You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தக் காலத்து இளம் அதிரடி பேட்டர்களுக்கு மத்தியிலும் கோலி கோலோச்சுவது எப்படி?
- எழுதியவர், பாபா இந்திரஜித்
- பதவி, கேகேஆர் முன்னாள் வீரர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
விராட் கோலி - ஐபிஎல் அரங்கில் தன்னுடைய 9வது சத்தை நிறைவு செய்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இன்னொரு வெற்றியையும் பெற்றுக்கொடுத்திருக்கிறார். 193 என்ற இலக்கைத் துரத்திய ஆர்சிபி, கோலியின் இந்த சதத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால், 16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கும் முன்னேறியிருக்கிறது.
கோலியின் இந்த இன்னிங்ஸ் வந்த சூழ்நிலை சற்று சவாலானதுதான். முந்தைய 2 போட்டிகளிலுமே அவர் டக் அவுட் ஆகியிருந்தார். அதனால், அவர் முதல் ரன் எடுத்தபோதே பெரும் ஆரவாரம் ஏற்பட்டது. அவரே கூட அந்த ரன்னைக் கொண்டாடினார். அப்படி பெருமளவு பேசப்பட்ட இரு டக் அவுட்களுக்குப் பிறகு இப்படியொரு இன்னிங்ஸைக் கொடுத்திருக்கிறார் கோலி.
இந்த சேஸை ஆரம்பத்தில் இருந்தே தன் கட்டுக்குள் வைத்திருந்தார் விராட். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பௌலர்களால் எந்த சூழ்நிலையிலும் சவால் கொடுக்கவே முடியவில்லை. அனுகூல் ராய் பந்துவீச்சில் நேராக அடித்த சிக்ஸர், கார்த்திக் தியாகி பந்துவீச்சில் ஃபிளிக் மூலம் அடித்த சிக்ஸர்கள் கோலியின் ஆஸ்தான அழகான ஆட்டத்துக்கான சில உதாரணங்கள்.
இருந்தாலும் நான் கோலியின் ஆட்டத்தில் அதிகம் வியந்து பார்ப்பது அவர் ஆடிய வேகம். ஆரம்பத்திலேயே வைபவ் அரோரா பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்துத் தொடங்கியவர், எந்த இடத்திலும் தன் வேகத்தைக் குறைக்கவில்லை. 175 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி இந்த ஆட்டத்தை முடித்தார் விராட். அதேசமயம், இந்த சீசன் முழுவதுமே.... ஏன், கடந்த சில சீசன்களாகவே அவர் இந்த வேகத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார் என்பது மிகவும் முக்கியமான விஷயம்.
அடுத்த தலைமுறை வீரர்கள் தங்களின் அசாத்திய அதிரடியால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துக்கொண்டிருக்கும்போது, கோலியும் அந்த ஆட்ட முறைக்கு ஈடுகொடுக்கத் தொடங்கியிருக்கிறார். 19 சீசன்களாக ஆடிக்கொண்டிருக்கும் அவர், நேற்றைய போட்டியின்போது 'அதிக ஐபில் ஆட்டங்களில் ஆடியவர்' என்ற சாதனையை (279 போட்டிகள்) படைத்தார். இருந்தாலும், இன்னும் அந்த வேட்கை குறையாமல், இந்தத் தலைமுறை வீரர்களுக்கு நிகராக விளையாடுகிறார்.
விராட் கோலியின் ஐபிஎல் ஸ்டிரைக் ரேட் - 134.27. ஆனால், இந்த சீசனில் 165.75 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருக்கிறார் அவர். ஸ்டிரைக் ரேட்டின் படி விராட் கோலியின் மிகச் சிறந்த சீசன் இதுதான். இந்த ஸ்டிரைக் ரேட்டில் ஆடியும், ஆரஞ்ச் கேப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் அவர். வேகமாக மாறிக்கொண்டே இருக்கும் இந்த ஆட்டத்தில், அதற்கேற்ப தன் ஆட்டத்தையும் மாற்றிக்கொண்டிருப்பதில் தான் விராட் கோலி எனும் ஜாம்பவானின் வெற்றி அடங்கியிருக்கிறது.
இளைஞர்களுக்கு இணையான ஆட்டம்
ஐபிஎல் - 2008ல் தொடங்கப்பட்ட இந்தத் தொடர் வெகுதூரம் கடந்து வந்திருக்கிறது. வெகுவாகப் பரிமாணம் அடைந்து பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அதிவேகமாக மாற்றங்களை சந்தித்திருக்கிறது. குறிப்பாக பேட்டிங்.
ஆரம்ப காலத்தில் இருந்ததற்கு தற்போது பேட்டிங் செய்யும் டெம்ப்ளேட்டே மாறியிருக்கிறது. முன்பெல்லாம் பவர்பிளேவில் ஓரளவு அதிரடி காட்டுவார்கள். பின்னர் டெத் ஓவர்களில் முழுமையான அதிரடி ஆட்டம் ஆடுவார்கள். பவர்பிளே மற்றும் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளைத் தக்கவைப்பதும் முக்கியமான இலக்காக இருக்கும். ஆனால், ஐபிஎல் பேட்டிங் இன்று அப்படி இல்லை. முதல் பந்தில் இருந்தே அடி தான். விக்கெட் வீழ்ச்சியைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல் உச்சபட்ச அதிரடியை ஆரம்பத்திலிருந்தே அணிகள் வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.
அபிஷேக் ஷர்மா, பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே என அடுத்த தலைமுறை வீரர்கள் இன்று ஐபிஎல் பேட்டிங்கையே மறுவறையறை செய்துகொண்டிருக்கிறார்கள். ரன்கள் பட்டியலில், சிக்ஸர்கள் பட்டியலில் இவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த ஆட்டம், இந்த பாணியைக் கடைபிடிக்கவேண்டிய அவசியத்தை அனைத்து அணிகளுக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. இது, நீண்ட காலம் ஐபிஎல் தொடரில் ஆடிக்கொண்டிருக்கும் முன்னணி வீரர்கள் பலருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
அபிஷேக் ஷர்மா, சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் சமீபமாக இந்த அரங்குக்குள் நுழைந்தவர்கள். அவர்கள் இந்த பாணி கிரிக்கெட்டை தங்கள் ஆரம்ப காலத்திலேயே ஆடிப் பழகிவிட்டார்கள். ஆனால், ஐபிஎல் தொடைரின் ஆரம்ப கட்டத்திலிருந்து ஆடும் வீரர்கள் இதற்குக் தகவமைத்துக்கொள்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால், பாரம்பரிய கிரிக்கெட் ஆடிப் பழகிய இந்தியாவின் இரண்டு நட்சத்திர வீரர்கள் இந்த இளம் வீரர்களுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் கோலியைப் பற்றிப் பேசும்போது கே.எல்.ராகுலை மறந்துவிட முடியாது. ஏனெனில், அவரும் கோலியைப் போலவே புதியதொரு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். முன்னதாக ஐபிஎல் வரலாற்றின் 3வது மிகப் பெரிய ஸ்கோரை (152*) இந்த சீசனில் பதிவு செய்திருந்த ராகுல், ஆரஞ்ச் கேப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார். அது வழக்கமாக இடம்பெற்றுவிடவதுதான் என்றாலும், 177.98 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் ஆடியிருக்கிறார் என்பதுதான் சிறப்பு. ஸ்டிரைக் ரேட் அடிப்படையில் கோலியைப் போல் ராகுலுக்கும் இதுதான் சிறந்த சீசன்.
வேகமாக ஆடியிருக்கிறார் என்பதால் மட்டும் கோலியைப் பற்றிய இந்தக் கட்டுரையில் நான் ராகுலைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவர்கள் இருவரும் சந்தித்த சூழ்நிலைகள், விமர்சனங்கள் எல்லாம் ஒன்றுதான். அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்துகொண்டிருக்கும் விதமும் ஒன்றுதான். அவர்கள் இருவரும் சொல்லும் பாடமும் ஒன்றுதான். அதனால் தான், இந்தக் கட்டுரையில் நான் ராகுலையும் குறிப்பிடுகிறேன்.
விமர்சனங்களுக்கான பதில்கள்
கோலி, ராகுல் இருவருமே ஐபிஎல் தொடரின் மிகமுக்கிய பேட்டர்களாக விளங்கியிருக்கிறார்கள். தங்கள் அணிகளுக்கு மேட்ச் வின்னர்களாக ஜொலித்திருக்கிறார்கள். சீசனின் டாப் ரன் ஸ்கோரருக்கான ஆரஞ்ச் கேப்களை வென்றிருக்கிறார்கள். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இருவருமே ஒரு பெரிய விமர்சனத்தை சந்திக்கவேண்டியிருந்தது - ஸ்டிரைக் ரேட்.
ஐபிஎல் பேட்டிங் மாறிக்கொண்டிருக்க, இந்த இரு சீனியர் பேட்டர்களின் ஸ்டிரைக் ரேட்டும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஆனால், கடந்த 2 சீசன்களாக அந்த விமர்சனங்களுக்கு இவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக பதிலளித்துக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த சீசன் அந்தக் கேள்விகளெல்லாம் இனி எழாத வகையில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
தன் ஸ்டிரைக் ரேட் மீதான விமர்சனங்களுக்கு ஒருமுறை நேரடியாக பதிலளித்த ராகுல், "நான் அதையெல்லாம் சரிசெய்யும் வகையில் தயாராகியிருக்கிறேன்" என்று கூறியிருந்தார். சொன்னது போலவே இந்த சீசனில் 180 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார் அவர். அவர் நிச்சயம் இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார். அதற்குத் தகுந்த ஒரு செயல்பாட்டைத் தான் அவர் சீசனில் கொடுத்திருக்கிறார்.
ஸ்பின்னுக்கு எதிரான கோலியின் ஆட்டம் விமர்சனங்களை சந்தித்துக்கொண்டிருந்த நிலையில், தன் பேட்டால் அதற்குப் பதில் சொல்லியிருக்கிறார் கோலி. கடந்த 2 சீசன்களாக தன் ஆட்டத்தை அடுத்த கட்டத்தற்கு கொண்டுசென்றிருக்கும் அவர், அந்த இளைஞர்களைப் போலவே பவர்பிளேவில் நன்கு அதிரடி காட்டிக்கொண்டிருக்கிறார். இந்த ஐபிஎல் சீசனில் அவருடைய ஸ்டிரைக் ரேட் 164.06. அவர் இங்கிலாந்தில் தன் பவர் ஹிட்டிங்கில் நன்கு பயிற்சி செய்திருக்கிறார்.
சர்வதேச டி20 ஃபார்மட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இன்னும் சற்று சுதந்திரத்தோடு விளையாடுகிறார் கோலி. ஆனால், இன்னும் அந்த வேட்கை கொஞ்சமும் குறையவில்லை என்பதுதான் அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதையும் எடுத்துச் சொல்கிறது.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ரபாடாவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகள் விளாசினார் கோலி. அந்த அதிரடி ஒருபக்கம் பேசப்படவேண்டியது என்றால், ரபாடாவின் அடுத்த ஓவரில் அவுட்டாகி வெளியேறியபோது அவர் வெளிப்படுத்திய ஏமாற்றமும் கவனத்தில் கொள்ளவேண்டியது. இவ்வளவு சாதித்த பிறகும் அவர் ஒவ்வொரு வாய்ப்பிலும் பெரிய தாக்கம் ஏற்படுத்த நினைக்கிறார். அது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. அந்த தாகம் தான் இன்றும் அவரை தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு வீரராக வைத்திருக்கிறது.
இந்த மாற்றம் சாத்தியப்படுவது எதனால்?
இதுபோன்று ஆட்டத்தை மாற்றுவது எளிதான விஷயம் இல்லை. நீங்கள் உங்களுக்கென்று ஒரு ஆட்ட முறையை வகுத்து வைத்திருப்பீர்கள். ஆண்டாண்டுகளாக அதற்குப் பழகியிருப்பீர்கள். உதாரணமாக கோலியை எடுத்துக்கொள்வோமே, அவர் ஆரம்பத்தில் சற்று வேகமாகத் தொடர்வார். அதன்பிறகு அதிகமாக சிங்கிள்கள், டபுள்கள் எடுத்துத்தான் தன் ஆட்டத்தைக் கட்டமைப்பார். அதுதான் நாம் பார்த்துப் பழகிய விராட் கோலி. ஆனால், அதை அப்படியே மாற்றுவது மிகவும் கடினமான ஒன்று. அணுகுமுறையை மாற்றுவது பெரிய விஷயமென்றால், அதை வெற்றிகரமாக மாற்றுவதென்பது அசாத்தியமான ஒன்று.
இந்த மாற்றத்தை அவர்களால் ஏற்படுத்த முடிந்ததற்கான காரணம் அவர்களின் அடிப்படை சரியாக இருப்பதுதான். அவர்கள் இருவருமே பேட்டிங் அடிப்படைகளை துல்லியமாக வைத்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியவர்கள், அதை எந்த வகையிலும் கடினமாக்கிக்கொள்ளாமல் எளிமையாக வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்களால் தங்களின் ஆட்டத்தை விரிவுபடுத்த முடிகிறது. பவர் ஹிட்டிங், ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்துவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் காண முடிகிறது.
இந்த மாற்றம் அந்த வீரர்களுக்கு நல்ல முடிவைக் கொடுப்பதோடு, ரசிகர்களுக்குமே ஒரு புதுவித மகிழ்ச்சியைக் கொடுக்கும். முன்பே சொன்னதுபோல், ஒரு குறிப்பிட்ட முறையில் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் விளையாடுவதைப் பார்த்துப் பழகியவர்களுக்கு இந்த மாற்றம் புதிய அனுபவமாக இருக்கும்.
கோலி & ராகுல் ஏன் ஜாம்பவான்கள்
அந்த இளம் வீரர்களைப் பொறுத்தவரை அவர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகம் இல்லை. அவர்கள் இப்போதுதான் அதை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இந்த அதிரடியான அணுகுமுறையை செயல்படுத்துவது எளிதானது தான். ஏனெனில், எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் நெருக்கடி அவர்களுக்கு இல்லை.
ஆனால், கோலிக்கும் ராகுலுக்கும் அப்படி இல்லை. அவர்கள் இருவர் மீதும் நினைத்துப் பார்க்க முடியாத எதிர்பார்ப்பு இருக்கிறது. தங்கள் அணிகளின் முக்கிய வீரர்கள் அவர்கள். பல தருணங்களில் அந்த அணிகள் இவர்களையே நம்பியிருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஆர்சிபி அணியின் கடந்த சில போட்டிகளைப் பார்ப்போமே. ஃபில் சால்ட் காயம் காரணமாக ஆடாமல் போக, அவருக்குப் பதில் ஓப்பனராக ஆடும் ஜேக்கப் பெதெலால் இன்னும் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. அதனால், பவர்பிலேவில் நல்ல தொடக்கம் ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு கோலியின் தோள்களில் விழுகிறது. அதையும் அவர் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப ஆடுகிறார்.
குஜராத்துக்கு எதிராக ரபாடா பந்துவீச்சில், நேற்று வைபவ் அரோரா பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசியது அந்த அதிரடியை தான் முன்னெடுக்கவேண்டும் என்பதால் தான். ஆனால், நல்ல தொடக்கம் கொடுக்கவேண்டும் என்பதில் இருந்து, நல்லபடியாக போட்டியை முடித்துக்கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர் மீது இருக்கவே செய்யும். விராட் அதை வெற்றிகரமாக நேற்று உள்பட பல போட்டிகளிலும் செய்திருக்கிறார்.
ராகுலுக்கும் இதே கதைதான். டெல்லி அணி இரண்டு ஆண்டுகளாக நிரந்தரமான 2வது ஓப்பனரைக் கொண்டிருக்கவில்லை. பலரையும் மாற்றிவிட்டது. அவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் விட்டுவிட, ராகுல் தான் நல்ல தொடக்கம் கொடுக்கவேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டுவிருகிறது. மிடில் ஆர்டரும் சீரற்று ஆடுவதால், வேகமாக ஆடுவதோடு வெகுநேரம் ஆடவேண்டும் என்ற தேவையும் ஏற்படுகிறது. அவர் அதற்கு ஏற்பவும் தன் ஆட்டத்தை கட்டமைத்துக்கொள்கிறார். வெற்றிகரமாக இந்த சீசன் செய்துகொண்டும் இருக்கிறார்.
இப்படியான சூழல்கள் அனைத்தையும் சமாளித்து, தங்கள் ஆட்டத்தையும் இவர்கள் 'அப்கிரேட்' செய்திருப்பது அற்புதமான விஷயம். அது எல்லோராலும் முடிந்திடாது. அதனால் தான் இவர்கள் ஐபிஎல் ஜாம்பவான்களாகத் திகழ்கிறார்கள்.
(கட்டுரையாளர் பாபா இந்திரஜித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர். இந்தியா ஏ அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார். தற்போது தமிழ்நாடு அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு