'அது ஒரு ரகசியம், ராணுவ ரகசியம்' - பிரிட்டனுக்கு ரஷ்ய அதிபர் புதின் மறைமுக மிரட்டல்

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்
- பதவி, ரஷ்ய ஆசிரியர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், யுக்ரேனுக்கு பிரிட்டன் ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலடியாக பிரிட்டனில் உள்ள ராணுவத் தளங்கள் மீது மாஸ்கோ தாக்குதல் நடத்தக்கூடுமா என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஒரே ஒரு சிறிய வாக்கியத்தில் பதிலளித்தார்.
"அது ஒரு ரகசியம். ராணுவ ரகசியம்."
'ராணுவ ரகசியம்' என்பதற்கு "ஆம்" என்று அர்த்தமல்ல. அதேபோல் "இல்லை" என்றும் அர்த்தமல்ல. அது நம்மை விடை தெரியாத நிலையில் விட்டுச் செல்கிறது.
அதுதான் இதன் நோக்கம் என்று நான் சந்தேகிக்கிறேன்.
அந்த இரண்டு வார்த்தைகளும் கிரெம்ளினில் இருந்து வரும் உளவியல் அழுத்தத்தைப் போலத் தோன்றுகின்றன.
ரஷ்யாவின் நோக்கங்கள் குறித்து பிரிட்டன் தொடர்ந்து யோசித்துக் கொண்டும் பதற்றத்துடனும் இருக்க வேண்டும் என்பதுடன், யுக்ரேனுக்கு உறுதியான ஆதரவை வழங்குவது குறித்து பிரிட்டன் ஒன்றுக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்பதையும் அவை ஊக்குவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு நான் படித்த ஒரு செய்தித்தாள் கட்டுரை இதை எனக்கு நினைவூட்டுகிறது. 'மாஸ்கோவ்ஸ்கி கொம்சொமொலெட்ஸ்' நாளிதழ், பிரிட்டன் பிரதமர் பர்ன்ஹாம் ரஷ்யாவை தனது கனவுகளில் அல்ல, "கெட்ட கனவுகளில்" பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
பயமுறுத்தும் வார்த்தைகள். ஆனால், அந்தக் கெட்ட கனவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து எந்த விவரமும் இல்லை.
பிரிட்டனில் உள்ள இலக்குகள் மீது ரஷ்ய ஏவுகணைகள் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளன என்று நாம் முடிவு செய்ய முடியாது.
ஆனால், ஐரோப்பாவின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
கடந்த மாதம் லீப்சிக் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என்று ஜெர்மனி தற்போது கூறுகிறது.
ஜெர்மனி "ஆதாரங்களை உருவாக்குகிறது" என்று புதின் குற்றம்சாட்டினார். ஆனால், ஜெர்மனி உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், "ஐரோப்பாவில் ரஷ்யா மேற்கொண்டு வரும் கலப்பு நடவடிக்கைகளின் நன்கு அறியப்பட்ட செயல்பாட்டு முறையை" இது வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
இதுபோன்ற "நடவடிக்கைகள்" தற்போது பிரிட்டனிலும் தீவிரப்படுத்தப்படுமா?
ஆனால், புதினின் செய்தியாளர் சந்திப்பில் மறைமுக அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது பிரிட்டன் மட்டும் அல்ல. ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கும் அத்தகைய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளை புதின் சுறாக்களுடன் ஒப்பிட்டார்.
"யாராவது நம்மை உணவுச் சங்கிலியில் கீழே இழுக்க முயன்றாலோ, நம்மை விழுங்க அல்லது தின்றுவிட முயன்றாலோ, அவர்களின் பற்களில் குத்த வேண்டிய நிலை ஏற்படலாம்" என்று கூறிய அவர், "இந்தச் சுறாக்களின் பசியும் பற்களும் வேகமாக அதிகரித்து வந்தாலும், ரஷ்யா அதைச் செய்யத் தயாராக உள்ளது"என்றார்.
ரஷ்ய அதிபர் உலக அரசியலையும் விலங்கியல் ஒப்பீடுகளையும் அதிகளவில் கலந்து பேசுகிறார். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போரை நியாயப்படுத்துவதற்காக, கொலையாளி திமிங்கலங்கள் "துருவக் கரடிகளை துண்டு துண்டாகக் கிழிப்பது" குறித்தும் அவர் சமீபத்தில் பேசினார்.
கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற அந்தச் செய்தியாளர் சந்திப்பு, புதினின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சுவாரஸ்யமான வாய்ப்பாக இருந்தது.
45 நிமிடங்கள் ரஷ்ய செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், மோதல் போக்குடன், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன், உற்சாகமாகக் காணப்பட்டார்.
இப்போதெல்லாம், ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உலக அரசியல் மோதல் மற்றும் யுக்ரேன் போர் குறித்து பேசும்போது தான் புதின் மிகவும் சுறுசுறுப்பாகத் தோன்றுகிறார்.
போர் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்ற போதிலும் இது தொடர்கிறது. போர்க்களத்தில் ரஷ்யா மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரமும் கணிசமான அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது.
"எதிரி சிதைந்து விடுவான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை" என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். ஆனால், போர் நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. யுக்ரேனும் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
அதிகாரப்பூர்வமாக, ரஷ்யா இந்தப் போரை இன்னமும் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" என்றே அழைக்கிறது. ஆனால், தற்போது புதினே "போர்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
"போர் என்பது கொடூரமானதும் கணிக்க முடியாததுமான ஒன்று" என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்குத் தான் தயாராக இருப்பதாகவும், அமெரிக்க நிர்வாகத்தில் இருந்து யாருடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார் என்பதில் எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தாத வகையிலும், அதாவது டொனால்ட் டிரம்பின் தூதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.
"எங்களுக்கு நன்கு தெரிந்த, பொதுவாக நாங்கள் நம்பும் நபர்களுடன் பணியாற்றுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. [ஜாரெட்] குஷ்னரும் [ஸ்டீவ்] விட்காஃப்பும் எப்போதும் வரவேற்கத்தக்க விருந்தினர்கள். அவர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது" என்று புதின் கூறினார்.
ஆனால், கடந்த வாரம் ஆச்சரியமளிக்கும் வகையில் மாஸ்கோவுக்கு வந்த சிஐஏ இயக்குநர் குறித்து அவர் பெயரைக் குறிப்பிடவில்லை. அந்தப் பயணத்தின்போது ரஷ்ய அதிபர் ஜான் ராட்க்ளிஃபை சந்திக்கவில்லை என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
புதின், விட்காஃப் மற்றும் குஷ்னரை விரைவில் சந்திப்பாரா?
அதற்கான எந்தத் திட்டமும் தற்போது இல்லை.
ஆனால், அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்றால், யுக்ரேனில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு அமைதியும் ரஷ்யாவின் நிபந்தனைகளின் படியே இருக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கும் ரஷ்ய அதிபரைத்தான் டிரம்பின் தூதர்கள் சந்திப்பார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































