'அண்ணன்சீர், மண்ணின் மகள், வெற்றி மடிக்கணினி' - விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் உள்ள புதிய திட்டங்கள் முழு விவரம்

விஜய் அரசின் முதல் பட்ஜெட் விவரம் நேரலை

பட மூலாதாரம், TN DIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார்.

பட்ஜெட் உரையை தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன், "உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சரித்திர வெற்றியைப் பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய். 3 மாதங்களிலேயே ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறார் முதலமைச்சர். சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட மேலான கோட்பாடுகளுடன் தொடங்கிய இந்த அரசு பலவற்றை செய்து காட்டியுள்ளது." என்றார்.

கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டங்களையும் அமைச்சர் மரிய வில்சன் பட்டியலிட்டார். தொலைநோக்கு திட்டங்களை அடைவதற்கான பாதையை இந்த பட்ஜெட் வழிவகுத்து காட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டின் நிதிநிலையை வெள்ளை அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம்." என்றார்.

"திட்ட அனுமதி பெறுவதில் வெளிப்படைத்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளது. வருவாய் ஆதாரங்களை பெருக்கி நிலைத்தன்மையை அதிகரிக்கவும் மத்திய திட்ட ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது."

இதையடுத்து திட்டங்களை அறிவிக்க ஆரம்பித்தார் அமைச்சர் மரிய வில்சன். அந்த விவரங்கள் பின்வருமாறு...

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு

  • 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்'கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும் தாய்மையின் முக்கியத்துவத்தையும் போற்றும் வகையிலும், தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் படிப்படியாக தொடங்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ. 33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • மாநிலம் முழுவதும் 'தாய் கேர்' எனும் பெயரில் கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்குச் சிறப்பு மருத்துவ பராமரிப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் அரசு 'மையம்-கிளை' வகையிலான தொலைமருத்துவப் பராமரிப்பு அமைப்பு உருவாக்கப்படும். நிபுணத்துவ மருத்துவர்களைக் கொண்ட 5 மையங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமன்ளவிலான 200 கிளைகள் வலைதளம் மூலம் தொடர்புபடுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இம்மையங்கள் மற்றும் கிளைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 1,000 மையங்கள் ஏற்படுத்தப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில்ரூ.18.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • நோயாளிகளின் முதல் தொடர்பு மையமாக ஐந்து மண்டல புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் நிறுவப்படும். இந்நிறுவனங்கள் புற்றுநோய் பராமரிப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ளும். இந்த பட்ஜெட்டில் இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் கூடுதல் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்ய, தடையற்ற மருந்து விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மருந்துகளுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்த அரசு பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.100 கோடியாக உயர்த்துகிறது.
  • இந்த பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 23,357 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விஜய் அரசின் முதல் பட்ஜெட் விவரம் நேரலை

பட மூலாதாரம், TN DIPR

சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாடு

  • 'அண்ணன் சீர்' திட்டத்தின் கீழ் பெண்களின் திருமணத்துக்கு எட்டு கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப் புடவையும் அரசின் சார்பாக வழங்கப்படும். இத்திட்டத்துக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் விரிவுபடுத்தி உள்ளார். பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று இத்திட்டத்தின் மூலம் கூடுதலாக 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்துக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • மூத்த குடிமக்கள் இல்லங்கள் மாவட்டந்தோறும் விரிவுபடுத்தப்படும். 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். ஒவ்வொரு இல்லத்திலும் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். ஒவ்வொரு இல்லத்திலும் 40 பயனாளிகள் இடம்பெறுவர். இதற்காக ரூ. 6.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் முதல்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படும்.
  • பாதுகாப்பான குடிநீர், கழிவறைகள், மின்சார இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய 500 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் நடப்பாண்டில் கட்டப்படும்.
  • சமூக மற்றும் குடும்பச் சவால்களை எதிர்கொள்ளும் திருநர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடம், உணவு, ஆலோசனை மற்றும் மறுவாழ்வு ஆதரவை வழங்குவதற்காக 5 மாவட்டங்களில் 'அரண்' தங்குமிட வசதிகள் நிறுவப்படும். 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்குமிட வசதிகளும் நிறுவப்படும்
  • இந்த பட்ஜெட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ. 9,818 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள்

  • 'சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டத்தின்' கீழ் நிலையான தொழில்முனைவோரின் செயல்திறனை வெளிப்படுத்தும் ஒவ்வொரு சுய உதவிக்குழு நிறுவனங்களுக்கும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்படும். இதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 38,000 கோடி வங்கிக் கடன் தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டம்

  • இந்தாண்டில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொட்டலமிடப்பட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும்.

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்

  • செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், இயங்குபடம், காட்சி விளைவுகள், சித்திரக்கதை, விளையாட்டு மற்றும் மெய்நிகர் உண்மை போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு வலுப்படுத்தப்படும்.
  • இந்த பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு ரூ. 398 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விஜய் அரசின் முதல் பட்ஜெட் விவரம் நேரலை

பட மூலாதாரம், TN DIPR

தொழில் வளர்ச்சி

  • தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாடு, தன் நிலையை மேலும் மேபடுத்திக் கொள்ளும் நோக்கில் ஒரு புதிய தமிழ்நாடு தொழில் கொள்கை வெளியிடப்படும். முதலீட்டாளர்கள் உள்ளூர் சூழலை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு விரிவான டிஜிட்டல் தளமாக, தமிழ்நாடு தொழில் திறன் விவரப்பட்டியலை அரசு உருவாக்கும்.
  • தமிழ்நாட்டின் போட்டித் திறனை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் 'வழிகாட்டி 3.0' எனும் புதிய முதலீட்டுச் சேவை அமைப்பை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
  • தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் 'வெளிநாடுவாழ் தமிழர் முதலீட்டுச் சேவைகள் பிரிவு' அமைக்கப்படும்.
  • தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் புதிய தொழிற்பூங்காக்கள் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புடன் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில், சுமார் ரூ. 3,200 கோடி மதிப்பீட்டில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உருவாக்கப்படும்.
  • தென் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்படும்.
  • செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் டெக் மேம்பாட்டுக்காக இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரமாக 'அறிவகம்' உருவாக்கப்படும். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • இந்த பட்ஜெட்டில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு ரூ.4,414 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்

  • சுற்றுச்சூழலுக்கு உகந்த எஃகு உற்பத்தியை ஊக்குவிக்கவும், எஃகு உருளை ஆலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தைத் தணிக்கவும் 'பசுமை எஃகு உற்பத்தி முன்முயற்சிக்கு' அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • இந்த பட்ஜெட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.2,142 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்கள், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை எவ்வித தடையுமின்றி தொடர்ந்திl ரூ.372 கோடி பள்ளிப்படிப்பு மற்றும் மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்காகவும் 77 கோடி ரூபாய் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மற்றும் பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கும், 13.41 கோடி ரூபாய் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு மாணவிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகைக்காகவும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சிறுபான்மையினர் நலன்

  • தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் முதன்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் ரூ.25,000 மானியம் இனி ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும்.
  • கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் ரூ.105 கோடி ஒதுக்கீட்டில் கூடுதலாகத் துவக்கப்படும்.
  • கபர்ஸ்தான்கள், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 34 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இந்த பட்ஜெட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு

  • கூட்டுறவுத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.8,028 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வேளாண்மை - உழவர் நலன்

  • விவசாயிகளுக்கு வழங்கும் மின் மானியத்துக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • இந்த பட்ஜெட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ. 14,984 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கால்நடை பராமரிப்பு

  • ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்' கீழ் 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதற்காக, பட்ஜெட்டில் ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில், தமிழக அரசு 'கால்நடைகள் காப்போம்' என்ற புதிய கால்நடை காப்பீட்டுத் திட்டத்தை' அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பால்வளம்

  • ஊரகப் பகுதிகளில் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த பட்ஜெட்டில் கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு ரூ. 4,880 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலன்

பணியில்லாக் கால மீன்பிடி உதவித்தொகையை 6,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சமூகநீதி

  • அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ. 36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 362 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக வெற்றி தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும். மொத்த திட்ட செலவில் மூலதன மானியம், மொத்த மானியம் பெற ஏதுவாக இந்த பட்ஜெட்டில் ரூ. 72 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் 'மண்ணின் மகள்' திட்டம் செயல்படுத்தப்படும். பயனாளிகளுக்கு விவசாயம் செய்ய தேவையான நவீன பயிற்சி வழங்கப்படும். இந்த பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாடு திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • பழங்குடியினர் குடியிருப்புகளை மேம்படுத்த 'ஆன்றோர் மேம்பாட்டு திட்டம்' செயல்படுத்தப்படும். இதன்கீழ் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
  • ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு கூறுகள் திட்டத்தில் ரூ.25,225 கோடியும் பழங்குடியினருக்கு ரூ.2,079 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • இந்த பட்ஜெட்டில் சமூகநீதி துறைக்கு ரூ. 3,937 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலன்

  • தற்போதுள்ள உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் இடம்பெறாத செயற்கை நுண்ணறிவு சார்த்ந்த நவீன உதவி உபகரணங்களான விலையாட்டு செயற்கை கால், மின் தசை சமிக்ஞை மூலம் செயல்படும் மேல்கை செயற்கை அவயம் மற்றும் பிற உயர்தர உதவி உபகரணங்கள் மற்றும் கோக்ளியர் இம்ப்ளாண்ட் பேட்டரி போன்ற உபகரணங்களை வாங்குவதற்காக அதன் விலையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ. 30,000 வரை நிதியுதவி வழங்கப்படும்.
  • தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அறிவுசார் குறைபாடு உடையோருக்கான அரசு நிறுவனங்கள் நம்பிக்கை இல்லம் என்ற பெயரில் அமைக்கப்படும். இத்திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • இந்த பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் துறைக்கு ரூ.1,485 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு

  • சிறந்த திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக 10 சிறப்பு ஒலிம்பிக் மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும். இதற்காக ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • விளையாட்டில் ஆர்வம் கொண்ட 8 முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிப்பதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • 500 வீரர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • கிராமிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த ரூ.42 கோடியும் தமிழ்நாடு உடற்கல்வி விளையாட்டு பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளி நேரத்துக்கு பிறகு 1 மணிநேரம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகள் செயல்படுத்தப்படும்.
  • அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சிறிய உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் உருவாக்கப்படும்.
  • இந்த பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விஜய் அரசின் முதல் பட்ஜெட் விவரம் நேரலை

பட மூலாதாரம், TN DIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன்

பள்ளிக்கல்வித் திட்டங்கள்

  • அரசு பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, வகுப்பறைகள், கழிப்பறைகள் சுத்தம், பள்ளிகளுக்கு 24 மணிநேர பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். முதல்கட்டமாக 10,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் 139 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
  • 2514 தொடக்கப்பள்ளிகள், 365 நடுநிலைப் பள்ளிகள், 855 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ரூ.2132 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • பெருந்தலைவர் காமராஜர் மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளிகளை அரசு அமைக்கும். 9-12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கும் இப்பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்தாண்டு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • தமிழ்நாட்டை கற்றல் வெளிப்பாடுகளில் முன்னேற்ற பள்ளி பாடத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும் தன்னார்வ குழுக்களும் அமைக்கப்படும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 10581 என்ற உதவி எண்ணும் பள்ளிகளில் தெளிவாக காட்சிப்படுத்தப்படும். இத்திட்டத்துக்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 'DrugsfreeTamilnadu' எனும் செயலி மூலமாக போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு குறித்து ரகசியமாக தகவல் தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • பொது நூலகங்களை டிஜிட்டல்மயமாக்கி, மறுசீரமைப்பு செய்வதற்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அரசு மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் இந்தாண்டு 11 ஆம் வகுப்பு படிக்கும் 'ஜென் ஸி' தலைமுறை மாணவர்களுக்கு ரூ.277 கோடி மதிப்பீட்டில் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய நவீன பிராண்டட் சைக்கிள்கள் வழங்கப்படும்.
  • தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 44,527 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி

  • நீட் தேர்வை ரத்து செய்து 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திட மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது.
  • தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு 'வெற்றி மடிக்கணினி' திட்டத்தை செயல்படுத்தும். ரூ. 2000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
  • 'TN சுடர்' மாணவர் குடியிருப்புகளின் மாநில அளவிலான மேம்பாட்டு வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் எனும் முதன்மை திட்டத்தின் கீழ் முக்கிய கல்வி மையங்களில் ஒரு லட்ச நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் கட்டப்படும். சுமார் ரூ. 3200 கோடி மதிப்பீட்டில் பொது-தனியார் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு 20% அரசு மானியமாக அடுத்த 2 நிதியாண்டுகளில் ரூ. 640 கோடி ரூபாய் வழங்கப்படும். இவை உயர்தர வளாகங்களாக மாற்றியமைக்கப்படும். 24 மணிநேர குளிரூட்டப்பட்ட கற்றல் மையங்கள் உள்ளிட்டவை இதில் அமைக்கப்படும். பல்வேறு மதங்களை சேர்ந்த மாணவர்களை இத்திட்டம் ஒருங்கிணைக்கும்.
  • 2027-2028 கல்வியாண்டில் மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி 300 மாணவர்கள் சேர்க்கையுடன் தொடங்கப்படும்.
  • உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு

  • மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகள் பராமரிப்பு குறித்து வாகனங்கள் பழுது பார்ப்பவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பழுது பார்ப்பவர்கள் 12,500 பேர் உட்பட 22,500 பேர் இத்திட்டத்தால் பயன்பெறுவர். நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் தொழில் பிரிவு ரூ. 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் 5 ஆண்டுகளில் 24,000 மாணவர்கள் செயற்கை நுண்ணறிவில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்புகளை பெற வழிவகை செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ. 7.5 கோடி ஒதுக்கப்படுகிறது.
  • போட்டித் தேர்வுகளுக்கான அரசு பயிற்சி மையங்களை கூடுதலாக ஏற்படுத்த ரூ. 3.38 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் 'வெற்றி திறன் பயிற்சி திட்டத்தை' அரசு அறிமுகப்படுத்துகிறது. முதல்கட்டமாக 20,000 இளைஞர்களுக்கு பணியிட பயிற்சி வழங்கப்படும்.
  • பாலிடெக்னிக் படிக்கும் 5 லட்சம் இளைஞர்களுக்கு 2031ஆம் ஆண்டுக்குள் பொறியியல், செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்கப்படும். 6-8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இத்துறை சார்ந்த அடிப்படை பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். 9-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநிலை பயிற்சியும் 11-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு விருப்ப பாடங்களும் வழங்கப்படும்.
  • தொழிலாளர் நலன் மற்றும் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 2,022 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறப்பு திட்டம் செயலாக்க துறைக்கு ரூ.17,150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கைத்தறி, கைத்தறி திறன், துணிநூல் மற்றும் கதர்

  • தொழில் மற்றும் கல்வித்துறையினரின் தீவிர பங்களிப்புடன் மாநில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம் அமைக்கப்படும். ரூ.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்நிறுவனத்தை நிறுவுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
  • சர்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து தொழில்முனைவோருக்கான தொழில்நுட்ப ஜவுளி மாற்றுக்கான திட்டம் தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
  • பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக, ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் தமிழ்நாட்டு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்.
  • ரூ. 10 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும்.
  • இந்த பட்ஜெட்டில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைக்கு ரூ. 1,678 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் விஜய்

பட மூலாதாரம், TNDIPR

எரிசக்தி

  • எரிசக்தி துறையில் தனியார் முதலீடுகளை எளிதாக்கி தமிழ்நாட்டை இந்தியாவின் 'மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின்' (BESS) மையமாக மாற்றும் வகையில் புதிய BESS ஊக்குவிப்புக் கொள்கை வெளியிடப்படும்.
  • 'பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்துடன்' இணைந்து புதிய வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • இந்த பட்ஜெட்டில் எரிசக்தித் துறைக்கு ரூ.15,828 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி

  • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி திட்ட அனுமதி தளம் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக முதல்கட்டமாக சென்னை பெருநகரப் பகுதியில் மாநகர இளைஞர் மற்றும் குடும்ப வீட்டு வசதித் திட்டம் என்ற முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
  • இந்த பட்ஜெட்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ. 8,852 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்

  • விரிவான நகர்ப்புறப் போக்குவரத்து வசதிகள் மற்றும் தெருக்கள் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • கூவம் மற்றும் அடையாற்றினை சென்னையின் அடையாளமாக மாற்றுவதற்கு உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
  • இந்த பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 29,863 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சட்டம்-ஒழுங்கு

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உறுதிசெய்யும் நோக்கில், தமிழக அரசு ஒரு 'மறுவாழ்வு நிதியை' உருவாக்கும். இதற்காக ரூ. 70 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆட்சி நிர்வாகம்

  • அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை உரிய நோக்கில் நேர்மையாக வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பும் பொருட்டு, அனைத்துத் தேர்வு முகமைகள் மூலம், ஆண்டு தேர்வுத் திட்டம் வெளியிடப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு