இந்த கூட்டத்தில் மற்ற பெண் எலிகள் கருத்தரிப்பதை ராணி எலி தடுப்பது எப்படி? ஆய்வில் புதிய தகவல்

ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பாலூட்டியான நேக்கட் மோல் எலிகள் 'யூசோஷியல்' ( சில விலங்குகளில் காணப்படும் அமைப்பின் மிக உயர்ந்த நிலையைக் குறிக்கப் பயன்படும் சொல்) தன்மையுடையவை என்பதை அறிவியலாளர்கள் 1980-களில் இருந்தே அறிந்துள்ளனர்.

பட மூலாதாரம், Felix Petermann, Max Delbrück Center

    • எழுதியவர், டெய்ஸி ஸ்டீபன்ஸ்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒரு வாசனை திரவியம் பெண்களுக்கு கருவுறும் திறனை தற்காலிகமாக இழக்கச் செய்யும் எனக் கூறுவது கற்பனையான விசித்திர நாவலின் கதைக்களத்தைப் போலத் தோன்றலாம்.

ஆனால், ஒரு புதிய ஆய்வில், ராணி நேக்கட் மோல் எலி (முடியற்ற எலிகள் என்றும் அழைக்கப்படுகின்றன), தான் மட்டுமே கருவுற்று, குட்டிகளை ஈன வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக, பயன்படுத்தும் முறை இது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பாலூட்டியான நேக்கட் மோல் எலிகள் 'யூசோஷியல்' (குறிப்பிட்ட சில விலங்குகளில் காணப்படும் அமைப்பின் மிக உயர்ந்த நிலையைக் குறிக்கப் பயன்படும் சொல்) தன்மையுடையவை என்பதை அறிவியலாளர்கள் 1980களில் இருந்தே அறிந்துள்ளனர்.

அதாவது, இவை வேலைக்கார எலிகள் மற்றும் உயர் மட்டத்தில் ஒரேயொரு ராணி எலியைக் கொண்டு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகக் குழுக்களாக வாழ்கின்றன.

அந்தக் குழுவில் இனப்பெருக்கம் செய்யும் ஒரே பெண் எலி ராணி மட்டுமே. அதே வேளையில் மற்ற ஆண் மற்றும் பெண் எலிகள் குட்டிகளைப் பராமரிக்கின்றன.

"அமைதியைப் பேணுவதற்கும், அதே வேளையில் மற்ற பெண் எலிகளின் இனப்பெருக்கத் திறனைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கும் அந்தக் குழுவில் ராணி எலியின் இருப்பு முக்கியமானது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்" என்கிறார் ஜெர்மனியில் உள்ள மாலிகுலார் மெடிசினுக்கான மேக்ஸ் டெல்ப்ரூக் மையத்தைச் சேர்ந்தவரும், இந்தப் புதிய ஆய்வின் முதன்மை ஆசிரியருமான முகமது கல்லாஃப்.

ஆனால், ராணி எலி அதை எப்படிச் செய்தது என்பது குறித்துத் துல்லியமாக முன்பு தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.

 நேக்கட் மோல் எலிகள்

பட மூலாதாரம், Tennessee Witney via Getty Images

படக்குறிப்பு, ராணி நேக்கட் மோல் எலிகள், மற்ற பெண் எலிகளின் ஹார்மோன் அளவுகளை மாற்றி, அவற்றை மலட்டுத்தன்மையுடன் வைத்திருக்க ஒரு ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன.

"ராணி எலி மற்ற விலங்குகளை பயமுறுத்தி, அவற்றைத் தள்ளிவிட்டு அவற்றின் இனப்பெருக்க நிலையை அடக்குகிறது என்பது ஒரு கோட்பாடாக இருந்ததாக" இணை ஆசிரியரும், மேக்ஸ் டெல்ப்ரூக் மூலக்கூறு மருத்துவ மையத்தைச் சேர்ந்தவருமான பேராசிரியர் கேரி லெவின் குறிப்பிட்டார்.

இவர் கடந்த 15 ஆண்டுகளாக நேக்கட் மோல் எலிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். ஆனால், அதற்குப் பிறகுதான் கல்லாஃப் இந்த ஆய்வுக்குள் நுழைந்தார். இவரது முந்தைய ஆராய்ச்சி பூச்சிகளின் நுகரும் திறன் அல்லது வாசனை உணர்வை மையமாகக் கொண்டிருந்தது.

"கேரி என்னை முதன்முதலில் நேக்கட் மோல் எலிகளைப் பார்க்க அழைத்துச் சென்றபோது, அவை அதிக அளவு மோப்பம் பிடிப்பதை நான் உணர்ந்தேன்" என்று அவர் கூறுகிறார்.

அதுதான் அவற்றின் சமூகப் பண்புக்குக் காரணியாக இருக்குமோ என்பது குறித்து அவர் யோசிக்கத் தொடங்கினார். "நேக்கட் மோல் எலிகளின் ரசாயன அமைப்புகளைச் சேகரிப்பதும், அவற்றின் மோப்ப சக்தி முக்கியமானதுதானா இல்லையா என்பதைப் பரிசோதிப்பதுமே இந்த ஆய்வின் ஆரம்ப இலக்காக இருந்தது" என்கிறார் அவர்.

"ஆனால், ராணி எலியிடம் ஒரு ரசாயனப் பொருள் அதிக செறிவில் காணப்படுவதைக் கண்டுபிடித்தது, ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அங்கிருந்துதான் இந்தக் கதை தொடங்கியது" என்றும் அவர் விளக்கினார்.

'ஒரு சிறப்பான கருத்தடை சாதனம்'

குறிப்பிட்ட அந்த வேதிச் சேர்மம் ஐசோப்ரோபைல் மைரிஸ்டேட் என அழைக்கப்படுகிறது. இதை நேக்கட் மோல் எலிகள் கூட்டத்தின் ராணி உற்பத்தி செய்கிறது. இனப்பெருக்கம் செய்யாத எலிகளிடம் இது கிட்டத்தட்ட காணப்படுவதில்லை.

இந்தச் சேர்மத்தின் வாசனை, பெண் நேக்கட் மோல் எலிகளை வேறுவிதமாகச் செயல்பட வைக்கிறதா என்பதைக் கண்டறிய கல்லாஃப் ஓர் ஆய்வை மேற்கொண்டார். அதில் உயர் நிலையில் உள்ள பெண் எலிகள் இந்த வாசனையைத் தவிர்ப்பது தெரிய வந்தது.

"இந்த மூலக்கூறு, நேக்கட் மோல் எலிகளுக்கு முக்கியமானதாகத் தோன்றுவதற்கான முதல் அறிகுறி அதுதான்" என்கிறார் லெவின்.

அடுத்து, இந்த வேதிப்பொருளின் வாசனை நேக்கட் மோல் எலிகளின் மூளையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கவனிக்க, 'ஃபங்க்ஷனல் அல்ட்ராசவுண்ட்' (functional ultrasound) என்ற ஒரு வகை ஸ்கேனை அவர்கள் பயன்படுத்தினர்.

 லெவின் (வலது).

பட மூலாதாரம், Felix Petermann, Max Delbrück Center

படக்குறிப்பு, தாங்கள் கண்டறிந்த வேதிப்பொருள், மற்ற பெண் நேக்கட் மோல் எலிகளின் ஹார்மோன்களை பாதிக்குமா என்பதை விஞ்ஞானிகள் அறிய விரும்பியதாகக் கூறுகிறார் லெவின் (வலது).
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வாசனையைச் செயலாக்கும் மூளையின் பகுதியான 'ஆல்ஃபேக்டரி கார்டெக்ஸ்' (olfactory cortex) உடனடியாகச் செயல்படுவதை அவர்கள் கவனித்ததாக லெவின் குறிப்பிடுகிறார். சில நேரங்களில், ஹார்மோன்கள் மூலம் பல்வேறு உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் 'ஹைபோதலாமஸ்' (hypothalamus) பகுதியின் செயல்பாடும் இதனுடன் சேர்ந்து காணப்பட்டது.

நேக்கட் மோல் எலிகளின் இனப்பெருக்க நிலையைப் பொறுத்தவரை, புரோலேக்டின், புரோஜெஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் இதில் ஈடுபடுகின்றன. புரோலாக்டின் பாலூட்டிகளின் கருவுறுதல் திறனைக் குறைக்கிறது, அதே நேரத்தில் புரோஜெஸ்டிரோன் அதை ஊக்குவிக்கிறது.

"இந்த ஹார்மோன்கள் உண்மையில் ஐசோப்ரோபைல் மைரிஸ்டேட்டால் கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை தாங்கள் அறிய விரும்பியதாக" லெவின் குறிப்பிட்டார்.

ஆய்வுக்குழு இனப்பெருக்கம் செய்யாத விலங்குகளை அவற்றின் குழுக்களில் இருந்து பிரித்து, ஆண்-பெண் ஜோடிகளாக வைத்தது. சிலவற்றுக்கு குழுவின் வாசனை கலந்த படுக்கை வசதியும், சிலவற்றுக்கு ஐசோப்ரோபைல் மைரிஸ்டேட் வாசனையும் பிரத்யேகமாக வழங்கப்பட்டது. ஒரு கட்டுப்பாட்டுப் பிரிவு இரண்டு வாசனைகளும் இல்லாத சூழலில் வைக்கப்பட்டது.

லெவின் கூற்றுப்படி, வாசனை முற்றிலும் இல்லாத சூழலில் தனிமைப்படுத்தப்பட்ட ஜோடிகள் "பாலியல் ரீதியாகத் தடையின்றி" மாற்றங்களை அடைந்து, சில வாரங்களுக்குள் இணையத் தொடங்கின. ஆறு பெண் எலிகளில் ஐந்து எலிகள் கர்ப்பமாயின. ஆனால் ஐசோப்ரோபைல் மைரிஸ்டேட் வாசனைக்கு உட்படுத்தப்பட்ட ஜோடிகள் இணையவில்லை. "அது ஒரு மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக இருந்தது" என்கிறார் லெவின்.

ஐசோப்ரோபைல் மைரிஸ்டேட் வாசனைக்கு உட்படுத்தப்பட்ட ஜோடிகள் இணையவில்லை.

பட மூலாதாரம், Neil Bromhall via Getty Images

படக்குறிப்பு, ஐசோபுரோப்பைல் மைரிஸ்டேட் இல்லாமல் கூட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பெரும்பாலான பெண் எலிகள் கருவுற்றன

ஐசோப்ரோபைல் மைரிஸ்டேட் இனப்பெருக்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பங்கையும் வகிப்பதாகத் தோன்றுகிறது. கல்லாஃப் மற்றும் லெவின் மேற்கொண்ட மற்றொரு பரிசோதனையில், ஒரு குழுவில் இருந்து ராணி எலி அகற்றப்பட்டது, ஆனால் அவர்கள் 12 வாரங்களுக்கு அதன் படுக்கையில் ஐசோப்ரோபைல் மைரிஸ்டேட்டை தொடர்ந்து செலுத்தி வந்தனர்.

அப்போது, அந்த எலிக் கூட்டம் அமைதியாக இருந்தது. ஆனால் அந்த வேதிப்பொருள் அகற்றப்பட்டபோது, எலிகள் ஆக்ரோஷமாக மாறின. சில பெண் எலிகள் பாலியல் நடத்தையை வெளிப்படுத்தின. இறுதியில் அவற்றில் ஒன்று கர்ப்பமானது, அது புதிய ராணியாக மாறியதை உணர்த்தியது.

ஐசோப்ரோபைல் மைரிஸ்டேட் "முழு குழுவையும் ஒன்றிணைத்து வைக்கிறது" என்று கல்லாஃப் விளக்குகிறார். "இது விலங்குகள் ஒன்றுக்கொன்று வன்முறையில் ஈடுபடுவதையும், இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதையும் தடுத்தது" என்கிறார் லெவின்.

'இனப்பெருக்க விளைவு'

ராணி எலி அண்டவிடுப்பின்போது (ovulation), இந்த மூலக்கூறின் யோனி சுரப்பு அதன் உச்சத்தை எட்டியதை கல்லாஃப் கண்டுபிடித்தார்.

"இந்த மூலக்கூறு, அதாவது இந்த எஸ்டர், ராணியின் இனப்பெருக்க நிலையின் குறிகாட்டி" என்கிறார் லெவின்.

ராணி நேக்கட் மோல் எலி இனப்பெருக்கம் செய்வதை நிறுத்தினால், நேக்கட் மோல் எலிகளும் அதற்கு எதிர்வினையாற்றுகின்றன.

"வேறு எந்த விலங்குகளும் அவற்றின் இனப்பெருக்க கட்டத்தில் இல்லாததால், ராணி நேக்கட் மோல் எலி இனப்பெருக்கம் செய்வதை அந்த எலிக் கூட்டம் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்" என்றார் லெவின்.

"குட்டிகளை ஈனவில்லை என்றால், ஒரு ராணி எலியை வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை."

இத்தகைய சூழ்நிலைகளில், ராணி எலி அந்த வேதிப்பொருளை உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. பின்னர் மற்ற பெண் எலிகள் புதிய ராணியாக மாறுவதற்காகப் போட்டியிடுகின்றன.

ராணி நேக்கட் மோல் எலி

பட மூலாதாரம், Felix Petermann, Max Delbrück Center

படக்குறிப்பு, ராணி நேக்கட் மோல் எலி இனப்பெருக்கத்தை நிறுத்தினால், அது ஐசோபுரோப்பைல் மைரிஸ்டேட்டை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும். அதனால் மற்ற பெண் எலிகள் புதிய ராணி ஆவதற்காகப் போட்டியிடும்.

எலிகள் குழுவில் ஒழுங்கைப் பராமரிப்பதில் ஐசோப்ரோபைல் மைரிஸ்டேட் வகிக்கும் பங்கு, ராணியின் நடத்தையை விளக்கவும் உதவக்கூடும்.

"ராணி நேக்கட் எலி, அதன் கூட்டத்தைச் சுற்றி மிகவும் சுறுசுறுப்பாக வலம் வருவதாக" லெவின் கூறுகிறார். இயற்கைச் சூழலில், நேக்கட் எலி பொந்துகள் 3 கி.மீ நீளம் வரை இருக்கக்கூடும்.

"இந்தப் பிரமாண்டமான பொந்து அமைப்பு முழுவதும் இந்த மூலக்கூறைப் பரப்ப ராணி நேக்கட் மோல் எலி முயல்வதாக" லெவின் குறிப்பிட்டார்.

இதன் மூலம், தனது குழுவிலுள்ள அனைத்து விலங்குகளும் இந்த வேதிச் சேர்மத்திற்கு உட்படுவதையும், அவை தன் அதிகாரத்திற்கு சவால் விடாமல் இருப்பதையும் ராணி நேக்கட் மோல் எலி உறுதி செய்கிறது.

கூட்டுச் சமூக வாழ்வு ஏன்?

மேலோட்டமாகப் பார்க்கையில், யூசோஷியாலிட்டி (கூட்டுச் சமூக வாழ்வு) என்பது ஒரு விலங்கு கூட்டத்திற்கு உகந்த அமைப்பாகத் தோன்றாமல் போகலாம்.

ஆனால், இது நேக்கட் மோல் எலிகளுக்கு மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாக விளங்குவதாகவும், இது அவை ஒத்துழைப்புடன் செயல்பட அனுமதிப்பதாகவும் லெவின் கூறுகிறார்.

லெவின் கூற்றுப்படி, "நேக்கட் மோல் எலிகள் பாலைவனத்தில் வாழ்கின்றன. தாவரங்களின் அடிப்பகுதிகளை உணவாகக் கொள்கின்றன. அந்த அடிப்பகுதிகளை சுரங்கங்களைத் தோண்டுவதன் மூலம் அடைகின்றன."

"அவை இந்த வேரைக் கண்டுபிடித்தவுடன், அதைத் திரும்பக் கொண்டு வந்து, பொந்துக்குள் சேமித்து, குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றன" என்றும் லெவின் விவரிக்கிறார்.

ஒரு குழுவாக உணவைத் தேடுவதன் மூலம், அவை வெவ்வேறு திசைகளில் ஆராய முடியும், ஆனால் உணவு கிடைப்பதால் அனைத்து எலிகளும் பயனடைகின்றன.

நேக்கட் மோல் எலிகள்

பட மூலாதாரம், Ger Bosma via Getty Images

படக்குறிப்பு, நேக்கட் மோல் எலிகள் ஒன்றோடொன்று மிக நெருக்கமாகப் படுத்து உறங்குவதன் மூலம் வெப்ப இழப்பைக் குறைக்கின்றன.

ஒரு விலங்கு தனியாக முயன்றால், சாப்பிட எதையாவது கண்டுபிடிக்கும் முன்பே பட்டினியால் இறக்க நேரிடும். அனைத்து எலிகளும் ஒன்றாக உறங்குவதன் மூலம் வெப்ப இழப்பைக் குறைப்பது போன்ற பிற நன்மைகளும் குழுவாக வாழ்வதில் கிடைக்கின்றன.

"ஆகவே, சமூகமாக இருப்பதன் மூலம், அவை அடிப்படையில் உயிர்வாழ முடிவதாக" கூறிய லெவின், "ஒரு ராணி இருப்பது, அந்தக் கூட்டத்தில் சமூக ஒற்றுமையை வலுவாகத் தக்கவைப்பதற்கான ஒரு வழி என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

அறிவியல் வளர்ச்சியடைந்த போதிலும், நேக்கட் மோல் எலிகளின் கூட்டுச் சமூக வாழ்க்கை முறை பற்றி நமக்கு இன்னும் தெரியாத விஷயங்கள் நிறைய உள்ளன.

தனது சொந்தக் கருவுறுதலைப் பாதிக்காமல், மற்ற பெண் எலிகளின் ஹார்மோன் உற்பத்தியை ராணி நேக்கட் மோல் எலியால் எவ்வாறு அடக்க முடிகிறது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

"அது அதன் மூளையில் ஏற்பிகள் அல்லது நரம்புச் சுற்றுகள் மட்டத்தில் நிகழும் ஒரு மாற்றமாக இருக்க வேண்டும். அதுதான் அந்த வேதிப்பொருளைத் தொடர்ந்து உற்பத்தி செய்ய ராணி நேக்கட் மோல் எலியை அனுமதிக்கிறது. இருப்பினும், அதனால் ராணி நேக்கட் மோல் எலிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை" என்று கல்லாஃப் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு