நள்ளிரவில் ஸ்டாலினுடன் உதயநிதி சந்திப்பு - ஜாமினில் விடுவிக்கப்பட்ட பிறகு என்ன பேசினார்?

பட மூலாதாரம், FB/ DMK Youth Wing
முதல்வர் விஜயை அவதூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தஞ்சை அருகே செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்குப் பிறகு இரவில் விடுவிக்கப்பட்டார். உடனே சென்னை திரும்பிய அவர், நள்ளிரவில் தனது தந்தையும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, திமுக முன்னாள் அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
முன்னதாக, தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர் காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். அவருக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கப்பட்டது.
காவல் நிலைய வளாகத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான திமுகவினர் திரண்டிருந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரவு சுமார் 8.15 மணியளவில் உதயநிதி காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.
தனது காரில் இருந்தபடியே அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை நோக்கி கையசைத்தபடி அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

உதயநிதி பேசியது என்ன?
"பெண்களை தாழ்த்திப் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லை," என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை முடிந்து, திருச்சி விமான நிலையம் வந்த உதயநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக 25 நிமிடங்கள் பேசினேன். அந்தப் பேச்சு விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்றது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த அரசு என் மீது பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன்," என்றார்.
"கர்நாடகாவில் மேகதாட்டு அணை கட்ட அங்குள்ள அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கவில்லை. இதைக் கேட்க முதலமைச்சருக்கு தைரியம் இல்லை," என்றும் அவர் தெரிவித்தார்.
"ஆனால், நான் பேசாத விஷயத்தை கட், காபி, பேஸ்ட் செய்து தேசிய ஊடகங்கள் வரை அனுப்பியுள்ளனர். நான் விவசாயிகளுக்கு ஆதரவாக மட்டுமே பேசினேன்," என்றார்.
"பெண்களை தாழ்த்திப் பேச வேண்டும் என்ற எண்ணம் துளிகூட என்னுடைய மனதில் இல்லை. என் குடும்பம் என்னை அப்படி வளர்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் தாயாகவும், தங்கையாகவும் பார்க்கிறேன். இது போன்ற பொய் வழக்குகளைப் போட்டு என்னை பயமுறுத்தலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அதற்கு நான் அஞ்சமாட்டேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் என்னை கைது செய்யும் நோக்கம் இல்லை என்று கூறிவிட்டு, பல பொருட்செலவில் ஒரு தீவிரவாதியைப் போல என்னை அழைத்துச் சென்று அலைக்கழித்தனர்," என்றார்.
"எனக்குள்ள ஒரே வருத்தம், சில தலைவர்கள் நான் பேசியதை முழுமையாகக் கேட்காமல், நான் தவறாகப் பேசியதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதுதான்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். ஆனால், காவல் வாகனத்தில் இருந்து இறங்க அவர் மறுத்தார். பின்னர், பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாகனத்தில் இருந்து இறங்கி காவல் நிலையத்துக்குச் சென்றார்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்துக்கு பதிலாக, உதயநிதி செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஏராளமான திமுகவினர் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது என களத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் சிராஜ் தெரிவித்தார்.
செங்கிப்பட்டி காவல் நிலையம் முன்பு திமுகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது ஏன் என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர்.

உதயநிதியை காவல்துறையினர் அலைக்கழிப்பதாக திமுக வழக்கறிஞர் சரவணன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு அழைத்துவரப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு, உடல் உபாதைகளைக் கழிப்பதற்குக்கூட வாய்ப்பளிக்காமல் காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர்," என்றார்.
மேலும், "செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது ஏன் என்று காவல்துறையினரிடம் கேட்டபோது, தஞ்சாவூரில் திமுகவினரின் கூட்டம் அதிகமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்," என்றும் சரவணன் கூறினார்.
செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நீண்ட நேரம் காவல் வாகனத்தில் இருந்து இறங்காமல் அதற்குள்ளேயே இருந்தார்.
இதுகுறித்து சரவணன் கூறுகையில், "நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றால்தான் கீழே இறங்குவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்," என்றார்.

பட மூலாதாரம், ANI
சென்னையில் கைது
தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவரை இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டைச் சுற்றிலும் காலையிலேயே காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். உதயநிதியின் வீட்டிற்குள் சென்ற காவல்துறையினர், அவரது மனைவியுடன் பேசும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாயின. இதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் உதயநிதி வீட்டிற்குச் சென்றனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றனர். உதயநிதியை காவல்துறையினர் தஞ்சைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் தஞ்சை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி, வெட்டி, ஒட்டி போலி செய்திகளை பரப்புகின்றனர். இன்று என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இதற்கு அஞ்சுகின்ற ஆள் நான் கிடையாது. நான் கலைஞரின் (கருணாநிதி) வளர்ப்பு, திமுகவின் உடன்பிறப்பு, தலைவர் ஸ்டாலினின் வளர்ப்பு. கிட்டத்தட்ட 22 நிமிடங்கள் நான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.
விவசாயிகளை அரசு ஏமாற்றியுள்ளது, வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுக்கவில்லை. முதலமைச்சர் இதுகுறித்து பேச வேண்டும் என தெரிவித்தேன். மு.க. ஸ்டாலின் என்றும் விவசாயிகளுக்கு துணைநிற்பார் என்று பேசினேன். தற்போது தவெகவினர் திசைதிருப்பும் செயல்களில் ஈடுபடுகின்றனர். முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லோரும் ரீல்ஸிலேயே வாழ்கின்றனர்." என தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுவிட்டதாக அவரும், பிற திமுக தலைவர்களும் கூறும் நிலையில், இதுகுறித்து காவல்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலை நீடித்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அரசு தரப்பு வழக்கறிஞர் உறுதி செய்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண், "உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுகிறார். அவரை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை" என்று கூறினார்.
காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு உதயநிதி சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்றும் அரசு வழக்கறிஞர் கூறினார். பெண்கள் நலனை பாதுகாக்கவே அரசு விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார். "உதயநிதியை விசாரணைக்குப் பிறகு இன்றே விடுவித்துவிட வேண்டும். முன்ஜாமீன் கோரும் மனு என்பதால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. காவல்துறை விசாரணைக்கு உதயநிதி ஒத்துழைக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
திமுக தரப்பு வழக்கறிஞர் கூறியது என்ன?
இந்த வழக்கில் திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி குறிப்பிட்டதாக கூறி சில வார்த்தைகளை மட்டும் தனியாக பிரித்தெடுத்து, உள்அர்த்தம் கற்பித்து, தஞ்சை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்று காலை 8.30 மணிக்கு அவரை கைது செய்ய வந்திருந்தனர். அவர் மீதான முதல் தகவல் அறிக்கை சட்ட விரோதமானது, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரியிருந்தோம், அதுவரை கைது செய்ய வேண்டாம் என கூறினோம். ஆனால், அதை ஏற்காத தஞ்சை போலீஸ் அவரை கைது செய்துவிட்டது." என்றார்.
முன்னதாக, இந்த வழக்கு மதியம் 1 மணியளவில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், "எதிர்க்கட்சி தலைவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விட்டார், அதனால் முன் ஜாமீன் நிலைக்கத்தக்கதல்ல" என வாதாடியதாக என்.ஆர். இளங்கோ குறிப்பிட்டார்.
"உதயநிதியை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். சில நிகழ்வுகளில் காவல்துறையின் அத்துமீறல் அப்பட்டமாக தெரியும்போது, ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் செல்லப்பட்டு காவலில் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியிருக்கிறது என நாங்கள் கூறினோம். அதை நீதிமன்றம் குறித்துக்கொண்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறது" என என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
நாளை சட்டப்பேரவை கூடவுள்ளதால் இன்றே விசாரணையை முடித்து அவரை விடுவிக்க வேண்டும் என கேட்டதாகவும் அதையும் நீதிமன்றம் உத்தரவாக பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"2.15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தின் அட்வகேட் ஜெனரல் காவல்துறைக்கு எதிர்க்கட்சி தலைவரை நீதிமன்றம் கொண்டு சென்று காவலில் எடுக்கும் எண்ணம் ஏதும் இல்லை, காவல்நிலையத்திலேயே விசாரித்து, வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு, அவருடைய சொந்த ஜாமீனிலேயே விடுவித்து விடுகிறோம் என கூறினார். கைது நடவடிக்கைக்கு முன்பாக காவல்துறை ஆய்வாளர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற வரையறையை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கிறது. எனினும், அதை தெரிந்தும் தெரியாதது போன்று காவல்துறை வழக்கை பதிவு செய்திருக்கிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு உதயநிதி வரக்கூடாது என திட்டமிட்டிருந்தனர். நீதிமன்ற உத்தரவால் மற்றொருமுறை சர்வாதிகாரம் தமிழ்நாட்டில் தடுக்கப்பட்டுள்ளது." என என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.

பட மூலாதாரம், UGC
உதயநிதி மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பிரிவுகள் பின்வருமாறு..
- பிஎன்ஸ் 196 - பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்
- பிஎன்ஸ் - 192 கலவரத்தை தூண்டுதல்
- பிஎன்ஸ் 352 - பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல்
- பிஎன்ஸ் 79 - பெண்ணின் கண்ணியத்திற்கு அல்லது மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல்
- பிஎன்ஸ் 296(b) - பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல்
- பிஎன்ஸ் 61 - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து சட்டவிரோத செயலை செய்ய திட்டமிடுதல்
- பிஎன்ஸ் 351 - ஒருவருக்கு மிரட்டல் விடுவது
- தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் பிரிவு 4
- தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67
சர்ச்சையின் பின்னணி
காவிரி விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து தஞ்சையில் நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காவிரி குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கவலை இல்லை என்றும், அவரது ஒரே கவலை திமுக மீது வழக்குப் போடுவதுதான் என்றும் குறிப்பிட்டார். பேச்சுக்கு நடுவே கூட்டத்தில் இருந்து எழுந்த முழக்கங்களைத் தொடர்ந்து அவர் குறிப்பிட்ட சில விஷயங்களே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன. அது முதலமைச்சரை அவமதிக்கும் விதமாக உள்ளதாக தவெக மட்டுமல்லாது பிற அரசியல்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.
அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் என்.ஆனந்த், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர் என தெரிவித்துள்ளார். இதேபோல், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், X/Udhayanidhi Stalin
தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார்
உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக சார்பில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெகவின் தஞ்சை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி அளித்த புகாரில், ஆர்ப்பாட்ட உரையின் போது கூட்டத்தில் இருந்தவர்கள் எழுப்பிய கோஷங்களுக்குப் பதிலளிப்பதாகக் கூறி, பாலியல் ரீதியாகவும் பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் உட்பொருளோடு உதயநிதி பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதியின் இந்த உரை அடங்கிய 2 நிமிடம் 39 வினாடிகள் கொண்ட வீடியோவை திமுக ஐடி விங் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுப் பரப்பியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் அந்த வீடியோவைப் பரப்பிய திமுக ஐடி விங் நிர்வாகிகள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































