கழிவறை இடிந்து மலக்குழியில் 3 மணிநேரம் சிக்கிய பெண்ணுக்கு என்ன நேர்ந்தது?

    • எழுதியவர், கெல்லி என்ஜி
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆஸ்திரேலியப் புறநகர்ப் பகுதியில் சாலைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது கழிவறை இடைவேளைக்காக நின்ற பெண் ஒருவர், அந்தக் கழிவறை இடிந்து விழுந்ததில் கழிவுநீர்க் குழியில் இடுப்பளவு வரை சிக்கிக்கொண்டார்.

அவர் "சுமார் மூன்று மணிநேரம் கழிவுநீர்க் குழியில் சிக்கியிருந்தார், அங்கேயே தற்செயலாகக் கடந்து சென்ற உள்ளூர் தொழிலாளி ஒருவரால் அவர் மீட்கப்பட்டார்," என்று வடக்கு பிரதேச (Northern Territory) அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருந்த அந்தப் பெண், டார்வினில் உள்ள உறவினர்களைச் சந்தித்துவிட்டு கான்பெராவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக 'ஆக்‌ஷன் ஃபார் ஆலிஸ்' சமூக முகநூல் பக்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அந்த கழிவறை, ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் எனும் தொலைதூர நகரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 145 கி.மீ தொலைவில் உள்ள ஹென்பரி மீட்டியோரைட்ஸ் பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்துள்ளது.

குழி கழிவறைகள்

குழி கழிவறைகள் என்பவை மனிதக் கழிவுகளை நிலத்தடியில் உள்ள ஆழமான குழியில் சேகரிக்கும் அடிப்படையான நீர் ஊற்றப்படாத கழிவறைகள் ஆகும். இவை மின்சார இணைப்பு இல்லாத தொலைதூர அல்லது கிராமப்புறங்களில் பொதுவாகக் காணப்படும்.

அந்த பிரதேசத்தில் பணியிட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தும் அமைப்பான 'என்டி ஒர்க்சேஃப்' (NT WorkSafe), ஹென்பரி பாதுகாப்பு மண்டலத்தை நிர்வகிக்கும் முகமை இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.

இது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக என்டி ஒர்க்சேஃப் தெரிவித்துள்ளது.

நேரில் பார்த்த ஒருவர் உள்ளூர் செய்தி நிறுவனமான 'என்டி நியூஸிடம் கூறுகையில், அந்தப் பெண்ணின் கணவர் அங்கிருந்த தொழிலாளியை அழைத்ததாகவும், அவர் அந்தப் பெண் பிடித்துக் கொள்வதற்காகக் குழியில் ஒரு கயிற்றை இறக்கி, பின்னர் காரைப் பயன்படுத்தி அவரை வெளியே தூக்கியதாகவும் கூறினார்.

இந்த மீட்பு நடவடிக்கை முடிய 45 நிமிடங்களுக்கும் மேலாக ஆனதாக அந்தப் பெயர் குறிப்பிட விரும்பாத சாட்சி தெரிவித்தார்.

மேலும், அந்தக் குழியில் "நாப்கின்கள்", மலம் மற்றும் சிறுநீர் இருந்ததாக அவர் என்டி நியூஸிடம் தெரிவித்தார்.

அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் அவருக்குப் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல் முறையல்ல

ஆஸ்திரேலியாவில் குழி கழிவறைகள் தொடர்பான விபத்துக்கள் நடப்பது இது முதல் முறையல்ல.

ஜூலை 2024-ல், விக்டோரியா மாகாணத்தில் உள்ள இண்டிகோ பள்ளத்தாக்கில் ஒரு நபர் அத்தகைய கழிவறையில் சிக்கிக்கொண்ட பிறகு, தீயணைப்பு வீரர்கள் அந்தக் கழிவறையை உடைத்து அவரை வெளியே எடுக்க வேண்டியிருந்தது.

மேலும் 2012-ல், மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு குழி கழிவறையில் பின்னோக்கி விழுந்த 65 வயது பெண்மணி ஒருவர் விமானம் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் விழுந்ததில் அவரது கால் எலும்பு முறிந்ததாக 'தி கூரியர் மெயில்' செய்தி வெளியிட்டது.

குழி கழிவறைகள் மற்ற இடங்களில் உயிரிழப்பு விபத்துக்களுக்குக் காரணமாகியுள்ளன.

2014-ல், தென்னாப்பிரிக்காவில் ஐந்து வயது மாணவர் ஒருவர் தான் பயன்படுத்திய குழி கழிவறை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். 2018-ல், இரண்டாவது மாணவர் இறந்த பிறகு, அந்நாட்டில் 4,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குழி கழிவறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை பெரும்பாலும் தரமற்ற முறையில் கட்டப்பட்டவை மற்றும் மூடப்படாமல் விடப்பட்டவை. அதே ஆண்டில், தென்னாப்பிரிக்க அரசு பள்ளிகளில் இருந்து இவற்றை முழுமையாக அகற்றப்போவதாக உறுதியளித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு