'தாத்தாவுக்கு 5 மனைவிகள், கொள்ளுத் தாத்தாவுக்கு 11 பேர்' - பலதார மணம் குறித்த பிரபல நெட்ஃபிளிக்ஸ் தொடரின் பின்னணி

பட மூலாதாரம், Netflix/ Iconic Digital
- எழுதியவர், மேகா மோகன்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சூ நியாதி தனது முதல் நாவலான *தி பாலிகேமிஸ்ட்* நாவலை பதிப்பகங்களுக்கு அனுப்பியபோது, திருமணமான ஜிம்பாப்வே ஆடவர் ஒருவரும், அவர் கவர்ந்திழுக்கும் பெண்களும் பற்றிய அந்தப் புத்தகத்துக்கு சந்தை இல்லை என்று பதிப்பாளர்கள் கருதியதாக அவர் கூறுகிறார்.
இதனால், ஜிம்பாப்வே எழுத்தாளரான நியாதி தனது சொந்த முயற்சியில் ஒரு தொகுப்பாசிரியர், அச்சு வடிவமைப்பாளர் மற்றும் ஓவியக் கலைஞரைத் தேர்வு செய்து, 2012-ஆம் ஆண்டு 500 பிரதிகளை வெளியிட்டார். பதிப்பாளர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் அந்தப் புத்தகம் பெரும் வெற்றியடைந்தது.
தற்போது அந்த நாவல் நெட்ஃபிளிக்ஸ் தொடராக உருவாக்கப்பட்டுள்ளது. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்படும் முதல் 10 தொடர்களில் இது இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஹாலிவுட் நடிகை தராஜி பி. ஹென்சன், இந்தத் தொடர் தன்னை "இறுக்கமாகப் பிடித்துக்கொண்டது" என்றும், 22 அத்தியாயங்களையும் ஒரே நாளில் தொடர்ந்து பார்த்து முடித்ததாகவும் கூறியுள்ளார்.
எனினும், இது பலதார மணம் குறித்த ஒரு நேரடியான கதை அல்ல என்பதை நியாதி கவனமாகச் சுட்டிக்காட்டுகிறார். பலதார மணம் என்ற பாரம்பரிய நடைமுறை அவருக்குப் புதிதானதல்ல. அவரது தாய்வழிக் குடும்பத்தில் பல தலைமுறைகளாக பலதார மணம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
1979-ஆம் ஆண்டு இறந்த அவரது தாத்தாவுக்கு ஐந்து மனைவிகள் இருந்தனர். அவரது கொள்ளுத் தாத்தாவுக்கு 11 மனைவிகள் இருந்தனர். அவரது தாத்தா திருமணம் செய்துகொண்ட முதல் மனைவியான பாட்டி, அந்தப் பெண்கள் அனைவரும் ஒன்றாக வசித்த பண்ணையின் குடும்பத் தலைவியாக இருந்தார். புதிய பெண்களை குடும்பத்தில் சேர்ப்பது குறித்த முடிவுகளை எடுப்பதிலும் அவர் அடிக்கடி உதவினார்.

பட மூலாதாரம், Sue Nyathi family
"யாருடைய இடம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்திருந்ததால், எந்தச் சண்டையும் இருந்ததில்லை," என்கிறார் நியாதி.
இது எப்படி சாத்தியமானது என்று அவர் தனது பாட்டியிடம் கேட்டபோது, அதற்கு அவர் அளித்த பதில் நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது. வேலைகளைச் செய்வதற்கு அதிகமான ஆட்கள் தேவைப்பட்டனர்; உடல் உழைப்பாக இருந்தாலும் சரி, உணர்வுரீதியான உழைப்பாக இருந்தாலும் சரி, வேலைகளைப் பகிர்ந்துகொள்ள அதிகமானோர் இருந்தனர். இதில் எதுவும் மறைக்கப்படவில்லை.
"இந்தக் குழுவில் யார் யார் என்பது அனைவருக்கும் தெரியும்," என்று நியாதி விளக்குகிறார்.
குறிப்பிட்ட பாரம்பரிய நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் பலதார மணத்தை ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கின்றன. ஆனால், 2001-ஆம் ஆண்டு ஹராரேயில் பணிபுரியும் இளம் பெண்ணாக இருந்தபோது நியாதி கவனிக்கத் தொடங்கியது முற்றிலும் வேறான ஒரு விஷயம்.
ஒருதார மணத்தில் இருப்பதாகக் கூறிக்கொண்ட ஆண்கள், உண்மையில் ரகசியமான மற்ற பெண்களுடனும், ரகசியமான குடும்பங்களுடனும் பலதார மண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இதுதான் நியாதியின் நாவலில் இடம்பெறும் பலதார மணம். இதில் வெளிப்படைத்தன்மை மற்றும் சம்மதத்துக்குப் பதிலாக ஏமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட "நவீனப்படுத்தப்பட்ட அல்லது சீர்கெடுக்கப்பட்ட வடிவமாக" இதை அவர் குறிப்பிடுகிறார்.
"நான் பலதார மணத்துக்கு எதிரானவள் அல்ல. எனக்கு எதிரானது, அதில் சம்பந்தப்பட்டவர்களின் விருப்பத்தையும் முடிவெடுக்கும் உரிமையையும் புறக்கணிப்பதுதான். நீங்கள் ஒரு உறவுக்குள் சென்ற பிறகு அதன் விதிமுறைகளை மாற்றுவது தவறு," என்கிறார் நியாதி.
நியாதியின் நாவலில், கதாநாயகியான ஜாய்ஸ், ஒரு திருமண உறவுக்குள் தான் சென்றிருப்பதாக நம்புகிறார். ஆனால், அவரது கணவர் ஜோனாசி, அவருக்குத் தெரியாமல் மேலும் மூன்று பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்களுக்காக தனித்தனி வீடுகளையும் அமைத்துக்கொள்கிறார்.
அவர் இதைப் பற்றி ஜாய்ஸிடம் ஒப்புக்கொள்வதுமில்லை, தெரிவிக்கவும் இல்லை. ரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கி, அந்தப் பெண்களின் வாழ்க்கைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும்போதுதான், தான் ஒருதார மணம் என்று நம்பியிருந்த திருமணம் தொடக்கம் முதலே ஒரு போலியான உறவாக இருந்ததை ஜாய்ஸ் உணரத் தொடங்குகிறார்.

பட மூலாதாரம், Netflix/ Iconic Digital
யார் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள், யாருக்கு அந்த அதிகாரம் இல்லை என்ற கேள்வியே இந்தக் கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை முக்கியமாக இடம்பெறுகிறது. ஜோனாசி, தனது சொந்த முயற்சியில் முன்னேறி பெரும் செல்வந்தரான தொழிலதிபர். ஆணாதிக்கம் நிலவும் சமூகத்தில், அனைத்தையும் தீர்மானிப்பவர் அவர்தான்.
ஜாய்ஸ், அவரது தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதில் உதவியிருந்தாலும், அவரது பொருளாதார நிலை ஜோனாசியைச் சார்ந்தே உள்ளது. பின்னர் அவரது மனைவியாகும் மாடிபாவின் நிலையும் இதேதான். அவரும் ஜோனாசியிடம் வேலை செய்கிறார்.
இதன் விளைவாக, அந்தப் பெண்களுக்கு தங்கள் வாழ்க்கை குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம் குறைவாகிறது. இதனால் அவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். வயது வித்தியாசங்களும் இந்தச் சமநிலையின்மையை மேலும் அதிகரிக்கின்றன என்கிறார் நியாதி. மிகவும் நெருக்கமான தனிப்பட்ட உறவுகளில் எடுக்கப்படும் முடிவுகளில்கூட இதன் தாக்கம் உள்ளது.
கதையில் எச்.ஐ.வி. தொற்று தொடர்பான அம்சமும் இடம்பெறுகிறது. "பாதுகாப்பான உடலுறவு குறித்து நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தாலும், இப்படிப்பட்ட அதிகாரச் சமநிலையற்ற உறவில் உங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது," என்கிறார் அவர்.
நாவலுக்கும் நெட்ஃபிளிக்ஸ் தொடருக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. தொலைக்காட்சித் தொடரில் கதை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஜோனாசிக்கு நாவலில் இருப்பதைவிட குறைவான மனைவிகளே உள்ளனர்.
மேலும், தொலைக்காட்சித் தொடரைப் போலல்லாமல், நாவல் முழுவதும் ஜோனாசியின் மனைவிகளின் பார்வையில் இருந்து கதை சொல்லப்படுகிறது.

"பெண்களின் குரல்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன்," என்கிறார் நியாதி. தங்களுக்கு உண்மையாக இருக்காத ஓர் ஆணுடனான உறவில் ஒவ்வொரு பெண்ணும் ஏன் சிக்கிக்கொண்டார் என்பதை அவர்களே விளக்குவதற்கான வாய்ப்பை வழங்க விரும்பியதாக அவர் கூறுகிறார்.
இந்தக் கதையின் கருப்பொருள்கள் பல வாசகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
"சிலருக்கு இது வெறும் தொலைக்காட்சித் தொடர் அல்ல. இது அவர்களின் நிஜ வாழ்க்கை. இந்தத் தொடர் சமூகத்தையே கண்ணாடி போல பிரதிபலிக்கிறது," என்கிறார் நியாதி.
ஆனால், இந்தப் பிரதிபலிப்பை அனைவரும் வரவேற்கவில்லை.
கென்ய அரசு அதிகாரியான ஜெஃப்ரி மொசிரியா, இந்தத் தொடரை கென்யாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரினார். பலதார மணத்தையும் திருமணத்துக்கு வெளியான உறவுகள், மோசடி மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றையும் இந்தத் தொடர் ஒன்றாகக் குழப்புவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதனால் நியாதி தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. கலாசாரம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்றும், காலப்போக்கில் சில நடைமுறைகள் தங்கள் இயல்பை இழக்கலாம் அல்லது சீர்கெட்டுப் போகலாம் என்றும் அவர் கூறுகிறார். பலதார மணத்துக்கு நேர்ந்த மாற்றத்தையே தனது படைப்பு காட்டுகிறது என்கிறார்.
செல்வச் செழிப்பான கறுப்பின ஆப்பிரிக்கர்களையே கதையின் முக்கியக் கதாபாத்திரங்களாகக் காட்டியதன் மூலம், பலரது பார்வையைத் தான் மாற்றியிருப்பதாக நியாதி கூறுகிறார். தங்களுக்குப் பணக்கார கறுப்பின ஆப்பிரிக்கர்கள் இருப்பது தெரியாது என்று தன்னிடம் கூறிய ஐரோப்பிய வாசகர் ஒருவரையும் அவர் நினைவுகூர்கிறார்.
"ஆப்பிரிக்கராக இருப்பது என்றால் என்ன என்பது குறித்து நம்மிடம் எப்போதும் ஒரு குறிப்பிட்ட ஒரே மாதிரியான கண்ணோட்டம் இருந்துள்ளது. அது எப்போதும் வறுமையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது," என்கிறார் நியாதி.
இந்தத் தொடர் அதற்கு மாறான ஓர் ஆப்பிரிக்காவைக் காட்டுகிறது. மேலும், இது ஜுலு மொழியில் படமாக்கப்பட்டிருப்பது அதன் சிறப்பை மேலும் அதிகரிக்கிறது என அவர் கருதுகிறார்.
"நமது மொழிகளில் இருக்கும் அதே கலாசார செழுமையை ஆங்கிலத்தால் வெளிப்படுத்த முடியாது," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Netflix/ Iconic Digital
அவரது பேச்சில் அவ்வப்போது வெளிப்படும் விரக்தி, யாருக்கு எழுத்தாளராகும் வாய்ப்பு கிடைக்கிறது என்ற கேள்வியைச் சுற்றியே அதிகமாக வெளிப்படுகிறது. சிறு வயது முதலே எழுத்தாளராக வேண்டும் என்று நியாதி விரும்பினார். ஆனால், அவரது பெற்றோர் அவரை மிகவும் பாரம்பரியமான ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்தினர்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நிதித் துறையில் பணியாற்றிய அவர், முதலீட்டு ஆய்வாளராக இருந்த காலம் எழுத்தை ஒரு கலைத்திறனாக மட்டுமின்றி, ஒரு தொழிலாகவும் பார்க்கக் கற்றுக்கொடுத்ததாகக் கூறுகிறார். அவரது நிதித்துறைப் பணி குடும்பச் செலவுகளைச் சமாளிக்க உதவியபோதிலும், எழுத்து மீதான ஆர்வம் தொடர்ந்து இருந்தது. வேலை முடிந்த பிறகு மாலை நேரங்களில் தி பாலிகேமிஸ்ட் நாவலை எழுதினார்.
நாவலை வெளியிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு, 40 வயதில் நிறுவனப் பணியை விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளரானார். தற்போது அவருக்கு 48 வயது.
"'நீங்கள் ஒரே இரவில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்' என்று மக்கள் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. அங்கீகாரம் ஒரே இரவில் கிடைத்திருக்கலாம். ஆனால், அதற்குப் பின்னால் பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். நிறைய தியாகங்களையும் செய்திருக்கிறேன்," என்கிறார் அவர்.
பெரும்பாலான எழுத்தாளர்களால் தங்களது புத்தகங்களின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்த முடியாது என்றும், குறிப்பாக ஆப்பிரிக்காவில் இது மிகவும் கடினம் என்றும் அவர் கூறுகிறார். வெற்றிகரமான பல எழுத்தாளர்களுக்கு வசதியான நிலையில் இருக்கும் கணவர்கள், மானியங்கள் அல்லது எழுத்தாளர் தங்குமிடத் திட்டங்கள் மூலம் ஆதரவு கிடைப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
ஆனால், தனக்கு அந்த வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தனியாக தனது மகனை வளர்த்து, அவரது கல்விச் செலவுகளைச் சமாளிக்க வேண்டிய நிலையில், தொடர்ந்து எழுதுவதற்காக பல்வேறு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்துவந்தார்.
"ஒரு புத்தகத்தை எழுதத் தொடங்குவதற்கும் அதை முடிப்பதற்கும் இடையே நீண்ட காலம் இருக்கிறது. அது இரண்டு ஆண்டுகளாக இருக்கலாம், எட்டு ஆண்டுகளாகவும் இருக்கலாம். அந்தக் காலத்தில் நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துவது? நடைமுறையில், குடும்பச் செலவுகளைச் செலுத்த வேண்டியிருக்கிறது," என்கிறார் அவர்.
"நானும் அந்தப் பயணத்தைக் கடந்திருக்கிறேன். அது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது... நீங்கள் நிச்சயமாக அந்த வழக்கமான வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும்.
"எழுத்து என்பது பெரும்பாலான மக்களால் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் ஆடம்பரம்," என்கிறார் அவர். இதன் விலையாக, அரிதாகவே கேட்கப்படும் குரல்கள் மௌனமாக்கப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.
ஆப்பிரிக்க எழுத்துகள் உலகளவில் சென்றடையும் விதத்திலும் சமநிலையின்மை இருப்பதாக அவர் கருதுகிறார்..
நான்கு நாவல்களையும், ஒரு தசாப்தத்துக்கும் மேலான எழுத்துப் பயணத்தையும் கொண்டிருந்தபோதிலும், தனக்கு இதுவரை கிடைக்காத அளவிலான வெளிச்சத்தை இப்போது "நெட்ஃபிளிக்ஸ் தாக்கம்" வழங்கியுள்ளது என்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் அரசியல் ரீதியாகக் குறிப்பிடத்தக்க பல்வேறு கருப்பொருள்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.
தற்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் வரலாற்றுப் பின்னணியிலான நாவலின் முதல் வரைவை நியாதி முடித்துக்கொண்டிருக்கிறார். அதன் கருப்பொருள்கள் பலருக்கும் தொடர்புடையதாக இருக்கும் என அவர் கூறுகிறார்.
எழுத்தைப் பற்றிப் பேசும்போது, "எல்லாமே ஒரு கதையிலிருந்துதான் தொடங்குகிறது," என்கிறார் நியாதி. தன்னிடம் ஒரு புத்தகம் எழுதுவதற்கான எண்ணம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை என்று நினைக்கும் எந்தப் பெண்ணாக இருந்தாலும், பேனாவையும் காகிதத்தையும் எடுத்துக்கொண்டு தொடங்க வேண்டும் என்றும், எழுத்தை நேசத்துக்காகச் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
"பணத்தை ஒருபோதும் உந்துசக்தியாகக் கருதக் கூடாது. சிரமங்கள் வரும்போது உங்களைத் தொடர்ந்து எழுத வைப்பது அந்த நேசம்தான்," என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































