'5 மாடி கட்டடம் அளவுள்ள' ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் பகுதி நிலவில் மோதியதா? நாசா கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
நிலவை நோக்கி கட்டுப்பாடின்றி பயணித்துக் கொண்டிருந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் ஒரு பகுதி, நிலவின் மேற்பரப்பில் மோதியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்திய நேரப்படி பிற்பகல் 12.05 மணியளவில் இந்த மோதல் நிகழ்ந்திருக்கலாம். இந்த நிகழ்வை கண்காணித்து வரும் சிறப்பு தொலைநோக்கிகள் மூலம் அது உறுதிப்படுத்தப்படும்.
மணிக்கு சுமார் 8,700 கிலோமீட்டர் (விநாடிக்கு 2.43 கிலோமீட்டர்) வேகத்தில் விண்வெளியில் இந்த ராக்கெட் பகுதி பயணித்துக்கொண்டிருந்தது.
நிலவில் மோதியதாக கருதப்படும் ராக்கெட்டின் ஒரு பகுதி, ஐந்து மாடி கட்டடத்தின் உயரத்திற்கு சமமான, குறைந்தபட்சம் 4,000 கிலோகிராம் எடைகொண்டது.
இது ஃபால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி ஆகும். இந்த ராக்கெட்டின் பயணம் 2024 ஜனவரியில் தொடங்கியது. அப்போது, இரண்டு நிலவு தரையிறங்கும் விண்கலங்களை ஏற்றிக்கொண்டு ஃபுளோரிடாவில் இருந்து ஒரு ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
அந்த விண்கலங்களை பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேற்றி, நிலவை நோக்கிய பாதையில் செலுத்துவது ராக்கெட்டின் பணியாக இருந்தது. அந்தப் பணியை அது வெற்றிகரமாக நிறைவேற்றியது.
அதன் பிறகு, ராக்கெட்டின் மேல் பகுதி தேவையில்லாததாகிவிட்டதால், அது விண்வெளியில் மிதந்தபடியே விடப்பட்டது.
அடுத்த 18 மாதங்களில், பூமி, நிலவு மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள், மேலும் சூரிய ஒளியால் ஏற்படும் மிகச் சிறிய தள்ளும் சக்தி கூட, அதன் பாதையை படிப்படியாக மாற்றின.
இந்த பொருளை தொடர்ந்து கண்காணித்து வந்த வானியலாளர்கள், இந்தச் சிறிய மாற்றங்களே அதை நிலவை நோக்கிய பாதையில் செலுத்தியிருப்பதை கண்டறிந்தனர். மேலும், அது நாளுக்கு நாள் வேகம் அதிகரித்துக் கொண்டு, மிகப் பெரிய மோதலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

பட மூலாதாரம், Reuters
நாசா கூறியது என்ன?
மோதலின் புகைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை. நிலவைச் சுற்றி வரும் எந்த விண்கலமும் அந்த தருணத்தை நேரடியாகப் பதிவு செய்யும் நிலையில் இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளின் முதல் பணியாக, மோதலுக்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்புப் படங்களை ஒப்பிட்டு, புதிதாக உருவான பள்ளம் அல்லது சேதத்தின் தடயத்தை கண்டறிவது இருக்கும். இதற்கான திட்டமிடலும் ஆய்வும் நேரம் எடுக்கும் என்று பிபிசி அறிவியல் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.
நிலவும், கட்டுப்பாடின்றி பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் ஒரு பகுதியும் மோதும் நிகழ்வு ஆபத்தானது அல்ல என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நாசாவின் செய்தித் தொடர்பாளர் ஜிமி ரசல் கூறுகையில், "அறிவியல் ஆய்வுகளுக்காக மோதல் பகுதியை நாசா தொடர்ந்து கண்காணிக்கும். ஆனால், இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை," என்றார்.
மேலும், இந்த நிகழ்வு மூலம் நிலவு குறித்த தரவுகளை சேகரிக்கவும், விண்வெளியில் பயணிக்கும் பொருட்களை கண்காணிக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில், விண்வெளிக் குப்பைகள் தொடர்பாக சில கவலைகளும் எழுந்துள்ளன. அவை எதிர்கால விண்வெளி பயணங்களை பாதிக்கக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய மோதலுக்குப் பிறகு, நிலவில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை சுமார் 3,000 ஆக உயர்ந்துள்ளது. அவற்றின் மொத்த எடை சுமார் 190 டன் என மதிப்பிடப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters
புகைப்படங்கள் வெளியாக தாமதம் ஏன்?
இந்த விண்வெளி மோதலின் படங்கள் வெளியாக இன்னும் சிறிது காலம் ஆகலாம் என பிபிசி அறிவியல் செய்தியாளர் பல்லப் கோஷ் கூறுகிறார்.
மேலும் அவர், ''உலகின் பல பகுதிகளிலும் பகல் நேரத்தில்தான் இந்த மோதல் நிகழ்ந்தது. இதனால் ஏற்பட்ட சிறிய ஒளிச்சுடர், தொலைநோக்கி மூலம் பார்த்தாலும் கண்டறிய முடியாத அளவுக்கு மங்கலாக இருந்திருக்கும்.
உலகின் பிற பகுதிகளில் இருளில் வானத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தொழில்முறை அல்லாத வானியலாளர்களுக்கும் இந்த மோதலை நேரடியாகக் காணும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது. ஏனெனில், அந்த ஒளிச்சுடர் ஒரு வினாடியின் சிறிய பகுதி நேரமே நீடித்தது.
இருப்பினும், மோதலின் காரணமாக மேலே எழுந்த தூசுப் படலத்தை அவர்கள் பார்த்திருக்கக்கூடும். அந்தத் தூசு சுமார் 100 கிலோமீட்டர் உயரம் வரை எழுந்திருக்கலாம். மேலும், அது பல நிமிடங்கள் நீடித்திருக்கவும் வாய்ப்புள்ளது.
நிலவைச் சுற்றிவரும் விண்கலங்கள் கூட இந்த மோதலை நேரடியாகக் காணும் சரியான இடத்தில் இல்லை. இருப்பினும், மோதலால் உருவான புதிய தடயம் அல்லது பள்ளத்தை கண்டறிய, மோதலுக்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்புப் படங்களை ஒப்பிட்டு அவை ஆய்வு செய்யும்.
அமெரிக்கக் கண்டங்களில் அப்போது வானம் இன்னும் இருட்டாக இருந்ததால், அங்குள்ள சக்திவாய்ந்த தரைவழித் தொலைநோக்கிகள் மூலம் தெளிவான அறிவியல் தரவுகளும், பயன்பாட்டுக்கு உகந்த முதல் படங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும், 3,85,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலவின் மேற்பரப்பில் 14 மீட்டர் நீளமுள்ள ராக்கெட் பகுதி மோதியதைக் கண்டறிந்து அதைத் தெளிவான படமாக மாற்றுவதற்கு நேரம் தேவைப்படும். அந்தத் தரவுகளைச் செயலாக்கி படங்களாக மாற்றுவதற்கு சில மணிநேரங்கள் முதல் பல வாரங்கள் வரை ஆகலாம்.'' என கூறுகிறார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































