You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெங்களூருவில் பிடிஎஸ்எம் பாலுறவுக்கு அழைத்து காதலனை பெண் கொன்றாரா?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் தனது காதலனை 'ஆசை வார்த்தைகள்' கூறி வீட்டிற்கு வரவழைத்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் அந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, பிரேமா மற்றும் கிரண் ஆகிய இருவரும் ஒரு மொபைல் சேவை நிறுவனத்தில் ஒன்றாகப் பணியாற்றினர். அப்போது அவர்கள் நண்பர்களாகி, சுமார் ஒரு வருடமாக உறவில் இருந்துள்ளனர். இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவர்களது உறவில் கசப்பு ஏற்பட்டது.
பெங்களூரு (வடமேற்கு) துணை போலீஸ் கமிஷனர் நாகேஷ் டி.எல், பிபிசி இந்தியிடம் பேசுகையில், "கிரண் தன்னைத் தவிர்ப்பதாக பிரேமா உணர்ந்தார். விரிவான விசாரணைக்குப் பின்னரே உண்மையான காரணம் தெரியவரும்" என்றார்.
'திட்டமிட்ட கொலை'
காவல்துறையின் கூற்றுப்படி, பயதரஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சன் நகரில் உள்ள தனது வீட்டிற்கு பிரேமா கிரணை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பிரேமாவின் தாயும் சகோதரரும் வேலைக்குச் சென்றிருந்தனர்.
கிரண் வந்தவுடன், பிரேமா கிரணின் கண்கள் மற்றும் கைகளைக் கட்டி, அவரது ஆடைகளை அகற்றியதாகவும், பின்னர், கிரண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறை இதனை 'திட்டமிட்ட கொலை' என்று கருதுகிறது. அந்தப் பெண் தனது மொபைலில் இதைப் பதிவு செய்தாரா என்று கேட்கப்பட்டபோது, "இந்தச் சம்பவத்தின் வீடியோ எதுவும் இல்லை" என்று நாகேஷ் டி.எல் தெளிவுபடுத்தினார்.
இந்த சம்பவம் நடந்த வீடு ஒரு சிறிய கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ளது. அங்கு தீ விபத்து ஏற்பட்டபோது, அக்கம்பக்கத்தினர் வாளிகளில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றினர்.
ஆனால் ஒருகட்டத்தில் தீயைக் கட்டுப்படுத்த முடியாதபோது, தீயணைப்பு வீரர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில், கிரண் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில், இது கொலை வழக்கு என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
கிரணின் தந்தை நரசிம்மய்யா தனது கிராமத்திலிருந்து வரவேண்டி இருந்ததால், வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
கிரண் தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பாததால் பிரேமா அவரைக் 'கொலை' செய்ய முடிவு செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட மருத்துவமனையில், செய்தியாளர்களிடம் பேசிய நரசிம்மய்யா, தான் தன் மகனை மிகுந்த அன்புடன் வளர்த்ததாகக் கூறினார்.
"நான் அவரை அடித்தது கூட கிடையாது. பெங்களூரில் அவருக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையில் அவரை அனுப்பி வைத்தோம்" என்று அவர் கூறினார்.
பிடிஎஸ்எம் என்றால் என்ன, அது ஏன் பாதுகாப்பற்றதாகக் கருதப்படுகிறது?
இந்த வழக்கை விசாரிக்கும்போது, கொலை பிடிஎஸ்எம் (BDSM) உடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொலைக்குப் பிறகு, மக்கள் இணையத்தில் 'பாண்டேஜ் செக்ஸ்' என்றால் என்னவென தேடி வருகின்றனர்.
ஆண் அல்லது பெண்ணைக் கட்டிப்போடுவது பிடிஎஸ்எம் (BDSM - கட்டுப்பாடு, ஒழுங்குமுறை, ஆதிக்கம், அடிபணிதல், பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல் மற்றும் சுயவதை) எனப்படும் பாலியல் நடைமுறையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
இது, பரஸ்பர சம்மதத்துடன் கூடிய கற்பனைகளின் அடிப்படையில் பாலியல் நடத்தைகளில் பாத்திரமேற்று நடிப்பதை உள்ளடக்கியது.
ஹாலிவுட் திரைப்படமான 'பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே' வெளியான பிறகு இந்தத் தலைப்பு அதிக விவாதத்திற்கு உள்ளானது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் ஓசூரில் பதிவான ஒரு வழக்கில், உடற்பயிற்சி பயிற்சியாளர் ஒருவர், "'பாண்டேஜ் செக்ஸ்' வைத்துக்கொள்ளும்போது தனது மனைவியின் மூக்கில் ரத்தம் வடியத் தொடங்கியதாகவும், அதைத் தொடர்ந்து மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும்" போலீசாரிடம் தெரிவித்தார்.
ஆனால் காவல்துறை விசாரணையில் அவர் தனது மனைவியின் கை கால்களைக் கட்டி, துணியால் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
கணவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்ததாகவும், மனைவி பிளே ஸ்கூல் நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.
'மருமகன் தனது மகளை வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும்' உயிரிழந்த பெண்ணின் தந்தை குற்றம் சாட்டினார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள இதுபோன்ற பல வழக்குகளில், பிடிஎஸ்எம் வகை கலவிகளின் போதுதான் மரணம் நிகழ்ந்ததாகக் கொலைக் குற்றவாளிகள் கூறுகின்றனர், ஆனால் காவல்துறை விசாரணையின் போது இந்த வாதம் பெரும்பாலும் பொய் என்று நிரூபிக்கப்படுகிறது.
இத்தகைய வழக்குகள் 'பிஃப்டி ஷேட்ஸ் டிஃபென்ஸ்' (Fifty Shades Defense) என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்தியாவில், கொலை வழக்குகள் பொதுவாக பிடிஎஸ்எம் அடிப்படையில் அல்லாமல், லாபத்திற்காக செய்யப்படும் கொலை, குடும்ப வன்முறை, வரதட்சணைக் கொடுமை போன்ற பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்தப் பிரச்னை விசாரணையின்போது எழுந்தாலும், அங்கேயே அது நிராகரிக்கப்படுகிறது.
பிடிஎஸ்எம் 'பாதுகாப்பற்றது மற்றும் அசாதாரணமானது' என்று மனநல நிபுணர்கள் நம்புகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு