நேரலை, உதயநிதி ஸ்டாலின் திமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். இதுகுறித்த சமீபத்திய தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள், செய்தியாளர்களின் பகுப்பாய்வுகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. "தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்" - திருமாவளவன்

    தமிழ்நாடு, விசிக, திருமாவளவன்

    பட மூலாதாரம், Facebook/Thirumavalavan

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    தமிழ்நாட்டின் கடன் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து பதிலளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடும் திருமாவளவன், "ஏனெனில், கடனை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவுகோலோடு ஒப்பிட்டே மதிப்பிட வேண்டும். கடனை மதிப்பிடுவதற்கான சரியான முறை, அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP) ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும்.தமிழ்நாட்டின் கடன் அளவு, 15-ஆவது நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ளேயே உள்ளது. கடனின் முழுமையான அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும்." எனத் தெரிவித்தார்.

    தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை பற்றி குறிப்பிட்ட திருமாவளவன், "இன்றைய நிகழ்வில் 'தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணுகுமுறை மிகவும் அதிர்ச்சயளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, மாண்புமிகு ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்தப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும்." என்றும் தெரிவித்தார்.

    மேலும் அவர், "இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? அல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா? அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா? இது தொடர்பாகவும் அரசு விளக்கமளிக்க வேண்டும்." என்றார்.

  2. உதயநிதி ஸ்டாலின் திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்வு

    திமுக, உதயநிதி ஸ்டாலின்

    பட மூலாதாரம், X/ Udhaystalin

    படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்க உள்ளார்.

    திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராகும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ளது. நாளை சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்தச் சூழலில் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திமுக கட்சியின் கொறடாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சட்டப்பேரவை தேர்தலில் திமுக 54 இடங்களில் வென்றிருந்தது. திமுக சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் 5 இடங்களில் வென்றிருந்தன.

  3. புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு

    தமிழ்நாடு சட்டப்பேரவை, எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை பதவியேற்றுள்ள நிலையில் சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.

    தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் முன்னிலையில் உறுப்பினர்கள் பதவி ஏற்பு நடத்தப்பட்டுள்ளது.

    தவெகவின் கருப்பையா இன்று மாலை தற்காலிக பேரவைத் தலைவராக பதவியேற்றார்.

    பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வரும்போது தேர்ந்தெடுக்கப் பெற்றதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - வைகோ, ராமதாஸ் கண்டனம்

    வைகோ, ராமதாஸ்
    படக்குறிப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் இருவரும் எதிர்வினையாற்றி உள்ளனர்.

    தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ராமதாஸ் மற்றும் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இன்று நடைபெற்ற தமிழக முதலமைச்சர் பதவி ஏற்பு நிகழ்வில் பாரம்பரிய மரபு மாற்றப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் மாளிகையின் உத்தரவுப்படி இந்த நிகழ்வை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    "இந்த நிகழ்ச்சி நிரலில் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாம் நிலையில் வைத்தது மரபு மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தத் தவறு மீண்டும் தொடரக்கூடாது எனத் தெரிவித்த ராமதாஸ், "புதியதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு இதன் பிறகு நடைபெற உள்ள அனைத்து நிகழ்வுகளிலும் மற்றும் விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். நிகழ்ச்சிகள் தொடங்கும் போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தையும், நிறைவடையும் போது தேசிய கீதத்தையும் பாடுவதற்கு வழி செய்ய வேண்டும்." என்றும் கூறியுள்ளார்.

    இதனைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், முதன் முதலில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடாமல் வந்தேமாதரம் பாடப்பட்டது தமிழ்நாட்டின் மரபை மீறிய‌ நிகழ்வு ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த அறிக்கையில், "தமிழ் மொழி வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை ஏற்கவே முடியாது. புதிய அரசு பதவி ஏற்பு விழா, ஆளுநர் வழிகாட்டுதலில் நடைபெற்றதால் "வந்தேமாதரம்" முதன்மைப் படுத்தப்பட்டது கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டின் அரசு விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து தொடக்கத்திலேயே பாடப்படுவதை முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

  5. 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிப்பு - தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

    இலவச மின்சாரம், டிடிவி தினகரன், தவெக

    பட மூலாதாரம், Facebook/TTV Dhinakaran

    படக்குறிப்பு, தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை தவெக அரசு செயல்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசின் 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான அறிவிப்பின் மீது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் அந்தப் பதிவில், "சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது." என்றும் தெரிவித்துள்ளார்.

  6. 200 யூனிட் மின்சாரம் - விஜய் சொன்னதும் செய்ததும்

    காணொளிக் குறிப்பு, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தவெகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன? இது தொடர்பாக விஜய் பேசியது என்ன?

  7. தமிழ்த்தாய் வாழ்த்து: விஜய் பதவியேற்ற முதல் நாளே ஆதரவுக் கட்சிகள் கேள்வி

    தமிழ்நாடு, தமிழ்த்தாய் வாழ்த்து

    பட மூலாதாரம், TNDIPR

    படக்குறிப்பு, தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சி

    தமிழ்நாட்டில் இன்று காலை விஜய் தலைமையிலான அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சியில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்கு அடுத்தபடியாக தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது விவாதப் பொருளானது.

    தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என்று கூறிய என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏன் மூன்றாவதாக பாடப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.

    இந்தச் சூழலில் இன்று மாலை நடைபெற்ற தற்காலிய சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவே பாடப்பட்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டதும், பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ள முடியாமலும் இருந்தது. இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது ஏற்புடையதல்ல. ஆகவே, அரசு நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தமிழ்நாடு அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் தளப் பதிவில், "தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது போல், தமிழ்நாட்டையும் தள்ளிவிடாதீர்கள். சட்டப்பேரவை கூடும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்னும் மரபை உறுதி செய்யுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

  8. பிரதமர் மோதி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு விஜய் நன்றி

    தமிழ்நாடு, விஜய்

    பட மூலாதாரம், TNDIPR

    தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு சமூக ஊடகம் மூலம் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோதியின் எக்ஸ் தளப் பதிவைப் பகிர்ந்து பதிவிட்டுள்ள விஜய், "எமது மக்களின் நலன் மற்றும் முன்னேற்றமே எங்களின் ஒரே நோக்கம். தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிலையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை எதிர்பார்த்திருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.

    தனது இருப்பால் என்னுடைய பதவியேற்பு நிகழ்ச்சியை அலங்கரித்த நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி என விஜய் தெரிவித்துள்ளார். மேலும் தனது பதிவில், "மக்களுக்குச் சேவை செய்யும் இந்தப் பயணத்தை நாம் தொடங்கையில் உங்களுடைய ஆதரவும் கனிவான வாழ்த்துகளும் உண்மையில் பாராட்டப்படுகின்றன." எனக் குறிப்பிட்டுள்ளார்.

  9. தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு

    தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு

    பட மூலாதாரம், TN DIPR

    தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையாவுக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

    கருப்பையா, சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்றவராவார்.

    2011-2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் கருப்பையா அதிமுக எம்எல்ஏவாக ஏற்கெனவே பதவி வகித்துள்ளார்.

    இவர் நாளை (மே 11) புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.

  10. திருச்சி கிழக்கு தொகுதி - விஜய் ராஜிநாமா

    விஜய், திருச்சி கிழக்கு

    பட மூலாதாரம், TNDIPR

    படக்குறிப்பு, திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜிநாமா செய்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

    சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் இரண்டிலும் வென்றார்.

    சட்டப்படி, நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் ஒருவர் இரண்டு தொகுதியை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. அதன் அடிப்படையில் இரு தொகுதிககளில் வெற்றி பெற்றவர்கள் ஒரு தொகுதியை ராஜிநாமா செய்வது அவசியம்.

    பதவியேற்பு நிகழ்ச்சி இன்று முடிந்துள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜிநாமா செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான கடிதத்தை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசனைச் சந்தித்து நேரில் வழங்கினார்கள். ஆகவே, பெரம்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமே விஜய் தொடர்வார்.

    தேர்தல் ஆணையம் திருச்சி கிழக்குத் தொகுதி காலியானதாக முறைப்படி அறிவித்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்தும்.

  11. 500 யூனிட்டுக்கு மேல் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடரும் - தமிழ்நாடு அரசு

    விஜய், தமிழ்நாடு, மின்சாரம்

    பட மூலாதாரம், TNDIPR

    தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து மூன்று முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார். 500 யூனிட் வரை மின்சார பயன்பாடு கொண்ட வீடுகளுக்கு 200 யூனிட் வரை கட்டணம் கிடையாது என்பது அவற்றில் ஒன்று.

    இந்தச் சூழலில் 500 யூனிட்டுக்கு மேல் 100 யூனிட் இலவசம் என்ற சலுகை தொடருமா என்பது போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன.

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை அதற்கு பதிலளிக்கும் வகையில் உள்ளது. அதன்படி, 500 யூனிட்டுக்கு மேல் மின்சார பயன்பாடு கொண்ட வீடுகளுக்கு ஏற்கெனவே உள்ள 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடரும். இந்தத் திட்டம் இன்று (மே 10) முதலே அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.1,730 கோடி செலவாகும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  12. முதல்வராக விஜய்க்கு உடனடியாக இருக்கும் சவால்கள் என்ன? - பத்திரிகையாளர் சித்தார்த் பிரபாகரன் பதில்

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ள நிலையில் அவர் முன் உள்ள சவால்கள் பற்றி பத்திரிகையாளர் சித்தார்த் பிரபாகரன் பேசியுள்ளார்.

    காணொளிக் குறிப்பு, முதல்வராக விஜய்க்கு உடனடியாக இருக்கும் சவால்கள் என்ன? - சித்தார்த் பிரபாகரன் பதில்
  13. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: பதவியேற்ற முதல் நாளே இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி

    தமிழ்நாடு, விஜய், வந்தே மாதரம்,

    பட மூலாதாரம், TNDIPR

    படக்குறிப்பு, பதிவியேற்பு நிகழ்ச்சியில் வந்தேச மாதரம் மற்றும் தேசிய கீதத்தை தொடர்ந்து மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற விழாவில் வந்தேச மாதரம் மற்றும் தேசிய கீதத்தை தொடர்ந்து மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டிருந்தது.

    இந்தச் சூழலில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெறுவதை தமிழக வெற்றிக் கழகம் உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், "ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் 'வந்தே மாதரம்' பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலைக்குத் தள்ளியது மரபு மீறிய செயலாகும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், "வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "வந்தேமாதரம்" ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது." என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

    "தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது. சட்டப் பேரவைக் கூட்டத்திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்."

  14. பரந்தூர் திட்டத்தை எதிர்த்த விஜயிடம் ஏகனாபுரம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

    பரந்தூரில் பேசிய விஜய்
    படக்குறிப்பு, பரந்தூரில் பேசிய விஜய்

    பரந்தூர் விமான நிலையத் திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என, அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் தெரிவித்துள்ளார்.

    பிபிசி தமிழிடம் பேசிய இளங்கோ, “இந்த திட்டம் நீர்நிலைகளில் அமைக்கப்படுகின்றது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். ஏகனாபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் முதன்முதலில் இங்கு வந்து பேசினார். இப்போது முதலமைச்சர் ஆகியுள்ளார். எனவே, இந்த திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என முழுமையாக நம்புகிறோம். இத்திட்டத்தை நீர்நிலைகள் பாதிக்கப்படாத, மக்கள் பாதிப்பில்லாத வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

    விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 2024ம் ஆண்டு, அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றபோது, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஜனவரி மாதம் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்துப் பேசினார்.

    மக்கள் மத்தியில் பேசிய விஜய், "என்னுடைய கள அரசியல் பயணம், உங்களின் ஆசீர்வாதத்தோடு இங்கிருந்துதான் தொடங்குகிறது. தவெக-வின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை எல்லாம் எடுத்துக் கூறினேன். அதில் ஒன்றுதான் இயற்கை வளப்பாதுகாப்பு." என்றார்.

    "நான் வளர்ச்சிக்கு எதிரானவன் எல்லாம் கிடையாது. விமான நிலையமே வரக்கூடாது என்றெல்லாம் நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றுதான் கூறுகிறேன். இதை நான் சொல்லவில்லை என்றால், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கூறிவிடுவார்கள்." என்று கூறியிருந்தார்.

    “வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும். நானும், தவெக-வினரும், சட்டத்துக்குட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களுடன் உறுதியாக நிற்போம்" என்று மக்கள் மத்தியில் பேசியிருந்தார் விஜய்.

    அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனும் இத்திட்டம் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.

  15. விஜய் vs ஸ்டாலின்: நிதிநிலைமை குறித்து கூறியது என்ன?

    விஜய், மு.க.ஸ்டாலின்
  16. தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமனம்

    தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்றவராவார்.

    கருப்பையா அதிமுக எம்எல்ஏவாக ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.

    இவர் நாளை (மே 11) புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.

  17. முதலமைச்சரின் தனி செயலாளர்கள் நியமனம்

    செந்தில்குமார் ஐஏஎஸ்
    படக்குறிப்பு, செந்தில்குமார் ஐஏஎஸ்
    லட்சுமி பிரியா ஐஏஎஸ்
    படக்குறிப்பு, லட்சுமி பிரியா ஐஏஎஸ்

    செந்தில்குமார் ஐஏஎஸ், லட்சுமி பிரியா ஐஏஎஸ் ஆகியோர் முதலமைச்சரின் தனி செயலாளர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

  18. "நான் தேவதூதன் அல்ல" - விஜய்

    விஜய்

    பட மூலாதாரம், DIPR

    முதலமைச்சராக பதவியேற்றதும் விழா மேடையிலேயே பேசிய விஜய், "நான் தேவதூதன் அல்ல, நானும் சாதாரண மனிதன் தான். பொய்யான வாக்குறுதிகளை அளித்து நான் ஏமாற்றமாட்டேன். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." என்று தெரிவித்தார்.

  19. ஆனந்த் முதல் கீர்த்தனா வரை - விஜய் அமைச்சரவை

    காணொளிக் குறிப்பு, ஆனந்த் முதல் கீர்த்தனா வரை - விஜய் அமைச்சரவை

    விஜய் தலைமையில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

  20. விஜய் பதவியேற்பு விழாவில் திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்பு: கேமராவில் உறைந்த சுவாரஸ்ய தருணங்கள்

    பதவியேற்பு விழா முடிவில் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

    பட மூலாதாரம், DIPR

    படக்குறிப்பு, பதவியேற்பு விழா முடிவில் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

    தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஞாயிற்றுக்கிழமை விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

    சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை சுமார் 10 மணியளவில் விஜய் பதவியேற்றார். பின்னர் தவெகவைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார், ஏ. ராஜமோகன், டி.கே. பிரபு, எஸ். கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.