'பாட்டி சொல்லை தட்டாதே' - மனோரமாவின் மறக்க முடியாத 10 படங்கள்

மனோரமா, கோலிவுட்

பட மூலாதாரம், S KUMARESAN

    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்தவர் யார் என்று கேட்டால், 'ஆச்சி' மனோரமா என்பார்கள். சுமார் 1500 படங்களில் நடித்து சாதனை படைத்து இருக்கிறார். இது தவிர ஆயிரக்கணக்கான மேடை நாடகங்களிலும் நடித்து இருக்கிறார்.

முதல்வர்களாக இருந்த அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடகங்களில் நடித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் என்.டி.ஆருடன் சினிமாவில் நடித்து இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுடன் 'ஒரே ரத்தம்' படத்தில் நடித்தார். அந்த வகையில் 6 முதல்வர்களுடன் நடித்த நடிகை என்ற சாதனையை படைத்திருந்த மனோரமா 2015ல் மறைந்துவிட்டார்.

ஆனாலும், இந்த மாதம் அந்த சாதனையை அவரே முறியடித்துவிட்டார். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில், 7 முதல்வர்களுடன் நடித்த நடிகை என்ற சாதனையை மனோரமா படைத்து இருக்கிறார்.

ரசிகன் உள்ளிட்ட படங்களில் முதல்வர் விஜயுடன் மனோரமா நடித்து இருக்கிறார். இன்று மனோரமா பிறந்தநாள்.

6 மொழிகளில் நடித்தவர்

மனோரமாவுக்கு ஒரே மகன் பூபதி. அவரும் நடிகர்தான். அவரின் மகனும், மனோரமாவின் பேரனுமான ராஜராஜனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்

''மன்னார்குடியில் பிறந்தவர் ஆச்சி மனோரமா. அவரின் நிஜப்பெயர் 'கோபிசாந்தா' . குடும்ப சூழல் காரணமாக காரைக்குடி பள்ளத்துாரில் வளர்ந்தார். 12 வயதில் மேடை நாடகத்தில் நடிக்க தொடங்கியவர் தனது பெயரை மனோரமா என மாற்றிக்கொண்டார். நாடக இயக்குநர் திருவேங்கடம்தான் இவருக்கு "மனோரமா' என பெயர் சூட்டினார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய "வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய "உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும் நடிக்க மனோரமா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.

கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் "மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, மறைவுக்கு சில ஆண்டுகள் முன்புவரை நடித்துக்கொண்டிருந்தார். கருணாநிதி எழுதிய பொன்னர்சங்கர் அவர் நடித்த கடைசி படம். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். 1989ம் ஆண்டு 'புதிய பாதை' படத்துக்காக 'சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது பெற்றார். 2002ம் ஆண்டு 'பத்ம ஸ்ரீ' விருதைபெற்றார். கவுரவ டாக்டர் பட்டமும் பெற்று இருக்கிறார்.'' என்கிறார் ராஜராஜன்.

மனோரமா, கோலிவுட்
படக்குறிப்பு, பல நாடகக் குழுக்களிடமிருந்து மனோரமாவிற்கு அழைப்புகள் வர ஆரம்பித்தன.

ஒரே நாளில் 4 படப்பிடிப்புகள்

'' ஆச்சியின் பூர்வீகம் தஞ்சை என்பதால் மன்னர் ராஜராஜசோழன் நினைவாக எனக்கு இந்த பெயரை வைத்தார். நான் வளர்ந்த காலத்தில் ஆச்சி அவ்வளவு பிசி. சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒரே நாளில் 4 படங்களில் நடிப்பார். காலையில் 6 மணிக்கு வீட்டை விட்டு செல்பவர், இரவில்தான் வருவார். மறுநாள் மீண்டும் 6 மணிக்கு கிளம்பிவிடுவார். அவர் ஓய்வாக இருந்து பார்த்ததே இல்லை. அவர் 100க்கும் அதிகமான பாடல்களையும் பாடியிருக்கிறார்.'' என்கிறார் ராஜராஜன்

''அவருடன் சில படப்பிடிப்புகளுக்கு சென்றது நினைவில் இருக்கிறது. ஊட்டியில் ஒரு படப்பிடிப்புக்கு சென்றபோது விஜயகாந்த், நம்பியார் உள்ளிட்டோரை பார்த்து இருக்கிறேன். ரோஜாவனம் படத்துக்காக அவருடன் இருந்த நாட்களை மறக்க முடியாது. முதலில் அப்பாவை அவர் டாக்டர் ஆக்க ஆசைப்பட்டார். அவர் நடிகர் ஆகிவிட்டார். என்னை டாக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஆச்சி.'' என கூறுகிறார் டாக்டர் ராஜராஜன்

மனோரமா, கோலிவுட்

''சின்ன வயதில் நடிக்க வந்தாலும், நாம் ஜெயிக்க நேரம் முக்கியம் என ஆச்சி அடிக்கடி சொல்வார். எல்லாரிடமும் திறமை இருக்கிறது. சிலர் மட்டுமே ஜெயிக்க நேரம், கடவுள் அருள் வேண்டும் என்பார். அவரின் வெற்றிக்கு அவர் அம்மா ஒரு காரணம். அதேபோல், நடிப்பு என்றால் அவரை அடித்துக்கொள்ள முடியாது. அத்தனை கேரக்டரிலும் நடித்து இருக்கிறார். புராண படங்கள், கறுப்பு வெள்ளை படங்கள் தொடங்கி, நவீன சினிமா வரை நடித்தார். திருநங்கையாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஆச்சிக்கு இருந்தது. ஆனால், அது கனவாகவே போய்விட்டது. கடைசி காலத்தில் அவரின் ஒரே மகனான அப்பாவை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்று என்னிடம் ஆச்சி கூறினார்.

அப்பா சமீபத்தில் காலமானார்.ஆரம்பத்தில் என்னை தம்பி, தம்பி என கூப்பிட்டு வந்தார். ராசுக்குட்டி படம் வந்தபின், என்னை ராசுக்குட்டி என அழைக்க ஆரம்பித்தார். எனக்கும் அவர் நடித்த அந்த படம் ரொம்ப இஷ்டம்'' என்கிறார் ராஜராஜன்

மனோரமா படங்களில் உங்களுக்கு பிடித்த 10 பிரபல படங்கள் பற்றி சொல்ல முடியுமா என்று கேட்டோம்.

1) தில்லானாமோகனாம்பாள்

Manorama, Birthday, Veterian actress, Thillana moganambal

பட மூலாதாரம், VisionTimeTamil/Youtube

படக்குறிப்பு, தில்லானா மோகனம்பாள் திரைப்படத்தில் நடிகை மனோரமா

''நடிகர் திலகத்துடன் ஆச்சி நடித்த அந்த காவிய படத்தை யாராலும் மறக்க முடியாதே. அதில் ஜில்ஜில் ரமாமணியாக ஆச்சி வரும் காட்சிகள் அவ்வளவு விறுவிறுப்பாக, உற்சாகமாக இருக்கும். குறிப்பாக, சிவாஜிகணேசன் முன்னாள் அவர் நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிக்கு தியேட்டரே அதிரும். சிவாஜி, பத்மினி, பாலையா, நம்பியார் போன்ற பல நடிப்பு மேதைகள் நடித்திருந்தாலும், என் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருந்தார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் என்று அடிக்கடி ஆச்சி சொல்வார். நிஜ வாழ்க்கையிலும் தனது அண்ணனாக சிவாஜியை பார்த்தவர், அந்த படத்தில் ஏன் அண்ணே என்று வெள்ளந்தியாக பேசுவதே அழகு'' என கூறுகிறார் ராஜராஜன்

2) பாட்டி சொல்லை தட்டாதே

''நான் பிறந்த சில ஆண்டுகளில் இந்த படம் வந்தது. டெல்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லை தட்டாதே என பாடுவார். எனக்காகவே இந்த படத்தில் ஆச்சி நடித்து இருக்கிறார் என அப்போது நினைத்துக்கொண்டேன். இந்த படத்தில் ஆச்சியின் கெட்அப், எஸ்.எஸ்.சந்திரனுடன் இணைந்து அவர் அடிக்கிற லுாட்டி, அந்த பஸ் காட்சிகள் என அனைத்தும் மனதில் நிற்கிறது.'' என்கிறார் ராஜராஜன்.

3) சின்னகவுண்டர்

Manorama, Birthday, Veterian actress, Patti Sollai Thattadhe

பட மூலாதாரம், APInternational/Youtube

படக்குறிப்பு, பாட்டி சொல்லை தட்டாதே திரைப்படத்தில் நடிகை மனோரமா

''மாறுபட்ட கெட்அப்பில் ஆச்சி நடித்த படம். செயற்கை பல் வைத்து, தனது வழக்கமான பாடிலாங்குவேஜ் மாற்றி நடித்த படம். குறிப்பா, சுகன்யாவுக்கும், அவருக்குமான செல்ல சண்டை, பாசம் ரொம்பவே நல்லா இருக்கும். விஜயகாந்த், ஆச்சி சம்பந்தப்பட்ட பாசக்காட்சிகளும் நச்சென்று இருக்கும் ''என கூறுகிறார் ராஜராஜன்

4) சின்ன தம்பி

''பி.வாசு இயக்கிய இந்த படத்தில் ஆச்சி குணசித்திர நடிப்பில் மிரட்டியிருப்பார். குறிப்பாக பிரபுவின் தாயாக, வில்லன்களால் கொடுமையை அனுபவிக்கிற காட்சிகளில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அந்த காட்சியில் அவர் நடிப்பை பார்த்து கண் கலக்கியவர்கள் பலர்'' என கூறுகிறார் ராஜராஜன்

5) நடிகன்

Manorama, Birthday, Veterian actress, Patti Sollai Thattadhe

பட மூலாதாரம், BicstolMalayalamMovies/Youtube

படக்குறிப்பு, நடிகன் திரைப்படத்தில் நடிகை மனோரமா

''55வயதாகியும், செவ்வாய் தோஷத்தால் திருமணம் ஆகாமல் இருக்கும் கேரக்டர். அவ்வளவு ஸ்டைலாக வருவார். குறிப்பா, சத்யராஜ் அவருக்குமான அந்த காதல் காட்சி மிகவும் நாகரீகமாக, நேர்த்தியாக படமாக்கப்பட்டு இருக்கும். கத்தி மேல் நடக்கிற மாதிரியான கேரக்டர். கொஞ்சம் மாறினால் அந்த கேரக்டரை மக்கள் வெறுத்து இருப்பார்கள். ஆனால். பி.வாசு நன்றாக கதை எழுதியிருந்தார். நானும் நிறைய பயிற்சி எடுத்து நடித்தேன் என பல முறை நடிகன் கேரக்டர் பற்றி ஆச்சி சொல்லியிருக்கிறார்.'' என கூறுகிறார் ராஜராஜன்

6) சவால்

''தனிப்பட்டமுறையில் எனக்கு பிடித்த கேரக்டர் பர்மா பாப்பா. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா உட்பட பலர் நடித்து இருந்தனர். ஆச்சி பிக் பாக்கெட் அடிப்பவராக, அந்த தொழில் கற்றுக்கொடுப்பவராக மெட்ராஸ் பாஷை பேசியபடி வருவார். அந்த பர்மா பாப்பா கெட் அப்பே ஒருவித ஆண் தன்மையுடன் வித்தியாசமாக இருக்கும். லுங்கி கட்டியபடி அவர் வரும் அந்த கெட்அப் புதுசாக இருக்கும்.'' என்கிறார் ராஜராஜன்.

7) அன்பேவா

'' எம்.ஜி.ஆர், சரோஜா தேவி நடித்த இந்த படத்தில் ஆச்சியின் நடிப்பு, அந்த கதை எனக்கு பிடிக்கும். தொழிலதிபராக வரும் எம்.ஜி.ஆர்தான் அந்த பங்களா ஓனர் என தெரிந்தும், அதை சொல்லமுடியாமல் பயந்து தவிக்கும் கேரக்டரில் ஆச்சி கலக்கியிருப்பார். நாகேஷ், ஆச்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக இருக்கும்'' என கூறுகிறார் ராஜராஜன்

8) சம்சாரம் அது மின்சாரம்

Manorama, Birthday, Veterian actress, Samsaram Adhu Minsaram

பட மூலாதாரம், APInternational/Youtube

படக்குறிப்பு, சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் நடிகை மனோரமா

''கதையுடன் ஒன்றிப்போய் இருக்கிற கேரக்டரில் கண்ணம்மாவாக வருவார். இன்றைக்கும் அவரை நினைவில் வைத்திருக்கிற கேரக்டரில் ஒன்று. ஆரம்பத்தில் இந்த கேரக்டர் கதையில் இல்லை, பின்னர் சேர்க்கப்பட்டதாக தகவல்.'' என கூறுகிறார் ராஜராஜன்

9) அண்ணாமலை

''ரஜினி, ஆச்சி கூட்டணியில் வந்த சிறந்த படம். ரஜினிகாந்த் அம்மா காவேரியாக வருவார். அண்ணாமலையுடன் அவர் பாசத்தில் உருகுகிற விஷயம், வீட்டை இழந்து தவிக்கிற இடங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.'' என கூறுகிறார் ராஜராஜன்.

10) அருந்ததி

''தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். ஆச்சி நடித்த பேய் படங்களில் இது முக்கியமானது. தமிழிலும் ஹிட்டானது. சந்திரம்மா என்ற பாசக்கார பாட்டியாக வருவார். அனுஷ்கா, ஆச்சி இணைந்த காட்சிகள் பலரால் பாராட்டப்பட்டது'' என கூறுகிறார் ராஜராஜன்

Manorama, Birthday, Veterian actress, Arundhadhi

பட மூலாதாரம், UniverseofDevas/Youtube

படக்குறிப்பு, அருந்ததி திரைப்படத்தில் நடிகை மனோரமா

நடிகைகளுக்கு அவர் ஒரு ரோல் மாடல்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணசித்திர ரோலில் நடித்து வரும் தேவதர்ஷினி மனோரமா படங்கள் குறித்து பேசுகையில், ''என்னை போன்ற பல நடிகைகளுக்கு அவர் ரோல் மாடல் . அவர் நடித்த ஒவ்வொரு கேரக்டரும் எனக்கும் பாடம்.'' என கூறிய அவர் தனக்கு பிடித்த படங்களை பட்டியலிட்டார்.

''தில்லானா மோகனாம்பாள்: ஒரு சாதாரணக் கதாபாத்திரத்தைக்கூடத் தன் நடிப்பால் ரசிக்கத்தக்கதாகவும் நகைச்சுவை நிறைந்ததாகவும் மாற்றியிருப்பார்.

​மைக்கேல் மதன காமராஜன்: குறைபாடுகள் நிறைந்த ஒரு கதாபாத்திரம், ஆனாலும் அவர் நடித்ததால் மட்டுமே அது அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக மாறியது.

​சின்ன கவுண்டர்: அவருடைய மிகச் சிறந்த, மறக்க முடியாத நடிப்பு. நகைச்சுவையையும் உணர்ச்சிகளையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

​பாட்டி சொல்லைத் தட்டாதே: தன் அசாத்தியமான நகைச்சுவை மற்றும் ஒரு பாடகியாகத் தன் சிறந்த குரல் வளத்தால், ஒட்டுமொத்தத் திரைப்படத்தையுமே தன் தோள்களில் தாங்கிச் சுமந்திருப்பார்.

​அபூர்வ சகோதரர்கள்: கமல் சார் மற்றும் ஆச்சியின் இந்த அசத்தலான கூட்டணியை எப்போதுமே ரசித்துப் பார்க்கலாம்.'' என்கிறார் தேவதர்ஷினி

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு