தமிழகம் பெரிதும் எதிர்பார்த்த ராயல் என்ஃபீல்ட், ஏஎம்சிஏ போர் விமான ஆலைகள் ஆந்திரா சென்றது ஏன்?

தமிழ்நாடு, ஆந்திரா, ராயல் என்ஃபீல்டு, ஏஎம்சிஏ

பட மூலாதாரம், Getty Images/X/ChandrababuNaidu

படக்குறிப்பு, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சத்தியவேடு அருகே ரல்லக்குப்பம் மற்றும் வானல்லூர் கிராமங்களுக்கு அருகில் ஓர் ஆலையைத் தொடங்கவுள்ளது.
    • எழுதியவர், பல்லா சதீஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ராயல் என்ஃபீல்ட் மற்றும் இந்தியாவின் 5-வது தலைமுறை அதிநவீன போர் விமான (AMCA) தொழிற்சாலைகள் ராயலசீமா பகுதியில் அமையவுள்ளதாக ஆந்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

எல்லையின் ஒரு முனையில், சத்தியவேடு அருகே ராயல் என்ஃபீல்ட் தொழிற்சாலையும், மறுமுனையில் புட்டபர்த்தியில் போர் விமானம் சார்ந்த தொழிற்சாலைகளும் அமையவுள்ளன.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்... இந்த இரு இடங்களுமே ராயலசீமா எல்லையில் அமைந்துள்ளன. இந்த இரு இடங்களில் ஒன்று சென்னை துறைமுகத்திற்கும், மற்றொன்று பெங்களூரு விமான நிலையத்திற்கும் மிக அருகில் உள்ளன.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சத்தியவேடு அருகே ரல்லக்குப்பம் மற்றும் வானல்லூர் கிராமங்களுக்கு அருகில் ஓர் ஆலையைத் தொடங்கவுள்ளது.

இந்த இடம் சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாலை மார்க்கமாகச் சென்றால் சுமார் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் ஆகும்.

5-வது தலைமுறை அதிநவீன போர் விமானம் சார்ந்த ஆலைக்காக ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நகரம் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ளது. சாலை மார்க்கமாகப் பயணிக்க சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஆகும்.

உண்மையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், பெங்களூரு நகரத்தின் சில இடங்களில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தை அடைவதற்கே அதே அளவு நேரம் தான் ஆகும்.

தமிழ்நாடு, ஆந்திரா, ராயல் என்ஃபீல்டு, ஏஎம்சிஏ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அனந்தபூர் பெங்களூருவிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பதி சென்னையிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன.

ராயலசீமா நிலவியல் ரீதியாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது.

இது பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களை ராயலசீமாவிற்கு மிக அருகில் கொண்டு வருகிறது. இந்த இரு நகரங்களும் அந்த இரு மாநிலங்களின் ஒரு மூலையில், ராயலசீமாவிற்கு அருகில் அமைந்துள்ளன.

உதாரணமாக, அனந்தபூர் பெங்களூருவிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பதி சென்னையிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன.

குப்பம் நகரம் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. குப்பத்திலிருந்து நீங்கள் 20 கிமீ பயணித்தால், மாநில எல்லைகள் மாறிவிடும். ஆந்திரப் பிரதேச அரசு அந்தச் சாதகமான அம்சத்தைப் பயன்படுத்தி அங்கு ஒரு விமான நிலையத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது.

'அதுதான் எங்கள் அதிர்ஷ்டம்'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பெங்களூரு நகரத்திற்கு இரண்டாவது விமான நிலையம் தேவைப்படுகிறது. அந்த இரண்டாவது விமான நிலையத்தின் மூலம் பயனடைய மூன்று மாநிலங்கள் முயற்சித்து வருகின்றன.

கர்நாடக அரசு இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழக அரசு பெங்களூருவுக்கு அருகில் உள்ள ஓசூரில் ஒரு விமான நிலையத்தை உருவாக்கப் பரிசீலித்து வருகிறது.

ஆந்திரப் பிரதேச அரசு குப்பத்தை மையமாகக் கொண்டு ஒரு விமான நிலையத்தை உருவாக்க விரும்புகிறது.

இதேபோல், பெங்களூரு மற்றும் சென்னை நகரங்கள் ஆந்திராவின் எல்லைப் பகுதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

1980-களுக்குப் பிறகு, ஹைதராபாத்தில் கடலோர மற்றும் ராயலசீமா பகுதி மக்களின் முதலீடுகள் அதிகரித்ததாகவும், அதற்கு முன்பு, ராயலசீமா மக்கள் முதலீடுகள், பெரிய மருத்துவமனைகள் மற்றும் பிற தேவைகளுக்காக சென்னை மற்றும் பெங்களூருவை பெரிதும் சார்ந்திருந்ததாகவும் அப்பகுதி மக்கள் அடிக்கடி கூறுகின்றனர்.

தற்போது முதலீட்டாளர்கள், தங்கள் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக, முக்கிய நகரங்கள், பிரதான விமான நிலையங்கள், துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற முக்கிய வழித்தடங்கள் அருகருகே அமைந்துள்ள எல்லைப் பகுதிகளில் குவிந்துள்ளனர்.

"பெங்களூரு விமான நிலையத்திலிருந்து பெங்களூரு நகரத்திற்குள் செல்வதற்கு முன்பாகவே நாம் அனந்தபூரைச் சென்றடைந்து விட முடியும். அதனால் தான் அனைவரும் எங்கள் பக்கம் வர விரும்புகிறார்கள். அது எங்களது அதிர்ஷ்டம்" என்று ஆந்திரப் பிரதேச தொழில்துறை அமைச்சர் டி.ஜி. பரத் கூறினார்.

"தொழிற்சாலைகளின் வருகை வரவேற்கத்தக்கது. இந்தத் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எல்லைகளில் இருந்தே வருகின்றன. மையப்பகுதி ராயலசீமாவிலிருந்து மிகக் குறைவானவையே வருகின்றன. சென்னை துறைமுகமும் பெங்களூரு விமான நிலையமும் அவர்களுக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளன. இதன் காரணமாக, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் போக்குவரத்திற்கு அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில், அந்த இரு மாநிலங்களுக்கும் இது ஓரளவு லாபகரமாக இருக்கும்" என்று அனந்தபூரைச் சேர்ந்த மனித உரிமைகள் மன்றத் தலைவர் சந்திரசேகர் கூறினார்.

"ராயலசீமாவில் ஏராளமான காலி நிலங்கள் உள்ளன. அங்கு விவசாயம் இல்லை. உள்ளூர் சூழ்நிலைகளைப் பொறுத்து, அங்கு விவசாயம் சார்ந்த நிறுவனங்களையும் ஊக்குவிக்க வேண்டும். பெங்களூருவிலிருந்து புட்டபர்த்திக்கு மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த நேரத்தில் நீங்கள் அங்குச் சென்றுவிட முடியும். ஸ்ரீ சிட்டியும் அதே போன்றது தான். நிறுவனங்கள் அண்டை நகரங்களுக்குப் பேருந்துகளை இயக்கி வருகின்றன" என்று ராயலசீமா உரிமைக் கழகத் தலைவர் பூமன் கூறினார்.

தமிழ்நாடு, ஆந்திரா, ராயல் என்ஃபீல்டு, ஏஎம்சிஏ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "பெங்களூரு விமான நிலையத்திலிருந்து பெங்களூரு நகரத்திற்குள் செல்வதற்கு முன்பாகவே நாம் அனந்தபூரைச் சென்றடைந்து விட முடியும். அதனால் தான் அனைவரும் எங்கள் பக்கம் வர விரும்புகிறார்கள். அது எங்களது அதிர்ஷ்டம்" என்று ஆந்திரப் பிரதேச தொழில்துறை அமைச்சர் டி.ஜி. பரத் கூறினார்.

கியா தொழிற்சாலை பெங்களூரு நகரத்தில் இருந்து சுமார் 150 கிமீ தொலைவில் உள்ள பெனுகொண்டாவில் அமைந்துள்ளது.

சத்தியவேடு அருகே உள்ள ஸ்ரீ சிட்டி சென்னையில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது.

காலையில் நீங்கள் ஸ்ரீ சிட்டி பகுதிக்குச் சென்றால், சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் உள்ள நிறுவனங்களுக்காக சென்னையிலிருந்து ஏராளமான அதிகாரிகளும் ஊழியர்களும் பேருந்துகள் மற்றும் கார்களில் வருவதைக் காண முடியும்.

இந்தச் சாதகமான அம்சத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஆந்திரப் பிரதேச அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்று கூறலாம்.

இருப்பினும், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் வந்தபோதிலும், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இந்த சர்ச்சை கடந்த காலத்தில் கியா தொழிற்சாலை அமைக்கப்பட்ட போதும் இருந்தது.

உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் அரசாங்கத்தின் கொள்கைகள் அமைய வேண்டும் என்று ராயலசீமா பகுதி மக்கள் விரும்புகிறார்கள்.

"ஸ்ரீ சிட்டியில் சுமார் 200 நிறுவனங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள். உள்ளூர் மக்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இருப்பினும், ஹோட்டல்கள் போன்ற மறைமுக வேலைவாய்ப்புகளால் உள்ளூர் மக்கள் பயனடைகின்றனர். சென்னைவாசிகள் தவிர, வங்காளம், பிஹார் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வேலைக்கு வருகிறார்கள்" என்று பூமன் கூறினார்.

"கியாவில் பல தமிழர்கள் உள்ளனர். நாங்கள் எங்கள் நிலத்தையும் நீரையும் தருவதால், எங்கள் மக்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். தேவைப்பட்டால், திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளன. அவர்களுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக் கொடுத்து, பின்னர் வேலை வழங்க வேண்டும். நிறுவனங்கள் வருவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், உள்ளூர் மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், உள்ளூர்வாசிகளுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும் விதிகள் உருவாக்கப்பட வேண்டும். திறன்கள் கற்றுத்தரப்பட வேண்டும்" என்று பூமன் கூறினார்.

"என் கருத்துப்படி, சமீபகாலமாக வரும் தொழிற்சாலைகளில், பொதுத் தொழிலாளர்கள் மற்றும் பகுதித் திறன் கொண்டவர்களை விட, அதிகத் திறன் கொண்ட ஊழியர்கள் தேவைப்படும் நிறுவனங்களே அதிகம் உள்ளன. இதன் காரணமாக, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சில சிரமங்கள் உள்ளன. கியா போன்ற நிறுவனங்களில் உள்ளூர் ஊழியர்கள் அதிகம் இல்லை. அப்படி இருப்பவர்களும் பெரும்பாலும் கீழ் மட்டங்களிலேயே உள்ளனர். இருப்பினும், அந்தத் தொழிற்சாலையானது நேரடி வேலைவாய்ப்பை விட, மறைமுக வேலைவாய்ப்பு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற வணிகங்களின் பொருளாதார வளர்ச்சியில் தான் பயனுள்ளதாக இருந்துள்ளது" என்று சந்திரசேகர் கூறினார்.

தமிழ்நாடு, ஆந்திரா, ராயல் என்ஃபீல்டு, ஏஎம்சிஏ

பட மூலாதாரம், X/tgbharath

படக்குறிப்பு, ஆந்திரப் பிரதேச தொழில்துறை அமைச்சர் டி.ஜி. பரத்

ராயலசீமாவில் தோட்டக்கலைத் துறை வளர்ந்து வருவதால், அது சார்ந்த தொழிற்சாலைகள் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சந்திரசேகர் கூறுகிறார்.

"உள்ளூர் மக்களுக்கு உண்மையில் எத்தனை வேலைகள் கிடைக்கின்றன என்பது குறித்த புள்ளிவிவரங்கள் வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில், உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் நிறுவனங்கள் வெளியேறிவிடும் என்றும் சிலர் வாதிடுகின்றனர். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. உள்ளூர் மக்களை விட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக வேலை செய்கிறார்கள் என்று சில நிர்வாகங்கள் நம்புவதாகத் தெரிகிறது" என்று பூமன் விவரித்தார்.

ஆந்திரப் பிரதேச தொழில்துறை அமைச்சர் டி.ஜி. பரத் இது குறித்து பிபிசியிடம் பேசினார்.

"இப்போது எங்களது கர்னூலுக்கும் பல நிறுவனங்கள் வருகின்றன... அதனையும் தெலுங்கானா எல்லை என்று சொல்லிவிட முடியுமா.." என்று பரத் நகைச்சுவையாகக் கூறினார்.

"எதுவுமே இல்லாத இடத்தில் ஏதோ ஒன்று உருவாகி வருகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். முதலில் ஏதேனும் ஒன்று தொடங்கப்பட வேண்டும். நாம் இங்கு வழங்கும் வசதிகளும், முதலமைச்சரின் பிராண்ட் இமேஜும் நிறுவனங்களைக் கொண்டு வருகின்றன. அதுமட்டுமின்றி மத்திய அரசின் ஆதரவும் உள்ளது. உதாரணமாக, கியா நிறுவனத்தால் பெனுகொண்டா பகுதி எவ்வளவு மாறியிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அது பாராட்டப்பட வேண்டும்" என்று பரத் கூறினார்.

உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்புப் பிரச்னை குறித்து பரத் பதிலளித்தார்.

"தொழிற்சாலைகள் தங்களது நிறுவனங்களை நடத்துவதற்கு அனுபவம் வாய்ந்த ஊழியர்களையே எதிர்பார்க்கின்றன. ஓர் ஆலையை இயக்குவதற்கு அறிவு தேவைப்படுகிறது. அந்த வரிசையில், உயர் மட்ட ஊழியர்களில் வெளி ஊர்களைச் சேர்ந்தவர்கள் இருப்பது இயல்பானதுதான். அதனால்தான் உள்ளூர் மக்களுக்கு முதலில் கீழ் மட்ட வேலைகள் கிடைக்கின்றன. நிறுவனங்களுக்கும் கூட அனைத்து ஊழியர்களையும் வெளியிலிருந்து அழைத்து வருவது ஒரு சுமையாக இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, புதியவர்களையும் அந்த வேலை புரிதல் இல்லாதவர்களையும் யாரும் வேலைக்கு அமர்த்துவதில்லை. எனக்குத் தெரிந்தவரை, 80 சதவீத வேலைகள் உள்ளூர் மக்களுக்கே கிடைக்கின்றன. 20 சதவீதம் மட்டுமே வெளியாட்களுக்குச் செல்கிறது. மிகப்பெரிய நகரங்களிலும் தொழில்துறைப் பகுதிகளிலும் இது வேறுபடலாம். ஆனால், புதிதாக வளர்ந்து வரும் பகுதிகளில் இதுதான் நிலைமை" என்று பரத் விளக்கினார்.

இருப்பினும், முதலில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டால், உள்ளூர் வேலைவாய்ப்பு படிப்படியாக அதிகரிக்கும் என்று அமைச்சர் பரத் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு