ஆதார், வாக்காளர் அட்டை இருந்தும் இந்திய பாஸ்போர்ட் மறுப்பு: கணவரைப் பிரிந்து 3 ஆண்டுகள் தவித்த பெண்ணின் போராட்டம்

- எழுதியவர், கோபால் கடேஷியா
- பதவி, பிபிசி குஜராத்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 26 வயதான டோலி பராய் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வந்தார். கனடாவின் கால்கரியில் பணிபுரிந்து வந்த கிலன் வதாலியா என்ற இளைஞரை அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணச் சடங்குகள் மற்றும் இதர சம்பிரதாயங்கள் முடிவடைந்த பிறகு, டோலியை அவரது கணவருடன் கனடாவுக்கு அனுப்பி வைக்க வதாலியா குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால், அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
டோலி உலகிலுள்ள எந்தவொரு நாட்டின் குடியுரிமையும் இல்லாதவர் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். இதனால், கனடா செல்வதற்கான டோலியின் திட்டம் தடைபட்டது. இதையடுத்து, அவர் பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்களைத் தொடர்புகொண்டு அதிகாரிகளிடம் தனது தரப்பை எடுத்துரைத்தார். தனக்கு 25 நாட்கள் வயதாக இருந்த போதிருந்து ராஜ்கோட்டில் வசித்து வருவதாகவும், அங்கேயே படித்து, பணியாற்றியதாகவும், எனவே தான் இந்திய குடிமகள் என்றும் அவர் வாதிட்டார்.
ஆனால், பல்வேறு சட்டங்களைக் காரணம் காட்டி டோலி வதாலியாவின் வாதங்களை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து, அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். அங்கும் அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் மனைவி ராஜ்கோட்டிலும், கணவர் கனடாவிலும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு கண்டங்களில் வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.
இருப்பினும், உள்ளூர் தலைவர்கள் டோலியின் பிரச்னையை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து, தற்போது டோலி வதாலியாவுக்கு நம்பிக்கை ஒளி தென்பட்டுள்ளது.

ஒரே இரவில் மொசாம்பிக்கை விட்டு வெளியேறிய பராய் குடும்பம்
கிழக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாட்டுக்கு, தனது தந்தை கேதன் பராய் 1995ஆம் ஆண்டு வணிகம் செய்வதற்காகச் சென்றதாக டோலி வதாலியா பிபிசியிடம் தெரிவித்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஏற்கெனவே அங்கு வசித்து வந்தனர்.
மொசாம்பிக்கின் கடற்கரை நகரமான ஷாய்-ஷாயில் (Shai-Shai) அவரது தந்தை மளிகைக் கடை ஒன்றைத் தொடங்கினார். பின்னர், அவரது மனைவி ஆர்த்தி பராயும் மொசாம்பிக் சென்றார். 2000ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தத் தம்பதிக்கு டோலி பிறந்தார். மொசாம்பிக் அரசிடம் இருந்து டோலிக்கு அவரது பெற்றோர் பிறப்புச் சான்றிதழையும் பெற்றனர்.
இதுகுறித்து டோலி வதாலியா கூறுகையில், "நான் பிறந்த சில நாட்களிலேயே மொசாம்பிக்கில் புயல் தாக்கியது. இதனால், ஷாய்-ஷாயில் கனமழையும் கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. எனது பெற்றோர் உருவாக்கியிருந்த அனைத்தும் அழிந்துபோயின" என்றார்.
மேலும்,"சுமார் 18 நாட்களுக்குப் பிறகு, வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து நாங்கள் மீட்கப்பட்டோம். வெள்ளத்தில் எனது பெற்றோர் அனைத்தையும் இழந்துவிட்டதால், என்னுடன் ராஜ்கோட்டுக்கு திரும்பினர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
டோலி பிறந்த சில நாட்களுக்குப் பிறகு ஷாய்-ஷாயில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காரணமாக, கேதன் மற்றும் ஆர்த்தியால் மொசாம்பிக் அரசிடம் இருந்தோ அல்லது இந்திய அரசிடம் இருந்தோ அவருக்கு பாஸ்போர்ட் பெற முடியவில்லை.
அந்த நேரத்தில், மொசாம்பிக்கில் உள்ள இந்திய தூதரகம் வழங்கிய அவசர காலச் சான்றிதழின் அடிப்படையில், தம்பதியினர் தங்கள் மகளுடன் மொசாம்பிக்கில் இருந்து இந்தியா திரும்ப அனுமதிக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அந்த அவசர காலச் சான்றிதழின் அடிப்படையில், 2000ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி, பிறந்து சில வாரங்களே ஆன தங்கள் மகள் டோலியுடன் பராய் தம்பதியினர் இந்தியா திரும்பினர். அதன் பிறகு அவர் மீண்டும் மொசாம்பிக் செல்லவில்லை. ராஜ்கோட்டிலேயே குடியேறினார்.
டோலிக்கு பள்ளியில் எப்படி சேர்க்கை கிடைத்தது?
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
ராஜ்கோட்டுக்கு திரும்பிய பிறகு, டோலி வளர்ந்ததும், அவரது பெற்றோர் அவரை அங்குள்ள பள்ளி ஒன்றில் சேர்க்க அழைத்துச் சென்றனர். இதுகுறித்து டோலி கூறுகையில், "மொசாம்பிக் அரசு வழங்கிய எனது பிறப்புச் சான்றிதழ் போர்த்துகீசிய மொழியில் இருந்தது. அந்தச் சான்றிதழின் அடிப்படையில் எனக்குப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது. பள்ளியின் பொதுப் பதிவேட்டிலும் எனது பெயர் பதிவு செய்யப்பட்டது" என்றார்.
"பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அந்தப் பள்ளி எனக்குப் பள்ளி மாற்றுச் சான்றிதழை வழங்கியது. அதிலும் நான் மொசாம்பிக்கில் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு பள்ளி மாற்றுச் சான்றிதழ் வடிவில் எனக்கு மற்றொரு பிறப்புச் சான்று கிடைத்தது."
பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் அடிப்படையில் கல்லூரியிலும் தனக்குச் சேர்க்கை கிடைத்ததாக டோலி கூறுகிறார். அவர் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர், மனையியல் (உணவு மற்றும் ஊட்டச்சத்து) பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இந்திய அரசு அவருக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றை வழங்கியது.
மற்ற இளம் வயதுப் பெண்களைப் போலவே தனது வாழ்க்கையும் இயல்பாகச் சென்றுகொண்டிருந்ததாக டோலி கூறுகிறார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சிக்குப் பதிலாக, வாழ்க்கையில் பூகம்பம் ஏற்பட்டதைப் போன்ற சூழல் உருவானதாக அவர் தெரிவிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு, டோலி உலகின் எந்த நாட்டிற்கும் குடிமகள் அல்ல என்று அவரிடம் கூறப்பட்டது.

தான் இந்திய குடிமகள் என்ற நம்பிக்கையுடனேயே வளர்ந்ததாக டோலி கூறுகிறார். 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம், கிலன் வதாலியாவை அவர் திருமணம் செய்துகொண்டார். ராஜ்கோட்டை சேர்ந்த கிலன், கனடாவின் பணி அனுமதி (Work Permit) பெற்று கால்கரியில் பணிபுரிகிறார்.
திருமணத்திற்குப் பிறகு, கணவருடன் வசிப்பதற்காக டோலியை கனடாவுக்கு அனுப்ப குடும்பத்தினர் முடிவு செய்தனர். விசாவுக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு நாட்டின் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருப்பது அவசியமாக இருந்தது. இதனால், 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பாஸ்போர்ட் கோரி டோலி விண்ணப்பித்தார். இதற்காக ஆமதாபாத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தையும் அணுகினார்.
இதுகுறித்து டோலியின் மைத்துனர் ரோனக் வதாலியா பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் டோலியின் பிறப்புச் சான்றிதழைக் கேட்டனர். மொசாம்பிக் அரசு வழங்கிய சான்றிதழை நாங்கள் சமர்ப்பித்தோம். ஆனால், பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. எங்களது விண்ணப்பத்தையும் நிராகரித்தனர். டோலி இந்திய குடிமகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்" என்றார்.
இதையடுத்து, டோலி தனது பிறப்புச் சான்றிதழை மொசாம்பிக்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்றார். கூடுதல் ஆவணங்களுடன் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார். ஆனால், இந்த முறையும் இந்திய குடியுரிமையை அவரால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறி பாஸ்போர்ட் அலுவலகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.
இதையடுத்து, ராஜ்கோட்டிற்கு திரும்பிய டோலி, இந்திய குடியுரிமைச் சான்றிதழைப் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டார். இதுகுறித்துப் பேசிய டோலி, "இந்திய குடியுரிமையைப் பெற வேண்டுமானால், வேறொரு நாட்டின் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். அதன் பிறகுதான் என்னால் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் என்றும் கூறினர்" எனத் தெரிவித்தார்.
அதற்காக, "நாங்கள் டெல்லியில் உள்ள மொசாம்பிக் தூதரகத்தையும் தொடர்புகொண்டோம். ஆனால், நான் மொசாம்பிக் நாட்டின் குடிமகள் இல்லை என்று அவர்கள் தெளிவாகத் தெரிவித்தனர். எப்படியிருந்தாலும், என்னிடம் மொசாம்பிக் பாஸ்போர்ட் இருந்ததில்லை. அப்படியிருக்க, நான் எதைச் சமர்ப்பிக்க முடியும்? நான் நாடற்றவராக மாறிவிட்டேன். இதனால் எனது கவலை மேலும் அதிகரித்தது" என்று டோலி பகிர்ந்து கொண்டார்.

பட மூலாதாரம், Parshottam Rupala/FB
'உயர் நீதிமன்ற கதவுகளைத் தட்டினேன், ஆனாலும் வழி கிடைக்கவில்லை'
டோலி எந்தவொரு நாட்டின் குடியுரிமையும் இல்லாதவராக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டதால், அதாவது அவர் எந்த நாட்டின் குடியுரிமையும் பெறாதவராக இருந்ததால், வதாலியா, பராய் ஆகிய இரு குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக ரோனக் வதாலியா கூறுகிறார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "நாங்கள் அனைவரும் மிகுந்த கவலையில் இருந்தோம். அடுத்து என்ன செய்வது, யாரைச் சந்திப்பது, எந்த ஆவணங்களுக்காக யாரிடம் விண்ணப்பிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர் அங்கு குழந்தையைப் பெற்றெடுத்தால், அந்தக் குழந்தை பிறந்த ஓர் ஆண்டுக்குள் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது விதி. அவ்வாறு செய்வதன் மூலம் அந்தக் குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும்" என்றார்.
"ஆனால், வெள்ளத்தில் அனைத்தையும் இழந்த பிறகு டோலியின் பெற்றோரால் மீண்டும் மொசாம்பிக் செல்லவே முடியவில்லை. அப்போது, தூதரகத்துக்குத் தகவல் தெரிவிப்பதற்கான வேறு எந்தத் தகவல் தொடர்பு வசதிகளும் அவர்களிடம் இல்லை."
வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வசித்திருந்தால், குறிப்பிட்ட சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், மொசாம்பிக் நாட்டின் குடிமகள் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் டோலியிடம் இல்லாததால், அந்த வழியும் அவருக்கு அடைபட்டது. இதையடுத்து, 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் டோலி மனு தாக்கல் செய்தார்.
பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் எடுத்த முடிவுகளை ரத்து செய்து, தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரினார். 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்திய பாஸ்போர்ட் பெறுவதற்கு டோலி தனது இந்திய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று கூறி, அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், ஏதேனும் விதிவிலக்கான சூழ்நிலைகளால் மொசாம்பிக்கில் உள்ள இந்திய தூதரகத்தில் பிறப்பைப் பதிவு செய்ய முடியாமல் போயிருந்தால், காலதாமதமாகப் பிறப்பைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் அதிகாரம், சம்பந்தப்பட்ட நாட்டுக்காக இந்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட முதன்மை அதிகாரிக்கு இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு டோலிக்கு நம்பிக்கை பிறக்கக் காரணம் என்ன?
இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களை அணுகியும் நிவாரணம் கிடைக்காததால், போர்பந்தர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி. ரமேஷ் ததுக் மற்றும் ராஜ்கோட் மக்களவைத் தொகுதியின் தற்போதைய எம்.பி. பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோரின் உதவியை நாடியதாக ரோனக் வதாலியா கூறுகிறார்.
இதுகுறித்து ரோனக் கூறுகையில், "நாங்கள் அவரைச் சந்தித்து, எங்களது பிரச்னையை விளக்கி, வழிகாட்டுமாறு கேட்டுக்கொண்டோம். முன்னாள் மாநிலங்களவை எம்.பி. ராம்பாய் மொகாரியாவையும் தொடர்புகொண்டோம். அவர் எங்களது பிரச்னையைக் கேட்டறிந்து, நிலைமையைப் புரிந்துகொண்டார். இதையடுத்து, ரமேஷ்பாயும் பர்ஷோத்தம்பாயும் எங்களுக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் வழங்கி, டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தனர்" என்றார்.
மத்திய அரசின் முன்னாள் அமைச்சரான பர்ஷோத்தம் ரூபாலா, பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "அந்தப் பெண் எந்தவொரு நாட்டின் குடிமகளாகவும் இல்லாமல் இருந்தார். அவரது வழக்கில் நியாயம் இருப்பதாக நான் கருதினேன். எனவே, அவரது விண்ணப்பத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப் பரிந்துரைத்தேன்" என்றார்.
எம்.பி.க்களின் பரிந்துரையைத் தொடர்ந்து, காலதாமதம் ஏற்பட்டிருந்தாலும் டோலியின் பிறப்பை மொசாம்பிக்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கோரி இந்திய அரசிடம் விண்ணப்பிக்கும்படி டெல்லி அதிகாரிகள் அறிவுறுத்தியதாக ரோனக் வதாலியா கூறுகிறார். அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி டோலி இந்திய அரசிடம் விண்ணப்பித்தார். இறுதியாக, காலதாமதம் ஏற்பட்டிருந்தாலும் டோலியின் பிறப்பைப் பதிவு செய்யுமாறு மொசாம்பிக்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.
இதுகுறித்து ரோனக் வதாலியா கூறுகையில், "இந்த உத்தரவுக்குப் பிறகு, துணைத் தூதரகம் கால தாமதத்தை மன்னித்து, டோலியின் பிறப்பைப் பதிவு செய்து, அவருக்கான சான்றிதழை எங்களுக்கு வழங்கியது. இந்தச் சான்றிதழை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளிடம் சமர்ப்பித்தபோது, அவர்கள் டோலியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டனர்" என்றார்.

பட மூலாதாரம், Vadalia family
இதையடுத்து, தீபாவளி பண்டிகையின்போது டோலியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவரது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து டோலி கூறுகையில், "நவம்பர் 11ஆம் தேதி தபால்காரர் எனது பாஸ்போர்ட்டை வீட்டில் வந்து வழங்குவார் என்று எனக்குச் செய்தி வந்தது. நவம்பர் 11ஆம் தேதி காலையில் இருந்தே அதற்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். எனது முந்தைய பல முயற்சிகள் தோல்வியடைந்து இருந்ததால், உண்மையிலேயே பாஸ்போர்ட் வருமா, வராதா என்ற பதற்றம் எனக்கு இருந்தது" என்றார்.
அதுகுறித்துப் பகிர்ந்துகொண்ட அவர், "அந்தப் பதற்றத்தின் காரணமாக, என்னை யாரும் தொலைபேசியில் அழைக்க வேண்டாம் என்று குடும்பத்தினரிடம் கூறினேன். இறுதியாக, தபால்காரர் எங்கள் வீட்டுக்கு வந்து, எனது முகவரி எழுதப்பட்ட மஞ்சள் நிற உறையை என்னிடம் கொடுத்தார். அதைத் திறந்து பார்த்தபோது, உண்மையிலேயே எனது பெயரில் இந்திய பாஸ்போர்ட் இருந்தது. அது உண்மையில் எனது பாஸ்போர்ட்தானா என்பதை என்னால் நம்பவே முடியவில்லை" என்றார்.
"இந்தப் பாஸ்போர்ட், என்னை நாடற்றவர் என்ற நிலையிலிருந்து இந்திய குடிமகளாக மாற்றியுள்ளது" என்றார் அவர்.
கனடாவில் உள்ள தனது கணவரிடம் செல்வதற்காக ஆவலுடன் காத்திருப்பதாக டோலி கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "இப்போது என்னிடம் பாஸ்போர்ட் இருப்பதால், கனடா விசா பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். விரைவில் கனடாவில் எனது கணவருடன் இணைந்து வாழ முடியும் என்று நம்புகிறேன்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































