," என்று அவர் தெரிவித்தார்.
"ஆசியச் சிங்கங்கள், புலிகள், லைகர்கள் உள்ளிட்ட அனைத்து மாமிச விலங்குகளும் நார்ச்சத்து தேவைக்காக புல் தின்னுகின்றன," என்றும் அவர் கூறினார்.
"குறிப்பாக இந்தப் பருவத்தில் சிங்கங்கள் அதிகமாக புல் தின்னும். ஏனெனில், அவற்றின் உடலுக்கு அதிக நார்ச்சத்து தேவைப்படுகிறது. அது செரிமானக் கோளாறுகளைத் தணிக்க உதவுகிறது."
மேலும், "சில நேரங்களில் அதிக அளவில் புல் தின்னுவதால் சிங்கங்களுக்கு குமட்டல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவை வாந்தி எடுக்கவும் நேரிடுகிறது," என்று நிஷித் தரையா விளக்கினார்.

பட மூலாதாரம், HANIF KHOKHAR
நாய்களும் புல் தின்னுமா?
இது குறித்து விளக்கமளித்த வனவிலங்கு நடத்தை ஆய்வாளரான விவேக் அவஸ்தி, பிபிசி குஜராத்தியிடம், "அனைத்து மாமிச விலங்குகளும் (அதாவது உயிர்வாழ்வதற்கு இறைச்சியை மட்டுமே சார்ந்திருக்கும் புலி, சிங்கம், பூனை போன்ற விலங்குகள்) புல் தின்னக்கூடியவை," என்றார்.
"நாய்கள் கூட புல் தின்னுவதற்கான காரணம், புல் அவற்றின் தொண்டைக்குள் ஆழமாகச் செல்வதுதான்."
"இதனால் அவற்றுக்கு அசௌகரியம் ஏற்பட்டு வாந்தி வருகிறது. எனவே, சிங்கங்களும் புலிகளும் வயிற்றுக் கோளாறு அல்லது செரிமானப் பிரச்னை ஏற்பட்டபோது புல் தின்னுகின்றன. வாந்தி எடுப்பதற்காகவும் அவை புல் தின்னும்," என்று அவர் கூறினார்.
"அவற்றின் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் இதன் மூலம் வெளியேறுகின்றன," என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், HANIF KHOKHAR
வனவிலங்கு ஆர்வலரான நிமேஷ் நந்தோலியா, பிபிசி குஜராத்தியிடம், "ஒரு மாமிச விலங்கு வேட்டையாடி இறைச்சி உண்ணும்போது, அந்த இரை விலங்கின் தோல் மற்றும் முடியும் அதன் உடலுக்குள் செல்கின்றன," என்றார்.
"தாவர உணவு உண்ணும் விலங்குகளின் குளம்புகள் போன்ற கடினமான பகுதிகளும் உட்கொள்ளப்படலாம். அவற்றைச் செரிக்க உதவுவதற்காகவே இந்த விலங்குகள் புல் தின்னுகின்றன."
"புல்லில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. மனிதர்களுக்கும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் எவ்வாறு பயனளிக்கிறதோ, அதேபோல் இதுவும் செயல்படுகிறது," என்று அவர் கூறினார்.
சிங்கங்கள் குறித்து நன்கு அறிந்த மீட்புப் பணியாளரான தர்மேந்திர திரிவேதி, மாமிச விலங்குகள் பெரும்பாலும் சேறு படிந்த புல்லையும் தின்னும் என்று கூறுகிறார்.
"அதன் மூலம் அவற்றுக்கு உப்புச்சத்தும் கிடைக்கிறது. எனவே, சிங்கங்கள் நார்ச்சத்தையும் உப்புச்சத்தையும் பெறுவதற்காக புல் தின்னுகின்றன," என்றார்.
மேலும், "புல் சிங்கங்களின் குடலில் இருக்கும் ஒட்டுண்ணிகள் மற்றும் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதோடு, அவற்றின் வயிற்றையும் சுத்தப்படுத்துகிறது. எனவே, சிங்கங்கள் புல் தின்னுவது பசியால் அல்ல; தங்களின் செரிமான அமைப்பை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும் இயற்கையான தேவையால்தான்," என்று அவர் விளக்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































