You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் முன்னுள்ள வாய்ப்புகள் - தவெக ஆட்சி அமையாவிட்டால் என்ன நடக்கும்?
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 நாட்களாகியும் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சியமைக்க உரிமை கோரி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கரிடம் தமிழக வெற்றிக் கழகம் கடிதம் கொடுத்தது.
ஆனால் ஆட்சியமைக்கத் தேவையான 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற காரணத்தைக் கூறி அவரை அழைக்க ஆளுநர் ஆர்லேக்கர் மறுத்துவிட்டார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ''ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, ஆட்சியமைப்பதற்கு அவசியமான, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேவைப்படும் பெரும்பான்மை ஆதரவு இன்னும் பெறப்படவில்லை என்று ஆளுநர் விளக்கினார்" எனத் தெரிவிக்கப்பட்டது.
தவெகவுக்கு என்ன தேவை?
மே 6ஆம் தேதி முதல் முறை ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுத்தும் அழைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழங்கிய கடிதங்களுடன் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி, மே 7ஆம் தேதி விஜய் மீண்டும் சந்தித்தார். அதன் பிறகே இந்தச் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் தவெக-வால் ஆட்சியமைக்க முடியுமா என்ற சந்தேகமும், அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனால் அடுத்த ஆட்சி எப்படி அமையும் என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
இப்போதைய கள நிலவரப்படி,
- தவெக வென்ற தொகுதிகள் 108. இரு தொகுதிகளில் வென்றுள்ள விஜய், ஒன்றில் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதால் தவெகவின் பலம் 107 ஆகும். அப்போது, அவையின் பலம் 233ஆக குறையும் என்பதால் பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு போதும். சபாநாயகர் தவெக எனும் பட்சத்தில், அந்த எண்ணிக்கையை அடைய தவெகவுக்கு 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு உறுதி ஆகிவிட்டதால் தற்போதைய நிலையில், தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
- திமுக கூட்டணியிலிருந்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கோரப்பட்டுள்ளது. இன்று (மே 8) இவர்கள் முடிவெடுத்து தவெகவை ஆதரிப்பதாகக் கடிதம் கொடுத்தால் மேலும் 6 உறுப்பினர்களுடன் தனிப் பெரும்பான்மை கிடைத்துவிடும். அவர்களின் ஆதரவுக் கடிதத்தையும் இணைத்து மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தால் ஆளுநர் அழைத்தேயாக வேண்டுமென்ற நிலை ஏற்படும்.
- ஒருவேளை தற்காலிக சபாநாயகரைத் தேர்வு செய்யும்போது உறுப்பினர் எண்ணிக்கை ஒன்று குறைவதாக இருந்தால் வெளியிலுள்ள கட்சியில் இருந்து, உதாரணமாக தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர் பிரேமலதாவை நியமித்து (தேமுதிக ஏற்கும் பட்சத்தில்) நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வென்றுவிடலாம்.
- ஒருவேளை பிரேமலதா இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அல்லது பாமக எம்எல்ஏக்களில் ஒருவரையும் இப்படி நியமிக்கலாம். அதுவும் இல்லாவிட்டால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை தற்காலிக சபாநாயகராகவும், தேர்தல் அலுவலராகவும் வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
விஜய் குரல் கொடுக்காமல் அமைதி காப்பது ஏன்?
பிபிசியிடம் பேசிய டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன்குறை கிருஷ்ணன், ''விஜய் அதிக தொகுதிகளில் வென்ற கட்சியின் தலைவர் என்ற முறையில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். அவருக்குத் தரப்படும் அவகாசத்தில், பெரும்பான்மையை சட்டப்பேரவையில் அவர் நிரூபித்தால் போதும். நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தால் சபையில் இருப்பவர்களில் பெரும்பான்மையை நிரூபித்தால் போதும். அதனால் அரசு அமைவதில் சிக்கல் எதுவும் இருக்காது'' என்றார்.
''ஆனால் பெரும்பான்மை இருந்தால்தான் அழைப்பேன் என்று கூறுவது ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகம். இதில் வருத்தம் என்னவென்றால் இதைப் பற்றிப் பேச வேண்டியவர் விஜய்தான். இதுவரை விஜய் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் இருக்கலாம். இப்போதாவது சந்தித்து தன்னை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டுமென்பதைப் பொதுவெளியில் பேச வேண்டும்'' என்றார் பேராசிரியர் ராஜன் குறை.
மோதி பிரமதரான பிறகே பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை என்று கூறும் பேராசிரியர் ராஜன், ''மோதி 20–25 ஆண்டுகள் காரியகர்த்தாவாக இருந்து முதல்வரானார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்து வந்தார். பிரதமரான பின்பு, அவர் சார்பில் அல்லது கட்சி சார்பில் பேசுவதற்குப் பல செய்தித் தொடர்பாளர்கள் இருப்பதால் அவர் பேசவில்லை. விஜய் இப்போதுதான் அரசியலில் அடியெடுத்து வைத்து, முதல்வராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அவர் பேசித்தான் ஆக வேண்டும்'' என்றார்.
'பாஜகவின் முகவர்களான ஆளுநர்கள்' - கபில்சிபல் குற்றச்சாட்டு
இதே கருத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸூம் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், ''ஆளுநர் இடையூறு செய்கிறார். ஆனால் அவரை எதிர்க்க தவெக அஞ்சுகிறது. தவெகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரை எதிர்த்துக் கருத்துத் தெரிவிப்பதற்கு விஜய்க்கு கொள்கை உறுதியும் துணிவும் இருக்கிறதா?'' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காதது குறித்து மாநிலங்களவை உறுப்பினரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கபில்சிபல் கடுமையாகக் கருத்து வெளியிட்டுள்ளார். இவர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ ஆட்சியில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்.
''ஆளுநர்கள் பாஜகவின் முகவர்களாக மாறும்போது, அவர்கள் பாஜகவின் ஏவல்களையே நிறைவேற்றுகின்றனர். சட்டப் பேரவையால் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கிறார். ஆனால் மேற்கு வங்கத்தில், தற்போது பாஜக ஆட்சியில் இருப்பதால், அவர்கள் அதற்கு ஒப்புதல் அளிப்பார்கள்.
இன்றைய நிலவரப்படி, அவையில் தவெக-வுக்கு பெரும்பான்மை இல்லை. தமிழ்நாட்டின் தற்போதைய சூழல் குறித்து ஆளுநர் தெளிவாகவே அறிந்திருக்கிறார். அவர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இதுபற்றி சர்க்காரியா ஆணையம் தெளிவாகவே கூறியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
அவரைப் போலவே மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரும் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். கமல் தனது அறிக்கையில், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பும்
கர்நாடக மாநிலத்தில் 1988 ஆகஸ்ட் 13 முதல் எஸ்.ஆர்.பொம்மை தலைமையில் ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது இந்திய அரசியலமைப்பின் 356வது பிரிவைப் பயன்படுத்தி 1989 ஏப்ரல் 21 அன்று, அவருடைய அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
அவருடைய கட்சியிலிருந்து பலரும் வேறு கட்சிகளுக்குச் சென்று விட்டதால் எஸ்.ஆர்.பொம்மை அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கூறி இந்தக் கலைப்பு நடவடிக்கையை அன்றைய மத்திய அரசு மேற்கொண்டது.
ஜனதா தளம் சட்டப்பேரவைக் குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை எஸ்.ஆர். பொம்மை அப்போதைய ஆளுநர் பி. வெங்கடசுப்பையாவிடம் சமர்ப்பித்த போதும், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்க ஆளுநர் மறுத்துவிட்டார். இதை எதிர்த்து எஸ்.ஆர். பொம்மை, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது நிராகரிக்கப்பட்டது.
அதன்பின் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தபோது, நீதிபதிகள் ரத்னவேல் பாண்டியன், பி.பி.சாவந்த், பி.பி ஜீவன் ரெட்டி, எஸ்.சி அகர்வால் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது. அதில் ''ஒரு மாநில அரசுக்குப் பெரும்பான்மை உள்ளதா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவைதான், ஆளுநர் மாளிகை அல்ல'' என்று கூறியிருந்தது.
மத்திய, மாநில அரசுகளின் உறவுகளைப் பொருத்தவரை, இரு அரசுகளும் தொடர் மோதல்களில் ஈடுபட்டு அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்காமல், சுமூகமான உறவைப் பேணுவதற்கான சில பரிந்துரைகளை வழங்கும் பல்வேறு அறிக்கைகளையும் அந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியது.
அவற்றில் 1969ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம், ராஜ்மன்னார் குழு அறிக்கை மற்றும் 1987ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இவற்றைத்தான் இப்போது கபில்சிபல், கமல்ஹாசன் மற்றும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தவெக ஆட்சியமைப்பதற்கு இருக்கும் வேறு வாய்ப்புகள் என்ன?
தவெகவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவு இருந்தால் பெரும்பான்மை கிடைத்துவிடும். ஆனால் எளிதாக நடக்க வேண்டிய இந்த விஷயத்தை நடக்கவிடாமல் செய்வதற்கே தமிழக ஆளுநர் பெரும் முயற்சி எடுப்பதாகவும், அதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் சந்தேகம் எழுப்புகிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
பிபிசியிடம் பேசிய ராமு மணிவண்ணன், ''காங்கிரஸ் பங்கேற்கும் ஆட்சி தமிழகத்தில் அமையக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதனால்தான் அதிமுகவை உடைத்து, அதிமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் தவெக தலைமையிலான ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியை பாஜக எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அது எந்தளவுக்கு வெற்றி பெறும், அதை விஜய் ஏற்றுக்கொள்வாரா என்பதையும் இப்போது உறுதியாகக் கூறமுடியவில்லை'' என்றார்.
''தமிழகத்தில் புதிதாக அமையும் ஆட்சியில் தனது கடிவாளம் வேண்டுமென்று பாஜக நினைப்பதால் தவெகவை எளிதில் ஆட்சி அமைக்க அனுமதிக்குமா என்பது சந்தேகமே. இதை விஜய் ஏற்காத பட்சத்தில் ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சியையும், மீண்டும் தேர்தலைக் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.
ஆனால் மீண்டும் தேர்தல் வந்தால் விஜய் அமோகமாக வெற்றி பெறலாம் அல்லது தோல்வியையும் சந்திக்கலாம். எனவே அத்தகைய சூழல் ஏற்படுவதை முக்கியக் கட்சிகள் எதுவுமே விரும்பாது'' என்றார் ராமு மணிவண்ணன்.
புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்கியுள்ள அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அதிமுக என்ன செய்யப் போகிறது என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.
ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், ''அதற்கான எண்ணமும் இல்லை'' என்று கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் தாமாக முன் வந்து அளித்த ஆதரவைத் தவிர்த்துவிட்டு, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவை (ஒருவேளை முன்வந்தால்) விஜய் ஏற்பாரா என்பது தெரியவில்லை.
தவெக தலைமையில் ஆட்சி அமையாவிட்டால் வேறு என்ன வாய்ப்பு?
தொல்.திருமாவளவனை தமிழக முதல்வராக்கி, திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்று அக்கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஒரு புதிய கருத்தை முன்மொழிந்திருக்கிறார். அதற்கு சாத்தியக்கூறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
திமுக கட்டாயமாக ஆட்சியமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது திட்டவட்டமாகத் தெளிவாகி விட்டது. அதனால் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் (ஐயுஎம்எல் தவிர்த்து) தவெக ஆட்சி அமைக்கவே சாத்தியக்கூறு அதிகம் என்பதே பத்திரிகையாளர்களின் கருத்தாகவுள்ளது.
பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன், ''தமிழக அரசியலில் என்ன நடக்கிறது, என்ன நடக்கும் என்பதே பெரும் குழப்பமாகவுள்ளது. எதையும் திட்டவட்டமாகத் தெரிவிக்க முடியாத சூழல் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதை மட்டும் யூகிக்க முடிகிறது. இப்போதைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆதரவுடன் தவெக ஆட்சி அமைப்பதில் எந்த பாதிப்பும் இல்லை. இதெல்லாம் 2 நாட்களுக்குள் நடக்க வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை'' என்றார்.
''அப்படியே நடந்துவிட்டாலும் அந்த ஆட்சி 6 மாதங்களுக்கு நீடிக்குமா என்பது உறுதியில்லை. அதனால் அதற்குள் நிரந்தரமான மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். அதற்கு அதிமுக ஆதரவு ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. அதிமுக தானாக முன் வந்து தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்தாலும், அதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது'' என்றார் ப்ரியன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு