இரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தைகளில் தேக்கத்தை ஏற்படுத்தும் 5 பிரச்னைகள்

பட மூலாதாரம், AFP via Getty Images
இரான் மீதான போர் நடவடிக்கை தற்போது தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட போர்நிறுத்தம் என்ற நிலையில் இருந்தபோதிலும் அமெரிக்கா மற்றும் இரானிடையே சிக்கல்கள் தொடர்கின்றன.
இரான் - அமெரிக்கா இடையிலான உறவு, கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் சிக்கலான முரண்பாடுகளால் முடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து இரான் மீது தாக்குதல்கள் தொடங்கப்பட்டு, பலவீனமான போர்நிறுத்தம் ஒன்று அமலுக்கு வந்து பத்து வாரங்கள் கடந்த நிலையிலும், இரு தரப்பினரும் எந்தவொரு முடிவிற்கும் வரவில்லை.
இரு நாடுகளும் மாறி மாறி வழங்கி வரும் முன்மொழிவுகளுக்கு இடையில், இரான் மற்றும் அமெரிக்கா இடையே இன்னும் உடன்பாடு எட்டப்படாததற்கு ஐந்து முக்கிய விவகாரங்களே பிரதான காரணங்களாக விளங்குகின்றன. அவை:
- யூரேனியம் செறிவூட்டல் திட்டம்
- இரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யூரேனியம் இருப்பின் எதிர்காலம்
- ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு மற்றும் கடல்சார் போக்குவரத்தை முழுமையாக மீட்டெடுத்தல்
- இப்பிராந்தியத்தில் இரான் ஆதரவு அமைப்புகளின் செயல்பாடுகள்
- இரானின் அதிநவீன ஏவுகணைத் திட்டம்
அமெரிக்காவின் சமீபத்திய முன்மொழிவுக்கு இரான் அளித்த பதிலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'ஏற்றுக்கொள்ளவே முடியாதது' என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவின் 14 அம்சத் திட்டத்தில் யூரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது, இரானிடம் உள்ள 60 சதவீத செறிவூட்டப்பட்ட யூரேனியம் இருப்பை முழுமையாக அழிப்பது அல்லது முற்றிலும் கட்டுப்படுத்துவது மற்றும் ஹோர்முஸ் நீரிணையை நிபந்தனையின்றி திறந்து விடுவது ஆகியவை அடங்கும்.
இதர விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான களத்தை உருவாக்க, இந்தத் திட்டத்தில் 30 நாட்கள் கால அவகாசமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இதர விவகாரங்களில், இப்பிராந்தியத்தில் உள்ள இரான் ஆதரவு அமைப்புகள் மற்றும் அதன் ஏவுகணைத் திட்டம் ஆகியவையும் அடங்கும்.
மறுபுறம், இந்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு போரில் சரணடைவதற்குச் சமம் என்று இரான் கருதுகிறது. இரானைப் பொறுத்தவரை, உலகின் இரு பெரும் ராணுவப் படைகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுக்கு எதிராக அது வலுவுடன் உறுதியாக நிற்க்கும் மோதல் இது.
இதனால் தான், இரான் சில சலுகைகளைப் பெற முயற்சித்து வருகிறது. வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, இரானின் மாற்று முன்மொழிவில் உடனடியாக நிரந்தர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும், தன் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட வேண்டும், இழப்பீடு வழங்கப்பட வேண்டும், ஹோர்முஸ் நீரிணை மீதான தனது இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும், அணுசக்தி பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யூரேனியத்தின் அளவை ஓரளவிற்குக் குறைக்க அல்லது அதனை ஓர் மூன்றாவது நாட்டிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக இரான் தெரிவித்துள்ளது. ஆனால், தனது முழு இருப்பையும் ஒப்படைக்க அது திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்த ஐந்து முக்கிய சர்ச்சைக்குரிய விவகாரங்களில் நீடித்து வரும் முட்டுக்கட்டையானது, இரான் மற்றும் அமெரிக்காவைத் தாண்டி, சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு, கச்சா எண்ணெய் விலை மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
1- யூரேனியம் செறிவூட்டல் திட்டம்

பட மூலாதாரம், Press Association
இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் யூரேனியம் செறிவூட்டல் என்பது மிகவும் முக்கியமான, நீண்டகால சர்ச்சைக்குரிய ஒரு விவகாரமாகத் தொடர்கிறது. ஏனெனில், அமெரிக்காவின் பார்வையில், இது இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத் திறனை எட்டுவதற்கு எவ்வளவு தொலைவில் உள்ளது என்ற கேள்வியோடு நேரடியாகத் தொடர்புடையது.
இயற்கை யூரேனியம் தனித்து இருக்கும்போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அதுவே, யூரேனியத்தை செறிவூட்டும்போது யூரேனியத்தின் ஆற்றல்மிக்க பகுதியான ஐசோடோப் 235-இன் அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் அணு உலைகளில் பயன்படுத்தக்கூடிய எரிபொருளாக அது உருமாறுகிறது.
இருப்பினும், யுரேனியம் செறிவூட்டலின் அளவு அதிகரிக்கும்போது, அது ராணுவ நோக்கங்களுக்காகத் திசைதிருப்பப்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்கீழ், மின் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் தேவைகள் போன்ற அமைதியான நோக்கங்களுக்காக யூரேனியத்தை செறிவூட்டுவதற்குத் தனக்கு முழு உரிமை உண்டு என இரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மறுபுறம், இத்திட்டத்தை அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான ஒரு சாக்காகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் கருதுகின்றன.
பொதுவாக, யுரேனியத்தை 3 முதல் 5 சதவீதம் செறிவூட்டினால், அது மின் உற்பத்தி நிலையங்களில் பயன்படுத்தப்படும். 20 சதவிகித செறிவூட்டப்பட்ட யூரேனியம் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த வரம்பிற்கு அதாவது 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக செறிவூட்டப்படும் யுரேனியம், அணு ஆயுதங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக மாறுகிறது.
கடந்த ஆண்டு (2025) இரானின் மீது அமெரிக்கா மேற்கொண்ட 12 நாள் தாக்குதலின்போது, யுரேனியத்தை 60 சதவீத செறிவூட்டும் அளவிற்கு இரான் முன்னேறியிருந்தது. இது இரானின் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான இறுதி கட்டம் என்றும், அணு ஆயுதம் பெறும் தனது முயற்சியில் இன்னும் ஒருசில வாரங்களில் இரான் வெற்றிபெற்றுவிடும் என்றும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே காலகட்டத்தில், இரான் ஆயிரக்கணக்கான அதிநவீன சென்ட்ரிபியூகுகளை நிறுவியுள்ளதாகவும், அதன் மிகப்பெரிய அளவில் இருப்பைச் சேகரித்துள்ளதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை குறிப்பிட்டிருந்தது.
நதான்ஸ், போர்டோ மற்றும் இஸ்பஹான் ஆகிய இரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அங்கு செறிவூட்டல் நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. அங்கிருந்த பல்வேறு உபகரணங்களும் கடுமையாக சேதமடைந்தன.
மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில், டொனால்ட் டிரம்ப், "இரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது" என்று வலியுறுத்தி, இரானில் யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று கோரினார். மேலும், "இரானுக்கு ஒருபோதும் அணு ஆயுதம் கிடைக்கக் கூடாது" என்றும் அவர் வலியுறுத்தினார்.
மறுபுறம், இரான் அமைதியான நோக்கங்களுக்காக தற்காலிகக் கட்டுப்பாடுகள், குறைந்த அளவிலான செறிவூட்டல் மற்றும் சர்வதேச கண்காணிப்பு ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால், இத்திட்டத்தை முற்றிலுமாக மூடுவதையோ அல்லது இதன் செயல்பாடுகளை வெளிநாடுகளுக்கு மாற்றுவதையோ தனது இறையாண்மையை மீறும் செயல் என்று கூறி அதனை நிராகரிக்கிறது. இத்தகைய கோரிக்கைகளை தனது இறையாண்மை மீதான மீறலாகவே அது கருதுகிறது.
உண்மையில், இந்த முரண்பாடானது ஆழமாக வேரூன்றிய வரலாற்று ரீதியான அவநம்பிக்கையிலேயே தங்கியுள்ளது. இரானின் கடந்தகால ரகசிய செயல்பாடுகள் குறித்து மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து சந்தேகத்துடனேயே இருந்து வருகின்றன; அதேவேளையில், அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையும், டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தின்போது நிகழ்ந்த மோதல்களையும் தனது அவநம்பிக்கைக்கான முதன்மையான காரணங்களாக இரான் சுட்டிக்காட்டுகிறது.
இந்த இடைவெளிக்கு இரு நாடுகளுக்கும் இடையே ஆழமாக வேரூன்றியிருக்கும் வரலாற்று அவநம்பிக்கையே முக்கியக் காரணமாகும். இரானின் கடந்தகால ரகசிய நடவடிக்கைகள் மீது மேற்கத்திய நாடுகளுக்குச் சந்தேகம் உள்ளது. அதே வேளையில், முந்தைய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதையும், டொனால்ட் டிரம்பின் முதல் அதிபர் காலத்தின்போது நடந்த போர்களையும் தனது அவநம்பிக்கைக்கான காரணமாக இரான் முன்வைக்கிறது.

பட மூலாதாரம், Planet Labs PBC
2 - யூரேனியம் இருப்பின் எதிர்காலம்
இரு நாடுகளுக்கும் இடையேயான இரண்டாவது பெரிய சர்ச்சைக்குரிய விவகாரம், இரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யூரேனியம் இருப்பின் எதிர்காலம் குறித்ததாகும். 12 நாள் போருக்கு முன்பு, இரானிடம் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட சுமார் 440 கிலோகிராம் யூரேனியம் இருந்ததாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்திருந்தது.
இந்த அளவானது அணு ஆயுதம் தயாரிப்பதற்கான நிலைக்கு மிக நெருக்கமானதாகக் கருதப்படுகிறது. இதனை மேலும் செறிவூட்டினால் பல அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான அணுபொருட்களைப் பெற முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரானின் யூரேனியம் இருப்பின் பெரும் பகுதி, இஸ்பஹான் அணுசக்தி வளாகத்தில் உள்ள நிலத்தடி தளங்களிலும் ஆழமான சுரங்கங்களிலும் வைக்கப்பட்டுள்ளது என அறிக்கைகள் கூறுகின்றன. தாக்குதலில் அழிக்கப்பட்ட சுரங்கங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இந்த செறிவூட்டப்பட்ட யூரேனியத்தில் சில பகுதிகள் புதைந்து கிடப்பதாக உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கண்காணிப்பு உபகரணங்களை அணுகுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் போர்ச் சூழல் என சில காரணங்களால், மோதல் தொடங்கியதிலிருந்து இந்த யுரேனியம் இருப்புகளின் அளவு அல்லது தற்போதைய நிலையை நடைமுறையில் சரிபார்க்க இயலாத நிலையில் தங்கள் முகமை இருப்பதாக IAEA-வின் தலைமை இயக்குனர் ரஃபேல் குரோசி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த யூரேனியம் இருப்பை தங்களுக்கு மிக விபரீதமான அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. ஏனெனில், இந்த இருப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டால், இரான் தனது அணுசக்தி திறனை மீண்டும் மீட்டெடுக்க நீண்ட காலம் எடுக்கும்; அதோடு அதன் 'அணு ஆயுதத்தடை உருவாக்கும் காலவரை' மேலும் நீட்டிக்கப்படும்.
இந்த யூரேனியம் இருப்பை அமெரிக்கா 'எந்த வடிவத்திலாவது' தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் என டொனால்ட் டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளார். வெளிவந்துள்ள தகவல்களின்படி, இந்த யூரேனியம் பொருட்களை முழுமையாக அமெரிக்காவிடமோ அல்லது ஒரு மூன்றாவது நாட்டிடமோ ஒப்படைக்க வேண்டும், அல்லது அதை முற்றிலும் செயலிழக்கச் செய்ய வேண்டும் அல்லது இரானிய மண்ணில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்பது போன்ற அம்சங்கள் அமெரிக்காவின் முன்மொழிவுகளில் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழின்படி, இரான் தனது சமீபத்திய பதிலில் தன்னிடம் உள்ள யூரேனியம் இருப்பின் அளவை ஓரளவிற்குக் குறைக்க அல்லது அதன் ஒரு பகுதியை மூன்றாவது நாட்டிற்கு அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது: பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலோ அல்லது அமெரிக்கா மீண்டும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினாலோ, அந்த யூரேனியம் பொருட்கள் மீண்டும் இரானிடமே திருப்பித் தரப்பட வேண்டும் என்பதாகும்.
3 - ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு

பட மூலாதாரம், AFP via Getty Images
உலகின் மிக முக்கியமான கடல்சார் எரிசக்தி வழித்தடமாகக் கருதப்படும் 'ஹோர்முஸ் நீரிணை' இரான் மற்றும் அமெரிக்கா இடையே மூன்றாவது பெரிய சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழித்தடத்தின் வழியாகவே உலகின் 20 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்து நடைபெறுகிறது.
கடந்த இரண்டு மாத கால நிகழ்வுகள், ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு இரானுக்கு வலுவான மூலோபாய ஆயுதமாக மாறக்கூடும் என்பதைக் காட்டுவதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சாத்தியமான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுவதற்கு முன்பாக, இந்த நீரிணை எவ்விதக் கண்காணிப்பும் இன்றி முழுமையாகத் திறந்து விடப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா ஒரு முதன்மை நிபந்தனையாகக் கருதுகிறது. ஆனால், இரான் ஹோர்முஸை பேரம் பேசும் ஓர் இறுதிக் கருவியாக இதை பயன்படுத்தப் பார்ப்பது போல் தோன்றுகிறது. இந்த முக்கிய வழித்தடம் தொடர்ந்து மூடப்படுவதோ அல்லது அதில் இடையூறுகள் ஏற்படுவதோ எரிசக்தி விலை ஏற்றத்திற்கு வழிவகுத்து, உலகப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மைக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதை 'சர்வதேச கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கான' ஓர் உதாரணமாக அமெரிக்கா பார்க்கிறது. மேலும், இரானின் தரப்பிலிருந்து விடுக்கப்படும் எந்தவொரு மிரட்டலையும் அல்லது கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறுகிறது. இந்த விவகாரத்திற்கான தீர்வு, ராணுவ மற்றும் சர்வதேச உத்தரவாதங்களுடன், அணுசக்தி பேச்சுவார்த்தையிலிருந்து தனித்து கையாளப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாகும்.
இரானிய ஊடகங்களின்படி, அமெரிக்க முன்மொழிவுக்கு அளித்த பதிலில் இரான், "போரை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது" குறித்து வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை யாரும் மீறக்கூடாது என்று இரானின் அரசியல் மற்றும் ராணுவத் தலைமை அறிவித்துள்ளது.
தன் மீதான நெருக்கடிகளையும் பொருளாதாரத் தடைகளையும் நீக்குவதற்கு ஈடாக, வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு உத்தரவாதம் அளிக்கத் தயாராக இருப்பதாக இரான் தெரிவித்தபோதிலும், நீரிணையின் மீதான கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ளவும், எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் பதிலளிக்கவும் தனக்குள்ள உரிமையை அது தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது.
அமெரிக்காவுடனான பதற்றம் மற்றும் அதிகரித்து வரும் பொருளாதாரத் தடைகளின் பல்வேறு கட்டங்களுக்கு மத்தியில், கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகத்தை நிறுத்தப் போவதாக இரான் பலமுறை எச்சரித்துள்ளது.
இருப்பினும், இதற்கு முன்னர், இத்தகைய அறிக்கைகள் பெரும்பாலும் அழுத்தம் கொடுப்பதற்காகவே வெளியிடப்பட்டன, மேலும் அவை அந்த நீர்வழிப்பாதையை முழுமையாக மூடும் அளவிற்கு நிலைமை சென்றதில்லை. ஆயினும், சமீபத்திய மோதல்களைத் தொடர்ந்து, நிலைமை மேலும் நிலையற்றதாக மாறியுள்ளது.
4 - 'எதிர்ப்பு அச்சு' மற்றும் இப்பிராந்தியத்தில் இரானின் பங்கு

பட மூலாதாரம், AFP via Getty Images
இப்பிராந்தியத்தில் இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகளும், இரான் மற்றும் அமெரிக்கா இடையே மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. லெபனானின் ஹெஸ்பொலா, ஏமனின் ஹூத்திகள் மற்றும் இராக்கின் சில ஷியா ஆயுதக் குழுக்களுக்கு இரான், நிதியுதவி, ராணுவ உதவி மற்றும் பயிற்சி அளித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
அமெரிக்காவின் கூற்றுப்படி, இந்த வலையமைப்பின் மூலம் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டுள்ள இரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், இரான் இந்த அமைப்புகளை எதிர்ப்பு அச்சின் ஒரு பகுதி என்று அழைக்கிறது. இவை இஸ்ரேலுக்கும் இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இருப்புக்கும் எதிராகச் செயல்படும் சுதந்திரமான அமைப்புகள் என்று இரான் கூறுகிறது.
2023 அக்டோபரில் காஸா போர் தொடங்கிய பிறகு, இந்த அமைப்புகளின் தாக்குதல்கள் பல்வேறு முனைகளிலும் தீவிரமடைந்துள்ளன. லெபனான் எல்லையில் ஹெஸ்பொலா மற்றும் இஸ்ரேல் இடையே நடந்த மோதல்கள், செங்கடலில் ஹூத்திகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது இராக்கிய ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் ஆகியவை இந்த சம்பவங்களில் அடங்கும்.
இந்த அமைப்புகளுக்கு வழங்கும் ராணுவ உதவிகளை இரான் குறைக்க வேண்டும் என்றும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்கு எதிரான அவர்களின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சமீபத்திய போர் மற்றும் பதற்றங்களின் போதும் இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டது. ஆனால், இரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை போன்ற விவகாரங்களைப் போலல்லாமல், தற்போதைய உடனடிப் பேச்சுவார்த்தையின் முக்கியப் பகுதியாக மாறவில்லை என்றே தோன்றுகிறது.
5 - ஏவுகணைத் திட்டம்

பட மூலாதாரம், Majid Asgaripour/WANA via REUTERS
இரானின் ஏவுகணைத் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் முக்கியமான மற்றும் உணர்திறன் வாய்ந்த சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஒன்றாகும்
கடந்த இரண்டு தசாப்தங்களில்,பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் மிகப்பெரிய ஆயுதக் களஞ்சியத்தை இரான் உருவாக்கியுள்ளது. இதில் குறுகிய தூர ஏவுகணைகள் முதல் சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளும் அடங்கும். மேலும், இரான் நிலத்தடி தளங்கள் மற்றும் 'ஏவுகணை நகரங்களின்' கொண்ட பெரிய வலையமைப்பையும் கட்டமைத்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்படை மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒப்பிடுகையில், இரானின் விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் குறைவாகவே உள்ள நிலையில், இந்த ஏவுகணைத் திட்டத்தை இரான் தனது பாதுகாப்பு மற்றும் தடுப்பு உத்தியின் ஒரு முக்கியத் அரணாகக் கருதுகிறது.
மறுபுறம், இரானின் ஏவுகணை இருப்பு, அதன் டிரோன் தொழில்நுட்பம் மற்றும் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளின் வளர்ச்சி ஆகியவை இணைந்து இஸ்ரேல், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் அரபு நாடுகளுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கூறுகின்றன.
சமீபத்திய போரின் போது, இஸ்ரேல் மீதும், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் வளைகுடா அரபு நாடுகள் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுக்கு எதிராகவும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் டிரோன்களையும் இரான் ஏவியது. இவற்றில் சில தாக்குதல்கள் முறியடிக்கப்பட்ட போதிலும், சில தாக்குதல்களால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
சமீபத்திய போர் மற்றும் கடந்த ஆண்டு அமெரிக்கா மேற்கொண்ட 12 நாள் போரின் போது இரானின் ராணுவ மற்றும் ஏவுகணைத் தளங்கள் பெருமளவில் குறிவைக்கப்பட்ட போதிலும், இரானிடம் தற்போது எஞ்சியுள்ள ஏவுகணைகள், நடமாடும் ஏவுதளங்கள் மற்றும் அவற்றின் இருப்பு குறித்த துல்லியமான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்தத் தெளிவற்ற தன்மையே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் தொடர்ந்து மிகப்பெரிய கவலைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.
இருப்பினும், ஊடக அறிக்கைகளின்படி, அணுசக்தி திட்டத்தைப் போலல்லாமல், இந்த ஏவுகணை விவகாரம் சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுகளின் முக்கியப் பகுதியாக இடம்பெறவில்லை. மறுபுறம், ஏவுகணைத் திட்டம் என்பது தற்காப்புக்கான தனது உரிமையின் ஒரு பகுதி என்றும், இதில் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்றும் இரான் திட்டவட்டமாகக் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































