விஜய் அமைச்சரவையில் 4 பெண்கள், 7 பட்டியல் சாதியினர்: 23 புதிய அமைச்சர்களும் இலாகா ஒதுக்கீடும்

தமிழக, விஜய் அமைச்சரவை விரிவாக்கம், 5 பெண் அமைச்சர், 7 பட்டியல் பிரிவு அமைச்சர்கள்

பட மூலாதாரம், TN DIPR

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. இந்நிகழ்வில், முதலில் வந்தே மாதரமும் பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்ட பின்னரே, மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அதன் பின்னர், புதிய அமைச்சர்களாக ஸ்ரீநாத், கமலி உள்ளிட்ட 23 பேரும் பதவியேற்றனர். இதில், காங்கிரஸ் சார்பாக ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆஜிய இருவரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சர்களுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் நிறைவாக வந்தே மாதரம் தேசிய கீதம் ஆகிய இரண்டும் பாடப்பட்டன.

புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முழக்கமிட்ட அமைச்சர்கள்

காங்கிரஸ் சார்பில் அமைச்சராக பதவியேற்ற ராஜேஷ்குமார் உறுதிமொழிக்குப் பிறகு, "காமராஜர், ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி வாழ்க" என முழக்கமிட்டார். அப்போது ஆளுநர், "இது உங்கள் உறுதிமொழியின் ஓர் அங்கம் அல்ல" என்றார்.

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வென்ற விஜய் தமிழன் பார்த்திபன் அமைச்சராக பதவியேற்றபோது, "வாழ்க கழக தலைவர் (விஜய்), வளர்க தமிழ்" என முழக்கமிட்டார்.

புதிய அமைச்சர்கள் பட்டியல்

1. ஸ்ரீநாத் (தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி)

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

2. கமலி (அவினாசி சட்டமன்றத் தொகுதி)

3. சி.விஜயலஷ்மி (குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி)

4. ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி)

5. வினோத் (கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி)

6. ராஜீவ் (திருவாடானை சட்டமன்றத் தொகுதி)

7. ராஜ்குமார் (கடலூர் சட்டமன்றத் தொகுதி)

8. காந்திராஜ் (அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி)

9. மதன் ராஜா (ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி)

10. ஜெகதீஷ்வரி (ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி)

11. ராஜேஷ்குமார் (கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி)

12. விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)

13. லோகேஷ் தமிழ்ச் செல்வன் (ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி)

14. விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி)

15. ரமேஷ் (ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி)

16. விஸ்வநாதன் (மேலூர் சட்டமன்றத் தொகுதி)

17. குமார் (வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி)

18. தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி)

19. சம்பத் குமார் (கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி)

20. முகமது ஃபர்வஸ் (அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி)

21. சரத்குமார் ( தாம்பரம் சட்டமன்றத் தொகுதி)

22. மேரி வில்சன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி)

23. விக்னேஷ் (கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி)

தமிழக, விஜய் அமைச்சரவை விரிவாக்கம், 5 பெண் அமைச்சர், 7 பட்டியல் பிரிவு அமைச்சர்கள்
தமிழக, விஜய் அமைச்சரவை விரிவாக்கம், 5 பெண் அமைச்சர், 7 பட்டியல் பிரிவு அமைச்சர்கள்

விஜய் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 23 அமைச்சர்களில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய இருவரும் காங்கிரசைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் தவெகவைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம், தவெக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் இடம் பெற மறுத்துவிட்டது தெளிவாகிறது. ஏனெனில், அந்த கட்சிகள் இன்று காலை தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தன.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, அமைச்சர்கள் பதவியேற்பு விழா - ஆதரவு கட்சி தலைவர்கள் பங்கேற்பு

அமைச்சர்களுக்கான இலாக்காக்கள்

ஸ்ரீநாத் - மீன்வளத்துறை

கமலி - கால்நடைத் துறை

விஜயலட்சுமி - பால்வளத்துறை

ரஞ்சித் குமார் - வனத்துறை

வினோத் - வேளாண் துறை

ராஜீவ் - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை

ராஜ்குமார் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகள்

காந்திராஜ் - கூட்டுறவு துறை

மதன் ராஜா- கிராமப்புற தொழில்கள் துறை

ஜெகதீஸ்வரி - சமூக நலத்துறை

ராஜேஷ்குமார் - சுற்றுலா துறை

விஜய் பாலாஜி - கைத்தறி துறை

லோகேஷ் தமிழ்செல்வன் - வணிக வரி உள்ளிட்ட துறைகள்

விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகள்

ரமேஷ் - இந்து சமய அறநிலையத் துறை

விஸ்வநாதன் - உயர்கல்வித்துறை அமைச்சர்

குமார் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப துறை

தென்னரசு - வெளிநாட்டு வாழ் தமிழர்கள், அகதிகள் & இடம்பெயர்ந்தோர் நலத்துறை

சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

முகமது ஃபர்வஸ் - தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகள்

சரத்குமார் - மனிதவள மேலாண்மை துறை

மரிய வில்சன் - நிதித்துறை

விக்னேஷ் - மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை

இதன்மூலம், ஏற்கெனவே நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அத்துறையிலிருந்து வருவாய் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மரிய வில்சன், நிதித்துறை அமைச்சராக உள்ளார்.

பெண்கள், பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?

விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு விஜய் அமைச்சரவையில் கீர்த்தனா, கமலி, விஜயலட்சுமி, ஜெகதீஸ்வரி ஆகிய 4 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற 4 பெண் அமைச்சர்கள்

விஜய் அமைச்சரவையில் கமலி, விஸ்வநாதன் , ராஜ்மோகன், லோகேஷ் தமிழ்செல்வன், தென்னரசு, காந்திராஜ், மதன்ராஜா ஆகியோர் ஆகிய 7 பேர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

தமிழக, விஜய் அமைச்சரவை விரிவாக்கம், 5 பெண் அமைச்சர், 7 பட்டியல் பிரிவு அமைச்சர்கள்

பட மூலாதாரம், TN DIPR

ஆட்சியில் பங்கேற்கும் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "எங்கள் கட்சி எம்எல்ஏக்களான சையது ஃபாருக் பாஷா (வாணியம்பாடி), ஏ.எம். ஷாஜஹான் (பாபநாசம்) தவெக ஆட்சிக்கு ஆதரவளித்தனர். அப்போது நாங்கள் எந்த கோரிக்கையையும் நிபந்தனையையும் முன்வைக்கவில்லை. ஆனால், எங்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடிவெடுத்திருப்பதாகவும் பெருந்தன்மையுடன் தவெக அரசு சார்பில் கேட்கப்பட்டது.

தவெக பெருந்தன்மையோடு எங்களை அணுகியதற்கு நன்றி.

இதுபற்றி நேற்று முதல் இன்று வரை கலந்தாலோசித்தோம். எங்களின் அரசியல் ஆலோசனைக் குழு (PAC) தலைவரான கட்சியின் கேரள தலைவர் சையது சாதிக் அலி உள்ளிட்டோரிடம் ஆலோசித்தோம்.

தமிழ்நாட்டில் தவெக அமைச்சரவையில் முஸ்லிம் லீக் சேரும் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறினர்.

அதன்படி, "நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்கிறோம். ஏ.எம். ஷாஜஹானை (பாபநாசம்) அமைச்சரவையில் பங்கேற்க பரிந்துரைத்துள்ளோம். தவெக அரசு நல்லாட்சியையும் முந்தைய ஆட்சியில் இருந்த நல்ல திட்டங்களையும் தொடர வேண்டும்" என்றார்.

மேலும், "இதுகுறித்து (முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான) ஸ்டாலினிடம் பேசினோம். அவர் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் பேசுகிறோம். கூட்டணி பற்றி இப்போது எதுவும் பேசவில்லை. இது தேர்தல் காலத்துக்கான முடிவு அல்ல. ஆட்சியில் குறைகள் இருந்தால் தட்டிக் கேட்போம்" என்றார்.

எனினும் ஸ்டாலினிடம் விவாதித்து அமைச்சரவையில் பங்கேற்கவில்லை என்றும் அவர் கூறினார். எதிர்காலத்தில் மற்றொரு எம்எல்ஏவுக்கும் அமைச்சரவையில் இடம் கேட்போம் என்றும் காதர் மொய்தீன் தெரிவித்தார்.

அமைச்சரான தனபால் மகன்

அதிமுக முன்னாள் அமைச்சர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சராக பதவியேற்றார். லோகேஷ் ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றவராவார்.

தனபால் அதிமுக அரசில் சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.

மாணிக்கம் தாகூர் பேட்டி

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "காங்கிரஸ் சார்பாக அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். அதில் மகிழ்ச்சி. இதன்மூலம், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சியினர் உழைப்பார்கள். தமிழ்நாட்டில் மட்டும் கட்சிகளின் வெற்றிக்காக உழைத்து ஆட்சியில் வெளியிலிருந்து ஆதரவளித்து வந்தோம், இப்போது ஆட்சியில் பங்கேற்றுள்ளோம், அதில் மகிழ்ச்சி. அடுத்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என்றார்.

இது நிலையான ஆட்சி இல்லை என திமுக கூறிவருவது குறித்த கேள்விக்கு, "இது நிலையான ஆட்சி தான். தோல்வி அடைந்தவர்கள் இதைத்தான் கூறுவார்கள். எண்ணிக்கை அடிப்படையில் ஆட்சி வலுவாக இருக்கிறது" என்றார்.

விசிக அமைச்சரவையில் தற்போது பங்குபெறாதது குறித்த கேள்விக்கு, "அக்கட்சியையும் ஆட்சியில் பங்கெடுக்க அழைத்துள்ளனர், அந்தந்த கட்சி தலைமைகள் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் அமைச்சராக பதவியேற்காதது மகிழ்ச்சியா என்ற கேள்விக்கு, "காங்கிரஸ் சார்பாக அமைச்சர்கள் பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை பிடித்த தவெக, திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 10ம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். மே 13 அன்று அவருடைய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிலும் விஜய் வெற்றிபெற்றார்.

திமுக கூட்டணி கட்சிகள் தவிர்த்து, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரின் தலைமையிலான அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.

விஜயுடன் தவெக எம்எல்ஏக்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார், அருண் ராஜ், கீர்த்தனா, பிரபு, ராஜ்மோகன், வெங்கட்ரமணன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாதது குறித்தும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாதது குறித்தும் கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், மே 16 அன்று அமைச்சர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு