நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையா?

காணொளிக் குறிப்பு, எல்லைகளைத் தாண்டி அச்சுறுத்தும் நேபாள வெள்ளம்.
நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையா?
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம், எல்லைகளைத் தாண்டியும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இது இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுகிறதா? இதுபற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

நேபாள ஆறுகளால் இந்தியாவுக்கு வெள்ள அபாயமா?

இந்தியாவும் நேபாளமும் இமயமலையில் தோன்றும் ஆறுகளைப் பகிர்ந்து கொண்டாலும், நேபாள வெள்ளத்துக்கும் இந்தியப் பேரிடர்களுக்கும் இடையேயான தொடர்பு நீரின் ஓட்டத்தை மட்டும் சார்ந்ததல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நேபாளத்தில் 6,000-க்கும் அதிகமான ஆறுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தெற்கு நோக்கிப் பாய்ந்து இந்தியாவுக்குள் நுழைந்து கங்கை ஆற்றுடன் கலக்கின்றன.

ஒருங்கிணைந்த மலை வளர்ச்சிக்கான சர்வதேச மையத்தைச் சேர்ந்த (ICIMOD) நீரியல் நிபுணர் மணீஷ் ஷ்ரேஷ்தா, "நேபாளத்தில் இருந்து ஏழு முதல் ஒன்பது முக்கிய ஆறுகள் இந்திய சமவெளிப் பகுதிகளுக்குள் பாய்கின்றன." என்கிறார். மேலும் இந்தியாவில் ஏற்படும் வெள்ளத்துக்கு இந்த ஆறுகளே காரணமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

எந்த மாநிலத்துக்கு பாதிப்பு?

இந்தியாவில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக பிகார் உள்ளது. கோசி, கண்டக், பாக்மதி, கமலா உள்ளிட்ட நேபாளத்தில் உருவாகும் ஆறுகள் மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்த அபாயம் பிகாருக்கு மட்டும் அல்ல. உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகள் காக்ரா, ராப்தி, கண்டக் ஆறுகளால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. உத்தராகண்ட் மற்றும் வடக்கு வங்காளமும் நேபாளத்தில் இருந்து வரும் ஆறுகளால் வெள்ள அபாயத்தை எதிர்கொள்கின்றன.

ICIMOD நிபுணர் பிரதீப் மான் டாங்கோலின் கூற்றுப்படி, வெள்ள பாதிப்பில் பிகார் முதலிடத்திலும் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன; ஆனால், அது குறித்த செய்திகள் பெரும்பாலும் போதுமான அளவில் வெளியாகவில்லை" என்றார்.

முக்கிய காரணிகள்

நீரியல் நிபுணர்கள் வெள்ள அபாயத்தை மூன்று முக்கிய காரணிகளாகப் பிரிக்கின்றனர்.

முதலில் மழை - எங்கு, எவ்வளவு தீவிரமாக மழை பெய்கிறது என்பது முக்கியம். இந்தியாவை அடையும் வெள்ளத்தின் உச்சநிலை பெரும்பாலும் உயரமான இமயமலையில் அல்லாமல், சிவாலிக், சுரே மற்றும் தெராய் பகுதிகளில் உருவாகிறது.

இரண்டாவது ஆறு - மலைப்பகுதிகளில் இருந்து வரும் ஆறுகள் வண்டல் மண்ணைச் சுமந்து வந்து சமவெளிகளில் பரவுகின்றன. இதனால் அவற்றின் நீரோட்டப் பாதையும் மாறுகிறது.

மூன்றாவது, இந்தியாவிலிருந்து நீர் வரும் சூழல் - இந்தியாவில் பெய்யும் மழை, கங்கையின் நீர்மட்டம், கரைகள், தடுப்பணைகள் மற்றும் சாலைகள், ரயில்வே, குடியிருப்புகளால் தடைப்படும் வடிகால் அமைப்பு ஆகியவை வெள்ளத்தின் தீவிரத்தை தீர்மானிக்கின்றன.

எனவே, எல்லையை அடையும் நீரின் அளவு பெரும்பாலும் நேபாள மழையைச் சார்ந்திருந்தாலும், வெள்ளத்தின் தீவிரம் இந்தியாவின் நிலைமைகளையும் சம அளவில் சார்ந்துள்ளது.

இந்தியாவுக்கு எவ்வளவு முன்னெச்சரிக்கை கிடைக்கும்?

வழக்கமான பருவமழை வெள்ளத்தின்போது, நீரோட்டத்தின் வேகத்தைப் பொறுத்து இந்தியாவுக்கு 12 மணி நேரம் முதல் 2 நாட்கள் வரை முன்னெச்சரிக்கை கிடைக்கலாம். கோசி, கண்டக ஆறுகளின் நீர் பிகார் சமவெளியை அடைய சுமார் ஒரு நாளும், காக்ரா ஆற்றுக்கு சற்று அதிக நேரமும் ஆகலாம். ஆனால் சுரே ஆற்றில் திடீர் வெள்ளம் சில மணி நேரங்களிலேயே ஏற்படக்கூடும்.

சமீபத்திய வெள்ளத்தில், ராசுவாவிலிருந்து வந்த அதிகபட்ச நீரோட்டம் திரிவேணியை சுமார் 7.5 மணி நேரத்தில் அடைந்தது.

இந்திய – நேபாளம் நிகழ்நேர மழைப்பொழிவு மற்றும் ஆற்றின் நீர்மட்டத் தரவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலைத் துறை, இந்தத் தரவுகளை இந்திய மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்புகிறது.

எனினும், சுரே போன்ற வேகமான ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கண்காணிப்பு நிலையங்கள் குறைவாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த வெள்ள முன்னறிவிப்பு மாதிரியும், கரைகள், ஆற்றுப்பாதை மாற்றங்கள் மற்றும் வண்டல் குறித்த வழக்கமான தகவல் பகிர்வும் போதுமானதாக இல்லை.

மேலும், மாவட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கை அனுப்புவது மட்டும் போதாது; ஆபத்தில் உள்ள மக்களுக்கும் உடனடியாக தகவல் சென்றடைவது, எல்லை தாண்டிப் பாயும் ஆறுகளுக்கு தகவல் பகிர்வு, ஒத்துழைப்பு மற்றும் பனிப்பாறை ஏரிகளைத் தொடர்ந்து கண்காணித்தல் அவசியம் என ஐஐடி கான்பூரின் புவியியல் பேராசிரியர் ராஜீவ் சின்ஹா வலியுறுத்துகிறார்.

இந்தியாவின் கவலை என்ன?

இந்தியா கவலைப்பட வேண்டியது கோசி ஆறு மட்டுமல்ல; இமயமலையில் நீர், பாறை, பனி மற்றும் வண்டல் மண் திடீரென ஒன்றாகக் கலப்பதால் ஏற்படும் பேரழிவுகளே உண்மையான அச்சுறுத்தல் என சின்ஹா கூறுகிறார்.

"சமீபத்திய நேபாள பேரழிவு, 2021 சாமோலி மற்றும் 2025 தராலி பேரழிவுகளைப் போன்றது. இவை வழக்கமான வெள்ளங்கள் அல்ல. கனமழை, பனியுருகல் அல்லது திடீர் வெள்ளம் அதிக அளவிலான வண்டலுடன் கலக்கும்போது, பாதையில் உள்ளவற்றை அழிக்கும் சக்திவாய்ந்த சேறு வெள்ளம் உருவாகிறது." என்கிறார் அவர்.

உருகி வரும் நிரந்தர உறைபனி, பனிப்பாறை ஏரிகள் உடைந்து திடீரென நீர் வெளியேறும் சம்பவங்களையும், பனிச்சரிவுகளையும் அதிகரிக்கக்கூடும்.

பேரழிவுகள் அதிகரிக்கும்போது, நிலச்சரிவுகளும் அதிகரிக்கும். இதனால் ஆறுகளில் வண்டல் மண் படிந்து, ஆற்றுப்படுகைகள் உயர்ந்து, அவற்றின் நீரைச் சுமந்து செல்லும் திறன் குறையும்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் இமயமலைப் பகுதியில் அதிகரித்து வரும் பேரழிவு அபாயத்தின் ஒரு பகுதியாகும். இதனால் இந்தியாவுக்கான ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு