You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சிசிடிவி ஆதாரம்' - வருமான வரித்துறை சோதனை சர்ச்சை குறித்து செல்வப்பெருந்தகை கூறியது என்ன?
தனது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகக் கூறி புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.
முன்னதாக, ராகுல்காந்தியின் தமிழ்நாடு வருகையின்போது சோதனை என்ற பெயரில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தன்னை சட்டவிரோதமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சிறை வைத்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட வருமான வரித்துறை, 'செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை' என விளக்கம் அளித்திருந்தது.
சட்டமன்றத் தேர்தலில் பரப்புரை செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதியன்று தமிழ்நாடு வந்திருந்தார்.
ராகுல்காந்தியின் பரப்புரைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்கவில்லை.
'சட்டவிரோதமாக சிறை பிடித்தனர்'
இதற்கு விளக்கம் கடந்த 20-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சட்டவிரோதமாக சிறைப்பிடித்து வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தினார்.
"இன்று ராகுல்காந்தி வருகிறார். அவரை வரவேற்பதற்கு நான் செல்ல வேண்டும். ஆனால் முதல்நாள் இரவில் இருந்தே சீருடை அணியாமலும் தமிழ் பேசத் தெரியாமலும் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி நான் இருந்த பகுதியை முற்றுகையிட்டனர்" எனத் தெரிவித்தார்.
"ராகுல்காந்தி வரும்போது அவருக்கான ஏற்பாடுகளை நான் செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யக் கூடாது என என்னை முடக்குவது எந்தவகையில் நியாயம்? எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது" எனக் கூறினார்.
'அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு'
இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருமான வரித்துறையின் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப கொள்கைப் பிரிவின் ஆணையர் வி.ரஜிதா, ஏப்ரல் 21-ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், ''சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை தொகுதியிலேயே சட்டவிரோதமாக அடைத்து வைத்து, அரசியல் கடமைகளைச் செய்யவும் தேர்தல் பணிகளில் பங்கேற்கவும் தடையாக இருந்ததாகவும் செல்வப்பெருந்தகை குற்றம் சுமத்தியுள்ளார். சில ஊடகங்களும் செய்தியை வெளியிட்டிருந்தன.
மேற்கூறிய ஊடக செய்திகள், வருமான வரித்துறையால் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டது' எனக் கூறியுள்ள வி.ரஜிதா, 'செல்வப்பெருந்தகை முன்வைத்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை' எனத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 20-ஆம் தேதி மற்றும் அண்மைக்காலத்தில் செல்வப்பெருந்தகைக்கு எதிரான எந்த சோதனையோ ஆய்வுகளோ வருமான வரித்துறையால் நடத்தப்படவில்லை என அவர் விளக்கம் அளித்தார்.
''அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவித நடவடிக்கையும் எவ்விதத்திலும் மேற்கொள்ளப்படவில்லை'' எனக் கூறியுள்ள வி.ரஜிதா, ''ஊடக செய்திகளில் கூறியுள்ளதைப் போல கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் உள்பட எந்தவொரு இடமும் வருமான வரித்துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது'' எனக் கூறியுள்ளார்.
'காவல்துறையில் புகார்' - வருமான வரித்துறை
அதேநேரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கணக்கில் வராத பணம் புழங்குவதாக கிடைத்த குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, வருமான வரித்துறை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
''இத்தகைய வழக்கமான நடவடிக்கைகள், உரிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டது. இது செல்வப்பெருந்தகையுடன் தொடர்புடையவை அல்ல'' என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து, ''இந்த சோதனையில் மேல் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்தச் சோதனைகள் எந்த தனிநபரையும் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணைத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள வருமான வரித்துறை ஆணையர், ஓர் அரசுத் துறை மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தற்காக சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
'நாடகம்' என விமர்சித்த அண்ணாமலை
வருமான வரித்துறையின் விளக்கம் அரசியல்ரீதியாக பேசுபொருளாக மாறியது. செல்வப்பெருந்தகையை தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
அதில், ''தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாடு வந்த ராகுல்காந்தியின் ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை, ராகுல்காந்தி பேசியதற்கு தொடர்பில்லாமல் பேசினார். அதனால் ஏப்ரல் 20-ஆம் தேதியன்று நடந்த தனது பிரசாரக் கூட்டத்துக்கு செல்வப்பெருந்தகையை ராகுல்காந்தி அழைக்கவில்லை'' எனப் பதிவிட்டுள்ளார்.
''இதனை மறைப்பதற்காக தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பதாகவும் தன்னை வீட்டுக்குள்ளே சிறை வைத்திருப்பதாகவும் செல்வப்பெருந்தகை நாடகம் ஆடியுள்ளார்'' எனவும் விமர்சனம் செய்தார்.
ஆனால், "வருமான வரித்துறை சோதனை தொடர்பான ஆதாரங்களை ஏப்ரல் 24 -ஆம் தேதியன்று வெளியிடுவேன்" என செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.
'பணம் எங்கே எனக் கேட்டனர்'
அப்போது பேசிய செல்வப்பெருந்தகை, "என்னுடைய தொகுதியில் உள்ள படப்பையில் ஓர் அலுவலகத்தில் தங்கியிருக்கிறேன். ராகுல் காந்தி வருவதற்கு முதல்நாள் ஆறு கார்களில் தமிழ் பேசத்தெரியாத அதிகாரிகள் என்னுடைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்" எனக் கூறினார்.
"என்னுடைய தேர்தல் பணிகளை தி.மு.க ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரனிடம் ஒப்படைத்திருந்தேன். இவர்கள் வீட்டில் தான் என்னுடைய அலுவலகம் உள்ளது. நான் அங்குதான் இருப்பேன்" என அவர் கூறினார்.
வருமான வரித்துறை சோதனை தொடர்பாக விவரித்த அவர், " முதலில் ஒருவரை அனுப்பி சிசிடிவியை அணைத்தனர். பிறகு, 'பணம் எங்கே?' எனக் கேட்டனர். பீரோ, கட்டில் என அனைத்தையும் சோதித்தனர். சிசிடிவியை ஆன் செய்யுமாறு கூறினர். எதுவும் கிடைக்கவில்லை என்றதும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்" என்கிறார்.
'நாடகம் ஆடினேனா?' - செல்வப்பெருந்தகை பதில்
மணிமங்கலத்தில் உள்ள தன்னுடைய கிராமத்திலும் சோதனை நடந்ததாகக் கூறிய அவர், "சிறுமாங்காடு ஊராட்சித் தலைவர் வீட்டிலும் சோதனை நடத்தினர். அவரிடம், கோடிக்கணக்கான பணம் எங்கே எனக் கேட்டு மிரட்டினர். இந்த துன்புறுத்தல் எதற்காக?" எனக் கேள்வி எழுப்பினார்.
"எனது கிராமத்தில் வீட்டைச் சுற்றி முற்றுகையிட்டனர். விசாரணை என்ற பெயரில் அனைவரையும் கூட்டிச் சென்று விசாரணை நடத்தினர்." எனவும் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து சில புகைப்படங்களைக் காட்டிய அவர், "இதில் உள்ளவர்கள் யார்.. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? இவ்வாறு சோதனை செய்வததை மக்களிடமோ பத்திரிகையாளர்களிடமோ ஏன் தெரிவிக்கவில்லை. ஒரு சிசிடிவி மட்டும் ஆன் செய்து இருந்ததால் இந்த ஆதாரம் கிடைத்தது.''என்றார்.
வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் நீங்கள் நாடகம் ஆடியதாக அண்ணாமலை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "எங்களுக்கு நாடகம் ஆடத் தெரியாது. ஓர் இடத்தில் சோதனை நடத்துகிறார்கள் என்றால் அதை ஊடகங்களுக்கு அறிக்கையாக வெளியிட வேண்டும்" என்று மட்டும் செல்வப்பெருந்தகை பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு