சாம்சன் - சூர்யவன்ஷியை கையாண்ட விதம் சரியா? கம்பீர் மீது எழும் விமர்சனம்

வைபவ் சூர்யவன்ஷி ,சஞ்சு சாம்சன், கௌதம் காம்பீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரிடம் நடந்துகொண்ட விதம் குறித்து கௌதம் காம்பீர் கிரிக்கெட் நிபுணர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் ஒயிட்வாஷ் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, இன்று பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் களமிறங்குகிறது.

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணிக்குத் திரும்புகின்றனர்.

ஆனால், இரண்டு டி20 தொடர்களிலும் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வீரர்கள் மட்டுமின்றி அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் விமர்சனங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளார்.

குறிப்பாக, சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரை அணியில் சேர்த்ததும் பின்னர் நீக்கியதுமான அணித் தேர்வு முடிவுகள் குறித்து கம்பீர் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அணி நிர்வாகம் இரட்டை நிலைப்பாடுகளைக் கையாள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், 'சூர்யவன்ஷி மற்றும் சஞ்சு சாம்சனுக்கு இடையே விளையாடப்படும் இந்த மியூசிக்கல் சேர் விளையாட்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும், அயர்லாந்துக்கு எதிரான 0-2 என்ற தொடர் தோல்விக்குப் பிறகு, அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியபோது கௌதம் கம்பீருக்கு ஆதரவாகவும் பேசினார்.

கௌதம் கம்பீர் பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார் என்று அவர் கூறினார்.

இந்திய கிரிக்கெட்டில், மாறுபட்ட கருத்துகள் அல்லது பார்வைகள் உடனடியாக எதிர்ப்பாகப் பார்க்கப்படுகின்றன, ஆனால் இரண்டும் வேறுபட்டவை என்றும், கம்பீரின் பார்வையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அஷ்வின் தெரிவித்தார்.

சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரை அணியில் சேர்ப்பது மற்றும் அதன் பிறகு நீக்குவது உள்ளிட்ட அவரது அணித் தேர்வுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

பட மூலாதாரம், Pankaj Nangia/Getty Images

படக்குறிப்பு, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

ஆனால் பின்னர், ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின், அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தார்.

"ஒவ்வொரு போட்டியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில நேரங்களில் சஞ்சு சாம்சன் வெளியேற்றப்படுகிறார்; வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்படுகிறார். மற்ற சில நேரங்களில் வைபவ் வெளியேற்றப்படுகிறார்; சஞ்சு சேர்க்கப்படுகிறார். இவர்கள் இருவருக்கும் நியாயம் செய்யப்படவில்லை," என்று அவர் கூறினார்.

மேலும், "மோசமான ஃபார்மில் இருந்தபோதும் ஜோஸ் பட்லர் மீது இங்கிலாந்து அணி தொடர்ந்து நம்பிக்கை வைத்தது. அதன் பலனைப் பாருங்கள்; கடைசி போட்டியில் அவர் சதம் அடித்தார். ஆனால் நாமோ தொடக்க ஜோடியை வைத்து 'மியூசிக்கல் சேர்' விளையாடிக் கொண்டிருக்கிறோம்," என்று அஷ்வின் விமர்சித்தார்.

'வைபவ் சூர்யவன்ஷியிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

2025ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சாய் சுதர்ஷன் தொடர்ந்து தடுமாறியபோதும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய கம்பீர், ஒரு வீரரை வெறும் 4 அல்லது 5 இன்னிங்ஸ்களின் அடிப்படையில் மதிப்பிடுவது சரியல்ல என்று கூறியிருந்தார்

இதைக் குறிப்பிட்ட அஷ்வின், "சாய் சுதர்ஷனுக்கு நீண்டகால வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அருமை. அப்படியானால் சஞ்சு சாம்சனை ஏன் நீக்கினீர்கள்? ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாட முடியாது. ஆனால் அவருக்கு சில வாய்ப்புகளையாவது வழங்க வேண்டும். சஞ்சு சிறப்பாக விளையாடாதபோது வைபவ் கொண்டுவரப்பட்டார். வைபவ் சிறப்பாக விளையாடாதபோது சஞ்சு மீண்டும் கொண்டுவரப்பட்டார். என்ன நடந்து கொண்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், "வைபவ் என்ன தவறு செய்தார்? ஒரு இளம் வீரரை நீங்கள் இப்படித்தான் உருவாக்குவீர்களா?"என மூன்று போட்டிகளுக்குப் பிறகு வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது யூடியூப் சேனலில், 1989 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்குச் சென்ற சுற்றுப்பயணத்தை ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டினார், அப்போது அவர்தான் அணியின் கேப்டனாக இருந்தார்.

அந்தச் சுற்றுப்பயணத்தின் போதுதான் அப்போதைய 16 வயது சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கினார்.

"நான் சச்சினிடம், 'இந்தத் தொடரில் உன்னை நீக்க மாட்டோம். எனவே சுதந்திரமாக விளையாடு' என்று கூறினேன்," என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், "கௌதம் கம்பீரும் ஸ்ரேயாஸ் ஐயரும் வைபவ் சூர்யவன்ஷி மீது இது போன்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்க வேண்டாமா? இது முற்றிலும் சரியல்ல. இவர்கள் வைபவ் சூர்யவன்ஷியை நடத்தும் விதம் முற்றிலும் சரியல்ல" என்றார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி தனது யூடியூப் சேனலில், கௌதம் கம்பீர் சில வீரர்களுக்கு சாதகமாக நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், "கௌதம் கம்பீருக்குச் சில விருப்பமான வீரர்கள் இருக்கிறார்கள், அவர் அந்த வீரர்களை மட்டுமே தேர்வு செய்கிறார். ஆனால் இந்த வீரர்களால் அணிக்கு எந்தப் பயனும் இல்லை" என்றார்.

மேலும், "சிவம் துபேயால் பந்துவீசவோ அல்லது ஃபீல்டிங் செய்யவோ முடிவதில்லை. பேட்டிங்கிலும் அவர் நல்ல ஃபார்மில் இல்லை. ஷெட்ஜேயின் நிலையும் இதுதான். வாஷிங்டன் சுந்தர் இன்னும் ஏன் அணியில் இருக்கிறார் என்பதும் புரியாத புதிராக உள்ளது" என்று தெரிவித்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், தேர்வுத் குழுவின் முன்னாள் தலைவருமான எம்.எஸ்.கே. பிரசாத்தும், சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷியை வைத்துத் தொடர்ந்து செய்யப்படும் சோதனைகளை நியாயப்படுத்தவில்லை.

"சஞ்சு சாம்சனை அணியில் இருந்து நீக்கியது ஒரு தவறு. இங்கிலாந்து சூழ்நிலைகளில் இந்தியாவின் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர் மற்றும் அவர் ஒரு மேட்ச் வின்னர் என்பதையும் நிரூபித்துள்ளார். நீங்கள் இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்தால், அவரது பெயர் முதலில் வர வேண்டும்" என்றார் அவர்.

பிரசாத்தின் கூற்றுப்படி, ''பிளேயிங் லெவனில் வைபவ் சூர்யவன்ஷியைச் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தம் இருப்பதற்காக மட்டுமே சஞ்சு போன்ற ஒரு வீரரை அணியில் இருந்து நீக்கக் கூடாது.''

கம்பீர் என்ன சொன்னார்?

இருப்பினும், எம்.எஸ்.கே. பிரசாத்தும் கம்பீரை ஆதரித்துப் பேசுகிறார்.

"முழுப் பொறுப்பையும் கம்பீர் மீது சுமத்துவது சரியல்ல. ஏனெனில் இது முழுமையான உலக சாம்பியன் அணி அல்ல. ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் போன்ற மிக முக்கியமான வீரர்கள் அணியில் இல்லை. இளம் வீரர்கள் தங்களது இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பேட்டிங், பந்துவீச்சு, ஃபில்டிங் என மூன்று துறைகளிலும் அணி பலவீனமாகத் தோன்றியது. அணித் தேர்வு மற்றும் அணியின் சமநிலை தொடர்பாகவும் சில தவறுகள் நிகழ்ந்தன," என்று அவர் கூறினார்.

சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், PA

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, அணி நிர்வாகம் மற்றும் அணித் தேர்வை நியாயப்படுத்திப் பேசிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர், "நீங்கள் மாற்றங்களைச் செய்யும்போது அல்லது அணியை மாற்றிமைக்கும்போது , அதற்குச் சிறிது காலம் எடுக்கும்.'' என்றார்

''உதாரணமாக, 15 வயது வீரர் (வைபவ் சூர்யவன்ஷி) தொடக்க வீரராகக் களம் இறங்குகிறார், பிரின்ஸ் யாதவ் தனது இரண்டாவது டி20 போட்டியில் விளையாடுகிறார், மற்றும் ஹர்ஷித் ராணா காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். நாம் பெரும்பாலும் முடிவுகளை மட்டுமே பார்க்கிறோம், சர்வதேச கிரிக்கெட்டில் முடிவுகள் மிகவும் முக்கியமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நடைமுறை உண்மைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய கம்பீர், "சில நேரங்களில் வீரர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், தங்களது திறமையை வெளிப்படுத்தவும் நேரம் தேவைப்படுகிறது. இங்கிலாந்து ஒரு வலுவான அணி. இத்தகைய அணிகளுக்கு எதிராக இப்படிப்பட்ட வீரர்களுக்கு நீங்கள் வாய்ப்பளிக்கும்போது, அவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு அவகாசம் அளிப்பது அவசியமாகிறது. ஏனெனில் எந்தவொரு மாற்றத்திற்கும் அல்லது ஒரு புதிய தொடக்கத்திற்கும் பிறகு, விஷயங்கள் சரியான இடத்திற்கு வர காலம் எடுக்கும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு