'மனித வேட்டை': காய்கறி வியாபாரியை துரத்தி வெடித்த டிரோன் - உயிர்தப்பியவர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, தெற்கு யுக்ரேனில் ஒரு நபரை ட்ரோன் கண்காணித்து பின்தொடர்ந்து செல்லும் காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, தெற்கு யுக்ரேனில் ஒரு நபரை டிரோன் கண்காணித்து பின்தொடர்ந்து செல்லும் காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

பொதுமக்களை குறிவைத்து ரஷ்யா நடத்தியதாக அவர் கூறும் "மனித வேட்டை" போன்ற தாக்குதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு இது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் காணொளியில், கெர்சன் பிராந்தியத்தில் உள்ள நகரச் சாலையில் தெருவோர வியாபாரி ஒருவரை டிரோன் துரத்திச் செல்வது பதிவாகியுள்ளது.

மேலே வட்டமிட்டுப் பறந்துகொண்டிருந்த டிரோனிடமிருந்து அந்த நபர் விலகிச் செல்ல முயல்கிறார். பின்னர், வெள்ளை நிற வேன் ஒன்றைச் சுற்றி அவர் ஓடும்போதும் டிரோன் அவரைத் தொடர்ந்து விரட்டுகிறது. இறுதியில், டிரோன் அவரை நோக்கிப் பாய்ந்து, அவர் மீது மோதி வெடிக்கிறது.

இந்தத் தாக்குதலில் அந்த நபர் உயிர் தப்பியிருந்தாலும், உடலில் பல இடங்களில் வெடிகுண்டு சிதறல்கள் குத்திய காயங்கள், மூளை அதிர்ச்சி மற்றும் மன உளைச்சலுக்கு ஆளானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

யுக்ரேனின் முன்களப் பகுதிகளில் வாழும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக, பொதுமக்களை குறிவைத்து தொலைவிலிருந்து இயக்கப்படும் டிரோன்களைப் பயன்படுத்தும் தாக்குதல்கள், சில நேரங்களில் "மனித வேட்டை'' என்று அழைக்கப்படுகின்றன.

"இதை உலகம் பார்க்க வேண்டும்," என்று ஸெலன்ஸ்கி தனது டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

"ரஷ்யா எந்த அளவுக்கு கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்பதற்கான ஒவ்வொரு ஆதாரத்தையும், ரஷ்ய வீரர்கள் மக்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் ரசிக்கிறார்கள் என்பதற்கான ஒவ்வொரு உண்மையையும் உலகம் காண வேண்டும்," என்றும் அவர் கூறியுள்ளார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, நபரை பின் தொடர்ந்து சென்று வெடித்த டிரோன்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தக் காணொளி, "காட்டுமிராண்டித்தனமான போர்க்குற்றத்தை" வெளிப்படுத்துவதாக, யுக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார்.

இந்த வகையான "மனித வேட்டை" தாக்குதல்கள், "ரஷ்யா திட்டமிட்டு, தொடர்ந்து செயல்படுத்திவரும் உத்தியின் ஒரு பகுதியாகும்," என்று சிபிஹா தெரிவித்துள்ளார்.

"இந்த டிரோனை இயக்கும் நபர், தாம் குறிவைப்பது குடிமக்களுள் ஒருவரை என்பதை முழுமையாக அறிந்திருக்கிறார்," என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தத் தாக்குதல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் ரஷ்யா திட்டமிட்டு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்றும், இதற்கு சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கெர்சன் பிராந்திய ஆளுநர் பின்னர் வெளியிட்ட காணொளியில், டிரோன் தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனை படுக்கையில் இருந்த அந்த நபர் பேசுவது இடம்பெற்றுள்ளது. அவர், 52 வயதான தெருவோர காய்கறி விற்பனையாளர் யூரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது மனைவியுடன் சேர்ந்து வேனின் அருகே காய்கறிப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தபோது, மேலே இருந்து ஒரு டிரோனின் தனித்துவமான ரீங்காரச் சத்தத்தைக் கேட்டதாக யூரி கூறியுள்ளார்.

அவரது மனைவி அங்கிருந்து ஓடிச் சென்றபோது, டிரோன் தன்னை நோக்கித் திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் அதை படம் பிடிக்கவில்லை என்பதை டிரோனை இயக்குபவருக்குக் காட்டுவதற்காக, சில பூண்டு கட்டுகளை டிரோனின் கேமராவை நோக்கி உயர்த்திப் பிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

"என்னிடம் தக்காளி, வெள்ளரிக்காய், கத்தரிக்காய் ஆகியவை தரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை அந்த டிரோன் பார்த்திருக்க முடியும்," என்று யூரி கூறியுள்ளார். "நான் மறுபுறம் ஓடிச் சென்றபோதுகூட, அது குடையின் கீழே இறங்கியும் என்னைத் தொடர்ந்து வந்தது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிபிசி வெரிஃபை மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தக் காணொளி வடக்கு கெர்சனின் தாவ்ரிஸ்கியில் உள்ள ஒரு சுற்றுச்சாலைக்கு அருகேயுள்ள சந்தைப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை யார், எவ்வாறு படம் பிடித்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், பிபிசி வெரிஃபை கண்டறிந்தவரை, இந்தக் காணொளி முதன்முதலில் செவ்வாய்க்கிழமை காலை யுக்ரேனுக்கு ஆதரவான இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றில் பகிரப்பட்டுள்ளது.

முன்களப் பகுதியில் இருந்து சில மைல்கள் தொலைவிலேயே அமைந்துள்ள கெர்சனில், இவ்வாறு "மனித வேட்டை" என்று அழைக்கப்படும் டிரோன் தாக்குதல்களை ரஷ்யப் படையினர் நீண்டகாலமாக மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கை ஒன்றில், பொதுமக்களை குறிவைத்து டிரோன்களைப் பயன்படுத்தியதன் மூலம், ரஷ்ய ஆயுதப் படைகள் "மீண்டும் மீண்டும் பொதுமக்களைக் கொன்றும் காயப்படுத்தியும் உள்ளன" என்று கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

டிரோன்கள் இலக்கைத் தாக்கி வெடிக்கும் முன் அவை பதிவு செய்யும் காணொளிகள் பலமுறை இணையத்தில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், அச்சத்தில் இருந்த பாதிக்கப்பட்டவர்களின் கடைசி தருணங்களை ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் நிலை உருவாகிறது.

பொதுமக்கள் கொல்லப்படுவதும் காயமடைவதும் தொடர்பான காணொளிகளை வெளியிடுவது, "தனிநபர் கண்ணியத்தை அவமதிக்கும் போர்க்குற்றமாகும்" என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ரஷ்யா, 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் யுக்ரேன் மீது முழுமையான படையெடுப்பைத் தொடங்கியது. பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்து வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு