'மின்வெட்டுக்கு காரணமான கருப்பு ஆடு' - அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்?

மின்வெட்டு, போராட்டம், அமைச்சரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு, தமிழ்நாட்டில் மின்வெட்டு, மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

பட மூலாதாரம், https://x.com/TANGEDCO_Offcl

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

"மின் தடையை ஏற்படுத்தும் நோக்கில் சில இடங்களில் வேண்டுமென்றே செய்யக் கூடிய நிகழ்வுகளைப் பார்க்கிறோம். மதுரையில் டிரான்ஸ்ஃபார்மரை திறந்து வைத்துள்ளனர். எங்கெல்லாம் இவை கண்டறியப்படுகிறதோ அங்கு காவல்துறையில் புகார் கொடுக்குமாறு கூறியுள்ளோம்"

"99 சதவீதம் சிறப்பாக செயல்படும் ஊழியர்கள் மத்தியில் ஒரு சதவீதம் பேர் கருப்பு ஆடுகளாக செயல்படுகின்றனர்"

தமிழ்நாட்டில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக எழும் குற்றச்சாட்டு குறித்து மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அளித்த விளக்கங்கள் இவை.

இந்தக் குற்றச்சாட்டை மின் ஊழியர் அமைப்புகள் மறுத்துள்ளன.

'48 மணிநேரம் மின்சாரம் இல்லை'

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அரங்கேறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மே 25-ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில், '48 மணிநேரமாக மின்சாரம் இல்லை' எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது எக்ஸ் பக்கத்தில் இதற்குப் பதில் அளித்துள்ள அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், செம்பராம்பட்டு கிராமத்தில் பலத்த காற்று வீசியதன் காரணமாக மூன்று உயர்அழுத்த மின்கம்பங்கள் சரிந்ததாகக் கூறியுள்ளார்.

'இதனை சரிசெய்யும் வகையில் மின் ஊழியர்கள் கடுமையாக பணி செய்து மே 25 இரவு 9.30 மணியளவில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது' என அவர் தெரிவித்துள்ளார்.

'பகலில் மின் தடை இல்லை... இரவில்?'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகளும் ஊடகங்களில் வெளியாயின.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக மே 25 ஆம் தேதியன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

"பகலில் மின் தடை இல்லை. இரவில் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகிறோம். வி.ஐ.பிக்கள் வசிக்கும் பகுதிகளில் மின்தடை இல்லை. எங்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்?" எனக் காவலர்களிடம் கேள்வி கேட்டு அங்குள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் விஜய் வசிக்கும் நீலாங்கரை பகுதியிலேயே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அடிக்கடி மின் தடை செய்யப்படுவதன் மூலம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாமல் பொதுமக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பல மணிநேர மின்வெட்டு பிரச்னையால் சிறு வணிகர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

''மின்வாரியத்தின் புகார் மையமான மின்னகத்துக்கு பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அறிவிக்கப்படாத மின் தடையால் தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக'' பா.ம.க தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு காரணமாக மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்துவது அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மின்வெட்டு, போராட்டம், அமைச்சரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு, தமிழ்நாட்டில் மின்வெட்டு, மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

பட மூலாதாரம், https://x.com/TANGEDCO_Offcl

'காவல்துறையில் புகார்' - அமைச்சர் நிர்மல்குமார்

மின் தடை தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "மின் தடையை உடனுக்குடன் சரிசெய்வதற்கு ஏழு மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன'' எனக் கூறினார்.

மொபைல் குழுக்களை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அமைச்சர், "பழைய டிரான்ஸ்ஃபார்மர்கள், கேபிள்களை மாற்றும் பணிகள் நடக்கவில்லை. ஒப்பந்தங்களைக் கொடுத்து நிதி முறைகேடு செய்யும் பணிகள் மட்டுமே நடந்துள்ளன" என கடந்த ஆட்சியை மறைமுகமாக சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மின் தட்டுப்பாடு குறைந்து வருகிறது. மதுரையில் டிரான்ஸ்ஃபார்மரை திறந்து வைத்துள்ளனர். அதைப் பார்த்துவிட்டு உதவி பொறியாளர் தகவல் தெரிவித்தார். உடனே காவல்துறையில் புகார் கொடுக்குமாறு கூறியுள்ளோம்" எனக் கூறினார்.

"தனி நபர்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டால் காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.

'புகார் எதுவும் வரவில்லை' - மதுரை மின்வாரிய அலுவலர்

"மதுரையில் மின் வெட்டை தனி நபர்கள் ஏற்படுத்தியதாக புகார் எதுவும் வந்துள்ளதா?" என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மதுரை மேற்பார்வை பொறியாளர் பத்மாவதியிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"மதுரை மாவட்டத்தில் புகார் என எதுவும் பதிவாகவில்லை. அமைச்சர் கூறியது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்று மட்டும் பதில் அளித்தார்.

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி, 'சில தனி மனிதர்கள் செய்யும் சதியாலும் மின் கருவிகள் பழுதாலும் மின் தடை ஏற்படுவதாக அரசு கூறுகிறது. அவற்றைக் கடந்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

'அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது' - மின் ஊழியர் அமைப்பு

அமைச்சரின் கூற்று குறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் ஜெய்சங்கரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"டிரான்ஸ்ஃபார்மர்களை திறந்து வைப்பது, அணைத்து வைப்பது போன்றவற்றால் மின் தடை ஏற்படுவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. மின் பணிகள் நடக்கும்போது மின் ஊழியர்கள் அதனைத் திறப்பார்களே தவிர, பொதுமக்கள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை" என்கிறார்.

"த.வெ.கவுக்கு எதிரான கட்சிகளைச் சேர்ந்த ஊழியர்கள் இதனைச் செய்வதற்கு வாய்ப்பில்லை. அவ்வாறு மின்சாரத்தை துண்டித்தால் துறைரீதியாக கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதால் அப்படியொரு நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.

மின்சாரம்

பட மூலாதாரம், Getty Images

மின் தடைக்கு என்ன காரணம்?

தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர், "கடந்த ஆண்டு கோடைகாலத்தில் உச்சகட்ட மின்நுகர்வு என்பது 20 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது. இந்தமுறை இது இன்னும் கூடியிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" என்கிறார்.

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

வெப்பத்தின் தாக்கம் காரணமாக, குளிர்சாதன வசதியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறும் அவர், "மின் நுகர்வு அதிகரிக்கும்போது கம்பிகளின் தாங்கு திறனில் சிக்கல் ஏற்படும். வானியல் சூழல்கள் மாறும்போது நிலைமைகள் கட்டுக்குள் வரத் தொடங்கிவிடும்" என்கிறார்.

தமிழ்நாடு மின்வாரியம் அளித்துள்ள விளக்கத்திலும், 'தமிழ்நாட்டில் போதுமான மின்சாரம் கிடைக்கிறது. அண்மைக்காலமாக மாநிலத்தின் உச்ச மின் தேவை என்பது தினசரி 20,000 மெகாவாட்டுக்கு குறைவாக இருந்து வருகிறது' எனக் கூறியுள்ளது.

ஊரகப் பகுதிகளில் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின் கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின் தடை ஏற்படுவதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின் தடை குறித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், பழைய டிரான்ஸ்ஃபார்மர்கள், கேபிள்களை மாற்றாமல் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்துப் பேசும் ஜெய்சங்கர், "பழைய மின் கருவிகளில் சுமார் இரண்டு முதல் ஐந்து சதவீதம் அளவுக்கு மட்டுமே பாதிப்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "கோடை காலத்தில் இயல்பாகவே மின் தடை வரும். அதனை சரிசெய்வதற்கு போதிய ஊழியர்கள் இல்லை." என்கிறார்.

மின்சார கட்டணம், தமிழ்நாடு

பணியாளர் பற்றாக்குறை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடனில் மின்வாரியம் உள்ளது. பதினான்காயிரம் பேர் வேலை பார்க்க இடத்தில் 50 சதவீதம் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது" எனத் தெரிவித்தார்.

அடிப்படையில் இருந்தே துறையை சீரமைக்க வேண்டிய பணிகள் உள்ளதாகக் கூறியுள்ள அவர், "பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்யும் பணிகள் நடக்க உள்ளன" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு