விஜய் அரசில் உள்ள அனுபவமற்ற புதிய அமைச்சர்கள் முன்னுள்ள சவால்கள்

அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெக எதிர்கொள்ளும் சவால்: கூட்டணிக் கணக்கில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், CMOTamilNadu/X

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழக அரசியலில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி தவெக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளது. விஜய் அமைச்சரவை பதவியேற்ற சுமார் ஒரு வாரத்திற்குப் பின்பே அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் 10 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது.

அத்துடன், விஜய் அமைச்சரவையில் செங்கோட்டையன் தவிர மற்ற அனைவருமே அனுபவமற்றவர்கள் என்பது அதிகம் உற்றுநோக்கப்படுகிறது. இது நிர்வாகத்தில் ஒரு சவாலாக இருக்கக் கூடும் என்றும் அனுபவம் வாய்ந்த திமுக, அதிமுகவை சட்டப்பேரவையில் எதிர்கொள்வதை கடினமான ஒன்றாக்கும் என்றும் அரசியல் விமர்சகர்களும் மூத்த பத்திரிகையாளர்களும் கூறுகின்றனர்.

அமைச்சரவை விரிவாக்கம் பற்றி தவெக என்ன சொல்கிறது? விஜய் அரசில் உள்ள அனுபவமற்ற புதிய அமைச்சர்கள் முன்னுள்ள சவால்கள் என்ன?

அமைச்சர்களின் இலாகா விவரம்: யாருக்கு எந்தத் துறை?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் மே 16ஆம் தேதி இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகள் முதலமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

முந்தைய முதலமைச்சர்களைப் போலவே, காவல், உள்துறை, உள்ளிட்ட துறைகள் முதலமைச்சர் வசமே உள்ளன.

இதுபோக, அமைச்சர் என்.ஆனந்திடம் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன் சுமை மற்றும் நீர்ப்பாசனம், நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெக எதிர்கொள்ளும் சவால்: கூட்டணிக் கணக்கில் என்ன சிக்கல்?

பொதுப்பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டு மேம்பாடு ஆகிய துறைகள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறைகள் கே.ஜி.அருண்ராஜுக்கும், நிதித்துறை, ஓய்வூதியம் ஆகிய துறைகள் செங்கோட்டையனுக்கும், உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு ஆகிய துறைகள் அமைச்சர் வெங்கட்ரமணனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், ஊழல் தடுப்பு, சட்டப்பேரவை, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச் சீட்டுகள் ஆகிய துறைகள் அமைச்சர் நிர்மல்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ராஜ்மோகனிடம் பள்ளிக் கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், நாளிதழ் அச்சுத்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம் உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சர் கீர்த்தனா மற்றும் டி.கே.பிரபுவிடம், முறையே தொழில்துறை மற்றும் முதலீடு மேம்பாட்டுத் துறையும், கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறையும் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெக எதிர்கொள்ளும் சவால்: கூட்டணிக் கணக்கில் என்ன சிக்கல்?

விஜய் அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தவெக-வில் இருந்து அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்களில் செங்கோட்டையன் தவிர வேறு யாருமே அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை என்று குறிப்பிட்ட மூத்த பத்திரிகையாளர் விஜயஷங்கர், "சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் புழக்கம் எனப் பல விஷங்களில் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்த இவர்களுக்கு இனிதான் உண்மையான நிர்வாக சவால்கள் காத்திருக்கின்றன." என்று தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, நிர்வாக அமைப்புகளின் செயல்முறைகளைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெறுவதற்கே இவர்களுக்குச் சிறிது காலம் எடுக்கும். "குறிப்பாக, முதலமைச்சர் விஜய், தன்வசம் மட்டுமே கணிசமான துறைகளை வைத்துள்ளார். காவல், பொது நிர்வாகம் போன்ற துறைகளை இதற்கு முந்தைய முதலமைச்சர்களுமே தங்கள் வசம்தான் வைத்திருந்தார்கள். ஆனால், இவ்வளவு துறைகளை ஒரே நபராகக் கையாள்வது என்பது அனுபவம் வாய்ந்த முதலமைச்சர்களுக்கே மிகவும் சவாலானதாகவே இருக்கும்.

துறைசார் அதிகாரிகளை எப்படி அணுகப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். சட்டப்பேரவையில் அந்தந்தத் துறைகள் சார்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை இவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற சவாலும் இருக்கிறது." என்கிறார் விஜயஷங்கர்.

அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெக எதிர்கொள்ளும் சவால்: கூட்டணிக் கணக்கில் என்ன சிக்கல்?

உதாரணமாக, செங்கோட்டையன் அதிமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராக, கல்வித்துறை அமைச்சராக இருந்த அனுபவம் கொண்டவராகவே இருந்தாலும், அவருக்கு நிதித்துறையைக் கையாண்ட அனுபவம் இல்லை. இருப்பினும், "தவெக-வில் அவர் மட்டுமே அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவருக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் நிதித்துறை வழங்கப்பட்டிருக்கலாம்" என்கிறார் அவர்.

ஆனாலும், "இவை குறித்தெல்லாம் முழுமையாக அறிந்திருக்கும் திமுக, அதிமுக போன்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும்போது, அதை இவர்களால் சமாளிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை நிதித்துறை தொடர்பாக வலிமையான ஒரு கேள்வியை முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்வைத்தால் அதை எப்படிக் கையாள்வார்கள் என்பதில் இருந்து ஆட்சி நிர்வாகத்தில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் வரை பல்வேறு விதமான சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்." என்றார் விஜயஷங்கர்.

இவை மட்டுமின்றி, இப்போது இருக்கும் அமைச்சர்களை மட்டுமே வைத்து ஆட்சி நிர்வாகத்தை நடத்த முடியாது என்று கூறும் அவர், "அமைச்சரவையை விரிவுபடுத்த வேண்டிய தேவை" இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெக எதிர்கொள்ளும் சவால்: கூட்டணிக் கணக்கில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், CMOTamilNadu/X

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?

அமைச்சரவை விரிவாக்கம் உறுதி என்றாலும் அது தாமதமாவதற்கான முதல் காரணமாக, தவெக தேர்தலில் வென்ற பிறகு அட்சி அமைப்பதில் எதிர்கொண்ட உறுதியற்ற நிலையும் அதைச் சமாளிப்பதற்கு எடுத்துக்கொண்ட காலமும்தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், சட்டப்பேரவையில் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்தது.

இவற்றில் காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் அனைத்தும் வெளியிலிருந்து ஆதரவு மட்டுமே அளிப்பதாகவும், மற்றபடி திமுக உடனான கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்தன.

காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் மே 15ஆம் தேதி வெளியிட்ட பதிவில், "கூட்டணிக் கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் எனக் கூறியிருந்த தவெக தலைவர் விஜய், தனது வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளார். தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையில் இடம் பிடிக்கிறார்கள். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

"கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமான அணுகுமுறையைக் கடைபிடித்து, ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து, அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை தவெக எடுத்து வருகிறது. இதனால் அமைச்சரவை விரிவாக்கம் சற்று தாமதம் ஆகக்கூடும்," என்று பிபிசி தமிழிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குறிப்பிட்டார்.

அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெக எதிர்கொள்ளும் சவால்: கூட்டணிக் கணக்கில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், CMOTamilNadu/X

அதிமுகவில் ஏற்பட்ட விரிசலும் ஒரு காரணமா?

அதிமுகவைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தவெக அரசை ஆதரித்து வாக்களித்தனர். அதிமுக-வில் ஏற்பட்டுள்ள, இந்த விரிசலும் அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாவதற்கான மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

"பாஜக-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வென்று, பின்னர் அதிமுக-வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை விஜய் ஏற்றுக் கொண்டால், அது தவெக கவனமாக வளர்த்தெடுத்த பிம்பத்தைச் சேதப்படுத்தும் ஆபத்து இருக்கிறது," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.

அவரது கூற்றுப்படி, தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக, அதிமுக-வின் அரசியலுக்கு ஒரு மாற்றாகவே விஜய் தன்னை முன்னிறுத்தினார். அப்படி இருக்கையில், "பாஜக உடனான கூட்டணியில் அதிமுக-வில் போட்டியிட்டு வென்ற சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தன்பக்கம் கொண்டு வருவது, கட்சித் தொண்டர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்."

இப்படிப்பட்ட நிலையில், அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுக்க தவெக முயலக்கூடும். அதுகூட அமைச்சரவை விரிவாக்கத்தில் நிகழும் தாமதத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார்.

அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெக எதிர்கொள்ளும் சவால்: கூட்டணிக் கணக்கில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், CMOTamilNadu/X

அதிமுக எம்.எல்.ஏ-க்களில் ஒரு தரப்பினர் தவெக ஆட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பாகப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார், "தவெக அரசாங்கத்தில் அதிமுக-வில் இருந்து வருவோர் அமைச்சர்களாக நியமனம் செய்யப்படலாம். அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்படாத வரை சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான். பிற உறுப்பினர்களைப் போலவே அவர்களும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும், அமைச்சர்களாகவும் பொறுப்பேற்க முடியும். எனவே, சட்டரீதியாக அதிமுக-வில் இருந்து பிரிந்து வருவோரை அமைச்சர்களாக நியமிப்பதில் தவெக அரசுக்கு எவ்வித சிக்கலும் இல்லை.

இருந்தாலும், தார்மீக அடிப்படையில் இது மிகப்பெரிய அவப்பெயரை இந்த அரசுக்கு ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நிலைமை இந்த அரசுக்குத் தேவையா என்பதைச் சிந்திக்க வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தாக வேண்டுமெனில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக சார்பில் இடைத்தேர்தலில் அவர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்து, அதன் பிறகு அமைச்சர் பதவியைக் கொடுக்கலாம். அப்போது இதில் எவ்வித விமர்சனத்திற்கும் இடமிருக்காது," என்று கூறினார்.

தவெக அமைச்சர் கூறுவது என்ன?

அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு மற்றும் விரிவாக்கத்தில் ஏற்படும் தாமதம் குறித்தும், அதிமுக எம்.எல்.ஏ-க்களை அமைச்சர்களாக சேர்த்துக் கொள்வதற்காகவே பொறுமை காப்பதாகவும் கூறப்படுவது பற்றி தவெக அமைச்சர் நிர்மல்குமாரிடம் மே 16-ஆம் தேதி (இலாகா ஒதுக்கீட்டிற்கு முன்னதாக) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், "ஒவ்வொரு துறைக்கும் யார் இருந்தால் சரியாக இருக்கும் என்பதை முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வருகிறார். அந்த ஆய்வின் அடிப்படையில் அவர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார். 40-50 ஆண்டுகளாக அரசாங்க நிர்வாகத்தை வேறு மாதிரியாக மாற்றி வைத்துள்ளார்கள். இதை நிச்சயமாக ஒரே நாளில் சரி செய்துவிட முடியாது. இது மிகப்பெரிய பணி," என்று கூறினார்.

அதேபோல, அமைச்சரவையில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி போன்ற அதிமுக-வில் இருந்து தவெக-வுக்கு ஆதரவளித்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அதற்கான முடிவை தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்தான் எடுப்பார்" என்று மட்டும் தெரிவித்தார்.

அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெக எதிர்கொள்ளும் சவால்: கூட்டணிக் கணக்கில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், CMOTamilNadu/X

ஆட்சி நிர்வாகத்தில் தாக்கம் செலுத்துமா?

விஜயுடன் ஆரம்பத்தில் பதவியேற்ற ஒன்பது அமைச்சர்கள் சுமார் ஒரு வாரம் இலாகா எதுவுமே இல்லாமல் இருந்ததற்குக் காரணமே அக்கட்சி இந்த விஷயத்தில் அழுத்தங்களை எதிர்கொள்வதுதான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.

"அதிமுகவைச் சேர்ந்த சுமார் 25 எம்எல்ஏக்கள் தவெகவை ஆதரிப்பதால், அமைச்சரவையை முழுமையாக நிலைப்படுத்துவதில் அவர்கள் சிக்கல்களைச் சந்திக்கின்றனர். இது அரசின் நீண்டகால ஸ்திரத்தன்மை குறித்து அரசியல் வட்டாரங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளது." என்றார் அவர்.

இதன் எதிரொலி அரசு நிர்வாகத்தில் தெரியும் என்று கூறும் மணி, "முதலமைச்சர் மாநிலத்தின் நிதிநிலை குறித்து ஆலோசிக்கும்போது அவருடன் நிதியமைச்சர் இல்லை, தொழிலதிபர்களைச் சந்தித்து தொழில் முதலீடுகள் குறித்துப் பேசும்போது அவருடன் தொழில்துறை அமைச்சர் இல்லை, விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவர் பேசும்போது உடன் விவசாயத்துறை அமைச்சர் இல்லை. இப்படிப்பட்ட நிலை நீடிப்பது நிர்வாகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்." என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு