You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிளே ஆஃப் கனவை தக்கவைக்குமா சிஎஸ்கே? லக்னௌ போட்டியில் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்
- எழுதியவர், பாபா அபராஜித்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கடந்த மே 10-ஆம் தேதி 8 ஆண்டுகளுக்குப் பிறகு 180+ இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், மே 15 அன்று அதே லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது. லக்னௌவில் நடக்கும் இந்தப் போட்டி சிஎஸ்கே-வின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்பு இருக்கிறது. தற்போது 11 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது சிஎஸ்கே. மீதமிருக்கும் 3 போட்டிகளில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக மோதுகிறது. லக்னௌவுக்கு எதிரான இந்தப் போட்டியில் வெற்றி பெறும்போது 14 புள்ளிகள் பெற்றுவிட முடியும். மேலும், தொடர் வெற்றிகள் பெரும் நம்பிக்கை கொடுக்கும்.
அதன்பிறகு, சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டி சேப்பாக்கத்தில் நடக்கிறது. ஹோம் போட்டியில் அந்த நம்பிக்கையோடு களமிறங்குவது மிகவும் சாதகமான விஷயம். அந்த சாதகத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்றுவிட முடியும். அதுமட்டுமல்லாமல், சன்ரைசர்ஸ் அணியால் 16 புள்ளிகளுக்கு மேல் எடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுவிடும். அது கூடுதல் பிளஸ்.
இப்படியான ஒரு சூழ்நிலையில் ஆமதாபாத் சென்று குஜராத்தை சந்திக்கும்போது நெருக்கடி குறைவாக இருக்கும். டாப் 4 வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அந்த நல்ல நிலை ஏற்படுவதற்கு லக்னௌவுக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெறுவது அவசியம்.
அதேசமயம், லக்னௌ அணி அதிகாரபூர்வமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இது அவர்கள் மீதான நெருக்கடிகளையெல்லாம் உடைத்து ஒருவகையான சுதந்திரத்தைக் கொடுக்கலாம். இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் ஆடும்போது, அவர்கள் வேறு வகையான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். ஆனால், தற்போது ஆடிவரும் நல்ல கிரிக்கெட்டை சிஎஸ்கே தொடரும்போது அவர்களால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே-வின் பேட்டிங், பௌலிங் அணுகுமுறைகள் எப்படி இருக்கவேண்டும், ஆடுகளம் எப்படி இருக்கலாம் என்பதைப் பற்றிய என் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
சிஎஸ்கே பேட்டிங்குக்கு நம்பிக்கை தரும் உர்வில்
லக்னௌவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் உர்வில் பட்டேல் ஆடிய ஆட்டம் அசாத்தியமானது. இது சிஎஸ்கே பேட்டிங்குக்கு பெருமளவு பலம் சேர்த்திருக்கிறது. முன்பு சிஎஸ்கே பேட்டிங் என்று வரும்போது சஞ்சு சாம்சன் பற்றியே அதிகம் பேச்சிருந்தது. கடந்த சில போட்டிகளாகத்தான் ருதுராஜ் கெய்க்வாட் பற்றிய விவாதங்களும் தொடங்கின. அப்படிப்பட்ட நிலையில் இப்போது இன்னொரு பேட்டரும் எழுச்சி பெற்றிருப்பது அணிக்கு மிகவும் நல்ல விஷயம்.
ஆயுஷ் மாத்ரே தொடரிலிருந்து வெளியேறியபோது, அவரது வேகத்தை ஈடுகட்ட முடியுமா என்ற கேள்வியும் கவலையும் இருந்தது. அதை தன் அதிரடி இன்னிங்ஸ் மூலம் போக்கியிருக்கிறார் உர்வில். ஐபிஎல் வரலாற்றின் அதிவேக அரைசதம் என்ற சாதனையை சமன் செய்வது சாதாரண விஷயம் இல்லை. அவர் பேட்டை சுழற்றும் வேகம், அவருடைய உடல் மொழி போன்றவையே சொல்கிறது அவர் என்ன மாதிரியான பேட்டர் என்பதை. முதல் பந்தில் இருந்தே அடிக்கவேண்டும் என்ற 'இன்டென்ட்' காட்டுகிறார். இந்த புதுயுக பேட்டிங்கை அவர் வெளிப்படுத்துகிறார்.
அதேசமயம், இந்த வகையான பேட்டிங்கில் ஒரு சிக்கலும் இருக்கிறது. இப்படி அதீத அதிரடி காட்டும்போது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போகும். சில போட்டிகளில் விரைவில் ஆட்டமிழக்கக்கூடும். அது விமர்சனங்களுக்கு வழிவகுக்கலாம். ஆனால், சிஎஸ்க நிர்வாகம் அவருக்கு அந்த சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது. அவரிடம் அந்த அதிரடியைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். சென்னை அணிக்கும் நல்லதொரு நீண்ட பேட்டிங் யூனிட் இருக்கிறது. அதனால், உர்வில் பட்டேல் இதே பாணியைக் கடைபிடிக்கவேண்டும்.
நெட் ரன் ரேட்டில் கவனம் செலுத்தவேண்டுமா?
உர்வில் பட்டேல் நன்றாக ஆடியிருப்பது ஒருபக்கம் சிஎஸ்கே பேட்டிங்குக்கு சாதகமான விஷயம் என்றால், அணியின் மிடில் ஆர்டர் சில கேள்விகளுக்கு வித்திட்டிருக்கிறது. டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே போன்ற மிடில் ஆர்டர் பேட்டர்களால் இன்னும் பெரிய இன்னிங்ஸை ஆட முடியவில்லை. கடந்த போட்டியில் ஒருகட்டத்தில் சூப்பர் கிங்ஸ் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றுவிட்டனர்.
கடைசி வரை ஆட்டத்தை கொண்டுசெல்ல ருதுராஜ் தேவை எனும்போது, கார்த்திக் ஷர்மா அடித்து ஆடியிருக்கலாம். இந்த ஒரு விஷயத்தில் சிஎஸ்கே கவனம் செலுத்தவேண்டும் - ஒரே கட்டத்தில் இரண்டு பேட்டர்களும் நிலைத்து நின்று ஆடாமல், ஒருவராவது அதிரடி காட்டவேண்டும்.
அதுமட்டுமல்லாமல், ஆட்டத்தைக் கடைசி வரை கொண்டு சென்றதால் நெட் ரன்ரேட்டை அதிகப்படுத்தும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்துவிட்டது என்ற விமர்சனம் ஒருபக்கம் எழுந்திருக்கிறது.
இந்தப் போட்டியில் ரன்ரேட்டை அதிகப்படுத்துவதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்ற வாதங்களும் எழுந்திருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை வெற்றி பெறுவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில், கையில் இருக்கும் 3 போட்டிகளையும் வென்றுவிட்டால் பிளே ஆஃப் உறுதி. இரண்டில் வென்றாலும் கூட அதை ஓரளவு உறுதி செய்துவிடலாம் என்பதால், அந்த 4 புள்ளிகளைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதைச் சொல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது. சிஎஸ்கே-வின் பிளே ஆஃப் வாய்ப்புக்குப் போட்டியாக இருக்கும் அணிகளாக நான் கருதுவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு அணிகளையும்தான். ராயல்ஸின் நெட் ரன்ரேட் சூப்பர் கிங்ஸுடையதை விட குறைவாகவே இருக்கிறது. அதேசமயம் சிஎஸ்கே அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும்போது நெட் ரன்ரேட் மெல்ல ஏறும். சன்ரைசர்ஸுக்கு எதிராக அந்த வெற்றி வரும்போது, அது சன்ரைசர்ஸின் நெட் ரன்ரேட்டையும் குறைக்கும். அதுவும் சூப்பர் கிங்ஸுக்கு சாதகமாக அமையலாம். அதனால், குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியின்போது நெட் ரன்ரேட்டின் அவசியத்தை உணர்ந்து ஆட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்.
ஒருவேளை 100 சதவிகிதம் வெற்றி உறுதி என்ற நிலை ஏற்பட்டால், அப்போது வேகத்தை அதிகப்படுத்தி நெட் ரன்ரேட்டை உயர்த்திக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன் இந்த 2 போட்டிகளிலும் வெற்றியை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்தவேண்டும்.
சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் என்ன செய்யவேண்டும்?
சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த போட்டியில் பவர்பிளேவில் லக்னௌ அணி 91 ரன்கள் எடுத்த பிறகும் சிறப்பாக கம்பேக் கொடுத்து ஆட்டத்தை தங்கள் பக்கம் எடுத்துவந்தார்கள். அதையே இனியும் தொடரும்போது அவர்களால் இந்தப் போட்டியிலும் அணிக்கு வெற்றி தேடித்தர முடியும்.
அதேசமயம் கடந்த போட்டியின் ஆட்ட நாயகன் ஜேமி ஓவர்டன் வலது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரிட்டன் திரும்பவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. ஒருவேளை அவர் இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்றால், அது அந்த அணிக்கு நிச்சயம் பெரிய இழப்பு. இந்த சீசன் அவர் சூப்பர் கிங்ஸின் மிகமுக்கிய வீரர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார். ஒரு ஆல்ரவுண்டராக அவருடைய இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதாக இருக்காது.
ஓவர்டன் ஆடாதபட்சத்தில் இந்தப் போட்டிக்கான அணியில் சிஎஸ்கே குர்ஜப்னீத் சிங்கை விளையாட வைக்கலாம். கடந்த போட்டியில் அவர்கள் கூடுதல் பேட்டரோடு சென்றார்கள். அதனால், இந்தப் போட்டியில் ஒரு பௌலரை சேர்ப்பது அணியின் பேலன்ஸுக்குத் தேவைப்படும்.
முந்தைய போட்டியில் சிஎஸ்கே பௌலர்களுக்கு இருந்த ஒரே சவால் ஜாஷ் இங்லிஸ். மிகச் சிறப்பான ஒரு இன்னிங்ஸை அவர் விளையாடினார். அவருக்கு எதிராக மட்டும் சில விஷயங்களை சிஎஸ்கே சரிசெய்திருக்கலாம் என்று தோன்றியது. அவருக்கு தேர்ட் மேன் மற்றும் ஃபைன் லெக் ஃபீல்டர்களை உள்ளே வைத்தே பந்துவீசினார்கள். இங்லிஸ் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டை தொடர்ச்சியாக ஆடினார் எனும்போது, அந்த தேர்ட் மேன் ஃபீல்டரை பவுண்டரி எல்லையில் வைத்து அவரை வேறு ஷாட் ஆடத் தூண்டியிருக்கலாம். அதேபோல், பௌலர்கள் சில வேரியேஷன்களை முயற்சி செய்திருக்கலாம் என்றும் தோன்றியது.
சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் அந்த விஷயங்களை செய்யலாம். தேர்ட் மேன் ஃபீல்டரை சற்று 'ஃபைன்'-ஆக வைத்து இங்லிஸை நேரே ஆடவைக்கலாம்.
மைதானத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?
இந்தப் போட்டி நடக்கும் ஏகானா ஸ்டேடியத்தில் இந்த சீசனில் களிமண் நிறைந்த ஆடுகளங்களை பயன்படுத்துகிறார்கள். மொஹம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், மோசின் கான் ஆகியோர் அடங்கிய லக்னௌ வேகப்பந்துவீச்சு யூனிட்டுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால், அந்த களிமண் தரை ஆடுகளங்களில் சற்று புற்களும் கொடுக்கிறார்கள். சூப்பர் கிங்ஸுக்கு எதிராக இது பயன்படுத்தப்படவே வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன்.
சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் செம்மண் ஆடுகளம் தரப்பட்டிருந்தது. அது சிஎஸ்கே பௌலர்களுக்கும், பேட்டர்களுக்கும் ஏற்றதாக இருந்தது. அதனால், இந்தப் போட்டிக்கு களிமண் தரை ஆடுகளம் கொடுக்கப்படலாம். இது லக்னௌ பௌலர்களுக்கு ஆரம்பத்தில் சாதகமாக அமையலாம். அதனால் முதல் 2-3 ஓவர்கள் சிஎஸ்கே பேட்டர்கள் கவனமாக எதிர்கொள்ளவேண்டும்.
அதேசமயம், இது வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் ஏற்றதாக இருக்கப்போவதில்லை. பெருமளவு சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களாக இல்லாவிட்டாலும், இந்த மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் பெரிது என்பதால் ஸ்பின்னர்களுமே இங்கு பந்துவீச விரும்புவார்கள்.
(கட்டுரையாளர் பாபா அபராஜித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர். 2012ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். தற்போது கேரளா அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு