200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வரானதும் விஜயின் முதல் 3 உத்தரவுகள் என்ன?

விஜய், தவெக, தமிழ்நாடு, புதிய அரசு

பட மூலாதாரம், DIPR

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் முன்னிலையில் விஜய் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.

'சி.ஜோசப் விஜய் எனும் நான்' என்று விஜய் தொடங்கவும் நேரு உள்விளையாட்டரங்கில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

விஜய்க்கு ஸ்டாலின், மோதி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், முதல்வரான பிறகு விஜய் ஆற்றிய உரையை ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, "சி. ஜோசப் விஜய் எனும் நான்" - முதலமைச்சராக பதவியேற்ற தருணம்

விஜயைத் தொடர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

விஜயுடன் அமைச்சர்களாக பதவியேற்ற 9 பேர் பின்வருமாறு...

  • ஆனந்த்
  • ஆதவ் அர்ஜூனா
  • அருண்ராஜ்
  • செங்கோட்டையன்
  • வெங்கடரமணன்
  • சிடிஆர் நிர்மல்குமார்
  • ராஜ்மோகன்
  • பிரபு
  • கீர்த்தனா
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

விஜயின் முதல் கையெழுத்து

விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதலமைச்சராக தனது உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.

முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் உத்தரவு அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை, பெண்கள் பாதுகாப்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய உத்தரவுகளையும் விஜய் பிறப்பித்தார்.

முதலமைச்சராக விஜய் தனது முதல் உரையை ஆற்றினார்.

''முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டு போயுள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றிவைத்துவிட்டு சென்றுள்ளனர். அப்படிப்பட்ட நிலைமையில்தான் இந்த பொறுப்பை நாம் எடுத்திருக்கிறோம். உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும். என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என நினைக்கிறேன். அதைத்தான் நான் முதலில் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். மக்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் தந்தால் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருப்பேன்'' என விஜய் பேசினார்.

பதவியேற்பு விழா நிறைவில் ராகுல் காந்தி உள்ளிட்டோருடன் மேடையிலேயே விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

விஜய், தவெக, தமிழ்நாடு, புதிய அரசு

பட மூலாதாரம், DIPR

பின்னர், தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். அங்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட விஜய் அமைச்சர்கள் சூழ முதலமைச்சர் அறைக்குச் சென்றார். முதலமைச்சர் நாற்காலியை சற்று உற்றுநோக்கிவிட்டு பின்னர் அதில் விஜய் அமர்ந்தார்.

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததும், தற்காலிக சபாநாயகரை நியமிப்பதற்கான ஆவணத்தில் விஜய் கையெழுத்திட்டார். பின்னர் அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் புதிய சட்டப்பேரவையில் தவெகவைச் சேர்ந்த சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராகிறார். நாளை சட்டப்பேரவை கூடியதும் புதிய எம்எல்ஏக்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

விஜய், தவெக, தமிழ்நாடு, புதிய அரசு

பட மூலாதாரம், DIPR

ஸ்டாலின், மோதி, ராகுல் கூறியது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த உடனேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்க வேண்டாம். அதெல்லாம் உள்ளது. மக்களுக்குக் கொடுக்க மனதும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும்," என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்துவிட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லியுள்ளீர்கள். அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில் தெளிவாக சொல்லியிருந்தோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதற்குப் பிறகுதான் நீங்கள் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசை திருப்ப வேண்டாம்," என ஸ்டாலின் கூறியுள்ளார்.

"தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்," என பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாடு ஒரு புதிய தலைமுறை, ஒரு புதிய குரல், புதிய சிந்தனையை தேர்வு செய்துள்ளது. விஜய்க்கு எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளை அவர் நிறைவேற்றட்டும்," என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவிலேயே சர்ச்சை

இருபெரும் திராவிட கட்சிகளின் 69 ஆண்டு ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, புதிய அரசு அமைத்துள்ள விஜயின் பதவியேற்பு விழாவிலேயே சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வழக்கத்திற்கு மாறாக 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் தேசிய கீதமான "ஜன கண மன" பாடப்பட்டு, அதன்பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

விஜய், தவெ

பட மூலாதாரம், DIPR

விழா மேடையில் ராகுல் காந்தி

பதவியேற்பு விழாவில் ஆளுநர், விஜய், அமைச்சராக பொறுப்பேற்க விருந்த 9 பேர், மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதை அவரது பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகரன், ஷோபா இருவரும் நெகிழ்ச்சியுடன் நேரில் பார்த்தனர். விஜய் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நடிகைகள் திரிஷா, சங்கீதா, பாடகர் கிரிஷ் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

விஜய், தவெக, பதவியேற்பு விழா

பட மூலாதாரம், DIPR

மே13-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு

மே 13-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோருமாறு விஜயை ஆளுநர் அறிவுறுத்தியதாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சியமைக்கும் புதிய கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

விஜயுடன் அமைச்சரவையில் இடம்பெறும் 9 பேர் யார்?

பட மூலாதாரம், ANI

பிரேமலதா வாழ்த்து

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டு பையன் விஜய் அவர்களுக்கு மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் சிறந்த சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என, அன்புத் தம்பி விஜய் அவர்களுக்கு கேப்டன் (விஜயகாந்த்) அவர்களின் சார்பாகவும், தேமுதிகவின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

தவெகவை ஆதரிப்பது யார்?

விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வென்றுள்ளது. அதில், இரு தொகுதிகளில் வென்ற விஜய் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அதன் பலம் 107 ஆகிறது.

காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 4 கட்சிகளும் தலா 2 உறுப்பினர்கள் என மொத்தம் 120 உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்கு உள்ளது.

தவெக, விஜய், தமிழ்நாடு

பட மூலாதாரம், Lok Bhavan

படக்குறிப்பு, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்

தவெக வேட்பாளருக்கு எதிரான மனு இன்று விசாரணை

திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்க கோரிய வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

5 நாள் நீடித்த இழுபறி

முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியாகின. இதில், எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தவெக 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

''இந்திய அரசமைப்பில் நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளைக் கூட்டணியில் இருந்து வெளியே வைக்க வேண்டும்'' என்கிற நிபந்தனையுடன் தவெகவுக்கு முதல் கட்சியாக கடந்த 6-ஆம் தேதி ஆதரவளித்தது காங்கிரஸ். அக்கட்சி திமுக கூட்டணியில் 5 இடங்களை பிடித்திருந்தது.

தலா 2 இடங்களை பிடித்த திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை "நிலையான ஆட்சிக்கு" நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கடந்த 8-ஆம் தேதி தெரிவித்திருந்தன.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள திமுக கூட்டணி கட்சியான விசிக தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்தது. 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள ஐயூஎம்எல் கட்சியும் தவெக ஆட்சியமைய நிபந்தனையற்ற ஆதரவளித்தது.

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு சந்தித்த விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

த.வெ.க. தலைவர் விஜயை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நியமிப்பதற்கான உத்தரவை பொறுப்பு ஆளுநர் அர்லேகர் வழங்கினார். நேற்று தவிர்த்து, முன்னதாக இருமுறை ஆளுநரை சந்தித்திருந்தார் விஜய்.

இதனிடையே, திமுக-அதிமுக இணைந்து ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை இருதரப்பிலும் நடந்ததாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. அக்கட்சிகளின் இரண்டாம்கட்ட தலைவர்கள் இதனை மறுத்தனர்.

டிடிவி தினகரன் புகார்

அமமுக சார்பில் சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள ஒரே உறுப்பினரான காமராஜ் தவெக ஆட்சியமைக்க அதரவு தருவதாக ஆளுநரிடம் போலி கடிதம் கொடுக்கப்பட்டதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, ஆளுநரை இருமுறை நேரடியாக சந்தித்த தினகரன், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு