தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக அறிவித்த ஆ.ராசா

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறை மசோதாவின் புதிய வரைவுக்கு ஆதரவளிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

இதை விளக்கி செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, "1971இல் திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை நிர்ணயித்தன. அதில் தமிழ்நாட்டுக்கு இரண்டு இடங்கள் குறைந்தன. இருந்தாலும் தேசத்தின் நலனுக்காக திமுக அப்போது ஒப்புக்கொண்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது மாறக்கூடாது. இப்போது இரண்டு இடங்கள் குறையவில்லை, கூடுதல் இடங்கள் தானே கிடைக்கப் போகின்றன" என்று பேசினார்.

மேலும், "கடந்த மறுவரையறையின்போது தமிழ்நாட்டின் பங்கு 7.18. அதே பங்களிப்பு தொடர வேண்டும் என்பதுதான் நியாயமான தொகுதி மறுவரையறை. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இதைத்தான் கோரின. இது இன்று எடுக்கப்பட்ட முடிவல்ல. திமுக ஆட்சியில் இருந்தபோது இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய அளவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது" என்று கூறினார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு
படக்குறிப்பு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா

கூடுதலாக, "அந்தத் தீர்மானத்திற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்தின்போதும், அதே பங்களிப்பு குறையக்கூடாது என்கிற கோரிக்கையைத்தான் வலியுறுத்தினோம், அதன் அடிப்படையில் நிலையான முடிவை எடுத்துள்ளோம். தேசிய அளவிலும் சட்டப்பேரவையிலும் எடுத்த முடிவுகளின் அடிப்படையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்றும் ஆ.ராசா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களவை நவம்பர் 30ஆம் தேதியும், மாநிலங்களவை டிசம்பர் 2ஆம் தேதியும் மீண்டும் கூடவுள்ளன.

டிசம்பர் 3ஆம் தேதி வரை இரு அவைகளின் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 100 நாட்களைக் கடந்த பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை தொடர்பான திருத்தப்பட்ட மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகப்பட்டிருந்தது. இதன் மூலம் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 850 ஆக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முன்னதாக நிறைவேற்றப்பட்டிருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த மசோதாவுக்கு பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் அப்போது காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காத நிலையில் அந்த மசோதா தோல்வியுற்றது.

"மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதிகளைக் குறைப்பதும், வட மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்குவதும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல்," என்று அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் பேசியிருந்தார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், "தமிழ்நாடு தனது அரசியல் அதிகாரம் மற்றும் 20 எம்பி இடங்கள் என்கிற உரித்தான பங்கை அதிகரிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டது. 50% கூடுதல் இடங்கள் பெறுவதற்கு பிரதமர் மோதி வழங்கிய பொன்னான வாய்ப்பை நாம் தவறவிட்டது மட்டுமில்லை. மு.க.ஸ்டாலின் இந்த வாய்ப்பின் அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாக எதிர்த்துள்ளார்" எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த முறை தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்த திமுக இந்த முறை ஆதரிப்பதா என காங்கிரஸ் கட்சி தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு

அதில், கடந்த முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "நாடாளுமன்றத்தில் தற்போதைய அடிப்படையில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்ததாக திமுகவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறையின் காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் திமுக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அதில், "தொகுதி மறுவரையறையின் காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவிகிதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக்கூடாது" என்பதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம்.

"ஆட்சியில் இருந்தபோதே நிறைவேற்றிய தீர்மானங்களைப் படித்துப் பார்த்தால், 'Fair Delimitation' என்று பேசிவிட்டு, இப்போது 'No Delimitation' என்று நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல்டி அடித்திருப்பது காங்கிரஸ் கட்சிதான் என்பது தெரியும்! பல்டி அடிப்பது காங்கிரஸ் கட்சிக்குப் பழக்க தோஷம்!" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிக, பாஜக கூறுவது என்ன?

இந்த அறிவிப்புக்கு எதிர்வினையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், "சங் பரிவாரங்களின் சதி அரசியலுக்கு திமுக துணை போவதாக" விமர்சித்துள்ளார். "திமுகவின் முடிவு தேசத்திற்கே ஆபத்து விளைவிக்கும் நிலைப்பாடு" என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆதரவு கொடுக்க வேண்டும். அவர்கள் வேண்டிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். எந்தக் கட்சி பெண்களுக்காகப் பேசுகிறதோ அவர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு