You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"ஒரே மயானத்தில் 19 உடல்கள்" - விருதுநகர் பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்ட கிராமத்தின் நிலை என்ன?
எச்சரிக்கை: இந்த கட்டுரையின் சில பகுதிகள் சங்கடம் தரலாம்
விருதுநகர் மாவட்டம் கணக்கார்பட்டி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். சமீபத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துக்களில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியதாக இந்த விபத்து இருக்கிறது.
''இந்த தீ விபத்தில் எங்கள் அப்பா, அம்மா இருவருமே இறந்துவிட்டார்கள். அப்பாவுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ததால் உடலை அடையாளம் கண்டு கொண்டோம். அம்மாவுக்கு பல்லை வைத்துதான் அடையாளம் காண முடிந்தது!''
வார்த்தைகளை நிறைவு செய்ய முடியாமல் விம்மி அழுகிறார் முனீஸ்வரி. அவருடைய 14 வயது தம்பி, தன் தாய் தந்தை மறைவுக்காக மொட்டை எடுத்துவிட்டு அருகில் சோகத்துடன் நிற்கிறார்.
'' ஞாயிறு வேலைக்குப் போனால் கிடைக்கும் ஊதியம் ஏதாவது வீட்டுச்செலவுக்கு ஆகுமென்று போன இடத்தில் எனது மனைவி தீ விபத்தில் உயிரிழந்து விட்டார்.''
இது மனைவியை இழந்துள்ள மாரிக்குமாரின் வார்த்தைகள்.
பிபிசியிடம் பேசிய இந்த குடும்பத்தினர் விருதுநகர் மாவட்டம் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர்கள். கடந்த ஏப்ரல் 19 ஞாயிறன்று, நிகழ்ந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் இந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 19 பேர்.
விருதுநகர் மாவட்டம் வி.முத்துராமலிங்காபுரம் கிராம ஊராட்சிக்குட்பட்ட கணக்கார்பட்டி என்ற கிராமத்தில், வனஜா என்ற பட்டாசு ஆலையில் கடந்த ஏப்ரல் 19 ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த தீ விபத்தில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த 25 பேரில் 19 பேர், சேர்வைக்காரன்பட்டி என்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அதற்கு அருகிலுள்ள ஆதிபட்டியில் 3 பேர் இறந்துள்ளனர். ஆக மொத்தம் ஒரே பகுதியைச் சேர்ந்த 22 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்து தொடர்பாக பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. விபத்து நிகழ்ந்த வனஜா பட்டாசு ஆலையையும் காவல்துறை அனுமதியுடன் நேரில் சென்று பார்வையிட்டது.
இந்த பட்டாசு ஆலை அமைந்துள்ள கணக்கார்பட்டி கிராமம், விருதுநகர்–கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமசுப்பிரமணிய ராஜா நகர் அமைந்துள்ள பகுதியிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கணக்கார்பட்டியிலிருந்து சங்கரலிங்காபுரம் செல்லும் தார்ச்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் மண் பாதையில் 3 கி.மீ. தூரத்தில் வனாந்தரப்பகுதியில் வனஜா பட்டாசு ஆலை அமைந்துள்ளது.
மீட்பு பணியின் போதும் வெடித்த பட்டாசுகள்
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் அமைந்துள்ளன. பெரும்பாலும் குடியிருப்புகளைத் தவிர்த்து, தரிசு நிலங்களாகவுள்ள பகுதிகளில் மட்டுமே இதற்கான கட்டடங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு சிறிய கட்டடத்தைச் சுற்றிலும் ஒரு தனிச்சுவர் சிகப்பு நிற சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம், ''ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் பட்டாசுகள் வெடித்துச் சிதறி அடுத்த கட்டடத்தில் பரவிவிடாமல் இருக்க இந்த சுவர் அமைப்பு உள்ளது. சில ஆலைகளில் இந்த பாதுகாப்புச் சுவர் இல்லாமல் இருக்கலாம். எல்லா ஆலைகளும் விதிப்படி இயங்குவதாகக் கூற முடியாது. அந்த ஆலை எப்படி இயங்கியது என்பது குறித்து தெரியவில்லை.'' என்றார்.
விபத்து நடந்த பட்டாசு ஆலையில் ஏப்ரல் 19 ஞாயிறு மாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு பலரும் உயிரிழந்த நிலையில், அன்றிரவு 7:15 மணியளவில் மீட்புப்பணிகளில் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தபோது, அதே ஆலையில் இருந்த பட்டாசுகள் மீண்டும் வெடித்துச் சிதறியுள்ளன. அதில் 3 தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினர் 3 பேரும் காயமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக, அந்த ஆலைக்குச் செல்லும் மண் பாதையின் முகப்பில் 3 கி.மீ. தூரத்துக்கு முன்பாகவே, காவல்துறையினர் தடுப்புகள் அமைத்துள்ளனர். யாரையும் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. பிபிசி தமிழ் காவல்துறையின் அனுமதி பெற்று அங்கு நேரில் சென்று பார்வையிட்டது. ஆலை மூடப்பட்டு, சுற்றிலும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த ஆலையில் பட்டாசு தயாரிக்கும் அறைகள் தனித்தனியாக இல்லாமல் நீளமான கட்டடமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. அங்குதான் தீவிபத்து ஏற்பட்டு கட்டடங்கள் பெருமளவில் இடிந்திருந்தன. விபத்து நடந்து ஒரு நாள் கடந்த பின்பு அங்கு சென்றபோதும் காற்றில் வெடிமருந்தின் நெடி அதிகமாக இருந்ததை உணரமுடிந்தது. அந்த ஆலையை பிபிசி பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதே, அரை கி.மீ. தூரத்தில் திறந்தவெளியில் பெரும் தீ ஜூவாலையுடன் ஏராளமான பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதைப் பார்க்க முடிந்தது.
விபத்து நடந்த பட்டாசு ஆலை, முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமானது. இவர் மீது வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வெடிபொருட்களைக் கையாளுதல், சட்டவிதிகளை மீறுதல், கொலை அல்லாத மரணத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளடக்கி 6 பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
முத்துமாணிக்கம், கடந்த ஏப்ரல் 21 செவ்வாய்க்கிழமையன்று விருதுநகர் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த 25 பேர் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராடி வந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு உயிரிழப்புக்கும் தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடுக்கான காசோலை வழங்கிய பின்பே உடல்களை வாங்கினர்.
இந்த போராட்டத்தை முன்னெடுத்துப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ரங்கநாதன், ''ஒவ்வொரு உயிரிழப்புக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று போராடி வந்தோம். முதற்கட்டமாக அரசு சார்பில் ரூ.5 லட்சமும், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலா ரூ.3.5 லட்சமும் தந்திருப்பதால் உடல்களைப் பெற்றுக் கொண்டோம். அதன்பின் வழக்குத்தொடுத்து, மீதமுள்ள இழப்பீட்டைப் பெறத் திட்டமிட்டுள்ளோம்.'' என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
ஒரே மயானத்தில் 2 நாளில் எரியூட்டப்பட்ட 19 உடல்கள்!
இந்த அகோர தீ விபத்தில் உயிரிழந்துள்ள 25 பேர்களில் 21 பேர் பெண்கள்;4 பேர் மட்டுமே ஆண்கள். இவர்களில் 19 பேர், சேர்வைக்காரன்பட்டி என்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கு அருகிலுள்ள ஆதிபட்டி என்ற மற்றொரு கிராமத்தில் 3 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு ஒரே பகுதியில் 22 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். சேர்வைக்காரன்பட்டி கிராமத்திற்கும் பிபிசி தமிழ் நேரில் சென்றது.
அங்கு இறந்த 19 பேர்களில் 10 பேரின் உடல்கள் ஏப்ரல் 20 அன்றும், 9 உடல்கள் ஏப்ரல் 21 அன்றும் எரியூட்டப்பட்டன. ஒரே நேரத்தில் இத்தனை உடல்கள் எரியூட்டப்பட்டபோது, அந்த கிராமமே மயானத்தில் கூடி கதறி அழுவதைப் பார்க்க முடிந்தது. மொத்தம் 600 வீடுகள் கொண்ட சிறிய கிராமமான சேர்வைக்காரன் பட்டியில் வீதிக்கு ஒன்று அல்லது இரு வீடுகளில் மரணச்சடங்குகள் நடந்து கொண்டிருந்தன.
நான்காம் வகுப்பு மற்றும் ஒன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளின் தாயான தன் மனைவியைப் பறி கொடுத்து விட்டு வேதனையில் இருந்தார் மாரிக்குமார். பிபிசியிடம் பேசிய அவர், ''பொதுவாக ஞாயிறுக்கிழமை என் மனைவி வேலைக்குப் போகமாட்டார். அன்று குழந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுவிட்டதால் வேலைக்குப் போனால் ஏதாவது செலவுக்கு ஆகுமென்று சென்று அங்கே இறந்துவிட்டார்.'' என்றார்.
முனீஸ்வரியின் தாய் நாகம்மாள், தந்தை மருதன் இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டனர். தானும் தன் 14 வயது தம்பியும் ஆதரவற்றவர்களாகிவிட்டதாக பிபிசியிடம் கண்ணீர் விட்டு அழுதார் முனீஸ்வரி. இப்படி மனைவி, தாயார், கணவன் என பலரையும் பல குடும்பங்கள் பறி கொடுத்துள்ளன. இத்தனை உயிர்கள் போனாலும் மீண்டும் அதே பட்டாசு வேலைக்குதான் போக வேண்டுமென்று கூறுகின்றனர் கிராம மக்கள்.
பிபிசியிடம் பேசிய சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த கந்தவேல், ''அன்று என் அப்பாவும் வேலைக்குப் போக பஸ்சில் ஏறியுள்ளார். இடமில்லை என்று இறக்கிவிட்டதால் அவர் தப்பிவிட்டார். இங்குள்ள மக்கள் உழைக்க அஞ்சாதவர்கள். ஆனால் உயிருக்கு ஆபத்தான இந்த வேலையை விட்டால் வேறு வேலை எங்களுக்கு இல்லை. ஒரு காலத்தில் பருத்தி அமோகமாக விளைந்த பூமி இது. இப்போது வெறும் கருவேல மரம்தான் இருக்கிறது. எல்லா நிலங்களையும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வாங்கிவிட்டனர்.'' என்றார்.
இதே கருத்தைத் தெரிவித்த கற்பகவள்ளி, ''நாங்கள் 4 நாட்களுக்கு அழுவோம். அதன் பின்னும் இந்த பட்டாசு ஆலை வேலைக்குதான் போக வேண்டும். அதை விட்டால் எங்களுக்கு பிழைப்புக்கு வேறு வழியில்லை. அதனால் ஆபத்து என்று தெரிந்துதான் வேலைக்குப் போகிறோம். உயிருக்கு உத்தரவாதமில்லை என்றாலும் குடும்பத்தைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்துத்தான் போக வேண்டியுள்ளது.'' என்றார்.
இவர்களிருவர் உட்பட பிபிசியிடம் பேசிய இந்த கிராம மக்கள் பலரும், அந்தப் பகுதியில் அரசு சார்பில் ஏதாவது வேலை வாய்ப்புக்கான தொழிற்சாலைகள் அல்லது தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் பட்டாசு ஆலை உயிரிழப்புகளைத் தடுக்க முடியுமென்ற கருத்தைத் தெரிவித்தனர்.
என்னென்ன விதிமீறல்கள்... பட்டியலிடும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள்!
ஞாயிற்றுக்கிழமையன்று பட்டாசு ஆலைகளை இயக்கக்கூடாது என்ற விதிமுறை இருப்பது இங்குள்ள மக்கள் அனைவருக்கும் தெரிந்துள்ளது. ஆனால் அன்று பணிக்குச் சென்றால் கூடுதலாக ஏதாவது வருவாய் கிடைக்கும் என்று நினைத்தே, வேலைக்குச் செல்வதாகத் தெரிவித்தனர். பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் பலரும் பெயர் கூற விரும்பாமல் பல தகவல்களையும் பிபிசியிடம் பகிர்ந்தனர்.
''பட்டாசு ஆலையில் 10க்கு 10 அடி அளவுள்ள ஓர் அறையில் 4 புறமும் பாதை இருக்க வேண்டும். அதில் 4 பேர் மட்டுமே பணி செய்ய வேண்டும். ஆனால் விபத்து நடந்த ஆலை உட்பட பல ஆலைகளில் குறுகிய இடத்தில் 15 லிருந்து 25 பேர் வரை வேலை பார்ப்போம். அதேபோல பயிற்சி இல்லாத பலரும் வெடிபொருட்களைக் கையாளும் பணியைச் செய்வார்கள். அவர்கள்தான் பல விபத்துகளுக்குக் காரணமாகயிருப்பர்'' என்று கூறிய அந்தத் தொழிலாளர்கள், இன்னும் பல்வேறு விதிமீறல்களையும் பகிர்ந்தனர்.
இவற்றில் சில விதிமுறைகளை விபத்து நடந்த பட்டாசு ஆலை முகப்பிலேயே எழுதியிருந்ததைப் பார்க்க முடிந்தது. பிபிசியிடம் பேசிய பட்டாசு ஆலை உரிமையாளர் சிலரும் இதை ஒப்புக்கொண்டனர். பட்டாசு ஆலைகளை குத்தகைக்கும், உள் குத்தகைக்கும் விடக்கூடாது என்ற விதி மீறப்படுவதாகவும், இவ்வாறு குத்தகைக்கு எடுப்பவர்கள்தான் விதிகளை மதிக்காமல் வெடிபொருட்களைக் கையாள்வதுடன், குறுகிய இடங்களில் அதிகளவிலான பணியாளர்களை வைத்து வேலை வாங்குவதாகவும் தெரிவித்தனர்.
பிபிசியிடம் பேசிய சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ரெபேக்கா, ''விதிமீறல் நடப்பது அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் எல்லா அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்து சரிக்கட்டி விடுவார்கள். அதனால் நாங்களும் வேறு வழியின்றி சின்ன இடத்தில் உட்கார்ந்து கொண்டு, பட்டாசுகளைத் தள்ளித்தள்ளிவிட்டு அதே இடத்தில் வேலை பார்ப்போம். அப்படிப்பட்ட இடங்களில்தான் இதுபோன்ற தீ விபத்து ஏற்படும்போது, நிறையப்பேர் இறக்க வேண்டியுள்ளது.'' என்றார்.
அரசு சார்பில் அப்பகுதியில் ஏதாவது வேலை வாய்ப்புக்கான தொழில் கட்டமைப்புகளை உருவாக்கித் தர வேண்டுமென்ற கோரிக்கையையும் தாங்கள் நீண்டகாலமாக முன் வைப்பதாக அவர் தெரிவித்தார். இந்த விபத்து நடந்த காலம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் உடனடியாக எந்தக் கட்சியினரும் அங்கு வந்து மக்களைப் பார்க்கவில்லை என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
அதனால் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்தும் எந்த இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை. இத்தகைய பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு, ரூ.20 லட்சமும், காயமடைந்தோர்க்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டுமென்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஒருநபர் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாகவும், உச்சநீதிமன்றமும் அதைத் தீர்ப்பில் உறுதி செய்துள்ளதாகவும் பிபிசியிடம் விளக்கினார் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில இளைஞரணி அமைப்பாளரான பீமாராவ்.
''கடந்த 2021 ஆம் ஆண்டில் அச்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலை தீவிபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர். அதை தேசிய பசுமை தீர்ப்பாயம் சுயமான முன் வந்து விசாரித்து ஆணையம் அமைத்தது. அந்த ஆணையம் இந்த பரிந்துரையை வழங்கியது. அதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு சென்றபோது நாங்கள்தான் அதை எதிர்த்தோம். பல்வேறு சட்டப்போராட்டமும், களப்போராட்டமும் நடத்தி, ரூ.5.68 கோடி இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். அதே இழப்பீட்டை இப்போதும் வழங்க வேண்டும்.'' என்றார் பீமாராவ்.
அதிகாரிகள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் உறுதி!
இதில் 4 லட்ச ரூபாய் மாநில அரசும், 16 லட்ச ரூபாய் பட்டாசு ஆலை சார்பிலும் வழங்கப்பட வேண்டுமென்று அந்த ஆணையம் பரிந்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது நடந்துள்ள இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்பது போராட்டம் நடத்தியவர்களின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் முதற்கட்டமாக மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும், இறுதிச்சடங்கிற்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
பேரிடர் நிவாரண நிதியாக பிரதமர் அறிவித்த ரூ.2 லட்சம் பெறுவதற்கான ஆவணங்களை தயார் செய்து வருவதாகவும், தொழிலக பாதுகாப்பு துறை சார்பில் குழு காப்பீடு ரூ.5 லட்சம் வழங்கவும், தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.2 லட்சமும், அவற்றுடன் இஎஸ்ஐ, பிஎப் பணங்களை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா.
பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் நிவாரண நிதி வழங்கவும் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறிய மாவட்ட ஆட்சியர், அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இழப்பீடும், நிவாரணமும் இதற்கு நிரந்தரத் தீர்வு இல்லை என்கிறார் தலித் விடுதலை இயக்கத்தின் பீமாராவ். எத்தனை விதிகள் இருந்தாலும் அவை மீறப்படுவது தொடரும் என்பதால், விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை அவர் முன் வைத்தார்.
விபத்து நடந்த பட்டாசு ஆலையைப் பார்வையிட்ட பின் பிபிசி தமிழிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, ''பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்பு என்பது தொடர்கதையாகவுள்ளது வேதனை தருகிறது. இதில் விதிமீறல் இருக்கிறது. அவற்றின் மீது தொடர் கண்காணிப்பு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது ஒரு புறமிருக்க, இந்த விபத்துகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் பொறுப்பாகும். சாலை விபத்துகளைக் குறைக்க விளம்பரம் செய்வது போல இந்த உயிரிழப்புகளைக் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.'' என்றார்.
இதுதொடர்பாக கருத்துக் கேட்பதற்காக, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தரப்பில் பேச முயன்றபோது, அதில் பல்வேறு அமைப்புகள் இருப்பதால் யாரும் பதில் தருவதற்கு முன் வரவில்லை. விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஆனால் விபத்து நடந்த பட்டாசு ஆலையில் நடந்த விதிமீறல் குறித்து கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
கணக்கார்பட்டி பட்டாசு ஆலை தீ விபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பட்டாசு ஆலைகளின் விதிமீறல்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான நடவடிக்கை குறித்து பல கேள்விகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் பிபிசி தமிழ் முன் வைத்தது. அரசு தரப்பில் வழங்கிய நிவாரண நிதி குறித்து விளக்கிய அவர், ''பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். என்னென்ன விதிமீறல் நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.
மேலும் பேசிய மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, ''சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையில் நடந்த விதிமீறல்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள தொழிலக பாதுகாப்புத்துறை, தொழிலாளர் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. கடமையை சரிவரச் செய்யாத அலுவலர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு