டிரம்பின் 'வரி போரை' வெற்றிகரமாக சமாளித்த சீனாவை இரான் போர் எப்படி தாக்குகிறது?

    • எழுதியவர், லாரா பிக்கர்
    • பதவி, சீன செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சீனாவின் மிகப்பெரிய தொழிற்சாலை நகரங்களில் ஒன்றின் அமைதியான ஒரு சந்துக்குள், ஒரு மரத்தடியில் தொழிலாளர்கள் குழு ஒன்று புகைபிடித்துக்கொண்டு நின்றிருந்தது. அவர்களைச் சுற்றி, தற்காலிக தொழிற்சாலை வேலைகளை விளம்பரப்படுத்தும் பலகைகளைக் கொண்ட சிறிய கடைகள் உள்ளன. அங்கிருந்த சூழல் உற்சாகமாகமின்றி, சோர்வாகவும் கணமாகவும் இருந்தது.

தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு தொழிலாளி, "எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை," என்றார். அவரது குரலில் விரக்தியும் சோர்வும் வெளிப்பட்டன.

மற்றொரு தொழிலாளில், "நாங்கள் வேலை செய்துகொண்டே இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு வாழ்க்கையே இல்லை. தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்," என்று கூறினார். குறிப்பாக ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளரிடம் பேசுகையில், இத்தகைய கோரிக்கை மிகவும் அரிதானதும் ஆபத்தானதும் ஆகும்.

இந்தத் தொழிலாளர்கள் மிகுந்த துன்பத்திலும் நம்பிக்கையற்ற நிலையிலும் காணப்படுகின்றனர். தங்கள் குடும்பங்களுக்குப் பணம் அனுப்புவதற்குப் போதுமான அளவு சம்பாதிக்க அவர்கள் போராடுகிறார்கள்.

அதே நேரத்தில், சீனாவின் தொழிற்சாலை அமைப்பில் ஏற்படும் பெரிய மாற்றங்களையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர். முன்னதாக, தொழிற்சாலைகள் பெரும்பாலும் மலிவான பொருட்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்தன. இப்போது பல தொழிற்சாலைகள் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தானியக்கமாக்கலை நோக்கி நகர்கின்றன. இதன் பொருள், அவர்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு வேலைகள் குறையும் என்பதாகும்.

மேலும் அமெரிக்கா, இஸ்ரேல், இரான் சம்பந்தப்பட்ட சமீபத்திய போர் உலகப் பொருளாதாரத்தைப் பாதிப்பதற்கு முன்பே இந்தப் பிரச்னைகள் தொடங்கிவிட்டன.

போரை முடிக்க சீனா அழைப்பு

சீனாவின் பொருளாதாரம் ஏற்கெனவே மெதுவான வளர்ச்சியையும் அதிகரித்து வரும் வேலையின்மையையும் சந்தித்து வந்தது. கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் சுங்க வரிகளை விதித்தபோது, இந்த நிலைமை மேலும் கடினமானது. ஏற்றுமதியை அதிகரித்து, சுமார் 5% பொருளாதார வளர்ச்சியைக் காட்டி சீனா தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொண்ட போதிலும், மக்களின் அதிருப்தி நீங்கவில்லை.

தற்போது, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் புதிய சிக்கல்களை உருவாக்கி வருகிறது. அது தொழிற்சாலை ஆர்டர்களை பாதிக்கிறது, செலவுகளை அதிகரிக்கிறது, வேலைவாய்ப்புகளை ஆபத்தில் தள்ளுகிறது.

தெற்கு தொழில்துறை மாகாணமான குவாங்டாங்கில் அமைந்துள்ள ஃபோஷானில், தொழிலாளர்கள் தங்களுக்கு முன்பாகப் பிரகாசமான சிவப்பு எழுத்துகளில் எழுதப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புகளைக் காண்கிறார்கள்.

இந்த வேலைகளில் பிளாஸ்டிக்கை வார்ப்பது, கைபேசிகளின் பாகங்களை ஒன்றிணைப்பது போன்ற எளிய தொழிற்சாலைப் பணிகள் அடங்கும். ஆனால் ஊதியம் மிகவும் குறைவு, ஒரு மணிநேரத்திற்கு 18 முதல் 20 யுவான் மட்டுமே கிடைக்கும். இது சில டாலர்கள் அல்லது பவுண்டுகளுக்கு சமம்.

ஒரு கிராமப்புறத்தைச் சேர்ந்த தொழிலாளி, "நான் வேறு எங்காவது வேலை தேட முயலப் போகிறேன்" என்றார். இந்தத் தொழிலாளர்களில் பலர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். தங்கள் எதிர்காலம் மீண்டும் நிச்சயமற்றதாகத் தோன்றுவதால் அவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இந்த அதிகரித்து வரும் சிரமமே, போரை முடிவுக்குக் கொண்டு வர சீனா அழைப்பு விடுப்பதற்கான காரணங்களில் ஒன்று.

சீனாவிடம் கணிசமான எண்ணெய் இருப்புகள் இருப்பதுடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்சார கார்களிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக, உலகளாவிய எரிபொருள் நெருக்கடியின் மிக மோசமான விளைவுகளில் இருந்து அது பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெளித்தோற்றத்தில் அந்நாடு நிலையானதாகத் தெரிந்தாலும், நடந்து கொண்டிருக்கும் போர் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த மோதல், எண்ணெய் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை பாதிக்கிறது. இது ஏற்றுமதியைப் பெரிதும் சார்ந்திருக்கும் சீனாவின் ஏற்கெனவே மந்தமான பொருளாதாரத்திற்கு மேலும் அழுத்தத்தைச் சேர்க்கிறது.

ஆடை உற்பத்தியில் பிரச்னை

"செலவுகள் சுமார் 20% அதிகரித்துள்ளதாக" பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தகர் ஒருவர் கூறினார். அவர், ஒரு லாரியில் இருந்து துணி சுருள்கள் நிரப்பப்பட்ட பெரிய உருளைகளை இறக்கி, அவற்றை வண்டிகளில் ஏற்றும் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதில் மும்முரமாக இருந்தார்.

இந்த வண்டிகள் அந்தத் துணிகளை அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்லும், அங்கு அவை வெட்டப்பட்டு, ஜாரா, ஷீன், டெமு போன்ற உலகளாவிய பிராண்டுகளுக்கான ஆடைகளாகத் தைக்கப்படும்.

இந்தப் பகுதிதான் உலகின் மிகப்பெரிய துணி சந்தையாகும். இது ஃபோஷானில் இருந்து சுமார் ஒரு மணிநேரப் பயண தூரத்தில் உள்ள குவாங்சோவில் அமைந்துள்ளது. வண்ணமயமான துணிகளின் பெரிய சுருள்களை ஏற்றிச் செல்லும் மோட்டார் பைக்குகளால் தெருக்கள் பரபரப்பாகக் காணப்படுகின்றன.

சிறிய வேன்களும் லாரிகளும் பொருட்களை ஏற்றியும் இறக்கியும் உள்ளேயும் வெளியேயும் செல்லும்போது தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்புகின்றன.

நைலான், பாலியெஸ்டர், பட்டு போன்ற பொருட்களின் குவியல்களால் கடைகள் சூழப்பட்டு இருப்பதால், அவற்றைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. ஆனால், ஏறக்குறைய ஒவ்வொரு கடை உரிமையாளரும் விற்பனையாளரும் ஒரே பிரச்னையைத்தான் எதிர்கொள்கின்றனர்.

ஆடை உற்பத்திக்குத் தேவையான பெட்ரோலிய வேதிப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படும் எண்ணெயின் நிலையான, மலிவான விநியோகத்தையே அவர்களின் தொழில் சார்ந்துள்ளது.

அதுவன்றி, அவர்களால் தங்கள் வேலையைச் செய்ய முடியாது. இப்போது எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், அவர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

"இதன் பொருள், குறைவான ஆர்டர்கள்" என்று ஒரு சிறிய அலுவலகத்தில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த மற்றொரு வியாபாரி கூறினார். சில வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுக்க மறுப்பதாகவும் அவர் விளக்கினார். இதன் காரணமாக, விற்கப்படாத துணிச் சுருள்கள் கிடங்குகளில் குவிந்து வருகின்றன.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்காக விலையை உயர்த்தாவிட்டால், அந்தக் கூடுதல் செலவை அவர்களே ஏற்க வேண்டியிருக்கும். இது மிகவும் கடினமானது, ஏனெனில் அவர்களின் லாப வரம்பு ஏற்கெனவே மிகக் குறைவாக உள்ளது.

ஓராண்டுக்கு முன்பு, அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் போரில் ஈடுபட்டிருந்தபோது, குவாங்சோ மக்கள் நம்பிக்கையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். ஆனால் இப்போது, அந்த மனநிலை மாறிவிட்டது. எதிர்ப்புக்குப் பதிலாக, செய்வதறியாது ஏற்றுக்கொள்ளும் ஒரு மனநிலை நிலவுகிறது.

வாய்ப்புகள் என்ன?

தற்போது மிகுந்த நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், இன்னும் சில வாய்ப்புகள் இருக்கின்றன.

சற்று தொலைவில், கேன்டன் கண்காட்சியில் தொழிற்சாலை உரிமையாளர்கள் பல நாடுகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கின்றனர். இது நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் ஒரு மாபெரும் கண்காட்சியாகும். பெரிய அரங்குகளும், மனித உருவ ரோபோக்கள் கைகளை அசைப்பதையும், பாடுவதையும் காணலாம். அதேநேரத்தில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பார்வையாளர்கள் அவற்றுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்.

இதுதான் சீன தலைவர்கள் உலகுக்குக் காட்ட விரும்பும் பிம்பம். அதாவது, எதிர்கால தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி, முன்னேறிச் செல்லும் ஒரு நாடு எனக் காட்ட விரும்புகிறது. அதே நேரத்தில், அதன் போட்டியாளரான அமெரிக்கா, மத்திய கிழக்கில் நடக்கும் போரைச் சமாளிப்பதில் மும்முரமாக உள்ளது.

புதிய தொழில்நுட்பங்களை முயன்று பார்க்க மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். உதாரணமாக, வெவ்வேறு மொழிகளை உடனடியாக மொழிபெயர்ப்பதாகக் கூறப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கண்ணாடிகள் உள்ளன. மக்கள் மலைகளில் எளிதாக ஏற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ரோபோ கால்களும் உள்ளன.

இந்த மேம்பட்ட தயாரிப்புகள் தவிர, பல அன்றாடப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், அழுக்குகளை மிக விரைவாக அகற்றக்கூடிய சுத்திகரிப்பான்கள், பளபளப்பான காபி இயந்திரங்கள், முடி சுருட்டும் கருவிகள் ஆகியவையும் அடங்கும்.

இருப்பினும், இந்தப் பொருட்கள் அனைத்திலும் உள்ள ஒரு பொதுவான பிரச்னை அவற்றின் விலைகள் அதிகரித்து வருவதுதான் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம், அவற்றில் பலவும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் உற்பத்தி எண்ணெயை சார்ந்துள்ளது.

அப்படியிருந்தும், வாங்குவோர் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். வணிகங்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்தும், சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்ய முயன்றும் வருகின்றன. உண்மையில், நடந்து கொண்டிருக்கும் இந்தப் போர், குறிப்பாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நேரங்கள், மின்சார வாகனங்கள் துறையில் சீனாவின் பலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

மின்சார வாகனங்கள்

சீன நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. சீன பயணிகள் கார் சங்கத்தின் தரவுகள்படி, மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 350,000 மின்சார வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது பிப்ரவரி மாதத்தைவிட 30% அதிகமாகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 140% அதிகமாகவும் உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் முக்கியப் பொருட்களில் மின்சார வாகனங்களும் ஒன்று. ஆனால் இப்போது, போரின் விளைவாக, சில வர்த்தகர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

வர்த்தகர் ஜாய்ஸ் லியு பேசிய போது, "கடந்த ஆண்டு எங்கள் கார்களில் 90% மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றன. ஆனால் இந்த ஆண்டு போர் காரணமாக நாங்கள் அவற்றுடனான வர்த்தகத்தை ஏறக்குறைய நிறுத்திவிட்டோம்," என்றார். மேலும் அவர், "சில கார்கள் இன்னும் சீன துறைமுகங்களில் காத்திருக்கின்றன" என்றும் கூறினார்.

இந்தச் சூழ்நிலை காரணமாக, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பிராந்தியங்களில் இருந்து புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிய அவர் கேன்டன் கண்காட்சிக்கு வந்துள்ளார். அதே நேரத்தில், இந்தியா, வங்கதேசம், துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் பல மின்சார வாகனக் கூடங்களைப் பார்வையிடுகின்றனர்.

சில நாடுகளில், சீன மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து வருவதால், மின்சார வாகனங்கள் மேலும் கவர்ச்சிகரமானதாக மாறி, காத்திருப்புப் பட்டியல்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.

அந்தக் கண்காட்சியில், ஓமனை சேர்ந்த ஒரு குழுவும் உள்ளது. அவர்கள், ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் எழுதப்பட்ட விளம்பரங்களுடன், பிரகாசமான விளக்குகளின் கீழ் காட்சிப்படுத்தப்பட்ட வாகனங்களை உன்னிப்பாக ஆய்வு செய்து கொண்டிருந்தனர். கார்களை பார்த்த பிறகு, அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்து, வியாபாரியுடன் விலை பேரம் பேசத் தொடங்கினார்கள்.

அமெரிக்கா குறித்த கவலை என்ன?

அந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஜாஹிர் முகமது ஜாஹிர் அல்-காபி, "நாங்கள் சீன நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவே இங்கு வந்துள்ளோம். தற்போது இது கடினமாக உள்ளது. ஆனால் இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) போர் முடிந்து, வியாபாரம் சிறப்பாக அமையும்," என்று தெரிவித்தார்.

போர் முடிந்து வியாபாரம் மேம்படும் என்ற இந்த நம்பிக்கையைத்தான் சீனாவும் விரும்புகிறது.

இந்தப் போர் சீனா அதிக தன்னிறைவு அடைவதை நோக்கி வேகமாக நகர உதவக்கூடும் என்றாலும், இந்தச் சூழ்நிலையால் ஒட்டுமொத்தமாக சீனாவுக்கு உண்மையில் எந்தப் பயனும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

லண்டனை சேர்ந்த சாத்தம் ஹவுஸ் என்ற சிந்தனைக் குழுவில் பணியாற்றும் யூ ஜியே, இதைத் தெளிவாக விளக்குகிறார். "முரண்பாடாக, அமெரிக்கா வீழ்ச்சியடைவதையே சீனா காண விரும்பியது. ஆனால், இது சீனா விரும்பிய அமெரிக்காவா? அது கணிக்கக் கூடியதாகவும், ஒருவேளை தாங்கள் சமாளிக்க எளிதாகவும் இருக்கும் ஒரு அமெரிக்காவையே விரும்பும்" என்று கூறினார் அவர்.

எளிதாகக் கூறுவதெனில், அமெரிக்கா பலவீனமடைய வேண்டுமென சீனா விரும்பியிருக்கலாம். ஆனால் இவ்வளவு நிலையற்ற, கணிக்க முடியாத வழியில் அல்ல என்கிறார் அவர்.

சீனா "டிரம்பை எரிச்சலூட்ட விரும்பவில்லை" என்று யூ ஜியே கூறுகிறார். மே மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஒரு முக்கியமான சந்திப்பு, போருக்கு சீனா இன்னும் கவனமாகப் பதிலளிக்கச் செய்யும் என்று அவர் நம்புகிறார்.

"அந்தச் சந்திப்பை உறுதிப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய சீனா விரும்புவதாக" அவர் குறிப்பிட்டார்.

தற்போது, சினா பல விஷயங்களை சமநிலைப்படுத்த முயல்கிறது. வெளிப்படையாக, அது போர் நிறுத்தத்தையும் அமைதியையும் கோருகிறது. அதேநேரத்தில், அது தனது நட்பு நாடான இரானை பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு ஊக்குவிக்கிறது.

டொனால்ட் டிரம்பும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகத் தெரிகிறது. இதற்கிடையில், ஷி ஜின்பிங் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர்கள் போன்ற தலைவர்களுடன் பேசி வருகிறார் மற்றும் சந்தித்து வருகிறார்.

கிரோனிங்கன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான வில்லியம் ஃபிகெரோவா, இது சீனா தனது ராஜதந்திர பலத்தைப் பயன்படுத்துவதைக் காட்டுவதாகக் கூறுகிறார். "அமெரிக்காவுக்கும் பிராந்தியத்தில் உள்ள அதன் கூட்டாளிகளுக்கும், அங்குள்ள தனது கடமைகளில் அது தீவிரமாக உள்ளது என்பதைக் காட்ட விரும்புகிறது" என்று அவர் விளக்குகிறார்.

எளிதாகக் கூறுவதெனில், உலக அரசியலில் தான் ஒரு முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த நாடு என்பதை முழு உலகமும் பார்க்க வேண்டுமென சீனா விரும்புவதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

இந்த நிலைமை, சீனா இனி உலகப் பொருளாதாரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்பதைக் காட்டுகிறது. அது உலகளாவிய சக்தி மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையிலும் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்று வருவதைக் குறிக்கிறது.

ஆனால், இந்தப் பெரிய உலகளாவிய முன்னேற்றங்கள் எதுவும் ஃபோஷானில் உள்ள சாதாரண தொழிலாளர்களுக்குப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அவர்கள் இன்னும் குறைந்த ஊதியத்துடனும், தங்கள் வாழ்வில் ஏற்பட்ட சிறிய முன்னேற்றத்துடனும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தொழிலாளி, கேன்டன் கண்காட்சியில் இருந்து பெற்ற தனது அடையாள அட்டையைக் காட்டி, சிரித்துக்கொண்டே சிகரெட்டை புகைத்துக்கொண்டு, "நான் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தேன்," என்றார்.

ஒரே நாளில் 14 மணிநேரம் வேலை செய்ததற்குத் தனக்கு வெறும் 150 யுவான் (சுமார் 20 டாலர்கள்) மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு