நிலவில் நிலம் வாங்க முடியுமா? நாமக்கல் பொறியாளர் ஒரு ஏக்கர் வாங்கிய தகவல் பற்றிய விரிவான விளக்கம்

பட மூலாதாரம், Keystone/Getty Images
- எழுதியவர், முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கட்டடப் பொறியாளர் ஒருவர், தனது வருங்கால மனைவிக்கு திருமணப் பரிசாக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகி பேசுபொருளானது.
தனியார் நிறுவனங்கள் நிலவில் வீட்டு மனைப் பத்திரங்களை வேடிக்கைக்காக விற்பனை செய்கின்றன. உண்மை போலத் தெரியும் இந்த ஆவணங்கள், விளையாட்டுக்காக போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதைப் போலத்தான். பலரும் இவை எந்த சட்ட உரிமையும் அளிக்காது என்ற புரிதலுடனேயே வாங்குகிறார்கள். ஆனால், சிலரோ இதை உண்மை என நம்பித் தாங்கள் சேர்த்த பணத்தை எல்லாம் இழந்து ஏமாந்துவிடுகிறார்கள்.
நிலவில் ஒரு துண்டு நிலத்தை உண்மையாகவே யாராவது சொந்தமாக்கிக் கொள்ள முடியுமா?
இந்தக் கேள்விக்கு விடை காண, நாம் முதலில் விண்வெளிப் போட்டியின் தொடக்கத்திற்குச் செல்ல வேண்டும். 1959 செப்டம்பரில், சோவியத் யூனியனின் லூனா 2 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதியது.
நிலவைச் சென்றடைந்த முதல் விண்கலம் இதுதான். மோதுவதற்கு முன்னர், இந்த விண்கலத்தில் உள்ள ஒரு பொறி திறந்து, அரிவாள் சுத்தியல் போன்ற சோவியத் அரசு முத்திரை பதித்த உலோகப் பதக்கங்களை நிலவின் மேற்பரப்பில் சிதறடித்தது.
இது உலகளவில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்தது. ஐரோப்பிய காலனிய விரிவாக்கத்தின் காலத்தில், ஐரோப்பியர்கள் யாரும் அதுவரை சென்றிராத பகுதிக்குச் சென்று, அங்கே தங்கள் நாட்டின் கொடியை நட்டுவிட்டால், அந்த நிலப்பகுதி அந்த நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி எனக் கருதப்பட்டது.
இப்படித்தான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளை பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று அதிகாரம் கோரத் தொடங்கினர்.
இதே கொள்கை நிலவுக்கும் பொருந்துமா? நிலவின் மீது சோவியத் யூனியன், தனது நாட்டின் கொடியையும் முத்திரைகளையும் முதன்முதலில் பதித்துவிட்டதால், நிலவு முழுவதையும் தனக்குச் சொந்தம் எனக் கோர முடியுமா?

பட மூலாதாரம், Chen Yongnuo/China News Service/VCG via Getty Images
அந்த நேரத்தில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் "சிவப்பு நிலவு" உருவாகிவிடும் வாய்ப்பை எண்ணி அஞ்சின.
அப்போதைய சோவியத் தலைவர் நிகிதா குருசேவ், இந்த அச்சத்தைப் போக்கும் விதமாக, லூனா-2 விண்கலத்தின் மாதிரியை அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசன்ஹோவருக்கு பரிசளித்து, சோவியத் சின்னங்களை நிலவில் பதிப்பது வெறும் அறிவியல் சாதனையின் அடையாளங்களே தவிர, உலக அரசியல் ஆதிக்க உரிமை கோரல் இல்லை எனக் கூறி பதற்றத்தைத் தணிக்க முயன்றார்.
தனியுரிமை இன்றி, உலகின் அனைத்து மக்களுக்கும் பொது உரிமை தரும் சர்வதேச உடன்படிக்கைக்கு சோவியத் யூனியன் ஒப்புக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக, 1959இல் லூனா-2 நிலவை அடைந்த அதே ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான குழு (United Nations Committee on the Peaceful Uses of Outer Space - COPUOS) நிறுவப்பட்டது.
இந்த அமைப்பின் வழிகாட்டுதலில், 1967இல் சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் (Outer Space Treaty) உருவானது. ஆக்கிரமிப்பு அல்லது வேறு எந்த வழியிலும், நிலவு உள்ளிட்ட விண்வெளியையும், எந்தவொரு வான் பொருளையும் இறையாண்மை கோரி தனதாக்கிக் கொள்ள முடியாது என்று இந்த சர்வதேசச் சட்டம் கூறுகிறது.
அதோடு, நிலவு மற்றும் பிற வான் பொருள்களை ஆராயவும் பயன்படுத்தவும் எல்லா நாடுகளுக்கும் சமமான உரிமையை அளித்தது. எளிதாகக் கூறுவதெனில், நிலவை முதலில் அடைவதன் மூலம், நிலவோ அதன் வளங்களோ தங்களுடையது என உரிமை கொண்டாட முடியாது. நிலவும் விண்வெளியும் அதன் வளங்களும் மனித குலத்தின் பொது உரிமை என இந்தச் சட்டம் கூறியது.

பட மூலாதாரம், Education Images/Universal Images Group via Getty Images
கடந்த 1960களின் பிற்பகுதியிலும் 1970களிலும், அமெரிக்காவும் சோவியத் யூனியனும் பெருகிய திறன் கொண்ட நிலவு விண்கலங்களை உருவாக்கி வந்தன. நிலவை அடைவது இனி மனிதர்களால் முடியுமா என்பது கேள்வியாக இருக்கவில்லை. அங்கு சென்றபின் நாடுகளால் என்ன செய்ய முடியும் என்பதே பெரும் கேள்வியாக மாறியது. நிலவை அடைந்து சாதனை படைப்பது என்பதைத் தாண்டி, நிலவின் வளங்களை எடுத்து நுகர்வது சாத்தியம் என்ற நிலை உருவாகத் தொடங்கியது.
விண்வெளிப் போட்டி வளர்ந்து வருவதை, இந்தியா உள்படப் பல வளரும் நாடுகள் வேறொரு கவலையுடன் பார்த்தன. பூமியில் நிகழ்ந்த காலனிய ஆதிக்க முறை விண்வெளியிலும் நிகழக்கூடும் என்று அவை அஞ்சின. வலிமை வாய்ந்த நாடுகள் முதலில் நிலவை அடைந்து, மற்ற நாடுகள் தொழில்நுட்ப வாய்ப்பு பெறுவதற்கு முன்பே, அதன் நிலப் பகுதியையும் வளங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். வளரும் நாடுகளின் தொழில்நுட்பம் வளர்ந்து நிலவை அடையும்போது, அங்கே ஏதும் மிச்சம் இருக்காது என்று அச்சம் கொண்டன. இதன் தொடர்ச்சியாக, விண்வெளி வளங்களை நுகர்வது தொடர்பான சர்வதேச உடன்படிக்கை தேவை என வலியுறுத்தின.
இந்தக் கவலையை சோவியத் யூனியன் பரிவுடன் பார்த்தது. நிலவு உள்பட வான் பொருள்களின் வளங்களை நுகர்வது தொடர்பாக வரைவு நகலை சோவியத் யூனியன் முன்வைத்தது. அதில் எந்த வான் பொருளின் வளங்கள் மீதும் தேசிய உரிமை கோருவதை நிராகரித்தது.
அனைத்து நாடுகளும் தங்களுக்குள் பொதுவாகப் பகிர்ந்துகொள்ளும் படியான உரிமையை வலியுறுத்தும் ஒப்பந்த வடிவத்தை முன்மொழிந்தது. இதன் தொடர்ச்சியாக, 1979இல் உருவான நிலவு ஒப்பந்தம் (Moon Agreement), நிலவையும் அதன் இயற்கை வளங்களையும் "மனித குலத்தின் பொதுச் சொத்து" (Common Heritage of Humankind) என்று அறிவித்தது. அதாவது, எந்தவொரு தனிநபரோ, நிறுவனமோ, அரசோ யாருமே அதன் வளங்களைத் தங்களுக்குச் சொந்தம் என சொத்துரிமை கோர முடியாது.

பட மூலாதாரம், Central Press/Getty Images
ஆனால் இங்கே ஒரு பெரிய முரண்பாடு தோன்றியது. அமெரிக்கா, எந்த நாடும் நிலவின் மீது இறையாண்மை கோர முடியாது என்பதை இறுதியில் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், ஏதேனும் தனியார் நிறுவனமோ அரசோ நிலவின் வளங்களை எடுத்தால், அந்த வளங்கள் மீது அந்த நாட்டுக்கும் நிறுவனத்திற்கும் சொத்துரிமை வேண்டுமென வலியுறுத்தியது.
ஆனால் சோவியத் யூனியனோ, நிலவு பொதுச் சொத்து என்பதால், வளங்களை எல்லா நாடுகளுக்கும் சமமாகப் பகிர வேண்டுமென வாதிட்டது. இந்த இரு நிலைப்பாடுகளும் இன்றும் தீர்க்கப்படாத கேள்வியாகவே இருக்கின்றன. உண்மையில், வானியல் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வளங்களை தனியாருக்குச் சொந்தமாக்கி வணிக ரீதியாகப் பயன்படுத்த முடியுமா?
இந்தச் சிக்கலின் காரணமாக, அமெரிக்கா நிலவு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தது. இதன் தொடர்ச்சியாக, சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டன. இன்று வரை இந்தியா உள்பட ஒரு சில நாடுகளே இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
ஆயினும், விண்வெளி ஒப்பந்தம் இன்றும் அமலில் உள்ளது. இது ஒரு நாடு நிலவின் ஒரு பகுதியைத் தனது பிரதேசமாக அறிவிக்க முடியாது என்பதை உறுதி செய்கிறது. இதன் பொருள், எந்த சட்ட அமைப்பும் ஒரு தனிநபர் நிலவில் ஒரு நிலப் பகுதியை வாங்க அனுமதிக்கவில்லை. "நிலவில் ஒரு ஏக்கர்" வாங்கியதாகக் காட்டப்படும் சான்றிதழ், சர்வதேச விண்வெளி சட்டத்தின் கீழ் வெறும் காகிதமாக மட்டுமே பார்க்கப்படும்.
அப்போது நிலவிலுள்ள நிலத்தை விற்பனை செய்வது எப்படி சாத்தியம்?

பட மூலாதாரம், CORBIS/Corbis via Getty Images
விவாகரத்தை எதிர்கொண்டிருந்த, வேலை இழந்த அமெரிக்கரான டென்னிஸ் ஹோப், 1980ஆம் ஆண்டில் நிலவை தனக்குச் சொந்தமெனக் கோர முடிவு செய்தார். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு அமெரிக்க நிலப் பதிவாளர் அலுவலகத்தில், நிலவு மட்டுமல்ல, பூமி தவிர சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களின் நிலப்பரப்பையும் தனக்குச் சொந்தம் என ஒரு ஆவணத்தைப் பதிவு செய்தார்.
அதன் பிறகு, ஐக்கிய நாடுகள், அமெரிக்க அரசு, சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஏதேனும் மறுப்பு இருந்தால் தெரிவிக்க காலக்கெடுவும் விடுத்தார். யாரும் இந்தக் கடிதத்தை சட்டை செய்யவில்லை. எந்த அரசும் பதிலளிக்காததால், அந்த மௌனத்தையே தனது கோரிக்கை ஏற்கப்பட்டதற்கான அடையாளமாகக் கருதிய ஹோப், தானே நிலவின் உரிமையாளர் என்றும், அதை விற்பனைக்கான நிலங்களாகப் பிரித்து விற்கப் போவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் லூனார் எம்பசி கார்ப்பரேஷன் (Lunar Embassy Corporation) என்ற நிறுவனத்தை நிறுவி, 'நிலவு மனைப் பத்திரங்களை' விற்கத் தொடங்கினார்.
இறையாண்மை கொண்ட அரசு வழங்கும் ஆவணமே தனியார் சொத்து ஆவணம் (Private Property Deed). எனவே, ஒருவரின் உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டுமானால், அந்தச் சொத்தின் மீது அரசின் அதிகார வரம்பு (Jurisdiction) இருக்க வேண்டும்.
நிலவின் மீது நாடுகள் இறையாண்மை கோருவதை விண்வெளி ஒப்பந்தம் தடை செய்கிறது. எனவே, அமெரிக்கா உள்பட எந்தவொரு நாடும் நிலவில் சொத்துப் பத்திரத்தை அங்கீகரிக்க முடியாது. எனவே, நிலவின் ஒரு குறிப்பிட்ட பகுதி தனக்குச் சொந்தமெனக் கூறும் சான்றிதழ், சர்வதேச விண்வெளி சட்டத்தின் கீழ் எந்த உரிமையையும் உருவாக்காது, அது வெறும் காகிதம் மட்டுமே.
விண்மீன்களுக்கும் சிறுகோள்களுக்கும் பெயரிடுவதற்கான உரிமைகளுக்கும் இதே விதி பொருந்தும். நிலவின் மேற்பரப்பு மற்றும் வானியல் பொருட்களுக்கு அதிகாரபூர்வ பெயர்களை வழங்குவதற்கான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்பு, சர்வதேச வானியல் ஒன்றியம் (International Astronomical Union - IAU). இது பெயரிடும் உரிமையை தனி நபர்களுக்கு விற்பதில்லை. காசு கொடுத்து விண்மீன்களுக்கும் சிறுகோள்களுக்கும் பெயரிட முடியாது.

பட மூலாதாரம், Getty Images
சிலர், தாங்கள் என்ன வாங்குகிறோம் என்பதை நன்கு அறிந்தே வாங்குகிறார்கள். அந்தச் சான்றிதழ் வெறும் உணர்வின் குறியீடு, வெறும் பரிசுப் பொருள், சொத்துரிமை கொண்ட ஆவணம் அல்ல என்பதை அவர்கள் அறிந்தே இதைச் செய்வார்கள். இதுபோன்ற சான்றிதழ்கள் உண்மையான உரிமைக்கான ஆதாரமாக முன்வைக்கப்படும் நேரத்தில்தான் ஏமாற்றம் ஏற்படுகிறது.
ஆனால், இன்று நாம் சந்திக்கும் மெய்யான சவால், கற்பனையான நிலவு மனைச் சொத்துரிமை குறித்தது இல்லை. நிலவில் இருந்தும் சிறுகோள்களில் இருந்தும் வளங்களை எடுக்கும்போது, அது யாருக்குச் சொந்தம் என்கிற கேள்விதான் மெய்யாக நம் முன் உள்ள பெரும் சவால்.
அமெரிக்கா, தனது தனியார் நிறுவனங்கள் பிரித்தெடுக்கும் வளங்களின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும் தேசிய சட்டங்களைத் தனித்து நிறைவேற்றியுள்ளது. 2015ஆம் ஆண்டு அமெரிக்க வணிக விண்வெளி ஏவுதல் போட்டித் திறன் சட்டம் (US Commercial Space Launch Competitiveness Act), விண்வெளி வளத்தை வணிக ரீதியாக மீட்கும் ஓர் அமெரிக்கக் குடிமகன், பெற்ற வளத்திற்கு உரிமையாளர் என்றும், அதை வைத்திருக்க, சொந்தமாக்க, கொண்டு செல்ல, பயன்படுத்த, விற்க உரிமை உண்டு என்றும் கூறுகிறது. இந்த சட்ட விதிகள் இறையாண்மை கோருவதற்குச் சமமல்ல, எடுக்கும் வளங்கள் மீதுள்ள சொத்துரிமை மட்டுமே என வாதிடுகிறது.
அமெரிக்கா தலைமையிலான ஆர்ட்டெமிஸ் உடன்பாடுகள் (Artemis Accords) இதே நிலைப்பாட்டையே எடுக்கின்றன. விண்வெளி வளங்களைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துவது, விண்வெளி ஒப்பந்தத்துடன் ஒத்துப்போகும் என்று அவை கூறுகின்றன.
அதே நேரத்தில், நிலவு உள்பட வான் பொருள்களில் தாம் அமைக்கும் குடிப்பகுதியைச் சுற்றி, தற்காலிக "பாதுகாப்பு மண்டலங்கள்" (Safety Zones) ஏற்படுத்தப்படும். அதன் உள்ளே அமெரிக்க இறையாண்மை செல்லும் எனவும் கூறுகிறது.
காலப்போக்கில், அந்தப் பகுதிகள் மீது அமெரிக்கா போன்ற நாடுகள் இறையாண்மை கோரும் பகுதியாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் அச்சம் தெரிவிக்கின்றன. இந்தச் சட்டங்கள் நடைமுறையில் விண்வெளி ஒப்பந்தத்தை மீறி, நிலவின் பகுதிகள் மீது படிப்படியாக உரிமை மண்டலங்களை ஏற்படுத்தி விடும் எனக் கருதுகின்றனர். நிலவே மனித குலத்தின் பொதுச் சொத்து என்றால், அதிலுள்ள வளங்களும் அனைவரின் சொத்து என்றுதானே ஆகும்! எனவே, அந்த வளங்களை யார் எடுத்தாலும் அவர்கள் மட்டுமே சொத்துரிமை கோர முடியுமா என சர்ச்சை எழுந்துள்ளது.
சுருங்கச் சொன்னால், ஒரு தனி நபர் நிலவில் நிலம் வாங்கி ஏமாறுகிறாரா என்பது பெரும் பொருட்டு அல்ல. காலனிய காலத்தில் நடந்தது போலவே, நிலவின் வளங்களை ஒரு சில நாடுகள் மட்டும் தங்களுக்குள் பங்கு போட்டுவிடுமா என்கிற அச்சமே மெய்யான சவால். இதுதான் நிலவு உரிமை விவாதத்தின் மையம்.
(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































