250 நாட்கள் கடலில் இருந்த 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் 'பாவ நகரான' பட்டாயா வந்தது ஏன்?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், பிபிசி முண்டோ
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
எந்த துறைமுகத்திலும் நிற்காமல், கடலில் தொடர்ச்சியாக 250 நாட்கள் பயணித்த அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் அப்ரகாம் லிங்கன், புதன்கிழமை தாய்லாந்தில் நங்கூரமிட்டது.
தாய்லாந்தின் பட்டாயா நகருக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட இந்த நிறுத்தம், கப்பலில் இருந்த சுமார் 5,000 பேருக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு ஓய்வெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. பட்டாயாவில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் கேளிக்கை மையங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக, யுஎஸ்எஸ் அப்ரகாம் லிங்கன் கப்பலைச் சேர்ந்த சுமார் 5,000 கடற்படையினரில் பெரும்பாலானோர் கரைக்கு வந்த முதல் சில மணி நேரங்களிலேயே ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் காட்டினர்.
ராணுவ வீரர்களைப் போன்று வெட்டப்பட்ட தலைமுடி, மீசை மற்றும் கடற்படை சீருடை டி-ஷர்ட்களுடன் அவர்கள் இருந்ததால், வழக்கமாக செருப்புகள் மற்றும் கடற்கரை உடைகளுடன் காணப்படும் பட்டாயா நகர மக்களிடையே அவர்கள் தனித்துத் தெரிந்தனர்.
நள்ளிரவு நேரத்தில், அங்கு இருந்த இளம் கடற்படை வீரர்களில் சிலர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால், ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டுதான் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற சிலர், சிவப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோ-கோ மதுபான விடுதிகளுக்குள் தயக்கத்துடன் சென்றனர். அங்கு நடனமாடிய பெண்கள் மிகக் குறைந்த ஆடைகளுடன் இருந்தனர்.
அங்கு ஒலித்துக்கொண்டிருந்த உரத்த இசைக்கு இடையே பேசுவதுகூட கடினமாக இருந்தது. தங்களுக்கு இந்த ஓய்வு உண்மையில் தேவைப்பட்டதாக வயதில் மூத்த கடற்படை வீரர் ஒருவர் எங்களிடம் தெரிவித்தார்.

நாங்கள் ஒன்பது மாதங்களாகக் கடலில் இருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. உண்மையைச் சொல்வதென்றால், காலத்தையே கணக்கில் வைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது," என்றார் அவர்.
"கப்பலில் இருப்பது சலிப்பாகிவிட்டது. அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அங்கு போதுமான இடம் இருப்பதில்லை. கப்பல் பெரியதாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆயிரக்கணக்கான பேருடன் அதற்குள் இருக்கும்போது, அது இன்னமும் ஒரு படகு போலவே உணரப்படுகிறது."
கலிஃபோர்னியாவில் உள்ள தங்கள் வீட்டைச் சென்றடைய இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்று அவரிடம் கேட்டபோது, "நீண்ட காலம் ஆகும்," என்றார்.

பட மூலாதாரம், Reuters
பட்டாயா, அதன் பரபரப்பான இரவு வாழ்க்கைக்கும் பாலியல் சுற்றுலாவுக்கும் பெயர் பெற்ற நகரமாகும். இதன் காரணமாக அது "பாவ நகரம்" என்ற அடைமொழியாலும் அறியப்படுகிறது.
ஆனால், இந்தப் பெயரை தாய்லாந்து அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
அமெரிக்க ராணுவத்துக்கு, பட்டாயா நகரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுகளையும் கொண்டுள்ளது.
வியட்நாம் போரின்போது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் இங்கு வந்திருந்தனர்.
அந்த அமெரிக்க வீரர்களின் வருகை, அமைதியான மீனவக் கிராமமாக இருந்த பட்டாயாவை உலகின் மிகவும் பிரபலமான மற்றும் பரபரப்பான கேளிக்கை நகரங்களில் ஒன்றாக மாற்றியது.
அமெரிக்க கடற்படையினர் வருகை
அமெரிக்கா - இரான் போர் காரணமாக சுற்றுலாத் துறையும் நுகர்வோர் செலவினங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் வணிகங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்நிலையில், கடலில் பணியாற்றி சம்பளத்தைச் சேமித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க கடற்படையினர் வருகை தருவது, அப்பகுதி வணிகங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் அப்ரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல், கடந்த ஆண்டு நவம்பரில் சான் டியாகோவில் இருந்து புறப்பட்டது. பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலில் ஆறு மாத காலப் பணிக்காகவே அது முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், பிப்ரவரி இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் வளைகுடாப் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில், கப்பலில் உணவுப் பற்றாக்குறை, பழுதடைந்த கழிப்பறைகள் மற்றும் பணியாளர்களிடையே அதிகரித்த மன அழுத்தம் தொடர்பான தகவல்கள் வெளியாகியதை அடுத்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
பணிச் சூழல் கடினமாக இருந்ததை அமெரிக்க கடற்படை ஒப்புக்கொண்டாலும், பணியாளர்களுக்கு தேவையான ஆதரவுகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
எனினும், பாதுகாப்புக் காரணங்களைக் குறிப்பிட்டு, பட்டாயாவில் விமானம் தாங்கிக் கப்பல் நங்கூரமிட்டது குறித்து பிபிசியின் கேள்விகளுக்கு அமெரிக்க கடற்படை பதிலளிக்க மறுத்தது.
"அவர்கள் இங்கே வந்து பணம் செலவிடட்டும்"
சீனாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தாலும், தாய்லாந்து அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளி நாடாகும். இதனால், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் தாய்லாந்தின் துறைமுகங்களுக்கு வருவது வழக்கமான ஒன்றாகும்.
"இந்த வருகை எங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையாக இருக்கலாம்," என்று வாக்கிங் ஸ்ட்ரீட்டுக்கு அருகே உள்ள கடையில் ரத்தினக் கற்கள் விற்பனை செய்யும் அனோன் சைதீர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், BBC/Lulu Luo
அனோன் சைதீரின் கடையில், அமெரிக்க கடற்படையினரையும் கடற்படை வீரர்களையும் வரவேற்கும் வகையில் பெரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக சிறப்புத் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. அவர்கள் இங்கே வந்து கொஞ்சம் பணம் செலவிட்டாலே போதும் என்று நம்புகிறோம்," என்கிறார் அவர்.
ஆனால், பட்டாயா நகரம் இதுவரை அறியப்பட்டுவந்த சர்ச்சைக்குரிய விஷயங்கள் மீண்டும் உருவாகாத வகையில், இந்த வருகை அமைய வேண்டும் என்பதில் அமெரிக்க மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
அமெரிக்க ராணுவப் பணியாளர்கள் செல்ல அனுமதிக்கப்படாத சில இடங்கள் இருப்பதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் ஒன்று, முக்கிய கடற்கரையை நோக்கிச் செல்லும் சோய் 6 என்ற தெரு. கவர்ச்சியான சூழலுக்குப் பெயர் பெற்ற "கோ-கோ" மதுபான விடுதிகள் அதிகமாகக் குவிந்துள்ள பகுதியாக அது அறியப்படுகிறது.
தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்டவிரோதமானது என்பதை அமெரிக்கப் பயணிகளுக்கு காவல்துறையினர் நினைவூட்டியிருந்தாலும், அந்த நகரில் சுமார் 25,000 முதல் 50,000 வரையிலான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
அவர்களில் பலர் சோய் 6 பகுதியில் உள்ள மதுபான விடுதிகளின் முன்பாக நின்று, ஆண்களை உள்ளே வருமாறு அழைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
பட்டாயாவில் உள்ள ஏராளமான கஞ்சா விற்பனைக்கடைகளுக்கும் அமெரிக்க கடற்படை வீரர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாராக்லைடிங், ஜெட் ஸ்கீயிங் போன்ற சில நீர்விளையாட்டு நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள்.
"அது அவர்களுடைய முடிவு. அமெரிக்க ராணுவம் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வைத்துள்ளது," என்று பட்டாயா மேயர் போரமாஸ் ங்காம்பிச்செஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
அமெரிக்க கடற்படையின் தாய்லாந்துக்கான இணைப்பதிகாரி கிறிஸ்டோஃபர் ராபின்சன், ராணுவப் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பிபிசி எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
அதற்கு பதிலாக, "அமெரிக்க வீரர்கள் அமெரிக்க சட்டங்கள், அமெரிக்க கடற்படை விதிமுறைகள் மற்றும் தாய்லாந்தின் சட்டங்களுக்கு இணங்க நடந்து கொள்வார்கள்" என்று அவர் கூறினார்.
"கடற்படை வீரர்களுக்கு முடிந்தவரை அதிக ஓய்வு வாய்ப்புகளை வழங்க முயற்சிக்கிறோம்," என்றும் அவர் தெரிவித்தார்.
விமானம் தாங்கிக் கப்பல் தாய்லாந்தில் இருக்கும் காலம் முழுவதும், துறைமுகத்திற்கும் பட்டாயா நகரத்திற்கும் இடையே அமெரிக்க கடற்படை சிறப்பு பேருந்து சேவையை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், இரவு நேரத்தை நிலப்பகுதியில் கழிக்க விரும்பும் அமெரிக்கக் குழுவினருக்காக இரண்டு விடுதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நகரின் பொழுதுபோக்கு மையங்களை கண்காணிக்க நூற்றுக்கணக்கான காவல்துறையினரை தாய்லாந்து அதிகாரிகள் களமிறக்கியுள்ளனர். அமெரிக்கப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் உள்ளூர் வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ராணுவப் பணியாளர்கள் இங்கு வந்ததுதான் பட்டாயாவை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்து, ஒரு முக்கிய சுற்றுலா நகரமாக மாற்றியது," என்று மேயர் போரமாஸ் ங்காம்பிச்செஸ் கூறுகிறார்.
"வெளிப்படையாகச் சொன்னால், மதுபான விடுதிகளில் பணிபுரியும் பெண்களால்தான் இந்த நகரம் அறியப்படுகிறது. அதுகுறித்த பொதுவான கருத்துக்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதை முற்றிலும் தவிர்க்க முடியாது," என்றும் அவர் கூறினார்.
"ஆனால், பட்டாயா மாறிவிட்டது என்பதை நாங்கள் நிரூபிக்க முடியும். இப்போது விளையாட்டு, கருத்தரங்குகள், உடல்நல மேம்பாட்டு சுற்றுலா, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பங்கேற்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற பல்வேறு வாய்ப்புகளையும் இந்த நகரம் வழங்குகிறது. இது அனைத்தும் கலந்த ஒரு நகரமாக பட்டாயா உருவெடுத்துள்ளது," என்று அவர் கூறுகிறார்.
செப்டம்பர் 6-ஆம் தேதி, யுஎஸ்எஸ் அப்ரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல் பசிபிக் பெருங்கடலைக் கடந்து தாயகத்திற்குத் திரும்பும் நீண்ட பயணத்தைத் தொடங்கும் நேரத்திற்குள், அதன் பணியாளர்கள் புத்துணர்ச்சியுடனும் போதிய ஓய்வுடனும் இருப்பார்கள் என்று அமெரிக்காவும் தாய்லாந்தும் நம்புகின்றன.

பட மூலாதாரம், Getty
மீன்பிடித் தொழிலில் இருந்து
பாங்காக்கிலிருந்து தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பட்டாயா, முன்பு சிறிய மீனவக் கிராமமாக இருந்தது.
2024-ஆம் ஆண்டு தம்மசாட் மற்றும் சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் மேற்கோள் காட்டப்பட்ட நகராட்சி ஆவணங்களின்படி, 1959-ஆம் ஆண்டு முதன்முதலாக அமெரிக்க ராணுவப் பணியாளர்கள் பட்டாயாவுக்கு வந்தனர். அருகில் முகாமிட்டிருந்த அமெரிக்க வீரர்கள் ஓய்வெடுப்பதற்காக அங்குள்ள கடற்கரைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஆனால், வியட்நாம் போரின் தீவிரம் அதிகரித்தபோதுதான் பட்டாயாவின் மிகப்பெரிய மாற்றம் தொடங்கியது.
அமெரிக்க கடற்படையின் சத்தாஹிப் தளத்துக்கும், அமெரிக்க விமானப்படையின் பி-52 குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த யு-தபாவ் விமானப்படைத் தளத்துக்கும் அருகில் பட்டாயா அமைந்திருந்தது. இதனால், தாய்லாந்தில் முகாமிட்டிருந்த அல்லது வியட்நாமில் இருந்து வந்த அமெரிக்க வீரர்களுக்கு ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கான இடமாக பட்டாயா மாறியது.
1966 மற்றும் 1967-ஆம் ஆண்டுகளில் விடுமுறையில் இருந்த அமெரிக்க வீரர்கள், தாய்லாந்துக்கு வந்த மொத்த வெளிநாட்டுப் பயணிகளில் 11% முதல் 16% வரை இருந்தனர்.
அதிகரித்த தேவையால் பட்டாயாவில் விடுதிகள், மதுபான விடுதிகள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் மற்றும் மசாஜ் நிலையங்கள் திறக்கப்பட்டன.
1966-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம், "சிறப்பு சேவைகள்" வழங்கிய பெண்களை கேளிக்கை நிறுவனங்கள் பணியமர்த்த அனுமதித்தது. இதனால், 1960-ஆம் ஆண்டிலிருந்தே பாலியல் தொழில் சட்டவிரோதமாக இருந்தபோதிலும், சட்டரீதியாகத் தெளிவற்ற ஒரு சூழல் உருவானது.

பட மூலாதாரம், Getty Images
தற்போது, பாலியல் தொழில் சட்டவிரோதமானதாக இருந்தாலும், அது பட்டாயாவில் வெளிப்படையாகத் தொடர்வதாகவும், அவ்வப்போது காவல்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. அதேவேளையில், விளையாட்டு, குடும்பச் சுற்றுலா மற்றும் உடல்நல மேம்பாட்டு சுற்றுலா போன்றவற்றை முன்னிறுத்தி, நகரத்தின் சுற்றுலா அடையாளத்தை விரிவுபடுத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
பிபிசி தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் ஜொனாதன் ஹெட் வழங்கிய தகவல்களுடன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































