'கடத்தி உயிரோடு எரிக்கப்பட்டார்' - யார் இந்த பெண் இன்ஃப்ளூயன்சர்?

பட மூலாதாரம், manjeet__sukh_1313/Insta
- எழுதியவர், நவ்ஜோத் கௌர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
(இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் சங்கடம் தரக்கூடும்.)
பஞ்சாப் மாநிலம் மொஹாலியின் கரா பகுதியில் வசித்து வந்த சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான மன்ஜித் கவுர், சண்டிகர் பிஜிஐ மருத்துவமனையில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி உயிரிழந்தார்.
குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, சண்டிகரில் இருந்து மன்ஜித் கடத்தப்பட்டு, உயிருடன் எரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சண்டிகர் காவல்துறை தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில், சண்டிகர் காவல்துறை இரண்டு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, மன்ஜித் கவுர் கடுமையான தீக்காயங்களுடன் சண்டிகர் பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்பு அவர் மொஹாலியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கரார் சதர் காவல் நிலைய ஆய்வாளர் குர்பிரீத் சிங் கூற்றுப்படி, மன்ஜீத் கவுர் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது உடலில் கடுமையான தீக்காயங்கள் இருந்ததாக காவல்துறைக்கு மருத்துவமனை தகவல் அளித்தது.
தகவல் கிடைத்ததும், கரார் காவல்துறை மேக்ஸ் மருத்துவமனைக்குச் சென்று மன்ஜீத்தின் குடும்பத்தினரிடம் பேசியது.
என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI & manjeet__sukh_1313/Insta
காவல்துறை தகவல்படி, "சண்டிகரில் உள்ள செக்டர் 34-ல் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணைச் சந்திக்க மன்ஜீத் சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அங்கு, இரண்டு நபர்கள் அவரைத் தாக்கி, பின்னர் ஒரு காரில் மொரிண்டாவுக்கு கடத்திச் சென்று இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனர்."
"இதற்குப் பிறகு, மன்ஜீத்துக்குத் தெரிந்த ஒருவர் அவரை மொரிண்டாவில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தார், அங்கிருந்து அவர் மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்."
"பின்னர் அவர் சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மன்ஜீத் கவுர் ஜூலை 9, 2026 அன்று சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்."
கரார் சதர் காவல் நிலைய பொறுப்பாளரான (SHO) குர்பிரீத் சிங் கூறுகையில், "குடும்பத்தினரின் வாக்குமூலங்களின் அடிப்படையில், கரார் போலீசார் ஒரு தினசரி டைரி அறிக்கையைப் பதிவு செய்து, சண்டிகரில் உள்ள செக்டர் 34 காவல் நிலைய அதிகாரிகளுக்கு இந்த வழக்கு குறித்த முழுமையான தகவல்களை வழங்கினர்."
மன்ஜீத்தின் தாயார் அளித்த புகாரின் பேரில், செக்டர் 34 காவல் நிலையத்தில் இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சண்டிகர் (தெற்கு) டிஎஸ்பியான குர்ஜீத் கவுர் கூறியுள்ளார்.
மன்ஜீத் கவுர் யார்?

பட மூலாதாரம், manjeet__sukh_1313/Insta
மன்ஜீத் கவுர் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியவர். யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் தனது கணக்குகளில் பல வீடியோக்களை அவர் பதிவேற்றியிருந்தார்.
அவர் ஒரு ஒப்பனைக் கலைஞர். ஒப்பனை மற்றும் பாடல்கள் தொடர்பான வீடியோக்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தார். அவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 1.46 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
கரார் சதர் காவல் நிலைய ஆய்வாளர் குர்பிரீத் சிங் கூற்றுப்படி, மன்ஜீத் கவுர் ஹரியானாவைச் சேர்ந்தவர், ஆனால் தற்போது கராரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
மன்ஜீத் கவுருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், அவருக்கு அறிமுகமான சிலருடன் தகராறு இருந்து வந்ததாகவும் குர்பிரீத் சிங் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































