கோலியை திகைக்க வைத்த பந்து: ஜாகீர் செதுக்கிய இளம் வீரர் லக்னௌ வெற்றிக்கு வழிவகுத்தது எப்படி?

    • எழுதியவர், நிதிஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த மெகா ஏலத்திற்குப் பின் லக்னோ அணியின் கட்டமைப்பை பார்த்தவர்களுக்கு ஒரு பெரிய கேள்வி இருந்தது. யார் ஓப்பனிங் ஆடுவார்கள் என.

மிட்ச் மார்ஷ் ஆடுவார், மார்க்ரம் ஆட வாய்ப்பு இருக்கிறது, அத்தனை கோடிகள் கொடுத்து எடுத்த நிக்கோலஸ் பூரனுக்கு ஒரு வாய்ப்பு தரலாம், ஏன் ரிஷப் பண்ட்டே ஆடலாம் என நிறைய ஆரூடங்கள் கூறப்பட்டன.

இறுதியில் அந்த அணிக்காக ஓப்பனிங் ஆடியது மார்ஷும் மார்க்ரமும். இவர்கள் இருவரின் அதிரடியில் சில வெற்றிகளையும் பெற்றது அந்த அணி.

இந்த முறை மார்ஷ் - பண்ட், மார்ஷ் - மார்க்ரம், மார்ஷ் - படோனி, மார்ஷ் - இங்லிஸ் என நான்கு ஓப்பனிங் இணைகள் ஆடிவிட்டார்கள். ஆனாலும் இதில் எந்த இணையும் பெரிதாக சோபிக்கவில்லை, வெற்றியும் கிடைக்கவில்லை. தொடரின் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நேரத்திலும் இன்னமும் சரியான ஓப்பனிங் இணையையே கண்டறிய முடியாத பரிதாப நிலையில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி.

மறுபக்கம் கடந்த முறை ஆடி கோப்பை வென்ற அதே அணியோடு களமிறங்கி தொடக்கத்திலிருந்தே புள்ளிப்பட்டியலில் டாப் 3 மூன்று இடங்களில் தொடர்ந்து பயணிக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த இரு அணிகளும் மோதிய போட்டி நேற்று (மே 7) நடந்தது.

பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு

பந்துவீச்சுக்கு ஓரளவு சாதகமான ஏகானா ஸ்டேடியத்தில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள். ஒன்று வானம் மேகமூட்டத்தோடு இருந்தது. மழை என்றாலே சேஸிங் தேர்வு செய்வது அணிகளின் வழக்கம்.

இரண்டாவது லக்னோ அணியின் ஹோம் ரெக்கார்ட். லக்னோ இங்கு ஆடியிருக்கும் 33 போட்டிகளில் 13 வெற்றிகள் பெற்று 20-ல் தோற்றிருக்கிறது. இப்போது ஐ.பி.எல்லில் இருக்கும் அணிகளில் மோசமான ஹோம் ரெக்கார்ட் வைத்திருக்கும் அணி லக்னோ தான்.

பெங்களூரு அணியில் எந்த மாற்றங்களுமில்லை. லக்னோ அணியில் மூன்று மாற்றங்கள். இங்லிஸுக்கு பதில் அர்ஷின் குல்கர்னி. மொஹ்சின் கான், அவேஷ் கானுக்கு பதில் ஷபாஸ் அகமதும் திக்வேஷ் ரதியும்.

மிரட்டிய மார்ஷ்

லக்னோ அணிக்காக இந்த முறை ஓப்பனிங் இறங்கியது மார்ஷும் குல்கர்னியும். அந்த அணி பரீட்சித்துப் பார்க்கும் ஐந்தாவது ஓப்பனிங் இணை இது.

மகாராஷ்டிராவுக்காக மட்டும் அர்ஷின் குல்கர்னி கடந்த சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் ஏழு போட்டிகளில் 225 ரன்கள் குவித்திருக்கிறார். அதே ஃபார்மை இங்கும் தொடர்வார் என்கிற நம்பிக்கையில் அவரை களமிறங்கியது லக்னோ. ஆனால் ஆடுவதற்கு சிக்கலான ஏகானா மைதானத்தில் தடுமாற்றத்தோடுதான் தொடங்கினார் குல்கர்னி.

ஆனால் அவருக்கும் சேர்த்து அதிரடியாய் தொடங்கினார் மார்ஷ். ஹேசல்வுட் வீசிய இரண்டாவது ஓவரில் அவரின் தலைக்கு மேலே நேராய் சிக்ஸ் அடித்து தன் கணக்கை தொடங்கினார். அதன்பின் சில நிமிடங்களுக்கு மழையால் ஆட்டம் தடைபட்டுத் தொடர, மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆடத்தொடங்கினார் மார்ஷ்.

க்ருணால் வீசிய நான்காவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி, ரஷிக் சலாம் வீசிய ஐந்தாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, ஹேசல்வுட் வீசிய ஆறாவது ஓவரில் மூன்று பவுண்டரிகள் என பவர்ப்ளே முடிவதற்குள் அரைசதம் கடந்தார். ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் 68/0 என இருந்தது.

'பவுலிங் சேஞ்ச்' என சுயாஷ் சர்மாவை அழைத்துவந்தார் படிதார். ஆனாலும் பலனில்லை. அந்த ஓவரில் மட்டும் 12 ரன்கள். அதன்பின் வேகம் கொஞ்சம் மட்டுப்பட மீண்டும் ஒருமுறை மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 47 நிமிடங்களுக்கு தாமதமானது. அப்போது ஸ்கோர் 9 ஓவர்கள் முடிவில் 95/0. இதில் மார்ஷ் எடுத்த ரன்கள் மட்டும் 76. பொறுமையாக ஆடிவந்த குல்கர்னி 22 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார்.

மழை குறுக்கிடும் ஆட்டங்களில் முதலில் ஆடும் அணியின் பேட்ஸ்மேன்கள் ஒரு பந்தையும் விடாமல் அதிவேகத்தில் ஆடவேண்டியது அவசியம். அப்போதுதான் ஒருவேளை டக்வொர்த் லூயிஸ் முறை வந்தாலும் எதிரணிகளுக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க முடியும். இதை லக்னோ அணி நிர்வாகமும் மழை இடைவேளையில் குல்கர்னிக்கு நினைவுபடுத்தியிருக்கும் போல. மழைக்குப் பின்னான முதல் ஓவரில் இறங்கி வந்து தூக்கியடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனார்.

ஒன் டவுனில் இறங்கிய நிக்கோலஸ் பூரனும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார். ஷெப்பர்ட் வீசிய 14வது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்து தன் சதத்தை எட்டினார் மார்ஷ். 49 பந்துகளில் சதம். இந்த தொடரில் அடிக்கப்படும் 11வது சதம் இது. இதற்கு முன்னாள் அடிக்கப்பட்ட பத்து சதங்களில் ஆறு சதங்கள் தோற்ற அணிகளிடமிருந்து வந்திருந்தவை. இந்த சதமும் அப்படி ஆகிவிடக்கூடாது என பதற்றத்தில் இருந்தார்கள் லக்னோ ரசிகர்கள்.

இப்போது மீண்டுமொரு முறை குறுக்கிட்டது மழை. இந்தமுறை இழந்த நேரத்தை ஈடுகட்டும் விதமாக ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 19 ஓவர் ஆட்டமாக மாற்றப்பட்டது. இதனால் முன்னினும் வேகமாக ரன்கள் எடுக்க முற்பட்டார்கள் லக்னோ பேட்ஸ்மேன்கள். இதில் மார்ஷ் 111 ரன்களுக்கு அவுட்டானார்.

மீதமிருந்தது 17 பந்துகளே என்பதால் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்டார் பண்ட். இறுதியாக 19 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 209/3. பண்ட் 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார்.

சொற்ப ரன்களில் முடிந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்

டி.எல்.எஸ் முறைப்படி 19 ஓவர்களில் 213 ரன்கள் என்ற மாற்றியமைக்கப்பட்ட இலக்கோடு களமிறங்கியது பெங்களூரு. முதல் ஓவரில் பவுண்டரி அடித்த கையோடு லீடிங் எட்ஜ் கொடுத்து பெவிலியன் திரும்பினார் பெத்தேல்.

உலகக்கோப்பையில் சதமடித்த பெத்தேல், கடந்த நான்கு டி20 போட்டிகளில் முறையே 14, 20, 5, 4 என சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து வருகிறார்.

இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்து, பந்து வீசியது பிரின்ஸ் யாதவ். 140.4 கி.மீ வேகத்தில் தரையில் பட்டு இன்ஸ்விங்கான பந்தைக் கணிக்க சேஸ் மாஸ்டர் விராட் கோலி தவற, அவரின் பேட்டுக்கும் பேடிற்குமான இடைவெளியில் மின்னல் வேகத்தில் ஊடுருவி ஆஃப் ஸ்டம்ப்பை பறக்கவிட்டது பந்து. கோலியால் ஒருகணம் என்ன நடந்தது என நம்பவே முடியவில்லை. ஆயிரம் போட்டிகளில் ஆடியிருக்கும் கோலியையே ஆச்சரியப்படுத்திய பந்து இது. இந்த தொடரின் சிறந்த பந்து என வர்ணனையாளர்கள் சிலிர்த்துப் போய் சொன்னார்கள்.

நடந்ததை நம்பமுடியாமல் நடக்கத் தொடங்கினார் கோலி. 2023-க்கு பின் ஐ.பி.எல்லில் அவர் டக் அவுட் ஆவது இதுவே முதல்முறை.

தொடக்கத்திலேயே இரு விக்கெட்களை பறிகொடுத்துவிட்டதால் பொறுமையாகவே ஆடினார்கள் படிக்கல்லும் படிதாரும். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 45/2 என இருந்தது.

ஸ்பின்னரான திக்வேஷ் ரதி வர, அதற்காகவே காத்திருந்தது போல அவரை குறிவைத்தார் படிதார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 15 ரன்கள். திக்வேஷ் ரதியின் அடுத்த ஓவரில் 17 ரன்கள். மயங்க் யாதவ் வீசிய மூன்றாவது ஓவரில் 18 ரன்கள். ஸ்கோரும் நூறை கடந்தது. படிதாரும் அரைசதம் கடந்தார்.

இப்போது மீண்டும் பிரின்ஸ் யாதவ். அவர் வீசிய ஸ்லோ பாலை கணிக்க முடியாமல் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் படிக்கல். அதே ஓவரில் பிரின்ஸ் வீசிய ஷார்ட் பாலை சமாளிக்க முடியாமல் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஜிதேஷ் சர்மாவும் அவுட் ஆனார்.

ஸ்கோர் 11 ஓவர்கள் முடிவில் 107/4 என இருந்தது. நல்ல ஃபார்மில் ஆடிக் கொண்டிருந்த பட்டிதாரும் அடுத்த ஓவரிலேயே கிளம்ப சரியாக 7 ஓவர்களில் 100 ரன்கள் தேவை. என்னதான் டிம் டேவிட், ஷெப்பர்ட், க்ருணால் என மூன்று பவர்ஹிட்டர்கள் இருந்தாலும் ஏகானா பந்துவீச்சிற்கு சாதகமான மைதானம் என்பதால் அவர்களால் நினைத்தபடி ஆடமுடியவில்லை.

இறுதியாய் 19 ஓவர்கள் முடிவில் 203/6 என்பதுதான் ஸ்கோர். ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ அணி. கடைசியாக ஏப்ரல் 9-ஆம் தேதி வென்றிருந்தது லக்னோ. ஆட்டநாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் இந்த பிரின்ஸ் யாதவ்?

கோலி, படிக்கல், ஜிதேஷ் சர்மா என பெங்களூருவின் மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களை வெளியேற்றி லக்னோ வெற்றி பெற காரணமாயிருந்தது 24 வயதான பிரின்ஸ் யாதவ். 17 வயது வரை டெல்லியின் புறநகர் பகுதிகளில் டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆடிய பிரின்ஸ் யாதவ் இந்த ஏழு ஆண்டுகளாகத்தான் லெதர் பால் கிரிக்கெட் ஆடிவருகிறார். ஐ.பி.எல்லின் இந்த சீசனில் 10 போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி 'பர்ப்பிள் கேப்' பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார் பிரின்ஸ் யாதவ்.

டென்னிஸ் பால் கிரிக்கெட்டிலிருந்து லெதர் பால் கிரிக்கெட்டிற்கு இவர் மாற மூன்று முன்னாள் வீரர்களே காரணம். லலித் யாதவ், ஜாகீர் கான், பிரதீப் சங்வான் ஆகியோரே அவர்கள். அதுவரை யார்க்கர்களை மட்டுமே பிரதானமாய் போட்டுக் கொண்டிருந்த பிரின்ஸ் இன்று ஷார்ட் பால், ஸ்லோ பால், இன்ஸ்விங்கர் என விக்கெட்டிற்கு ஒன்றாக வெரைட்டி காட்ட, அதற்கான கிரெடிட் இவர்கள் மூவருக்கும்தான்.

விரைவில் பிரின்ஸ் யாதவை இந்திய அணியிலும் எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு லக்னோவின் எழுச்சிக்கு இவர்தான் முதுகெலும்பு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு