'என்னையும் என் மகனையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார்' - குடும்ப வன்முறையால் கணவரை கொன்ற பெண்கள்

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் "நிரந்தரமான ஆபத்து நிலையில்" உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மரியானா ரோசெட்டி & பாவ்லா சர்ச்சில்
    • பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் உள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

ஒரு கணநேரத்தில், 38 வயதான சமையலறை உதவியாளரான மிலேனே வாஸ்கொன்செல்லோஸ், தன்னால் உயிர் தப்ப முடியுமா என்பதை மனதில் கணக்கிட்டார்.

ரஃபேல் ஏற்கெனவே அவரது கழுத்தை நெரித்திருந்தார். மேலும், அவரை சோஃபாவின் மீது தள்ளியிருந்தார். வன்முறையை நிறுத்துமாறு அவர் கெஞ்சியபோதும், அதை ரஃபேல் புறக்கணித்ததாகவும், அதன் பிறகு தாக்குதல் இன்னும் தீவிரமானதாக மாறியதாகவும் மிலேனே போலீசாரிடம் தெரிவித்தார்.

சமையலறையை நோக்கிப் பார்த்தபோது, அங்கு ஒரு கத்தி இருப்பதைக் கண்டதாக மிலேனே கூறினார்.

"இன்னும் ஒரு முறை என்னை அடித்தால், என்னைக் காப்பாற்றிக்கொள்ள கிடைக்கும் எதையும் பயன்படுத்துவேன்," என்று அவர் ரஃபேலிடம் எச்சரித்ததாக போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ரஃபேல் தாக்குதலை நிறுத்தவில்லை. அதையடுத்து, மிலேனே ஒரே ஒரு முறை கத்தியால் குத்தினார். இதில், ரஃபேல் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் 2024-ஆம் ஆண்டு, பிரேசிலின் சாவ் பாவ்லோவில் உள்ள சாண்டோ ஆண்ட்ரே நகரில், அவர்கள் வசித்து வந்த வீட்டில் நடந்தது.

அங்கிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோவா இகுவாசுவில், 2008-ஆம் ஆண்டு உர்சுலா ரிக்கார்டோ பிரான்சிஸ்கோ தனது அப்போதைய கணவரான மாகாண காவல் அதிகாரியை சமையலறையில் தலையில் சுட்டுக் கொன்றார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தற்போது 55 வயதாகும் சமூகப் பணியாளரான உர்சுலா, குடும்ப வன்முறைக்கு ஆளானவர். "உன்னையும் நம் மகனையும் கொன்றுவிட்டு, அதன் பிறகு நானும் தற்கொலை செய்துகொள்வேன்" என்று தனது கணவர் கூறியதைக் கேட்ட பிறகே அந்த முடிவை எடுத்ததாக அவர் கூறுகிறார்.

பல ஆண்டுகளாக தாக்குதல்களைச் சந்தித்த பிறகு, தற்காப்புக்காகவே தாங்கள் எதிர்வினையாற்றியதாக மிலேனேவும் உர்சுலாவும் கூறுகின்றனர்.

மிலேனேவின் வழக்கை பிரேசிலின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரித்து வருகிறது. அந்த அமைப்பு எடுக்கும் முடிவைப் பொறுத்து, இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு செல்லலாம் அல்லது செல்லாமலும் இருக்கலாம்.

மறுபுறம், உர்சுலா தனது வழக்கின் விசாரணைக்காக சுமார் பத்து ஆண்டுகள் காத்திருந்த பிறகு, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

தற்காப்பு என்ற சட்டப் பாதுகாப்பு, குற்றத்தின் சட்டவிரோதத் தன்மையை நீக்குவதாகக் கருதப்படுகிறது. அதாவது, உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் ஏற்பட்ட சூழலில், அதற்கு ஏற்ப அளவான எதிர்வினை மேற்கொள்ளப்பட்டதாக சட்டம் அங்கீகரிக்கிறது.

ஆனால், அது உண்மையில் தற்காப்பு நடவடிக்கையாக இருந்தது என்பதை நிரூபிப்பது எப்போதும் எளிதல்ல என்று பிபிசி பிரேசிலிடம் பேசிய நிபுணர்கள் கூறுகின்றனர். தற்காப்பு என்ற வாதம் ஏற்கப்படுமா என்பது, வழக்கறிஞர்களின் திறன், காவல்துறை விசாரணையின் தரம், விசாரணை நடைமுறையில் ஆணாதிக்க மனப்பான்மையின் தாக்கம் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்துள்ளது.

"எப்படியாவது அவரைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தேன்"

2017-ஆம் ஆண்டு தானும் ரஃபேலும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானதாக மிலேனே போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால், சில வாரங்களிலேயே ரஃபேல் கைது செய்யப்பட்டதால், அவர்களுக்கிடையேயான தொடர்பு நீண்ட காலம் நீடிக்கவில்லை.

மிலேனே கூறியதன்படி, 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் ரஃபேல் மீண்டும் அவரைத் தொடர்புகொண்டபோது, இருவரும் மீண்டும் பேசத் தொடங்கினர்.

அப்போது அவர் சிறையிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தார். தங்குவதற்கு இடமும் அவரிடம் இல்லை. மிலேனேவுக்கு, அது வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பாகத் தோன்றியது.

"எப்படியாவது அவரைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தேன்," என்று மிலேனே கூறுகிறார்.

2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் ஒன்றாக வாழத் தொடங்கினர். முதல் தாக்குதல், ஒரு நாள் பிற்பகலில் மிலேனே வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது நடந்தது. அப்போது ரஃபேல் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்ததாக அவர் கூறுகிறார்.

"அவர் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு என்னைத் தாக்கத் தொடங்கினார்," என்று மிலேனே கூறுகிறார். மேலும், ரஃபேல் வீட்டு உபயோகப் பொருட்களையும் மரச்சாமான்களையும் சேதப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்று, அண்டை வீட்டாரின் தகவலின் பேரில் வந்த காவல்துறையினர், காயமடைந்த நிலையில் மிலேனேவை கண்டனர். பாலின ரீதியிலான காரணங்களுக்காக கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ரஃபேல் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

காவல் நிலையத்தில், பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக பிரேசிலில் இயற்றப்பட்ட மரியா டா பென்யா சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அவசரகால பாதுகாப்பு உத்தரவை மிலேனே கோரினார். இந்தச் சட்டம், தாக்குதல் நடத்தும் நபரைப் பாதிக்கப்பட்டவரிடமிருந்து விலக்கி வைத்து, வன்முறை மேலும் மோசமடைவதைத் தடுக்க வகை செய்கிறது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, காவல்துறை அதிகாரியிடம் அளித்த வாக்குமூலத்தில், ரஃபேலுடன் மீண்டும் சேர்ந்து வாழத் திட்டமிட்டிருப்பதாக மிலேனே தெரிவித்தார்.

அப்போது அந்தக் காவல்துறை அதிகாரி தன்னிடம், "இந்த நபர் இறுதியில் உன்னைக் கொன்றுவிடுவார்; இல்லையெனில் நீயே அவரைக் கொல்லும் நிலை ஏற்படும்," என்று எச்சரித்ததாக மிலேனே கூறுகிறார்.

தாயார், நண்பர்கள், மேலும் காவல்துறை அதிகாரி ஆகியோரின் எச்சரிக்கைகளையும் மீறி, வன்முறையின் சுழற்சிக்குள் ஏற்கெனவே சிக்கியிருந்த மிலேனே, தமக்காக வழங்கப்பட்டிருந்த அவசரகால பாதுகாப்பு உத்தரவை ரத்து செய்யுமாறு கோரினார்.

ரஃபேல் மீண்டும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மிலேனே அவரை மீண்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்ட ஒரு மாதத்துக்குப் பிறகு, அவர் ரஃபேலைக் கொலை செய்தார்.

குடும்ப உறவில் நீண்ட காலமாக மிரட்டல்கள் மற்றும் ஆக்ரோஷமான நடத்தைகள் இருந்தது, நியாயமான தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க மதிப்பீடு செய்யப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குடும்ப உறவில் நீண்ட காலமாக மிரட்டல்கள் மற்றும் ஆக்ரோஷமான நடத்தைகள் இருந்தது, நியாயமான தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க மதிப்பீடு செய்யப்படுகிறது.

தற்காப்பு

பிரேசிலின் குற்றவியல் சட்டத்தின் 25-ஆவது பிரிவில் தற்காப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமான, தற்போது நடைபெறும் அல்லது உடனடியாக நிகழக்கூடிய தாக்குதலுக்கு, தேவையான அளவிலான மற்றும் அளவுக்கு மீறாத முறையில் ஒருவர் எதிர்வினையாற்றினால், அது குற்றமாகக் கருதப்படாது.

"சட்டவிரோதமான தாக்குதல் என்பது, சட்டத்தின் பாதுகாப்போ அல்லது அங்கீகாரமோ இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வன்முறைச் செயலாகவும் இருக்கலாம்," என்று சாண்டா கத்தரினா மாகாண அரசு வழக்கறிஞரும், லிஸ்பனில் உள்ள நோவா பல்கலைக்கழகத்தின் பாலின ஆய்வாளருமான சிமெல்லி மார்கான் விளக்குகிறார்.

"உயிர், உடல் பாதுகாப்பு, சுதந்திரம் அல்லது மனித கண்ணியம் போன்ற உரிமைகளை, சட்டபூர்வமான அடிப்படை இல்லாமல் மீறும் எந்தவொரு தாக்குதலும் இதில் அடங்கும்," என்றும் அவர் கூறுகிறார்.

குடும்ப வன்முறை சம்பவங்களில், அச்சுறுத்தல் என்பது திடீரென நிகழும் தாக்குதலாக மட்டுமல்லாமல், "தொடர்ச்சியான ஆபத்து நிலையாக" இருப்பதாக மார்கான் கூறுகிறார்.

மேலும், குடும்ப வன்முறையின் சுழற்சி பொதுவாக நேர்கோட்டில் நடைபெறுவதில்லை. அதில் தாக்குதல், அதற்குப் பிறகான வருத்தம், மீண்டும் அப்படிச் செய்யமாட்டேன் என்ற வாக்குறுதிகள், உணர்வுரீதியான கட்டுப்பாடு மற்றும் சார்ந்திருக்கும் நிலை போன்ற கட்டங்கள் இடம்பெறுகின்றன. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர் பல ஆண்டுகள் வன்முறையான உறவிலேயே சிக்கியிருக்க நேரிடலாம்.

"இத்தகைய சூழலை அங்கீகரிப்பது, வன்முறையில் ஈடுபட்ட துணையை கொன்ற செயலை நியாயப்படுத்துவதல்ல. அதே நேரத்தில், குடும்ப வன்முறை என்பது சிக்கலானதும் படிப்படியாக தீவிரமடையும் ஒரு நிகழ்வும் என்பதையும் புறக்கணிக்க முடியாது," என்று சிமெல்லி மார்கான் வாதிடுகிறார்.

"அழுத்தமான சூழ்நிலையில்தான் நான் துப்பாக்கிச் சுடக் கற்றுக்கொண்டேன்"

தனது கணவர் காவல்துறை அதிகாரியாக இருந்ததால், துப்பாக்கியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதாக உர்சுலா கூறுகிறார்.

"அவர் பணியிடத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், துப்பாக்கியை மேசையின் மீது வைத்து, அதிலிருந்த அனைத்து தோட்டாக்களையும் வெளியே எடுப்பார். பிறகு, அவற்றை மீண்டும் உள்ளே பொருத்தும்படி என்னிடம் கூறுவார். அதைச் சரியாகச் செய்ய முடியாவிட்டால், என் கையில் அடிப்பார்," என்று அவர் கூறுகிறார்.

"அழுத்தமான சூழ்நிலையில்தான் நான் துப்பாக்கிச் சுடக் கற்றுக்கொண்டேன். அதுவே என் உயிரைக் காப்பாற்றியது. எனக்குத் துப்பாக்கி பயன்படுத்தத் தெரியாமல் இருந்திருந்தால், இன்று நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்," என்றும் அவர் கூறுகிறார்.

தங்கள் திருமணத்தின் பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருந்த காலகட்டத்தில்தான் முதல் முறையாக கணவர் தன்னை உடல்ரீதியாகத் தாக்கியதாக உர்சுலா நினைவுகூர்கிறார். அதே காலத்தில்தான் (வன்முறைக்கு எதிரான) மரியா டா பென்யா சட்டம் குறித்த விவாதங்களும் தொடங்கியிருந்தன.

அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த உர்சுலா, அப்போது தனது கணவர், "நீ என்னைப் பற்றி புகார் கொடுத்தால், உன்னைக் கொன்றுவிட்டு, ஒரு பையில் போட்டு ஆற்றில் வீசிவிடுவேன்," என்று மிரட்டியதாகக் கூறுகிறார்.

அந்த மிரட்டல்களாலும், அவர் காவல்துறை அதிகாரியாக இருந்ததாலும் ஏற்பட்ட அச்சம் காரணமாக, அவரைப் பற்றி ஒருபோதும் புகார் அளிக்கவில்லை என்று உர்சுலா கூறுகிறார்.

25 ஆண்டுகளாக குடும்பச் சட்டத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும், பிரேசிலிய குடும்பச் சட்ட நிறுவனத்தின் பாலினக் கண்ணோட்டத்துடன் விசாரணை நடத்தும் நடைமுறைகள் ஆணையத்தின் தலைவருமான ஆனா பவுலா டி ஒலிவேரா ஆன்டூனஸ், குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பலர் இன்னும் புகார் அளிக்க முன்வருவதில்லை என்று கூறுகிறார்.

"பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் புகாருக்கு நம்பிக்கை அளிக்கப்படாது என்ற எண்ணத்தால் உதவி கேட்க முன்வருவதில்லை. காவல் நிலையத்துக்குச் செல்வதே அவர்களுக்கு மிகவும் கடினமான அனுபவமாக இருக்கிறது. அங்கு அவர்கள் மீண்டும் மனரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள்; அவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படுகிறது; மேலும் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றப்படுகிறார்கள்," என்று ஆன்டூனஸ் விளக்குகிறார்.

"அதனால்தான், வன்முறைக்கு ஆளாகும் பெரும்பாலான பெண்கள் உதவி கேட்பதில்லை. ஏனெனில், தங்களை இந்த அமைப்பு பாதுகாக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை," என்றும் அவர் கூறுகிறார்.

தாயான பிறகு, தனது கணவருடனான உறவு மேம்படும் என்று முதலில் உர்சுலா நினைத்ததாகக் கூறுகிறார். ஆனால், அவரது மகனும் வன்முறைக்கு ஆளானபோது, விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தார்.

அதற்கு அவருக்குக் கிடைத்த இரண்டு பதில்கள்:

முதல் பதில்: "இந்த வீட்டைவிட்டு நீ உயிருடன் வெளியே போக முடியாது."

இரண்டாவது பதில்: "குளிர்சாதனப் பெட்டி, அடுப்பு... உனக்குத் தேவையானதை எடுத்துக்கொள். ஆனால், என் மகனை மட்டும் நீ அழைத்துச் செல்ல முடியாது."

இந்த மிரட்டல்களால் அச்சமடைந்த உர்சுலா, அந்த வீட்டிலேயே தங்க முடிவு செய்ததாகக் கூறுகிறார்.

2008-ஆம் ஆண்டு பிப்ரவரியில், தனது கணவரைச் சுட்டுக் கொன்ற நாளை நினைவுகூரும் உர்சுலா, அன்றைய தினம் அவர் பணியிடத்திலிருந்து மிகவும் பதற்றமான நிலையில் வீட்டுக்கு வந்ததாகக் கூறுகிறார். "அவர் அன்றைய தினம் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே தொடர்ந்து மிரட்டல்களை விடுத்து வந்தார்," என்றும் அவர் கூறுகிறார்.

அந்த வாரம் முழுவதும், "என்னையும், என் மகனையும் கொன்றுவிட்டு, அதன் பிறகு தானும் தற்கொலை செய்துகொள்வேன்" என்று அவர் மீண்டும் மீண்டும் கூறியதாக உர்சுலா நினைவுகூர்கிறார்.

மீண்டும் ஒரு முறை மிரட்டிய பிறகு, "தனது துப்பாக்கியை எடுக்க அவர் படுக்கையறைக்குச் சென்றார்."

"அதற்கு முன்பே நான் சமையலறையில் இருந்த துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டேன்," என்று உர்சுலா கூறுகிறார்.

இந்த வழக்கு தொடர்பாக கருத்து கேட்பதற்காக உர்சுலாவின் கணவரின் உறவினர்களை பிபிசி பிரேசில் தொடர்புகொள்ள முயன்றது. ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

விசாரணையும் விடுதலையும்

தீர்ப்பு அல்லது சாத்தியமான விடுதலைக்கு முன்னதாக, தங்கள் இணையர்களைக் கொன்ற பிரேசிலைச் சேர்ந்த பல பெண்கள் விசாரணைக்காகக் காத்திருக்கும் நிலையில் சிறைக்காவலில் உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீர்ப்பு அல்லது சாத்தியமான விடுதலைக்கு முன்னதாக, தங்கள் இணையர்களைக் கொன்ற பிரேசிலைச் சேர்ந்த பல பெண்கள் விசாரணைக்காகக் காத்திருக்கும் நிலையில் சிறைக்காவலில் உள்ளனர்.

ரஃபேல் உயிரிழந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தியபோது, தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்ற நம்பிக்கை இருந்ததால், கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் தனக்கு ஏற்படவில்லை என்று மிலேனே கூறுகிறார்.

காவல் நிலையத்தில், அவரது வழக்கு ஆரம்பத்திலிருந்தே தற்காப்பு நடவடிக்கை என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது. அதன்பிறகு, வழக்கின் விசாரணை நடைபெறும் காலத்தில் அவர் காவலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டார்.

பிரேசிலில், விசாரணை அறிக்கையில் சம்பவத்தை எந்தச் சட்டக் கோணத்தில் பார்க்க வேண்டும் என்பதை ஆரம்பகட்டத்தில் குறிப்பிடுவதற்கான அதிகாரம் காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ளது. மிலேனேவின் வழக்கிலும் அதுவே நடந்தது.

ஆனால், இதனால் ஒருவர் ஏற்கெனவே குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டதாக அர்த்தமல்ல. காவல்துறையின் விசாரணை அறிக்கை மாகாண அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அந்த அமைப்பு வழக்கை முடித்து வைக்கக் கோரலாம், கூடுதல் ஆதாரங்களை கோரலாம் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்.

மிலேனேவின் வழக்கு தற்போது அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் பரிசீலனையில் உள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், நீதிமன்றம் வழக்கை விசாரித்து, தற்காப்பு என்ற வாதத்தை ஏற்கலாமா என்பதை முடிவு செய்யும். இறுதி தீர்ப்பை நீதிபதியே வழங்குவார்.

மிலேனேவின் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி விவியான் கோஸ்டா ரியோஸ், மிலேனே தற்காப்புக்காகவே செயல்பட்டார் என்பதில் தமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

அதற்கான காரணங்களாக, ரஃபேல் ஏற்கெனவே பலமுறை அவரைத் தாக்கியிருந்தது, கொள்ளை, திருட்டு மற்றும் மிலேனேவை கொல்ல முயன்றதாகக் கூறப்படும் வழக்குகள் உள்ளிட்ட குற்றப் பின்னணி அவருக்கு இருந்தது, மேலும் அவர் உயிரிழந்தபோது மது மற்றும் போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாக அறிக்கைகள் காட்டியதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் சமையலறையில் இருந்த ஒரு கத்தி என்பதையும், தாக்குதல் நடந்தபோது அது மிலேனேவின் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

"அவர் ஒரே ஒரு முறை மட்டுமே கத்தியால் குத்தினார். அதன்பிறகு அவசர உதவியை அழைத்தார். ரஃபேலுக்கு உதவ முயன்றார். ரத்தப்போக்கை நிறுத்த முயற்சி செய்தார். காவல்துறையினர் வரும் வரை அங்கேயே காத்திருந்தார்," என்று அந்த காவல்துறை அதிகாரி கூறினார்.

காவல் நிலையத்தில் தனது அலுவலகத்தில் அமர்ந்தபடி பேசிய விவியான், மிலேனே குழப்பமான நிலையை எதிர்கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

"அவர் ஏற்கெனவே தாக்குதலைத் தொடங்கியிருந்தார். அந்தச் சூழலில் உதவி கேட்க வெளியே சென்றிருந்தால், அவர் உயிருடன் இருந்திருப்பாரா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கான தனது பதிலையும் அவரே கூறினார்: "இருந்திருக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்."

காவல்துறையில் 16 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தில், தற்காப்பு என்ற அடிப்படையில் தாம் விசாரித்த முதல் வழக்கு இதுவே என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக கருத்து பெறுவதற்காக ரஃபேலின் குடும்பத்தினரை பிபிசி பிரேசில் தொடர்புகொள்ள முயன்றது. ஆனால், அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

"நான் அவரை மன்னிக்கிறேன்"

தனது கணவர் அசைவில்லாமல் கிடப்பதை உணர்ந்தபோது, தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று உர்சுலா நினைத்ததாகக் கூறுகிறார். ஆனால், வீட்டின் வாயிலில் இருந்து தனது மகன் தன்னை அழைக்கும் குரலைக் கேட்டதும், அந்த எண்ணத்தை அவர் கைவிட்டார்.

"அப்போதுதான் எனக்கு சுயநினைவு வந்தது. 'இப்போது என் மகன் என்னுடன் இருக்கிறான். நான் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும்' என்று நினைத்தேன்," என்று அவர் கூறுகிறார்.

அதன்பிறகு, ஒரு டப்பா பால்பொடியையும் தனது மகனின் வீடியோ கேம் கருவியையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியதாக அவர் கூறுகிறார்.

முதலில், தனது சகோதரரின் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து, தனது கணவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், தனது தந்தையின் வீட்டுக்குச் சென்றார். அதன்பிறகு, ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, வழக்கறிஞருடன் காவல் நிலையத்துக்குச் சென்று, தனது கணவரைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

அவரை காவலில் வைக்காமல் விசாரணைக்கு உட்படுத்த காவல்துறை அதிகாரி அனுமதித்தார். இருப்பினும், கடுமையாக்கும் சூழ்நிலைகள் எதுவும் இல்லாத கொலை என்ற அடிப்படையில், அவர் மீது சிறப்பு சூழ்நிலைகள் இல்லாத கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் இந்த வழக்குக்கு தீர்ப்பு வருவதற்கு ஒன்பது ஆண்டுகள் ஆனது. அந்தக் காலத்தை, "மனரீதியான கொடுமை நிறைந்த காலம்" என்று உர்சுலா விவரிக்கிறார்.

விசாரணை பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதாகவும், மீண்டும் மீண்டும் புதிய தேதிகள் நிர்ணயிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

ஆனால், வழக்கின் இறுதி முடிவு வழக்கத்துக்கு மாறானதாக இருந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர், விசாரணையை முழுமையாக நடத்தாமல் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினார். அதாவது, சாட்சிகளை விசாரிக்காமலும், புதிய ஆதாரங்களைச் சேகரிக்காமலும் வழக்கை முடித்து வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற முதல் நீதிமன்றம், 2017-ஆம் ஆண்டு உர்சுலாவை விடுவித்தது.

"உங்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் உங்களை முழுமையாக விடுவிக்கிறேன். இங்கிருந்து செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையையும் உங்கள் மகனின் வாழ்க்கையையும் கவனித்துக்கொள்ளுங்கள்," என்று விசாரணை நாளில் நீதிபதி தன்னிடம் கூறியதாக உர்சுலா நினைவுகூர்கிறார்.

உர்சுலாவின் வழக்கு ஒரு வழக்கத்துக்கு மாறான முடிவைக் கண்டது: அவர் உடனடியாகக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Personal file

படக்குறிப்பு, உர்சுலாவின் வழக்கு ஒரு வழக்கத்துக்கு மாறான முடிவைக் கண்டது. அவர் உடனடியாகக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் உர்சுலாவுக்காக ஆஜரான அரசு நியமித்த வழக்கறிஞர் கிளௌசியா பொன்சேகாவும், நீதிபதி இவ்வாறு கூறியதை நீதிமன்றத்தில் நேரில் கேட்டதாக தெரிவித்தார்.

பொன்சேகாவின் கூற்றுப்படி, உர்சுலாவின் வாழ்க்கையில் குடும்ப வன்முறைக்கான பல பொதுவான அம்சங்கள் இருந்தன. தினசரி தாக்குதல்கள், கணவர் காவல்துறையில் பணியாற்றியவர் என்பதும், மதுப் பழக்கம் வன்முறையை மேலும் தீவிரப்படுத்தியதும், தொடர்ச்சியான வன்முறைச் சுழற்சியும் அவற்றில் அடங்கும்.

"அவமதிப்புகள், இழிவுபடுத்தும் வார்த்தைகள் என்று பல வகையான மனரீதியான தாக்குதல்கள் இருந்தன. இத்தகைய அவமதிப்புகள் ஒருவரின் மனநிலையை ஆழமாகப் பாதிக்கின்றன," என்று அவர் விளக்குகிறார்.

இருப்பினும், காவல்துறை விசாரணையில் அந்த நீண்டகால குடும்ப வன்முறை குறித்து ஆராயப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.

"பெண்ணின் தரப்பு பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. அதை காவல்துறையினர் முறையாக விசாரிப்பதில்லை," என்று பொன்சேகா கூறுகிறார்.

"பல சந்தர்ப்பங்களில், அந்தப் பெண்ணையே வன்முறையானவர், அளவுக்கு மீறிய பொறாமை கொண்டவர் அல்லது உணர்ச்சி வசப்பட்டவர் என்று சித்தரிக்கிறார்கள்," என்றும் அவர் கூறுகிறார்.

"அதற்காக நான் மிகப் பெரிய விலையைக் கொடுத்தேன்"

ஒன்பது ஆண்டுகள் நீடித்த நீதிமன்ற வழக்கு முழுவதும், தனது வாழ்க்கை நின்றுபோனது போல இருந்ததாக உர்சுலா கூறுகிறார்.

திருமண வாழ்க்கையின்போது அவர் இல்லத்தரசியாக இருந்தார். தனது கணவரைக் கொன்ற பிறகு, தன்னையும் தனது மகனையும் தனியாகக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் மீண்டும் படிக்கத் தொடங்கினார்.

வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த அந்த ஆண்டுகளில், ஒவ்வொரு முறை விசாரணை தேதி நிர்ணயிக்கப்படும்போதும், "என்னை கைது செய்துவிட்டால் என்ன செய்வது? என் மகனை யார் கவனித்துக்கொள்வார்கள்?" என்ற கவலை அவரை வாட்டியதாக அவர் கூறுகிறார்.

நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளவும், வேறு ஊருக்குக் குடிபெயரவும் தன்னால் முடியவில்லை என்றும், அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய நல்ல வேலை வாய்ப்புகளைக்கூட ஏற்க அஞ்சியதாகவும் அவர் கூறுகிறார்.

"நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பேன்... பிறகு ஒருகட்டத்தில் அழுகையை நிறுத்தினேன். படிப்படியாக மன உறுதி பெற்றேன். என் ஒரே கவலை என் மகனைப் பற்றித்தான் இருந்தது," என்று அவர் கூறுகிறார்.

தற்போது, உதவி கோரி பெண்களிடமிருந்து அவருக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. குடும்ப வன்முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் அவர் உரையாற்றி வருகிறார்.

"நான் உரையாற்றும்போதெல்லாம், 'நான் செய்ததை நீங்கள் செய்யாதீர்கள், சரியா?' என்று சொல்வேன். ஏனெனில், அதற்காக நான் மிகப் பெரிய விலையைக் கொடுத்தேன்," என்று அவர் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு