திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் கல் தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் - கள நிலவரம் என்ன?

திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் தீபம் ஏற்றக்கூடிய மலை உச்சி அனைத்தையும் சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் தீபம் ஏற்றக்கூடிய மலை உச்சி அனைத்தையும் சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நவம்பர் 28-ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று தீபம் ஏற்றியாக வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னதாக மத்திய ரிசர்வ் காவல் படையின் பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றத் தேவையான பாதுகாப்பு அளிப்பதற்காக சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் திருப்பரங்குன்றம் வந்த நிலையில், தற்போது திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் தீபம் ஏற்றக்கூடிய மலை அனைத்தையும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள்
படக்குறிப்பு, திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மக்களின் மனநிலை என்ன?

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியிலுள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி நடைபெற்று வருகின்றன. சரியாக எத்தனை மணிக்கு தீபம் ஏற்றப்படும் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஓய்வுபெற்ற நீதிபதிகளான வைத்தியநாதன், பார்த்திபன் ஆகிய இருவரும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை வந்தடைந்தனர். அவர்களுக்குக் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் மலையின் உச்சிப் பகுதியிலும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரிடமும் ஆதார் எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த விவரங்களை அளித்த பிறகே அவர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

கள நிலவரத்தைப் புரிந்துகொள்வதற்காக திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடம் நாம் பேசினோம்.

அப்போது பெரும்பாலானோர் தெரிவித்த கருத்து ஒன்றாகவே இருந்தது. "தீபம் எங்கு ஏற்றப்பட்டாலும், திருப்பரங்குன்றத்தில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது. தொடர்ச்சியான நிகழ்வுகளால் திருப்பரங்குன்றம் பதற்றம் நிறைந்த பகுதி என்ற பிம்பம் உருவாகியிருப்பதாகக் கருதும் அவர்கள், அந்தப் பிம்பம் மாற வேண்டும்" என்று விரும்புவதாகத் தெரிவித்தனர்.

குறிப்பாக, "இன்றைய நாள் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாகக் கடக்க வேண்டும்" என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள்

சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.

​பெண்கள், ஆண்கள் மற்றும் இளைஞர்கள் என 100க்கும் மேற்பட்டோர் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக அங்கு கூடியுள்ளனர்.

​இதையடுத்து, காலை 6.15 மணிக்கு மேல் காவல்துறையினர் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து, ஒவ்வொருவரின் விவரங்களையும் சேகரித்தனர். அதைத் தொடர்ந்து, தீவிர பரிசோதனைக்குப் பிறகே அவர்கள் மலை மேல் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மறுபுறம் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகளில் ஒரு பகுதியாக கட்டைகள், மரப்பலகைகள் கொண்டு செல்லப்பட்டன.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள்

'உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' - மாணிக்கம் தாகூர்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மத நல்லிணக்கம் குறித்து கவலை எழுப்புவதாகவும் இதை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மத நம்பிக்கைகளையும் வழிபாட்டு உரிமைகளையும் மதித்துப் போற்றுவதோடு, பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும், தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதியான சமூகச் சூழலையும் பாதுகாப்பது அனைவரின் தலையாய பொறுப்பாகும்."

"இத்தகைய சூழலில், கோவில் நிர்வாகம் தொடர்பாக நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், நீதித்துறை, மாநில நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அதிகார வரம்புகள் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. நாட்டில் சட்டத்தின் ஆட்சியும் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் தமிழ்நாட்டின் அமைதியும், மத நல்லிணக்கமும், அரசியல் சாசன விழுமியங்களும் எவ்விதப் பாதிப்புமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுதியான நிலைப்பாடு" என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள்

மதுரையை வந்தடைந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் அடங்கிய குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் தங்கியுள்ள அவர்கள், அங்கு ஆய்வு கூட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர், திருப்பரங்குன்றம் திருக்கோவில் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் மலை மீதுள்ள கல் தூண், பாதுகாப்பு ஏற்பாடுகள், தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு